எப்பொழுதுமே தேர்தல் செய்தி என்பது சினிமா ரிலீஸ், விளையாட்டு போட்டிகளின் இறுதிகட்டம் என்பது போல் ஒரு பரபரப்பான, மக்களைக் கவர்ந்து ஈர்க்கும் ஒரு செய்தியாக இருந்து வருகிறது. மக்களின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நிகழ்வு என்பதால், கண்டிப்பாக அதற்கான முக்கியத்துவத்தைக் கொடுத்தாக வேண்டும். ஆனால், மக்கள் தேர்தல் முடிவுகளைக் கவனிப்பது அதற்காக மட்டும் இல்லை.
ஏதோ வாக்குவாதத்தில், பேச்சில் நாம் ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்போம். அந்த நிலைப்பாட்டைத் தாங்கி பேசிப் பேசியே அந்தக் கருத்தியலைத் தாங்கிப்பிடிக்கும் தூணாக நம்மை அறியாமலேயே மாறியிருப்போம். அரசியல் கொள்கை, அரசியல் தலைவர் போன்றவற்றிலும் நமது நிலைப்பாடு அப்படியே இருந்துவிடுகிறது. ஒரு கட்சிக்கு ஒருமுறை ஏதோ ஒரு காரணத்தால் ஓட்டுப்போட்டுவிட்டால், அதற்குப் பின்னால் வரும் தேர்தல்களில் எல்லாம் அதே கட்சிக்கு ஓட்டு போடுவது என்பது பாமரருக்கு மட்டும் உரித்தானது அல்ல. அரசியல் ஞானம் உள்ள அறிஞரும் செய்வதாகும். தான் ஆதரிக்கும் கட்சியின் தவறுகளைப் பேசாமல் தவிர்ப்பது, எதிரணியின் நல்ல விஷயங்களைத் தவிர்ப்பது என்பது தீவிர அரசியல்கட்சி தொண்டர்களின் பண்பு மட்டுமல்ல, இன்று சாதாரணர்களின் பண்பாகவும் மாறிவிட்டது. இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல என்ற நிலையைத் தான் காண முடிகிறது.
அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. வெளியாகிக்கொண்டே இருக்கிறது. வெளியாகும். இதில் போட்டியிட்டவர்கள், ஆதரவளித்தவர்கள், ஓட்டுப் போட்டவர்கள், ஓட்டே இல்லாதவர்கள், பக்கத்து நாட்டவர்கள், தூரத்தில் இருக்கும் நாட்டவர்கள் என உலகே இந்தத் தேர்தலை உற்று நோக்கி கவனித்தது. வாஷிங்டன் முதல் துளசேந்திரபுரம் வரை தேர்தல் முடிவுகளை உற்று கவனித்து ரியாக்ஷன் காட்டினார்கள். இந்த முடிவுகள் தங்கள் வாழ்வில் எந்த மாற்றத்தையும் கொண்டு வந்திடாத நிலை கொண்டவரும், இதைக் கவனமாகக் கவனித்துக் கருத்துக் கூறினார்கள்.
அமெரிக்கத் தொலைகாட்சி நிறுவனங்கள், செய்தி இணையத்தளங்கள், சமூக ஊடகங்கள், அவ்வளவு ஏன் தமிழ்நாட்டு செய்தி சானல்கள் கூட இந்தத் தேர்தல் முடிவுகளை நேரடி ஒளிபரப்பு செய்தனர். பலருடைய ஃபேஸ்புக் ஸ்டேடஸ், வாட்ஸ்அப் ஸ்டேடஸ், டிவிட்டர் டைம்லைன் எங்கும் தேர்தல் முடிவுகள் பற்றிய செய்திகள், கருத்துகள், கேலிகள், கிண்டல்கள் வழிந்தோடின.
போன தேர்தலில் ட்ரம்ப்பை எதிர்த்தவர்கள், கிண்டல் செய்தவர்களில் சிலர் இந்தத் தேர்தலில் அவருடைய தொண்டர்கள் ஆகியிருந்தனர். ஆதரித்திருந்தவர்கள் மேலும் வெறியர்கள் ஆகியிருந்தனர். அவரைக் காமெடியாகப் பார்த்தவர்கள் அவருக்குக் கிடைத்த வாக்குகள் பார்த்து வாயடைத்துப் போனார்கள். இவ்வளவு கோமாளித்தனம் செய்திருந்தாலும், பாதி அமெரிக்கா அவருக்கு ஓட்டளித்திருக்கிறதே என்று உலகின் பிற பகுதிகள் ஆச்சரியப்பட்டுப் போனது.
இன்னொரு பக்கம், ட்ரம்ப்பை வென்று வந்த பைடனைப் பார்த்தும் ஆச்சரியப்பட்டனர். மிகவும் வயதான வேட்பாளர், பலவீனமாகக் காட்சியளித்தவர் என்பதை மீறி பைடன் வெற்றிப் பெற்றது அவர்களுக்கு வியப்பை அளித்தது. பைடனின் பலமே கமலா ஹாரிஸ் தான் என்றார்கள். அடுத்த அமெரிக்க ஜனாதிபதி கமலா என்று ஜோசியம் கூறினார்கள். வருங்கால அமெரிக்க ஜனாதிபதி வாழ்க என்று முத்துகாளை போல் கோஷமிடாதது தான் குறை.
அமெரிக்காவில் விசா மூலம் வந்து இருக்கும் இந்தியர்களுக்கு அடுத்த அதிபராக ட்ரம்ப் வராமல் பைடன் வந்தால், தங்களின் இருப்புக்குப் பங்கம் வராமல் இருக்கும் என்ற நினைப்பு. அவரது ஆட்சிக் காலத்தில் அவ்வளவு தடை உத்தரவுகளைக் கொண்டு வந்திருந்தார் ட்ரம்ப். ஆனால் இப்படி நினைப்பு கொண்டவர்களுக்கு ஓட்டுக் கிடையாது. விசா மூலம் வந்து, க்ரீன் கார்டு பெற்று, குடியுரிமை பெற்றவர்களுக்கு ஓட்டுரிமை உண்டு. அப்படி ஓட்டுரிமை பெற்றவர்களுக்கு இனி விசா பிரச்சினை கிடையாதென்பதால், அவர்களின் அடுத்தடுத்த வாழ்வாதாரப் பிரச்சினைகளான பொருளாதார வளர்ச்சி, வரிக் குறைப்பு ஆகியவற்றை முன்வைத்து ட்ரம்ப்பை ஆதரித்தனர்.
இது தவிர, அமெரிக்கா வந்திருந்த மோடி வேறு ட்ரம்ப்பை ஆதரித்துப் பேசி சென்றிருந்தார். இதனால் அமெரிக்காவில் இருக்கும் பாரதிய ஜனதா ஆதரவாளர்கள், மோடி பக்தர்கள், சுருக்கமாகச் சங்கிகள் ட்ரம்ப் ஆதரவாளர்களாக மாறி போயிருந்தனர். எதிர்கட்சிகாரர்கள் இங்குப் பைடன் - கமலா ஆதரவாளர்களாக மாறி போனார்கள்.
இதில் கமலா ஹாரிஸ் அவர்களுக்குப் பலவகை ஆதரவாளர்கள். தமிழர் என்று ஒரு குரூப், இந்தியர் என்று ஒரு குரூப், கருப்பர் என்று ஒரு குரூப், பெண் என்று குரூப், மாமி என்று ஒரு குரூப், மாட்டுக்கறி சாப்பிடும் மாமி என்று ஒரு குரூப் என்று சுற்றி சுற்றி ஆதரவளிப்பதற்குப் பல குரூப்கள் இருந்தன. மாட்டுக்கறி மாமி என்ற சொல்லாடல் கொஞ்ச நாட்களாகக் கேட்காமல் இருந்தது. இப்ப திரும்பவும்.
இப்படி நவம்பர் மாத தேர்தல் களேபரம் சிறப்பாகத் தொடங்கியுள்ளது. அடுத்து எலக்டோரல் ஓட்டுப் பரபரப்பு ஒ இருக்கிறது. யாராவது கட்சி மாறி ஓட்டு போடுவார்களா என்று பார்ப்போம். ட்ரம்ப் இதுவரை வந்த முடிவுகளை ஒத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. நான் தான் வெற்றிப் பெற்றேன் என்று சம்பந்தம் இல்லாமல் ட்வீட் போட்டு இருக்கிறார். அவரிடம் எப்படி நடந்ததையெல்லாம் சொல்லி, விளக்கி, தோல்வியை ஒத்துக் கொள்ள வைத்து, வெள்ளை மாளிகை விட்டு வெளியே கொண்டு வரப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இது போன்ற அடுத்தக் கட்ட தேர்தல் களேபரங்களை டிசம்பரில் பார்ப்போம்.
No comments:
Post a Comment