Monday, October 2, 2017

நீங்கள் எட்டு மணி நேரம் தான் வேலை பார்க்கிறீர்களா?

பனிப்பூக்களில் வெளிவந்த கட்டுரை.



உலகமெங்கும் மே ஒன்றாம் தேதி கொண்டாடப்படும் தொழிலாளர் தினம், அமெரிக்காவில் மட்டும் செப்டம்பர் முதல் திங்கள் அன்று கொண்டாடப்படும் காரணம் என்ன? அமெரிக்காவுக்குச் சைனீஸ் நூடுல்ஸும் டொமட்டோ சாஸும் பிடிக்கும் அளவுக்கு, சோஷலிசமும் போராட்டங்களும் பிடிப்பதில்லை. மே 1 முதல் எட்டு மணி நேரம் மட்டுமே வேலை என்ற கோரிக்கையை முன் வைத்து நடத்தப்பட்ட சிகாகோ தொழிலாளர் போராட்டத்தை உலகமே வருடம் தோறும் மே ஒன்றாம் தேதி அன்று நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்க, அமெரிக்காவில் மட்டும் தொழிலாளர் தினமான செப்டம்பர் முதல் திங்களில் "சம்மர் முடியுது, ஸ்கூல் தொறக்குது, வருடத்தின் கடைசி ட்ரிப்" என்று ப்ளான் செய்து சுற்றுலா சொகுசில் இருப்பார்கள் மக்கள்.

சரி, அது என்ன சிகாகோ போராட்டம், எட்டு மணி நேர வேலை? 1870களில் உலகமெங்கும் தொழிற்சாலைகள் பெருகிய காலக்கட்டத்தில், சிகாகோவிலும் அந்த வளர்ச்சி நன்கு காணப்பட்டது. தொழிலாளர்கள் சராசரியாக வாரத்திற்கு ஆறு நாட்கள் எனச் சுமார் அறுபது மணி நேரங்கள் மேலே உழைத்தார்கள். நூறு மணி நேரங்கள் உழைக்க வைக்கப்பட்டவர்களும் இருந்தனர். அவர்களது பணிநிலையைச் சீராக்க, தினசரி எட்டு மணி நேர வேலை என்ற கோரிக்கை, தொழிலாளர்களால் அதிகார வர்க்கத்திடம் வைக்கப்பட்டது. அமெரிக்கத் தொழிலாளர் சம்மேளனம், 1886 மே ஒன்றில் இருந்து தினசரி வேலை நேரம் 8 மணி நேரமாகத் தான் இருக்க வேண்டும் என்று தீர்மானத்தை முன்வைத்து, அதற்கான போராட்டங்களை முன்னெடுத்தனர். இதற்கான போராட்டங்கள், பேரணி பல இடங்களில் நடந்தன. சிகாகோவில் ஹேமார்க்கெட்டில் என்னும் இடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி கோஷங்களை எழுப்பினர். அங்கு வந்த காவல்துறை, கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயல, அந்தப் போராட்டக்களத்தில் தொழிலாளர் உரிமைக்கான முதல் குண்டு வீசப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஏழு போலீஸார் உள்படச் சுமார் பதினைந்து பேர் பலியானார்கள். அறுபதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்தன. 1940 இல் அமெரிக்கக் காங்கிரஸ் 40 மணி நேர வார வேலைக்கான சட்டம் இயற்றியது.

ஆனால், இந்த உலகில் தொழிலாளர்கள் எல்லாம் இன்னமுமா எட்டு நேரம் மட்டும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? எனக்கு நன்கு தெரிந்த ஐடி துறையை எடுத்துக் கொண்டாலே, என்னால் தயக்கமின்றிக் கூற முடியும் - இல்லையென்று.

கம்பெனியின் பாலிசி, அப்பாயிண்மெண்ட் லெட்டர் எனப் பயன்பாட்டில் இல்லாதவற்றைக் கூறும் பேப்பரில் மட்டும் தான், எட்டு மணி நேர வேலை இருக்கும். அதற்கு முரணாக, அன்றாடப் பயன்பாட்டு நெறிமுறைகள் இருக்கும் பிற இடங்களில் எட்டு மணி நேர வேலைக்கான வாய்ப்பே இருக்காது. ப்ரொடக்ஷன் இஷ்யூ (Production Issue) என்றால் எந்நேரம் என்றாலும் பார்க்க வேண்டும், ப்ரொடக்ஷன் இன்ஸ்டாலை (Production install) நைட் தான் செய்ய வேண்டும், டிசாஸ்டர் ரிக்கவரி டெஸ்டிங் (Disaster Recovery Testing) வாரயிறுதியில் செய்ய வேண்டும், ஸ்ப்ரிண்டில் (Sprint) கம்மிட் செய்தவை, எந்த நிலையிலும் கண்டிப்பாக ஸ்ப்ரிண்ட் முடிவிற்குள் முடிக்கப்பட வேண்டும். இதற்கு ஈடுகட்ட தனியாக விடுமுறை ஏதும் இல்லை. பிறகு, எட்டு மணி நேர வேலை? அமெரிக்காவில் மே ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினம் பற்றிச் சிந்திக்காமல் இருப்பதில் காரணம் இருக்கிறதல்லவா!!

கணினி முன் உட்கார்ந்துப் பார்க்கும் வேலைகளில், பெரிய உடல் உழைப்பு இல்லையென்பதால், இப்படி நேரம் கடந்த வேலையை, ஒரு குறையாக யாரும் பெரிதாகச் சொல்வதில்லை. ஆனால், இப்படி வேலை பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகளை, சம்பந்தப்பட்டவர்களே கவனிப்பதில்லை. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பலர் பாதிக்கப்படுகின்றனர்.

இன்னொன்று, ஃபேக்டரி கதவை மூடிவிட்டு உள்ளூக்குள் கிடந்து வேலைப் பார்க்கும் சூழல் இதில் இல்லை. கையில் ஒரு லேப்டாப்பைக் கொடுத்து, எங்கு வேண்டுமென்றாலும், எப்போது வேண்டுமென்றாலும் வேலை பார்த்துக் கொள்ளலாம் என்பதால், ஆர்வக் கோளாறு காரணமாகவும், பெயருக்கும், பணியிடத்து முன்னேற்றங்களுக்காகவும் பலரும் தாமே பலருக்குத் தவறான முன்னுதாரணமாக இந்த விஷயத்தில் அமைந்து விடுகிறார்கள்.

இது போன்ற விஷயங்களில் சில பெண்கள் தான் கட்டுப்பாட்டுடன் 8 மணி நேர வேலையுடன் ஒருதினத்தை நிறுத்திக்கொள்கிறார்கள். இதற்கு அவர்கள் குடும்பச் சூழல், சார்புப் பொருளாதார நிலைமை போன்றவை காரணமாக இருக்கலாம். பெரும்பாலான ஆண்களை முழு நேரமும் அலுவலக வேலைக்கு நேர்ந்துவிட்டதால், அதிலேயே கதியாகக் கிடக்கிறார்கள். தனிப்பட்ட வேறு துறைச் சார்ந்த ஆர்வத்தை ஏற்படுத்திக்கொண்டால், இதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துக்கொள்ளலாம்..

எட்டு மணி நேரத்தை அதிகாரவர்க்கத்திடம் பேசுவதை விட்டு, தனி ஒருவனாக ஒவ்வொரு தொழிலாளியும் தன்னுள் இருந்து சிந்திக்கும் காலக்கட்டம் இது.

.

ஃபெட்னா பேரவைத் தமிழ் விழா 2017

பனிப்பூக்களில் வெளிவந்த கட்டுரை.



ஃபெட்னாவின் 2017 பேரவைத் தமிழ் விழா, மின்னியாபொலிஸில் எம்சிசி (MCC) என்றழைக்கப்படும் பிரமாண்ட கன்வென்ஷன் சென்டரில் (Minneapolis Convention Center) ஜூலை 1, 2 மற்றும் 3 ஆம் தினங்களில் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. இவ்விழாவுக்கு அமெரிக்கா, இந்தியா, கனடா, சிங்கப்பூர் என உலகின் பல பகுதிகளில் இருந்தும் விருந்தினர்கள் வந்து கலந்துக் கொண்டனர்.

முன்னதாக, 31 ஆம் தேதியன்று வெள்ளி மாலைவில், வந்திருந்த விருந்தினர்களைச் சந்தித்து, அவர்களுடன் உணவருந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘நட்சத்திர இரவு’ நிகழ்ச்சி செயிண்ட் பாலில் உள்ள வெல்ஸ்டோன் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கயானா பிரதமர் மோசசு வீரசாமி நாகமுத்து, ஒரிசா பாலு, பொன்ராஜ், மிஷ்கின், கார்த்திகேய சிவசேனாதிபதி, சுகிர்தராணி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். கேழ்வரகு அடை, பரோட்டா, தலப்பாகட்டி கோழிக்கறி, ஆம்பூர் பிரியாணி, தேங்காய் போளி, கருப்பட்டி மைசூர்பாகு எனத் தமிழ்நாட்டுச் சிறப்பு உணவுப் பதார்த்தங்கள் விருந்தினர்களுக்குப் பரிமாறப்பட்டது.

அடுத்த நாளான சனிக்கிழமை ஜூலை 1ஆம் தேதி, விழா நிகழ்ச்சிகள் காலை பத்து மணியில் இருந்து துவங்கியது. மின்னியாபொலிஸ் கன்வென்ஷன் சென்டரில் இருக்கும் மெயின் ஆடிட்டோரியம் இவ்விழாவிற்காகத் தயாராகி இருந்தது. தமிழர் மரபு என்ற கருப்பொருள் கொண்ட விழா என்பதால், நிகழ்ச்சி தயாரிப்புகள் அனைத்தும் அதைச் சார்ந்தே இருந்தன.

