Monday, October 2, 2017

நீங்கள் எட்டு மணி நேரம் தான் வேலை பார்க்கிறீர்களா?

பனிப்பூக்களில் வெளிவந்த கட்டுரை.



உலகமெங்கும் மே ஒன்றாம் தேதி கொண்டாடப்படும் தொழிலாளர் தினம், அமெரிக்காவில் மட்டும் செப்டம்பர் முதல் திங்கள் அன்று கொண்டாடப்படும் காரணம் என்ன? அமெரிக்காவுக்குச் சைனீஸ் நூடுல்ஸும் டொமட்டோ சாஸும் பிடிக்கும் அளவுக்கு, சோஷலிசமும் போராட்டங்களும் பிடிப்பதில்லை. மே 1 முதல் எட்டு மணி நேரம் மட்டுமே வேலை என்ற கோரிக்கையை முன் வைத்து நடத்தப்பட்ட சிகாகோ தொழிலாளர் போராட்டத்தை உலகமே வருடம் தோறும் மே ஒன்றாம் தேதி அன்று நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்க, அமெரிக்காவில் மட்டும் தொழிலாளர் தினமான செப்டம்பர் முதல் திங்களில் "சம்மர் முடியுது, ஸ்கூல் தொறக்குது, வருடத்தின் கடைசி ட்ரிப்" என்று ப்ளான் செய்து சுற்றுலா சொகுசில் இருப்பார்கள் மக்கள்.

சரி, அது என்ன சிகாகோ போராட்டம், எட்டு மணி நேர வேலை? 1870களில் உலகமெங்கும் தொழிற்சாலைகள் பெருகிய காலக்கட்டத்தில், சிகாகோவிலும் அந்த வளர்ச்சி நன்கு காணப்பட்டது. தொழிலாளர்கள் சராசரியாக வாரத்திற்கு ஆறு நாட்கள் எனச் சுமார் அறுபது மணி நேரங்கள் மேலே உழைத்தார்கள். நூறு மணி நேரங்கள் உழைக்க வைக்கப்பட்டவர்களும் இருந்தனர். அவர்களது பணிநிலையைச் சீராக்க, தினசரி எட்டு மணி நேர வேலை என்ற கோரிக்கை, தொழிலாளர்களால் அதிகார வர்க்கத்திடம் வைக்கப்பட்டது. அமெரிக்கத் தொழிலாளர் சம்மேளனம், 1886 மே ஒன்றில் இருந்து தினசரி வேலை நேரம் 8 மணி நேரமாகத் தான் இருக்க வேண்டும் என்று தீர்மானத்தை முன்வைத்து, அதற்கான போராட்டங்களை முன்னெடுத்தனர். இதற்கான போராட்டங்கள், பேரணி பல இடங்களில் நடந்தன. சிகாகோவில் ஹேமார்க்கெட்டில் என்னும் இடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி கோஷங்களை எழுப்பினர். அங்கு வந்த காவல்துறை, கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயல, அந்தப் போராட்டக்களத்தில் தொழிலாளர் உரிமைக்கான முதல் குண்டு வீசப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஏழு போலீஸார் உள்படச் சுமார் பதினைந்து பேர் பலியானார்கள். அறுபதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்தன. 1940 இல் அமெரிக்கக் காங்கிரஸ் 40 மணி நேர வார வேலைக்கான சட்டம் இயற்றியது.

ஆனால், இந்த உலகில் தொழிலாளர்கள் எல்லாம் இன்னமுமா எட்டு நேரம் மட்டும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? எனக்கு நன்கு தெரிந்த ஐடி துறையை எடுத்துக் கொண்டாலே, என்னால் தயக்கமின்றிக் கூற முடியும் - இல்லையென்று.

கம்பெனியின் பாலிசி, அப்பாயிண்மெண்ட் லெட்டர் எனப் பயன்பாட்டில் இல்லாதவற்றைக் கூறும் பேப்பரில் மட்டும் தான், எட்டு மணி நேர வேலை இருக்கும். அதற்கு முரணாக, அன்றாடப் பயன்பாட்டு நெறிமுறைகள் இருக்கும் பிற இடங்களில் எட்டு மணி நேர வேலைக்கான வாய்ப்பே இருக்காது. ப்ரொடக்ஷன் இஷ்யூ (Production Issue) என்றால் எந்நேரம் என்றாலும் பார்க்க வேண்டும், ப்ரொடக்ஷன் இன்ஸ்டாலை (Production install) நைட் தான் செய்ய வேண்டும், டிசாஸ்டர் ரிக்கவரி டெஸ்டிங் (Disaster Recovery Testing) வாரயிறுதியில் செய்ய வேண்டும், ஸ்ப்ரிண்டில் (Sprint) கம்மிட் செய்தவை, எந்த நிலையிலும் கண்டிப்பாக ஸ்ப்ரிண்ட் முடிவிற்குள் முடிக்கப்பட வேண்டும். இதற்கு ஈடுகட்ட தனியாக விடுமுறை ஏதும் இல்லை. பிறகு, எட்டு மணி நேர வேலை? அமெரிக்காவில் மே ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினம் பற்றிச் சிந்திக்காமல் இருப்பதில் காரணம் இருக்கிறதல்லவா!!

கணினி முன் உட்கார்ந்துப் பார்க்கும் வேலைகளில், பெரிய உடல் உழைப்பு இல்லையென்பதால், இப்படி நேரம் கடந்த வேலையை, ஒரு குறையாக யாரும் பெரிதாகச் சொல்வதில்லை. ஆனால், இப்படி வேலை பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகளை, சம்பந்தப்பட்டவர்களே கவனிப்பதில்லை. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பலர் பாதிக்கப்படுகின்றனர்.

இன்னொன்று, ஃபேக்டரி கதவை மூடிவிட்டு உள்ளூக்குள் கிடந்து வேலைப் பார்க்கும் சூழல் இதில் இல்லை. கையில் ஒரு லேப்டாப்பைக் கொடுத்து, எங்கு வேண்டுமென்றாலும், எப்போது வேண்டுமென்றாலும் வேலை பார்த்துக் கொள்ளலாம் என்பதால், ஆர்வக் கோளாறு காரணமாகவும், பெயருக்கும், பணியிடத்து முன்னேற்றங்களுக்காகவும் பலரும் தாமே பலருக்குத் தவறான முன்னுதாரணமாக இந்த விஷயத்தில் அமைந்து விடுகிறார்கள்.

இது போன்ற விஷயங்களில் சில பெண்கள் தான் கட்டுப்பாட்டுடன் 8 மணி நேர வேலையுடன் ஒருதினத்தை நிறுத்திக்கொள்கிறார்கள். இதற்கு அவர்கள் குடும்பச் சூழல், சார்புப் பொருளாதார நிலைமை போன்றவை காரணமாக இருக்கலாம். பெரும்பாலான ஆண்களை முழு நேரமும் அலுவலக வேலைக்கு நேர்ந்துவிட்டதால், அதிலேயே கதியாகக் கிடக்கிறார்கள். தனிப்பட்ட வேறு துறைச் சார்ந்த ஆர்வத்தை ஏற்படுத்திக்கொண்டால், இதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துக்கொள்ளலாம்..

எட்டு மணி நேரத்தை அதிகாரவர்க்கத்திடம் பேசுவதை விட்டு, தனி ஒருவனாக ஒவ்வொரு தொழிலாளியும் தன்னுள் இருந்து சிந்திக்கும் காலக்கட்டம் இது.

.

No comments: