அதென்ன புர்ச்சி? எந்நேரமும் களத்தில் நின்று போராடினால், அது புரட்சி. டைம்பாஸுக்காக, இணையத்தில் உட்கார்ந்து அன்றைய தினத்தின் ஹாட் டாபிக்கிற்குச் சவுண்ட் விட்டுக் கொண்டிருந்தால், அது புர்ச்சி. :-)
சமீப ஆண்டுகளில், இத்தகைய புர்ச்சியாளர்களின் புகலிடமாக, ஃபேஸ்புக் இருந்து வருகிறது. சமயங்களில், நம்ம சுற்று வட்டாரத்திலேயே இவ்வளவு புர்ச்சியாளர்களா என்று மலைக்க வேண்டியிருக்கிறது.
இவர்களை அடையாளம் காண்பது எப்படி?
- கண்டிப்பாக, டெய்லி போஸ்ட் போடுவார்கள். போடாட்டி? ஆபீஸ்ல புழிஞ்சு எடுத்துட்டு இருக்காங்க'ன்னு புரிஞ்சுக்கோங்க!!
- சொந்த கதை, வீட்டு நிகழ்வுகள், வேலை, கல்வி பற்றியெல்லாம் எழுத மாட்டார்கள். ஒன்லி, நாட்டுப் பிரச்சினை. அதிலும், முக்கியமாகப் பிரச்சினை இருக்க வேண்டும்.
- அப்படியே என்றேனும் எந்தப் பிரச்சினையும் இல்லாத நாளில், சொந்த கதையை எழுதினாலும், அதில் கொஞ்சம் காரம் சேர்த்து, சமூகத்துக்கான கருத்து இல்லாம முடிக்க மாட்டார்கள்.
- அமெரிக்க அதிபரோ, ஆர்பிஐ கவர்னரோ, யார இருந்தாலும் சரி, கூச்சமே படாம அறிவுரை சொல்வார்கள்.
- என்னமோ, எல்லா நாட்டு பிரதமர்களும் இவர்களது போஸ்ட்டை படித்து விட்டு தான் தூங்க போவது போல், அவர்களுக்குக் கடிதம் எழுதிக் கேள்வி கேட்டுக் கொண்டு இருப்பார்கள்.
- 'ஏ! தாழ்ந்த தமிழகமே‘ என்று தமிழ்நாட்டுக்கு 100 அடி மேல் நிற்பது போல் கூவுவார்கள்.
- பிற ரசிகர்களை விசிலடிச்சான் குஞ்சுகள் என்று சொல்லிவிட்டு, முதல் நாளே சட்டை கிழிய, சாரி, இப்பல்லாம் எங்க சட்டை கிழியுது? பர்ஸ் கிழிய, படம் பார்த்து விட்டு, ஹீரோவின் முகத்திரையைக் கிழிக்கிறேன் என்று ஏதாவது கிறுக்குவார்கள். இவர்கள் இணையத்தை விட்டுக் களம் இறங்கும் ஒரே இடம் திரையரங்காகத் தான் இருக்கும்.
- 'தோழர்’ என்ற நல்ல வார்த்தையை, காமெடியாக்குபவர்கள். மொக்கை போடும் போது கூட, தோழர் என்று அழைத்துக் கொண்டு அன்பே சிவம் நல்லசிவமாக நினைத்துக் கொண்டு ஃபேஸ்புக்கில் வாழ்வார்கள்.
- இன்னொரு வகைப் பார்ட் டைம் புர்ச்சியாளர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு வீடு, வேலை, தோப்பு, தொறவு என்று பல முக்கியப் பணிகளுக்கிடையே திடீரென்று ஏதேனும் விஷயத்தில் சமூகப் பார்வை தட்டுப்பட்டு விட்டால், உடனே பார்ட் டைம் புர்ச்சியாளர்களாய் உருவெடுத்து விடுவார்கள். வாட்ஸ் - ஆப் ஃபார்வர்ட், ஃபேஸ்புக் ஷேரிங், டிவிட்டர் ரீவிட் என்று நேரம் கிடைக்கும் போது மட்டும் பொங்கி விட்டு, மற்ற நேரம் கடமையை ஆற்ற சென்று விடுவார்கள். சம்பந்தபட்ட இணையத்தளத்திற்கு இவர்களால் கூடும் பேஜ் வியூஸ் தவிர வேறெந்த பிரயோஜனமும் இல்லையென்றாலும், அதையெல்லாம் நம் புர்ச்சியாளர்கள் கண்டுக்கொள்ள மாட்டார்கள்.
- பல புர்ச்சியாளர்களோட புரட்சி, அம்பானியை நம்பி தான் இருக்கிறது. அதாவது, அவரோட ஜியோ மற்றும் அது போன்ற இலவச இணையச் சேவையை நம்பியிருக்கின்றன. ஃப்ரீ வை- ஃபையில் மட்டும் வரும் சமூக அக்கறையா? அப்ப , அது புர்ச்சியே தான்.
கண்டுப்பிடிச்சிட்டீகளா, உங்களைச் சுற்றி இருக்கும் புர்ச்சியாளர்களை? என்னது, உங்களுக்கும் இந்தத் தகுதிகள் எல்லாம் இருக்கிறதா? அப்படியென்றால். பிடியுங்கள் புர்ச்சியாளர் பட்டத்தை.
முன்பெல்லாம் ஏதேனும் பிரச்சினை நடக்கும் போது, முதலில் அந்தப் பிரச்சினையால் பாதிக்கப்படுபவரை நினைத்து கவலை வரும். இப்போது அந்தப் பிரச்சினையை வைத்து, நம் புர்ச்சியாளர்கள் செய்யப் போகும் ஸ்டேடஸ் கூத்தில் இருந்து எப்படித் தப்பிப்போமோ என்ற கவலை தான் வருகிறது. அது நியாயமான சமூகக் கோபமோ அல்லது அசட்டு ஆசட்டு கோளாறோ, வேறு வழி தெரியாமல் இணையத்தில் சரணடையும் இவர்கள், சிறிது காலத்தில் களைத்தோ அல்லது புரிந்தோ இந்த மெய்நிகர் போராட்ட உணர்வில் இருந்து வெளிவந்துவிடுவார்கள்.
பின் குறிப்பு - இந்தப் புர்ச்சியாளர்களுக்கு மத்தியிலும், சில நல்லுள்ளங்கள் தொடர்ச்சியாகத் தாம் கற்றவற்றை மற்றவருக்குப் பெரும்பாலான நேரங்களில் பகிர்ந்து கொண்டு, அவ்வப்போது தேவையான சமயம் மட்டும் தங்கள் கருத்துகளை நேர்மையாகப் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் பாராட்டுக்குரியவர்கள். நாம் இதில் அடையாளம் காண முயற்சி செய்திருப்பது, போலி ஃபேஸ்புக் போராளிகளை மட்டும்.
.
No comments:
Post a Comment