அரங்கின் நுழைவு வாயில் இரு பக்கமும் உருவாக்கபட்ட வாழை மரங்கள், அரங்கின் உள்ளே தமிழர் கலைகளைக் காட்சிப்படுத்தும் வண்ண ஒவியங்கள், மேடையின் பின்னணியில் டிஜிட்டல் திரையில் நிகழ்ச்சிக்குப் பொருத்தமாகக் காட்டப்பட்ட காட்சிகள், இவ்விழாவுக்கெனப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட முரசு, நாதஸ்வர, தவிலுடன் கூடிய மங்கல இசை, பறை முழக்கம், மக்களிசை, தமிழர் வரலாற்றைக் காட்டும் காலக்கோடு என எங்கும் தமிழர் மரபு முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தது.

கயானா பிரதமர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களால் முரசு கொட்டி தொடங்கப்பட்ட இந்த விழாவில் இயல், இசை, நாடகம் என ஒவ்வொரு கலை பரிணாமத்திற்கும் இடமிருந்தது. இந்தியாவில் இருந்து வந்த நாதஸ்வர, தவில் கலைஞர்களான மாம்பலம் ராமசந்திரன் மற்றும் அடையார் சிலம்பரசனுடன், இங்கு அவர்களிடம் பயின்ற மாணவர்கள் இணைந்து மங்கல இசை நிகழ்ச்சியை இரு தினங்களின் முதல் நிகழ்ச்சியாகக் காலையில் நடத்தினர். திருக்குறள் மறை பின்பு இளம் தலைமுறையினரால் பாடப்பட்டது. பல்வேறு தமிழ் படைப்பாளிகளின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட விழா மலர் மேடையில் எழுத்தாளர் சுகுமாரனால் வெளியிடப்பட்டது. சுகிர்தராணி தலைமையில் கவியரங்கம், ரோகிணி தலைமையில் கருத்துக்களம் நடத்தப்பட்டன. சின்னி ஜெயந்த் நகைச்சுவையாகப் பல குரல்களில் பேசி, பாடல்களும் பாடினார். மினசோட்டா மற்றும் சிகாகோ, கேன்சஸ் ஆகிய தமிழ் சங்கங்களின் பங்களிப்புடன் நாடகங்கள், நாட்டியங்கள் அரங்கேற்றப்பட்டன. முதல்முறையாக அமெரிக்க தேசிய கீதம் தமிழில் இந்த மேடையில் பாடப்பட்டது. ராஜா கிருஷ்ணமூர்த்தி, கிளாரன்ஸ் ஜெய், பழனி குமணன் ஆகியோருக்கு அமெரிக்கத் தமிழ் முன்னோடி விருது வழங்கப்பட்டன. வந்திருந்த சிறப்பு விருந்தினர்களின் சிறப்புரைகள், சக்தியும் அவரது மாணவக்குழுவும் நடத்திய அதிரடியான அதிகாரப் பறை முழக்கம், தமிழ் தேனீ, குறள் தேனீ எனச் சிறுவர்களுக்கான போட்டிகள், இலக்கிய ஆர்வலர்களுக்கான வினாடி வினா, அனைத்துச் சங்கங்களும் பங்குபெற்ற சங்கங்களின் சங்கமம் என்ற விழா மேடையில் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வந்தன.

அத்தனைக்கும் முத்தாய்ப்பாகப் பாடகர் ஜெயமூர்த்தியுடன் பிற இசை, நடனக்குழுக்கள் இணைந்து நடத்திய மக்களிசையும், பேராசிரியர் ராஜூவின் இயக்கத்தில் இந்தியாவில் இருந்து வந்த நாடக கலைஞர்களுடன் உள்ளுர் கலைஞர்களும் இணைந்து நடத்திய மருதநாயகம் நாடகமும் சனிக்கிழமை இரவு பொழுதை மேலும் இனிமையாக்கின. இது போல், ஞாயிறன்று மாலையில் கனடாவில் இருந்து வந்த அக்னி இசைக்குழுவினருடன் இணைந்து ஜெயமூர்த்தி, அருண்ராஜா காமராஜ், ராஜகணபதி, ஸ்ரதா, நிரஞ்சனா ஆகிய பாடகர்களும், பிற இசைக் கலைஞர்களும் கலந்து கொண்ட இசை கச்சேரியும் வந்திருந்தோரை ஆட்டம் போட செய்தது.

மக்களிசை நிகழ்ச்சியில் நேரடி தமிழ் பண்பாட்டு இசைக்கு ஜெயமூர்த்தி அவர்கள் பாட, கரகம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, காவடி ஆகிய தமிழகப் பாரம்பரிய நடனங்களை அந்தப் பாடலுக்கு ஏற்ப, மினசோட்டா தமிழ் சங்கத்தினரும் பிற தமிழ் சங்கத்தினரும் மேடையில் ஆடியது, பார்வையாளர்களைப் பிரமிக்க வைத்தது. மருதநாயகம் நாடகம் பெரும் தரத்துடன் தயாரிக்கப்பட்டிருந்தது. மரபார்ந்த நாடகக் கலைஞர்களுடன் உள்ளூர் கலைஞர்களின் நடிப்பு, நேரடி இசை, காட்சிக்கேற்ற ஒளியமைப்பு, ஒளியின் மூலம் கதைக் கூறல் என அனைவரையும் நாடகத்துடன் ஒன்றிவிடச் செய்தது.

இப்படிப் பார்வையாளர்களைக் கவர்ந்த மேடைக் கலை நிகழ்ச்சிகள் பல இருந்தன. அத்தனை நிகழ்ச்சிகளைப் பற்றியும் குறிப்பிட வேண்டுமென்றால் ஒரு புத்தகமோ, தொடரோ எழுத வேண்டி வரும். இவையெல்லாம் ஒரு மேடையில் நடைபெற்ற நிகழ்வுகள். இவை தவிர, பிற தளங்களிலும் வேறு பல நிகழ்வுகள் நடைபெற்று வந்தன.

முதல் தளத்தில் இருக்கும் மெயின் ஆடிட்டோரியத்தில், முதன்மையான நிகழ்ச்சிகள் நடைபெற, அந்த அரங்கின் வெளியே வரிசையாகக் கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆச்சி மசாலா, மணிமேகலை பிரசுரம், ஜீ தமிழ், லைகா மொபைல், ஐ-பாட்டி போன்ற நிறுவனங்கள் இங்குக் கடைகள் அமைத்திருந்தன. இதன் பக்கத்திலேயே தமிழர் சார்ந்த நிகழ்வுகளைப் பிற உலக நிகழ்வுகளுடன் இணைத்து காட்டும் தமிழர் காலக்கோடு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

முதல் நாளன்று, தரைத்தளத்தில் இருக்கும் அரங்கில் தமிழ் தொழில் முனைவோர் கலந்து கொண்ட TEFCON கலந்துரையாடல் நிகழ்ச்சி காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேரிலேண்ட் மாகாணப் போக்குவரத்து ஆணையர் ராஜன் நடராஜன், ஆச்சி நிறுவனத் தலைவர் பத்மசிங் ஐசக், கிட்டி என்றழைக்கப்படும் ராஜா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு உரையாற்றினர். சக தொழில் முனைவோருக்கும், தொழில் தொடங்க ஆர்வம் இருப்போருக்கு இந்த நிகழ்வு கண்டிப்பாகப் பயனளித்திருக்கும். அமெரிக்கக் காங்கிரஸ் பிரதிநிதி ராஜா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இறுதியில் சிறப்புரை ஆற்றினார்.

இரண்டாம் தளத்தில் இருக்கும் அறைகளில் இணையரங்க நிகழ்வுகள் தொடர்ந்து சனிக்கிழமை அன்றும், ஞாயிற்றுக்கிழமை அன்றும் நடைபெற்றன. இந்த அறைகள் அனைத்தும் பக்கத்திலேயே இருந்ததால், ஒன்றன் பின் அடுத்து என்று சென்று வர சுலபமாக இருந்தது. கல்வி, மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, இசை, ஆராய்ச்சி, குடியுரிமை, பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டம், ஹார்வர்ட் தமிழ் இருக்கை எனப் பலதரப்பட்ட தலைப்புகளில் இந்த நிகழ்வுகள் அமைந்திருந்தன. பொன்ராஜ், சிவகார்த்திகேய சேனாதிபதி, ஒரிசா பாலு, நல்லசிவம், மிஷ்கின், நியாண்டர் செல்வன் ஆகியோரது கலந்துரையாடல் நிகழ்வுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. எதில் கலந்து கொள்வது, எதை விடுவது என்று குழப்பம் வரும் அளவுக்கு அத்தனை நிகழ்வுகள். அத்தனையும் நல்ல பயனுள்ள நிகழ்வுகள்.

இரண்டாம் தளத்தில் மற்றொரு பக்கம் இருக்கும் ஒரு பெரிய அறையில் காலை, மதியம் மற்றும் இரவு மூன்று வேளைகளிலும் சிறப்பு உணவு பரிமாறப்பட்டது. பஃபே முறையில் பரிமாறப்பட்ட உணவு, வந்திருந்த விருந்தினர் அனைவராலும் பாராட்டப்பட்டது. பெரும் உற்சாகத்துடன் இளம் சிறார்களும் உணவு பரிமாறலில் ஈடுபட்டனர். நிகழ்ச்சிகளுக்கு நடுவே ஒரு மணி நேரம் உணவுக்கென ஒதுக்கப்பட்டது. அந்த நேரத்திற்குள் அனைவருக்கும் உணவு அளித்திடும் வகையில் நான்கு வரிசைகள் அமைக்கப்பட்டு இருந்தன. வந்திருந்த மொத்த ஜனத்தையும் ஒரே இடத்தில் பார்க்கக் கூடியதாக அமைந்தது, இந்த உணவு அறை தான். எந்தத் தடங்கலும் இல்லாமல், குழப்பமும் இல்லாமல், நல்ல திட்டமிடலுடன் உணவு பரிமாறப்பட்டது. கருப்பட்டி பொங்கல், தேங்காய் சோறு, அதிரசம், கீரை வடை, ஊத்தப்பம், ஆட்டுக்கறி சுக்கா வறுவல், நாட்டுக்கோழி வறுவல், செட்டிநாட்டு கோழிக்கறி எனப் பலதரப்பட்ட உணவு வகைகள் இவ்விருந்தில் இருந்தன.

இது தவிர, காபி, டீ, சமோசா, பஜ்ஜி, பப்ஸ், கேக் போன்ற சிற்றுண்டிகள் அனைத்தும் நேரங்களிலும் அங்கேயே கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவுக்கு வந்திருந்த பெரும்பாலோர் தமிழர் பாரம்பரிய உடைகளான வேட்டி, புடவைகளில் வந்திருந்தனர். மின்னியாபொலிஸ் கன்வென்ஷன் சென்டரிலும், வெளியே டவுண்டவுன் சாலைகளிலும் தமிழ் மக்கள் வேட்டி, சேலையுடன் நடமாடியதைக் காண கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இதே தினங்களில் இந்தக் கன்வென்ஷன் சென்டர் வளாகத்தில் அமெரிக்க தேசிய மகளிர் கைப்பந்துப் போட்டியும் நடைபெற்றதால், அந்தப் பகுதியே திருவிழா கோலத்தில் இருந்தது.

அடுத்த நாள் திங்கள் காலையில் இங்கிருக்கும் ஒரு அரங்கில் எழுத்தாளர் சுகுமாரன், கவிஞர் சுகிர்தராணி, இயக்குனர்-நடிகை ரோகிணி, பொன்ராஜ், மு.இளங்கோவன், கார்த்திகேய சிவசேனாதிபதி, நல்லசிவம், ஜெயமூர்த்தி, ராஜு ஆகியோர் கலந்துக்கொண்ட இலக்கியக் கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. சுவையான, அர்த்தம் பொதிந்த பல அருமையான உரைகளை இந்த நிகழ்வில் கேட்க முடிந்தது. பேச்சாளர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, பதில்களும் பெறபட்டன. வெளியூர்களில் இருந்து வந்திருந்த இலக்கிய ஆர்வலர்கள் இதிலும் கலந்துக்கொண்ட பிறகு ஊர் திரும்பினர்.

மின்னியாபொலிஸில் ஒரு மொழியைச் சார்ந்து நடத்தப்பட்ட முதல் விழா இது. அது தமிழ் மொழி சார்ந்து நடத்தப்பட்டிருப்பது, மினசோட்டா தமிழர்கள் அனைவரும் பெருமைக் கொள்ளத்தக்க அம்சம். இதில் கலந்து கொண்ட உள்ளூர் தமிழர்கள் அனைவருக்கும் இது மறக்க முடியாத நினைவுகளைக் கொடுத்திருக்கும். வந்திருந்த சிறப்பு விருந்தினர்களிடம் கலந்துரையாடக் கிடைத்த வாய்ப்பு மட்டுமின்றி, பிற ஊர்களில் இருந்து வந்த தமிழர்களிடம் அறிமுகம் கொண்டு அளாவளாகவும் சந்தர்ப்பம் கிடைத்தது. இனி ஒவ்வொரு முறையும் இது போன்ற விழாக்களில் கலந்து கொள்ளும் எண்ணத்தையும் இவ்விழா அளித்திருக்கும். தமிழர் மரபு மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்ட விழா இதுதான் என மினசோட்டாத் தமிழர்கள் மார்தட்டிக் கொள்ள வகையில் இந்த விழா சிறப்பாக நடந்து முடிந்தது.

அடுத்த ஃபெட்னா தமிழ் விழா 2018இல் டெக்சாஸ் மாகாணத்தில் டாலஸ் நகரத்தில் நடைபெற உள்ளதாம். விழா குழு தயாரிப்புப் பணிகளைத் தொடங்கிவிட்டது. பங்குக்கொள்வோரும் திட்டமிடலைத் தொடங்கிவிடலாம்.

.

தவத்தில் எழுந்த தேவாலயம் – Grotto of redemption

பனிப்பூக்களில் வெளிவந்த கட்டுரை.



ஜெர்மனியில் 1872 ஆம் ஆண்டுப் பிறந்த பால் டோபர்ஸ்டேன் (Paul Dobberstein) தனது இருபதாவது வயதில் கல்லூரி கல்விக்காக அமெரிக்கா வந்தார். மில்வாக்கியில் செயிண்ட் பிரான்சிஸ் தே செல்ஸ் (Saint Francis de Sales) கல்லூரியில் மதகுருக்களுக்காகப் படிப்பைப் படித்தார். படித்து முடித்துத் தனது பொறுப்பை ஏற்பதற்குச் சில நாட்களுக்கு முன்பு ஜன்னி காய்ச்சலில் படுத்தார். அச்சமயம் கன்னிமாதாவிடம், தான் உயிர் பிழைத்து வந்தால், அவருக்குத் தேவாலயம் கட்டுவதாக வேண்டினார். அவரது வேண்டுதல் பலித்தது. மீட்சிக்கான மண்டபத்தை (Grotto of Redemption) எழுப்புவதற்கான எண்ணம் அப்போது  பிறந்தது.

படிக்கும் காலத்திலேயே, மாதாவிற்கு கிரட்டோ என்றழைக்கப்படும் வழிப்பாட்டு குகையைக் கல்லூரியில் அமைத்திருந்தார் பாதிரியார் பால். வழிப்பாட்டுக் குகைகள், ஐரோப்பியாவில் உருவான கட்டிட வடிவங்கள். அதை அமெரிக்காவிற்கு அறிமுகப்படுத்தியர் பால். அன்று அவருடன் படித்தவர்களில் பலர், அவர் எழுப்பிய அந்தச் சிறு வழிப்பாட்டு குகையால் ஈர்க்கப்பட்டு, வேறு பல இடங்களில் அது போன்று வழிப்பாட்டுக் குகைகளைக் கட்டினார்கள். அவ்வகையில் அமெரிக்காவில் இதற்கு முன்னோடி என்று பாதிரியார் பால் டோபர்ஸ்டேனைக் கூறலாம்.

படிப்பிற்குப் பிறகு, அவருக்கான பாதிரியார் பொறுப்பு ஐயோவா (Iowa) மாகாணத்தில் உள்ள வெஸ்ட் பெண்ட் (West Bend) என்னும் சிற்றூரில் கொடுக்கப்பட்டது. சுமார் 500 பேர் மக்கட்தொகை கொண்ட ஊர் அது. தனது வேண்டுதலின் படி, ஒரு பிரமாண்ட வழிப்பாட்டுத் தலத்தைத் தன் கையாலேயே முழுக்க அங்குக் கட்ட முடிவெடுத்தார். அவர் எடுத்த முடிவு தான், அவரது கனவு தலத்தை மேலும் சிறப்பாக்கியது. சாதாரணக் கற்கள் இல்லாமல், உலகின் சிறந்த, மதிப்பு வாய்ந்த கற்களால், அந்தக் குகையைக் கட்ட எண்ணினார்.

இதற்கெனப் பல ஊர்களுக்குப் பயணம் சென்று பலவித கற்களைச் சேகரித்தார். சுமார் 14 வருடங்கள் அவருடைய கற்களுக்கான தேடுதல் தொடர்ந்தது. படிகம், ஜகடம், புஷ்பராகம், சுண்ணாம்பு கல், மரத்திலான கல் எனப் பலவித கற்கள் சேர்ந்தது. அவரிருந்த ஐயோவாவில் இப்படிப் பல ரகக் கற்கள் கிடைப்பதில்லை. அதற்காகச் சவுத் டகோடா, அர்கான்சஸ் உள்ளிட்ட பல பகுதிகளுக்குச் சென்று வந்தார். 1912இல் தான் சேகரித்த கற்கள் கொண்டு கட்டுமானத்தைத் தொடங்கினார்.

இந்தப் பணியில் தன்னுடன் மேட் (Matt) என்பவரை மட்டும் இணைத்துக்கொண்டார். பெரிதாக எந்த ப்ளானும் இல்லை. கணக்கு வழக்குகள் இல்லை. இஞ்சினியர்கள் இல்லை. ஆர்கிடெக்ட் இல்லை. எல்லாம் பாதிரியார் பால் தான். பெரிய கருவிகள் ஏதும் இல்லை. மின்விளக்கு கூட இல்லை. அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும் மட்டுமே அவருக்குப் போதுமானதாக இருந்தது. 1954இல் அவர் இறக்கும் வரை, அவருடைய எண்ணம் எல்லாம் இதிலேயே இருந்தது. தனது வாழ்நாளின் பெரும் பகுதியை, இதன் உருவாக்கத்திலேயே செலவழித்தார். அவருக்குப் பின்னால் மேட்டும் பாதிரியார் க்ரெவிங் (Greving) இணைந்து, இந்தப் பணியை முடித்தார்கள். பாதிரியார் க்ரெவிங், அங்கேயே தங்கியிருந்து இந்த ஆலயத்தைப் பார்த்துக்கொண்டார். ஐம்பதாண்டுகளுக்கு மேலாக, பாதிரியார் பாலின் கனவு ஆலயத்தைக் கவனமாகப் பராமரித்தவர், இல் இவ்வுலகை விட்டு நீங்கினார்.

இங்குத் தற்சமயம் வருடத்திற்குப் பத்தாயிரத்திற்கு மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இது மினசோட்டா தலைநகர் செயிண்ட் பாலில் இருந்து சுமார் 200 மைல்கள் தொலைவிலும், ஐயோவா தலைநகர் டெ மாயின்ஸில் இருந்து சுமார் 140 மைல்கள் தொலைவிலும் உள்ளது. செல்லும் வழியெங்கும் விவசாய நிலங்கள் தான். பொதுவாக, ஐயோவா மாநிலம் எங்கும் விவசாய நிலங்களைத் தான், சாலையில் செல்லும் போது காண முடிகிறது. பெரும்பாலும் சோளமும், பீன்ஸும். விவசாயம் என்றால் இது கார்ப்பரெட் விவசாயம். நிலத்தைச் சுற்றிலும், நிறுவனத்தின் பெயர் கொண்ட தட்டிகள். ராட்சத கருவிகள் ஆங்காங்கே நின்று கொண்டு இருக்கின்றன. ஹெலிகாப்டரில் மருந்து தெளிக்கிறார்கள். ஒரு எளிய மனிதனின் பெரிய கனவுலகத்தைக் தரிசித்த மயக்கத்தில் வெளியே வந்தால், நமக்கும் மருந்தடித்து நிகழ்வுலகத்திற்குப் பழையபடி கொண்டு வருகிறார்கள்.

ஒரு கட்டிடமாக, வடிவமைப்போ, கட்டுமானமோ தூரத்தில் இருந்து பார்ப்போரைக் கவருவதில்லை. இதன் வரலாறும், அந்த வரலாற்றுடனான நெருங்கிய பார்வையும் நம்மைக் கண்டிப்பாக நெகிழ வைக்கும். இங்கிருக்கும் விதவிதமான கற்களும், அவை காலத்தைக் கடந்து வந்த பாதையும் நம்மை ஆச்சரியப்படுத்தும். அங்கிருக்கும் பணியாளர் ஒருவர், ஒவ்வொரு மணி நேரமும் இது குறித்த தகவல்களை அளித்தவாறு டூர் அழைத்துச் செல்கிறார். பக்கத்தில் இருக்கும் மியூசியத்தில் பாதிரியாரின் உடமைகளும், அவர் குறித்த தகவல்களும் காண கிடைக்கின்றன். அருகே இருக்கும் ராக் ஸ்டூடியோவில், இங்குப் பயன்படுத்தியிருக்கும் கற்கள் குறித்த குறிப்புகளை வைத்திருக்கிறார்கள். தவிர, ஒரு டாக்குமெண்டரி படமும் ஒளிப்பரப்புகிறார்கள். இது எதற்கும் கட்டணம் இல்லை. விருப்பமிருந்தால், நன்கொடை அளிக்கலாம்.

வரலாற்றுச் சின்னங்களைக் காண ஆர்வமிருப்போரும், நிலவியலில் ஈடுபாடு இருப்போரும் இங்குக் கண்டிப்பாக ஒருமுறை சென்று வரலாம். ஆன்மிக அன்பர்களுக்கும் பிடிக்கும். பக்கத்திலேயே வழிபாட்டிற்கு செயிண்ட் பீட்டர் அண்ட் பால் என்னும் தேவாலயம் உள்ளது. அருகே ஒரே ஒரு உள்ளூர் உணவகம் உள்ளது. சாலட், பர்கர், மால்ட், ஸ்மூத்தி, ஐஸ்கீரிம் போன்றவை கிடைக்கின்றன. குழந்தைகள் விளையாடுவதற்கு, சறுக்கு, ஊஞ்சல் போன்றவை இந்த ஆலயத்திற்கு எதிரே இருக்கும் பூங்காவில் உள்ளன.

வெகு சில மனிதர்களின் கடும் உழைப்பில் மட்டுமே உருவான இந்தத் தேவாலயம், இயற்கை சீற்றங்களைத் தாண்டி, பாதிப்புகள் ஏதும் இன்றி இன்றும் நல்ல நிலையில் உள்ளது. இன்றைய தேதிக்கு இங்கு இருக்கும் கற்களின் மதிப்பு எக்கச்சக்கம். நூறாண்டுகளைக் கடந்து இருக்கும் இத்தலத்தை எந்நாளும் எந்நேரமும் சென்று கண்டு வரலாம். வருடத்தின் 365 நாட்களும், 24 மணி நேரமும் திறந்தே இருக்கும். மீட்சிக்கான ஆலயத்திற்குக் கதவெதற்கு, இல்லையா?

.

ஓவியா - தி பிக் பாஸ்

பனிப்பூக்களில் (ஜூலை 2017) வெளிவந்த கட்டுரை.



சமூக வலைத்தளங்கள் அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கின்றன. செய்தித் தளங்கள் தினமும் இது குறித்த செய்திகள் வாசித்துக் கொண்டிருக்கின்றன. ஆய்வுக்கட்டுரைகள் குவிகின்றன. ஒப்பிட்டுக்கவிதை பரவலாகப் பரவுகிறது. மீம்ஸ் கொட்டுகின்றன. எல்லாம் ஸ்கிரிப்ட் தான் என்று சொல்லிக் கொண்டே, தவறாமல் பார்க்கிறார்கள். டிஆர்பி எகிறுகிறது. தியேட்டரில் கூட்டம் குறைகிறது. போட்டி சேனல்களில் சூப்பர் ஹிட் திரைப்படங்களை இவ்வேளையில் தினமும் ஒளிபரப்புகிறார்கள். ஆனாலும், பிக் பாஸும் அதன் வெற்றியும் தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது.

டிவியில் இருந்து சிவகார்த்திக்கேயனை சினிமாவுக்கு அனுப்பி வைத்துவிட்டு, சினிமாவில் இருந்த கமலஹாசனை டிவிக்குக் கொண்டு வந்த விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றித் தான் எங்கும் பேச்சாக இருக்கிறது.

நாம் புரட்சிப் பெண்ணாகப் பார்த்த ஜுலி, லூசு பெண்ணாக மாறி விட்டார். ஜொள்ளு பார்ட்டியாக நமக்கு இருந்த நமிதாவை, லொல்லு தாங்கவில்லை என்கிறோம். எப்போதும் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த ஆர்த்தியை, இப்போது பார்த்துக் கடுப்பாகிறோம். சப்பை ஃபிகராகப் பார்க்கப்பட்ட ஓவியாவுக்கு, இப்போது சப்போர்ட் குவிகிறது. எல்லாம் பிக் பாஸுக்கு பிறகு.

அதிலும், ஓவியாவுக்குச் சமூக வலைத்தளங்கள் எங்கும் ரசிகர் பட்டாளங்கள். ஓவியாவின் கூறும் "நீங்க ஷட்டப் பண்ணுங்க” போன்ற வார்த்தைகளெல்லாம், பஞ்ச் டயலாக்ஸ் ஆக மாறுகின்றன. டி-சர்ட் வாக்கியங்களாக மாறுகின்றன. கூடிய விரைவில் இமான் இவற்றைப் பாடல்களாக மாற்றுவார். வாரா வாரம் அவருக்கு மக்களிடம் இருந்து குவிகிற வாக்குகளைப் பார்த்து, அவருடன் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் மட்டுமின்றி, அன்புமணி போன்ற அரசியல்வாதிகளே பொறாமைபட்டு பெருமூச்சு விடுகிறார்கள்.

ஹெலன் நெல்சன் என்ற இயற்பெயரைக் கொண்ட ஓவியா, 2007 இல் தனது பதினாறாவது வயதில் சினிமாவில் நடிக்க வந்தார். மலையாளத்தில் ப்ரிதிவிராஜூக்கு ஜோடியாகக் கங்காரு என்ற படத்தில் அறிமுகமானவர், 2010இல் தமிழில் களவாணி படத்தில் அறிமுகமானார். மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், யாமிருக்கப் பயமேன் போன்ற சிறு பட்ஜெட் ஹிட் படங்களில் நடித்திருந்தாலும், அவர் சினிமாவில் கடந்த 10 வருடங்களில் பெறாத புகழை , பிக் பாஸில் பத்து நாட்களில் பெற்று விட்டார்.

அவரது நேர்மை, வெளிப்படையான பேச்சு, அன்புடன், பரிவுடன் பழகுவது, காலை எழுந்தவுடன் உற்சாகமாக ஆட்டம் போடுவது, மழை வந்து விட்டால் தயங்காமல் சென்று நனைந்து விட்டு வருவது, எரிச்சலடையும் சமயங்களில் அந்த இடத்தை நகர்ந்து விடுவது, கோபமான சந்தர்ப்பங்களில் "நீங்க ஷட்டப் பண்ணுங்க” என்று ‘மரியாதை'யுடன் எதிர்ப்பைத் தெரிவிப்பது, தனக்கெதிராக மொத்த குழுவும் இருக்கும் போது அவர்களைத் தைரியமாக எதிர்கொள்வது, தேவைப்பட்டால் தயங்காமல் மன்னிப்பு கேட்பது என ஓவியாவின் பண்புகள் அனைத்தும் பார்வையாளர்களைக் கவர்ந்து விட்டது. ஓவியா ஆர்மி, ஓவியான்ஸ், ஓவியா வெறியர்கள் என்று விதவிதமாகப் பெயர்களில் இவரது ரசிகர்கள் வலைத்தளங்களில் வலம் வருகிறார்கள்.

ஒரு நாள் சக்தியும் ஓவியாவும் ஒரு வாக்குவாதத்தில் இருக்கிறார்கள். ஓவியா மேஜையில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருக்கிறார். நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்த சக்தி கோபத்தில் ‘அறை விடுவேன்’ என்றவாறு கையை ஓங்க, ‘எங்க அடி பார்க்கலாம்’ என்று எழுந்து வந்து அவரது முகத்திற்கு நேராக வந்து நின்றார் ஓவியா. சக்தி தான் இரண்டு அடி பின் செல்ல வேண்டி இருந்தது. தளபதியில் வரும் ‘தொட்றா பார்க்கலாம்’ சீன் போல இருந்தது. இன்னொரு முறை, அங்கிருந்த திரையில் ஜூலி சொல்லிக்கொண்டிருந்தது பொய் என்று நிரூபணம் ஆகிக்கொண்டிருந்த சமயம், எழுந்து ஜூலிக்கு ஒரு குத்து விடுவது போல் ஆக்ஷன் கொடுத்ததைக் கண்டு, அரங்கில் இருந்த பார்வையாளர்கள் மட்டுமின்றி, டிவியில் பார்த்துக்கொண்டிருந்தவர்களும் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர். அடுத்த நாள், தனது தனிமையை நினைத்துக் கண் கலங்கினால், பார்த்துக்கொண்டிருப்போரும் கலங்குகிறார்கள். இப்படி, ஒரு மாஸ் ஹீரோ இல்லாத குறையை ஓவியா தான் பிக் பாஸில் தீர்த்து வைத்துக்கொண்டிருக்கிறார்.

இது டிவி நிகழ்ச்சிக்கான நடிப்பல்ல. இது தான் அவரது இயல்பு என்று அவருடன் பழகியவர்கள் கூறுகிறார்கள். சென்ற வருடம் தனது தாயை கேன்சரில் இழந்தவர், அவரைக் காப்பாற்ற பலவாறு போராடி இருக்கிறார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழி படங்களில் நடித்து, தாயைக் காப்பாற்ற முயன்றவரால் அது முடியாமல் போய்விட்டது. இந்த வயதில் தனியாகச் சினிமா போன்ற ஒரு துறையில் தாக்குப் பிடிப்பவரால், பத்து பேரையா ஒரு வீட்டில் தாக்குப் பிடிக்க முடியாமல் போகப் போகிறது? தவிர, இந்த ஆட்டத்தின் விதிமுறையைப் புரிந்து கொண்டு, தனது இயல்பையும் மாற்ற தேவையில்லாத நிலையுடன் விளையாடுவதால், வாரா வாரம் தனது போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டாலும், மக்களால் பெருத்த ஆதரவு ஓட்டுகளால் அடுத்தடுத்த வாரங்களைச் சிரித்தவாறே கடக்கிறார்.

போகிற போக்கைப் பார்த்தால், ரஜினி, கமலை விட்டுவிட்டு ஓவியாவை தான் அரசியலுக்கு அழைப்பார்கள் போல உள்ளது. அரசியல்வாதிக்கே உரிய ஒரு பக்கத் திமிர், மற்றொரு பக்க அரவணைப்பு போன்ற தகுதிகளுடன் இருக்கும் நிலையில் அதிலும் ஜொலிப்பார் என்றே கருத வேண்டி உள்ளது. விஜய் டிவியில் நகைச்சுவை நடிகர்களை ரெடி செய்திருக்கிறார்கள், கதாநாயகர்களை ரெடி செய்திருக்கிறார்கள், இயக்குனர்களை ரெடி செய்திருக்கிறார்கள். கிடைக்கும் வரவேற்பைப் பார்த்தால், ஒரு அரசியல்வாதியையும் ரெடி செய்து விடுவார்கள் போல் உள்ளது. ஓவியா தான், நமக்கு வாய்த்த அடுத்தப் புரட்சித் தலைவி என்றால், வேறென்ன செய்வது?

எது எப்படியோ, மனித மனங்களின் இயல்பான குணங்களை வைத்துக் கொண்டு, நமது வரவேற்பறையில் ஒரு புதுவித நாடகம் ஓடிக் கொண்டிருக்கிறது. இது வரையிலான காட்சிகளில் இதன் ரசிகர்களைக் கவர்ந்த ஓவியா, அதை இனியும் தொடர்வாரா அல்லது, பாஸின் திரைக்கதை பரமபத ஆட்ட மாற்றத்தில் கீழே விழுவாரா என்று தெரியாது. ஆனால், தற்போதைய சூழலில் தனது இயல்பான, நேர்மையான குணத்தால் மக்கள் மனதில் 'தி பிக் பாஸ்’ ஆக ஒரு நல்ல இடத்தைப் பிடித்து விட்டார் என்பது தான் உண்மை.

.

மின்னஹஹா நீர்வீழ்ச்சி (Minnehaha Falls)

பனிப்பூக்களில் வெளிவந்த கட்டுரை.



மின்னியாபொலிஸில் வாரயிறுதியில் குடும்பத்துடன் எங்குச் செல்வது என்று ரொம்பவும் குழம்ப வேண்டியதில்லை. மதிய உணவு தயார் செய்து விட்டு எங்காவது ஒரு ஏரிக்கரையோரம் தஞ்சம் புகுந்து விடலாம். உட்கார்ந்து சாப்பிடுவதற்குத் தயார் நிலையில் மேஜை நாற்காலி, குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டுக் கருவிகள், பெரியவர்கள் நடமாட நடை பாதை எனச் சகல அம்சங்களும் இருக்கும்.

மின்னஹஹா நீர்வீழ்ச்சி (Minnehaha falls) இருக்கும் பூங்காவும் அப்படியொரு நல்ல வாரயிறுதி புகலிடம். மின்னியாபொலிஸ் நகரின் உள்ளேயே இருக்கும் ஒரு சிறு நீர்வீழ்ச்சி இது. மின்னடொங்கா ஏரியில் (Lake Minnetonka) தொடங்கும் மின்னஹஹா சிற்றோடை, நகரில் இருக்கும் பிற ஏரிகளைக் கடந்து, இங்கு நீர்வீழ்ச்சியாக விழுந்து, பிறகு அருகில் இருக்கும் மிஸ்ஸிசிப்பி ஆற்றில் சேர்கிறது.

பிரமாண்டமான நயகரா நீர்வீழ்ச்சி இருப்பதும் அமெரிக்கா தான் என்றாலும், அமெரிக்காவில் நீர்வீழ்ச்சி என்றால் கொஞ்சம் எதிர்பார்பைக் குறைத்துக் கொண்டு தான் செல்ல வேண்டும். எப்படி நமது நாயகிகள் அனைவருமே நயன்தாராவாக இருப்பதில்லையோ, அதுபோல் இங்கிருக்கும் நீர்வீழ்ச்சிகள் அனைத்துமே நயகராவாக இருப்பதில்லை!!

தண்ணீர் சொட்டு சொட்டாக விழுந்தாலும் சரி, பெருக்கெடுத்துப் பொங்கி விழுந்தாலும் சரி, ஆங்கிலத்தில் அதன் பெயர் ஃபால்ஸ் (falls) தான். அதனால் எந்த நீர்வீழ்ச்சி என்றாலும் எதிர்பார்ப்பு இல்லாமல் செல்வது நன்மை பயக்கும் என்பது நம் அனுபவம்.

இவ்வளவு பீடிகை போடுவதால், மின்னஹஹா நீர்வீழ்ச்சி ரொம்பவும் சிறியதாக இருக்குமோ என்று எண்ணி விட வேண்டாம். இது ஒரு நடுத்தர வகை நீர்வீழ்ச்சி. புகைப்படங்கள் எடுப்பதற்கு அருமையான இடம். நிச்சயதார்த்தம், கல்யாணம் என்றால் விசேஷ உடைகளுடன் புகைப்படம் எடுக்க உள்ளூர்வாசிகள் கேமராவும் கையுமாக வந்து விடுவார்கள். அதன் பிறகு, பிள்ளை குட்டிகளோடு சில வருடங்களுக்கு வருவார்கள்.

இந்தப் பூங்காவின் இன்னொரு சிறப்பம்சம், இங்கு வாடகைக்குக் கிடைக்கும் சைக்கிள்கள். பேருதான் சைக்கிள். ஆனால், நம்மூர் ரிக்ஷா மாதிரி இருக்கும். ஒன்றிரண்டு குடும்பங்கள் சேர்ந்துச் செல்லலாம். அனைவரும் அழுத்துவதற்குப் பெடல்கள் இருக்கும். அனைவரும் அழுத்தினால், வண்டி வண்டிக்கான வேகத்தில் செல்லும். ஒருவர் அழுத்த, மற்றவர்கள் எல்லாம் அழுத்துவது போல் நடித்தால், பாதசாரிகளைக் கடந்து செல்வதே பெரும்பாடாகி விடும். எப்படி இருந்தாலும், உடற்பயிற்சியுடன் கூடிய நல்லதொரு வேடிக்கை விளையாட்டு.

இவை தவிர, லாங்ஃபெல்லோ பூங்கா (Longfellow park), பெர்கோலா பூங்கா (Pergola park) எனப் பிற பூங்காகளும் இந்த வளாகத்தில் உள்ளன. மின்னியாபொலிஸை சிகாக்கோவுடன் இணைக்கும் இருப்புப்பாதை தொடங்கப்பட்ட சமயத்தில் இருந்த ரயில் நிலையமும், வரலாற்றுச் சாட்சியாக இங்கு இன்னமும் பாதுகாக்கப்படுகிறது.

இது 1889 ஆண்டு உருவாக்கப்பட்ட ஸ்டேட் பார்க். அந்தச் சமயத்தில், நியூயார்க்கில் மட்டும் தான், ஸ்டேட் பார்க் இருந்தது. பாஸ்டன், சிகாகோ மற்றும் பல வட அமெரிக்க மாகாணங்களில், பல பூங்காகளை அமைத்துக் கொடுத்த, புகழ் பெற்ற நிலப்பரப்பு வடிவமைப்பு வல்லுனரான கிளெவ்லேண்ட்டிடம் (Cleveland), இந்தப் பூங்காவை உருவாக்கும் பணி கொடுக்கப்பட்டது. இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் பெரும் அக்கறை கொண்ட கிளைவ்லேண்ட், இதன் இயற்கை அம்சம் குறையாமல் இந்தப் பூங்காவை அமைத்துக் கொடுத்தார். மின்னியாபொலிஸின் மத்திய பகுதியில், மிஸ்ஸிசிப்பி ஆற்றைச் சுற்றி அமைந்திருக்கும் ஏரிகளை இணைக்கும் பாதையைப் போட்டுக் கொடுத்தவரும் இவரே.

இதற்கான திட்டமிடல் நடக்கும் சமயத்தில், ஒரு திருவாளர் அருவியின் கீழ்புறத்தில் புகைப்படம் எடுக்க ஒரு மேடை அமைத்துக் கொடுக்கலாம் என்றாராம். மூச், தேவையில்லாமல் எந்தவிதக் கட்டுமானமும் தேவையில்லை என்று கட் அண்ட் ரைட்டாகச் சொல்லிவிட்டாராம்.

அப்படிப்பட்ட ஒரு நல்ல மனுஷன் உருவாக்கிக் கொடுத்த பூங்கா. பார்க்காதவர்கள், ஒரு எட்டுப் போய்ப் பார்த்துவிட்டு வாங்க!!

.

மால் ஆஃப் அமெரிக்கா

பனிப்பூக்களில் வெளிவந்த கட்டுரை.



மினசோட்டாவின் பெருமைகளில் ஒன்றான மால் ஆஃப் அமெரிக்காவிற்கு இது வெள்ளி விழா ஆண்டு. அப்படியென்ன பெருமை என்றால், அமெரிக்காவின் மிகப் பெரிய அங்காடி வளாகம் என்ற பெயரை கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகச் சூடிக் கொண்டு நிற்கிறதே.

மின்னியாபொலிஸ்வாசிகளுக்கு இந்த மால் மேல் எந்தளவு க்ரேஸ் இருக்கிறதோ தெரியாது, இங்கு வரும் வெளியூர் விருந்தினர்களுக்கு இதன் மேல் பெரும் ஆர்வம் இருக்கும். மின்னியாபொலிஸில் பார்க்க வேண்டிய இடங்கள் என்னும் லிஸ்டில் இது கண்டிப்பாக இருக்கும். இதன் முக்கியச் சிறப்பம்சம், இந்த மாலின் நடுவே இருக்கும் நிக்கலோடியன் யூனிவர்ஸ் (Nickelodeon Universe) உள்ளரங்குக் கேளிக்கை பூங்கா.

குழந்தைகளைக் கவரும் கேளிக்கை விளையாட்டுப் பூங்கா இது. உள்ளரங்கில் இருப்பதால், மழை, வெயில், பனி என்று எவ்வித தடங்கலும் இல்லாமல், வருடம் முழுக்கச் சென்று விளையாடுவதற்கு ஏற்ற இடம் இது. குளிர்காலத்தில் வெளியே எங்கே செல்வது என்று குழப்பமில்லாமல், ஒருநாள் முழுக்க நேரத்தைக் கழிப்பதற்கு, இவ்விடம் உதவும். இந்த மால் வளாகத்திற்குள்ளோ அல்லது இந்த விளையாட்டு திடலுக்கோ நுழைய எந்தக் கட்டணமும் இல்லை. விளையாடுவதற்குத் தனித்தனியாக டிக்கெட்டோ, அல்லது ஒருநாள் முழுக்க அனுமதி அளிக்கும் கை வளையமோ (Wristband) வாங்கிக்கொண்டு செல்லலாம். ஒருநாள் அனுமதி வாங்கினால், எதில் வேண்டுமானாலும், எவ்வளவு முறை வேண்டுமானாலும் விளையாடிக்கொள்ளலாம். அங்குச் சென்று வாங்குவதை விட, இணையத்தில் வாங்கினால் கொஞ்சம் சீப்பாகக் கிடைக்கும். அதைவிட மலிவாகக் காஸ்கோவில் (Costco) கிடைக்கும்.

இங்குக் குழந்தைகளைக் கவரும் மற்றொரு இடம் - சீ லைஃப் அக்வாரியம் (SeaLife Aquarium). இது ஒரு கடல்வாழ் உயிரினங்களின் அழகிய கண்காட்சி சாலை. நட்சத்திர மீன், கடல் குதிரை போன்ற காண்பதற்கு அரிய உயிரினங்களை இங்குக் காணலாம். நட்சத்திர மீன் போன்றவற்றைத் தொட்டு கூடப் பார்ப்பதற்கு வாய்ப்பு கொடுப்பார்கள். இங்குக் கடலுக்கு அடியில் மீன்களுடன் சேர்ந்து நடக்கும் உணர்வை அளிக்கும் கடல் சுரங்கப்பாதை (Ocean Tunnel) பார்வையாளர்களைக் கவரும். இந்த இடத்தில் இரவு முழுக்க விட்டத்தில் மீன்கள் அங்குமிங்கும் சென்று வருவதைப் பார்த்துக் கொண்டே, ஒரு குழுவாக உறங்குவதற்குத் திட்டம் வைத்திருக்கிறார்கள். கடலுக்கு அடியில் தூங்க முடியுமா என்று யோசிப்பவர்கள், இதை முயற்சித்துப் பார்க்கலாம்.

மால் ஆஃப் அமெரிக்காவில் இவை சிறார்களைக் கவரும் அம்சம் என்றால், பெண்களைக் கவரும் அம்சமாகப் பல கடைகள் உள்ளன. மொத்தம் ஐநூறுக்கும் மேற்பட்ட கடைகள். பரப்பளவில் மட்டுமல்ல, கடைகளின் எண்ணிக்கையிலும், அமெரிக்காவின் பெரிய மால் இது தான். மேசிஸ், சியர்ஸ், நார்ட்ஸ்ராம், மார்சல்ஸ், ஓல்ட் நேவி, ஃபாரெவர் 21 முதலிய பெரிய உடை அலங்கார மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்குமான கடைகளும், ஆப்பிள், மைக்ரோசாப்ட், பெஸ்ட் பை போன்ற தொழில்நுட்பக் கடைகளும் இங்கே அமைந்துள்ளன. ஒரு பக்கம் பெண்களையும், மறுபக்கம் குழந்தைகளையும் அனுப்பிவிட்டுவிட்டு, ஆண்கள் இன்னொரு பக்கம் வருவோர் போவோரை பராக்குப் பார்க்கலாம்!!

திருமணம் செய்யும் திட்டம் உள்ளவர்கள், இங்கிருக்கும் காதல் தேவாலயத்தை (Chapel of Love) ஒரு முறை சென்று பார்க்கவும். இது வரை இங்கு 7500 க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளன. திருமணத்திற்குத் தேவையான உடைகளும் பிற பொருட்களும் இங்கே கிடைக்கின்றன. திருமணம் ஆன பின்பு, எப்படியும் குழந்தை குட்டியோடு இங்கு அடிக்கடி வர வேண்டி இருக்கும். அப்படி வரும்போது, இந்த நிலைக்குக் காரணமான நிகழ்வு இங்குதான் நடந்தது என்பதை மகிழ்வாகவோ, அல்லது அவரவர் நிலைக்கு ஏற்ப நினைவுப்படுத்திக்கொள்ளலாம்!!

இன்று மால் ஆஃப் அமெரிக்கா இருக்கும் இடத்தில் தான், 1956 இல் இருந்து 1981 வரை மெட்ரோபாலிடன் ஸ்டேடியம் என்ற விளையாட்டு மைதானம் இருந்தது. 1986 இல் இந்த இடத்தை வாங்கிய கெர்மேசியன் (Germezian) என்ற நிறுவனம், 1989 இல் கட்டுமானப் பணியைத் தொடங்கியது. 1992 இல் கட்டுமானப் பணி நிறைவுற்று, இந்த மால் திறக்கப்பட்டது. திறந்த சமயத்தில் இருந்தே, இதுதான் அமெரிக்காவின் பெரிய ஷாப்பிங் மால். இன்றும் இதுவே அமெரிக்காவின் பெரிய ஷாப்பிங் மால். வட அமெரிக்கக் கண்டம் என்று எடுத்துக் கொண்டால், கனடாவில் இருக்கும் வெஸ்ட் எட்மான்டன் மால் (West Edmonton Mall) தான் பெரியது. அதன் உரிமையாளர்கள் தான், இதைக் கட்டியவர்களும் கூட. முன்பு இங்கு இருந்த ஸ்டேடியத்தின் ஞாபகமார்த்தமாக, அங்கிருந்த ஸ்டேடியத்தின் பெயர் பொறித்த சட்டகத்தினை இங்குத் தரையில் பதித்து வைத்திருக்கிறார்கள். அங்கிருந்த நாற்காலி ஒன்றையும் இங்குள்ள ஒரு சுவரில் மாட்டி வைத்திருக்கிறார்கள்.

மால் ஆஃப் அமெரிக்கா கட்டிடத்தில் மொத்தம் நான்கு தளங்கள் உள்ளன. முதல் தளமான தரைத்தளத்தில் ஏற்கனவே நாம் குறிப்பிட்ட நிக்கலோடியன் யூனிவர்ஸ் விளையாட்டு அரங்கமும், சுற்றிலும் நான்கு பக்கமும் கடைகளும் உள்ளன. இங்கிருக்கும் லெகோ (Lego) கடையில் சிறுவர்கள் உட்கார்ந்து லெகோ விளையாட்டுப் பொருட்கள் கொண்டு விளையாடுவதற்கு வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள். ஹார்ட் ராக், க்ரேவ் ஆகிய உணவகங்கள் தரைத்தளத்தில் உள்ளன.

இரண்டாம் தளத்தில், ஓக்லே ஸ்டோர், ஸ்கெட்சர்ஸ், அவேடா, சன்க்ளாஸ் ஹட் போன்ற ஆடை, அணிகலன்களுக்கான கடைகள் உள்ளன. மேசிஸ், சியர்ஸ் போன்ற பெரும் நிறுவனங்களின் பேரங்காடிகள் பல தளங்களுக்குப் பரந்து இருக்கின்றன.

மூன்றாவது தளம், உணவுக்கான தளம். பலவித சாப்பாட்டுக் கடைகள் இருக்கின்றன. பஃபலோ வைல்ட் விங்க்ஸ், கிரேவ், ரெயின் பாரஸ்ட் கபே போன்ற சாவகாச உணவகங்களும், சிப்போட்லே, பர்கர் கிங், நூடுல்ஸ் & கம்பெனி உள்ளிட்ட துரித உணவகங்களும் பல இங்குக் கடை விரித்திருக்கிறார்கள். முன்பே சொன்னது போல், ஒருநாள் முழுக்க இருந்து, விதவிதமாகச் சாப்பிட்டு விட்டுச் செல்லலாம். மற்றபடி, நடக்கும் வழியெங்கும் அனைத்து தளங்களிலுமே, கரிபோ, ஸ்டார் பக்ஸ் போன்ற காபிக்கடைகள் இருக்கின்றன.

நான்காவது, ஸ்மாஷ் என்ற விர்சுவல் ரியாலிட்டி விளையாட்டு அரங்கம். இந்திய பூர்வீகத்தைக் கொண்ட நிறுவனம். மற்ற தளங்களை ஒப்பிடுகையில், இங்கு நான்காவது தளம் கொஞ்சம் குறைந்த ஜன நடமாட்டத்துடன் தான் இருக்கும். முன்பு, சில தியேட்டர்கள் இருந்தன. இப்போது அவை மூடப்பட்டு, விளையாட்டுத் தளமும், சில உணவகங்கள் மட்டுமே உள்ளன. மக்கள் அதிகம் சுற்றிக் கொண்டு இருப்பது, முதல் தளத்திலும், மூன்றாம் தளத்திலும் தான். பறக்கும் அனுபவம் (Flyover America), வண்ண அனுபவம் (Crayalo Experience), ஒளி அனுபவம் (Universe of Light) என இன்னும் பார்க்க இங்கு இருக்கின்றன. விருப்பத்திற்கேற்ப ஒரு ரவுண்ட் சென்று வரலாம்.

இந்த மால் ஊரில் சரியான இடத்தில் அமைந்திருக்கிறது எனக் கூறலாம். மின்னியாபொலிஸிற்குத் தெற்கே இருக்கும் ப்ளுமிங்டன் பகுதியில் இந்த மால் இருக்கிறது. மின்னியாபொலிஸ் டவுண்டவுன், செயின்ட் பால் டவுண்டவுன் இரண்டுக்குமே சமத்தொலைவில் அமைந்துள்ளது. இதற்கெனத் தனியாகவே பகுதி இலக்க எண் (Zip Code) தபால் துறையால் அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறுவர்கள். ஆனால், அது அப்படியல்ல. இந்த எண்ணில் அருகே இருக்கும் பிற பகுதிகளும் அடக்கம். நகருக்குள்ளேயே இந்த மால் இருப்பதால், சென்று வருவது சுலபம். பஸ் வசதி, ரயில் வசதி இரண்டும் உள்ளது. பக்கத்தில் தான் ஏர்போர்ட் என்பதால், ப்ளைட்டில் வந்து கூட இறங்கலாம். டவுன்டவுணில் இருந்தும், ஏர்போர்ட்டில் இருந்தும், மாலுக்கு நேரடியாகச் செல்ல ரயில் இருக்கிறது. இவையனைத்திற்கும் மேல், காரில் சென்றால் பார்க் செய்வதற்கு 12000+ இடங்கள் உள்ளன. பார்க் செய்த தளம் மறந்து விடக் கூடாது என்பதற்காக, ஒவ்வொரு தளத்திற்கு ஒவ்வொரு அமெரிக்க மாகாணத்தின் பெயரைச் சூட்டியுள்ளார்கள்.

மால் ஆஃப் அமெரிக்காவிற்குப் பக்கத்தில் தான் ஐக்கியாயும் (IKEA), வாட்டர் பார்க் ஆஃப் அமெரிக்காவும் (Water Park of America) அமைந்துள்ளன. தற்சமயம், வாட்டர் பார்க் ஆஃப் அமெரிக்கா சீரமைப்பு வேலைகளுக்காக மூடப்பட்டுள்ளது. ஒரே மாதிரி பெயர் இருந்தாலும், இதற்கும் மால் ஆஃப் அமெரிக்காவிற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.

ஒவ்வொரு ஊரிலும் ஆங்கிலப் புத்தாண்டுக்கு மக்கள் ஏதேனும் இடத்தில் ஒன்று சேர்ந்துக் கொண்டாடுவது உலக மரபாகிவிட்டது. புத்தாண்டு சமயம் குளிர் உச்சத்தில் இருப்பதால், மின்னசொட்டாவாசிகளுக்குத் திறந்த வெளியில் புத்தாண்டு கொண்டாடுவது சிரமமான விஷயம். வருடத்தின் முதல் நாளிலேயே அவ்வளவு சிரமத்தை அனுபவிக்கக் கூடாதல்லவா? அதனால் மக்கள் பெரும் திரளாக இந்த மாலுக்குப் படையெடுத்துவிடுவார்கள். வருட இறுதி நாளின் மாலையில் இருந்தே சேரத் தொடங்கும் கூட்டம், நடுராத்திரி வரை இங்கேயே உலாவுவார்கள். விளையாடுவார்கள். உண்பார்கள். பனிரெண்டு மணிக்கு முன்பாக மாலின் மத்திய பகுதி ஒன்றில் கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டு மின்னணுப் பலகையில் ஒளிரத் தொடங்க, மக்கள் அனைவரும் இங்குச் சங்கமிக்கத் தொடங்குவார்கள். பனிரெண்டு மணிக்குக் கவுண்ட் டவுன் இறுதியில் பலமாக இசைச் சத்தத்துடன் மக்கள் ஆரவாரத்துடன் ஆடத் தொடங்குவார்கள். அப்படியே அரை மணி நேரம் கூட்ட நெரிசலில் ஆடிக் களைத்து, உறங்க வீட்டிற்குக் கலைந்துச் செல்வார்கள்.

இப்படி மின்னசொட்டாவாசிகள் பலரின் வருடப் பிறப்பு இங்குத் தான் தொடங்கும். வருடப்பிறப்பில் முதலில் இந்த மால் தரிசனம். பிறகு தான், மற்ற ஆலயத் தரிசனமெல்லாம். வருடத்திற்கு வருகை தரும் 40 மில்லியன் விருந்தினர்களில், 40 சதவிகிதம் வெளியூர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தான் இங்கு வருகிறார்கள்.  இது மின்னசொட்டாவின் "டோண்ட் மிஸ்” இடமாக இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை.

.

ஃபெட்னா பேரவை விழா - தயாராகும் மின்னசோட்டா

பனிப்பூக்களில் வெளிவந்த கட்டுரை.



வட அமெரிக்கத் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பான ஃபெட்னாவின் (FETNA) பேரவை விழா, இந்தாண்டு மின்னசொட்டாவில் மின்னியாபொலிஸ் கன்வென்சன் சென்டரில் (Minneapolis Convention Center) நடைபெறவுள்ளது. இதற்காக அமெரிக்கா மட்டுமில்லாமல் உலகின் பல பகுதிகளிலிருந்தும் விருந்தினர்கள் ட்வின் சிட்டீஸிற்கு ஜூலை முதல் வாரம் (July 1st and 2nd) வருகை தர உள்ளனர்.

இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினர்களாகக் கயானா பிரதமர் மோசசு வீரசாமி நாகமுத்து, இலினொய் மாநிலத்தின் கீழவை உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, இந்திய பாராளுமன்ற உறுப்பினர் டி. ராஜா, நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், ரோகிணி, கிட்டி, மிஷ்கின், எழுத்தாளர்கள் சுகிர்தராணி, சுகுமாரன், மரபிசை பாடகர்கள் நல்லசிவம், ஜெயமூர்த்தி, நடிகர் சின்னி ஜெயந்த், திரைத்துறை பாடகர் அருண்ராஜா ஆகியோர் கலந்துக்கொள்ள இருக்கிறார்கள்.

இவர்கள் இவ்விழாவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குக்கொள்ள இருக்கிறார்கள். “தமிழர் கலையைப் போற்றிடுவோம்!! தமிழர் மரபை மீட்டெடுப்போம்!!” என்னும் கருப்பொருளைக் கொண்டு இவ்விழா நடைபெற இருப்பதால், அது சார்ந்த தலைப்புகளில் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ரோகிணி அவர்கள் “தமிழ் மரபுகள் மீட்கப்படுகின்றனவா? அழிக்கப்படுகின்றனவா?” என்னும் தலைப்பில் கருத்துக்களம் நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். கவிஞர் சுகிர்தராணி அவர்கள் “தமிழ் போற்றும் தலைமுறையும் தழைக்காதோ?” என்னும் தலைப்பில் கவியரங்கம் நடத்துகிறார். இந்த நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது.

தமிழறிஞர் வானமாமலை அவர்களின் நூற்றாண்டு விழாவைப் போற்றிடும் வகையில், அவருடைய மூலக்கதையில் உருவான “மருதநாயகம்” நாடகம் பேராசிரியர் ராஜூ அவர்களின் குழுவினரால் ஃபெட்னா பேரவை விழாவில் மேடையேற்றப்படுகிறது. தமிழர்களின் பலநாள் வெள்ளித்திரை எதிர்பார்ப்பான “மருதநாயகம்”, மின்னசோட்டாவில் அரங்கேறப்போவது இந்த நிகழ்வின் சிறப்பு. இதற்கெனப் பேராசிரியர் ராஜுவுடன், இசை ஆய்வாளர் முருகவேல், ஆய்வாளர் சமணராஜா, ஆராய்ச்சியாளர் சந்தோஷ், முனைவர் பினுகுமார் ஆகியோர் இந்தியாவில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு மின்னசோட்டா வந்தனர். அவர்களுடன் தேர்ந்தெடுக்க உள்ளூர்வாசிகள் இணைந்து இதற்கான நாடகப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப்போல், தமிழ் நாடகக்கலையின் தந்தை எனப் போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகளின் நூற்றியைம்பதாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, அவருடைய “சாரங்கதாரா” நாடகமும் இவ்விழாவில் இடம்பெறுகிறது.

விழாவின் கருப்பொருள் (Theme), சின்னம் (Logo) உருவாக்கத்தில் தொடங்கி, இந்த நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகளை, கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மின்னசொட்டா தமிழ் சங்கத்தினர், ஃபெட்னா அமைப்பினருடனும், பிற தமிழ் சங்க உறுப்பினர்கள், ஆர்வலர்களுடன் இணைந்து செய்துக்கொண்டு வருகின்றனர்.

மின்னசொட்டா மாநில அரசின் நிதி உதவியுடன், இங்கிருப்போருக்குத் தமிழ் பண்பாட்டு இசைக் கருவிகளான பறை, தவில், நாகசுரம் ஆகியவற்றைப் பயிற்றுவிக்க, நாகசுர வித்வான் மாம்பலம் ராமசந்திரன், தவில் வித்வான் அடையார் சிலம்பரசன், பறை கலைஞர் சக்தி ஆகியோர் ஏற்கனவே மின்னியாபொலிஸ் வந்திருந்து இங்கிருக்கும் ஆர்வமிக்க மாணவர்களுக்குக் கடந்த சில வாரங்களாகப் பயிற்சி கொடுத்து வருகின்றனர். ஹாப்கின்ஸ் பள்ளிகளுக்கு, இவர்கள் பயிற்சியளிக்கும் சமயம் ஒருநாள் சென்று வந்தால், நாமிருப்பது அமெரிக்காவா என்ற சந்தேகம் வந்து விடும்.

இந்த இசை கலைஞர்கள், இவர்களிடம் பயின்ற மாணவர்களும் இணைந்து, ஃபெட்னா பேரவை விழாவில் இசைக்கப் போகிறார்கள். விருந்தினராக வருகை தரும் மற்ற இசை கலைஞர்களுடன் இணைந்தும், இசை நிகழ்ச்சி வழங்கப் போகிறார்கள்.

தமிழ்நாட்டுக்கு அடுத்தப்படியாகப் பறைக்குழுக்கள் அதிகம் உள்ள அமெரிக்காவில், முதல்முறையாக இவ்விழாவில் 133 அதிகாரப் பறை முழக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் 133 பறை இசைகலைஞர்கள் மேடையில் தோன்றி பறை இசையில் அதிர வைக்கப் போகிறார்கள். பண்ணிசை பாடகரும், பேராசிரியருமான நல்லசிவம் அவர்கள் பண்ணிசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். 'நெருப்புடா’ புகழ் அருண்ராஜா காமராஜ், மக்களிசை கலைஞர் ஜெயமூர்த்தி, சின்னதிரை பாடகர்கள் நிரஞ்சனா, ஸ்ரதா, ராஜகணபதி ஆகியோர் இணைந்து மெல்லிசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்கள்.

மக்களிசையுடன் கரகம், காவடி, பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், புலியாட்டம் போன்ற மரபு ஆட்டமும் இடம்பெற இருக்கின்றன. இவற்றுடன் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என்று தமிழர் நில ஐந்திணைகளையும் கருப்பொருளாகக் கொண்டு ஒரு பரத நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இசையுடன் கூடிய சிலம்ப நிகழ்ச்சியும் பார்வையாளர்களைக் கவரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழர் மரபு கலைகளை, அமெரிக்காவில் உள்ள அடுத்தத் தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லும் நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இலக்கிய ஆர்வலர்களைக் கவரும் இலக்கிய வினாடி வினா, குழந்தைகளுக்கான பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டி, வினாடி வினா ஆகியவை கொண்ட தமிழ்த் தேனீ, திருக்குறளைக் கூறும் குறள் தேனீ ஆகிய போட்டிகளும் இந்த விழாவில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள், இதற்கான பயிற்சிகளில் கடந்த சில வாரங்களாகவே ஈடுபட்டு வருகின்றனர்.

முதன்மை மேடையில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற, இணையரங்க நிகழ்வுகளாகப் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழ் தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம், திரைப்பட, குறும்படப் பயிற்சி பட்டறை, பேலியோ டயட் கருத்தரங்கம், குடியேற்ற சட்ட மாற்றங்கள் குறித்த கருத்தரங்கம், பண்ணிசை பயிற்சி பட்டறை எனப் பல்வேறு இணையரங்க நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. முழு நாள் நிகழ்வாக நடைபெற உள்ள தொழில்முனைவோர் கருத்தரங்கில், அமெரிக்க அவை உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, ஆச்சி குழும தலைவர் பத்மசிங், வேல்ஸ் பல்கலைகழகத் தலைவர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு பேச இருக்கின்றனர். அமெரிக்காவில் தொழில் தொடங்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கு, இந்த நிகழ்ச்சி பெரும் உதவிகரமாக இருக்கும் என நம்பலாம். திரைப்படப் பட்டறையை இயக்குனர் மிஷ்கினும், பேராசிரியர் சுவர்ணவேலும் நடத்த இருக்கிறார்கள். பேலியோ டயட் கருத்தரங்கில், சமூக வலைத்தளங்களிலும், தமிழகத்திலும் பேலியோ டயட்டைப் பெருமளவு கொண்டு சேர்த்த நியாண்டர் செல்வன் அவர்கள் பேச இருக்கிறார்.

இவ்விழா நடக்கும் சனி, ஞாயிறு இரண்டு தினமும் மதிய உணவும், இரவு உணவும் விழா நடைபெறும் மின்னியாபொலிஸ் கன்வென்ஷன் செண்டரில் பரிமாறப்படுகிறது. வெள்ளி இரவு நடக்கும் நட்சத்திர இரவு நிகழ்ச்சியில் இருந்து ஞாயிறு இரவு வரையான விருந்துகளில் பல தமிழ் மரபு உணவுவகைகளும் பல்வேறு பிற வகை உணவு பதார்த்தங்கள் பரிமாறப்பட உள்ளன. கருப்பட்டி மைசூர்பாகு, கருப்பட்டி பொங்கல், அதிரசம், கேழ்வரகு அடை, பச்சைபயிறு பாயாசம், பனங்கற்கண்டு பால் போன்ற சிறப்பு உணவுவகைகளுடன், தலப்பாகட்டி கோழிக்கறி, ஆட்டுக்கறி சுக்கா வறுவல், செட்டி நாட்டுக்கோழிக்கறி போன்ற அசைவ உணவுவிரும்பிகளைக் கவரும் பலவகை உணவுவகைகளும் உண்டு.

இந்த நிகழ்ச்சிகளுக்கு வருபவர்களுக்கான விழா முன்பதிவு, பயண ஏற்பாடுகள், தங்கும் வசதிகள், விழா மலர் தயாரிப்பு, விழா அரங்க அலங்காரம், பரிசுப் பொருட்கள் ஏற்பாடு, போக்குவரத்துத் திட்டங்கள், நிகழ்ச்சி நிரல், பயிற்சி, ஒத்திகை என இந்த நிகழ்வில் பங்குபெறும் ஒவ்வொருவரும் கடந்த சில வாரங்களாகக் கடும் உழைப்பைப் கொட்டி வருகின்றனர். மின்னசோட்டாவில் நடைபெறும் மிகப்பெரும் தமிழர் சார்ந்த விழா என்பதால், இதில் கலந்து மின்னசோட்டாவாசிகள் மட்டுமின்றிப் பிற மாகாணத்தினரும் பெரும் ஆவலுடன் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு மின்னசோட்டா வருவது மூலம், அவர்களுக்கு மின்னசோட்டாவைச் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பும் சேர்ந்து கிடைக்கிறது.

ஆக, மின்னசோட்டா தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியத் தருணமாக, ஜூலை 1ஆம், 2ஆம் தேதிகளில் நடைபெறும் இந்தப் பேரவை விழா இருக்கப்போகிறது. இதில் கலந்துக்கொள்ள வாய்ப்புடைய அனைவரும் இந்த விழாவில் கலந்துக்கொண்டு, இந்த வரலாற்றுத் தருணத்தில் பங்குக்கொள்வது, இவ்விழாவின் வெற்றிக்குச் சாட்சியாக அமையும். இவ்விழாவில் பங்குக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் எமது வாழ்த்துகள்.

.

விஸ்கான்சின் ஸ்டேட் கேப்பிடல் - தெரிந்துக்கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்


பனிப்பூக்களில் வெளிவந்த கட்டுரை.




  1. நாட்டில் இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் சட்டப்பேரவை கட்டிடம் இருந்தாலும், கட்டுமான அழகு அனைத்திலும் இருப்பதில்லை. குறிப்பிட்ட சில பேரவை மாமன்றங்களே, பார்வைக்கு அழகாக இருக்கின்றன. அதில், விஸ்கான்சின் (Wisconsin) மேடிசனில் (Madison) இருக்கும் பேரவை கட்டிடம், முன்னணியில் இருக்கும் ஒன்றாகும்.
  2. பூசந்தி (Isthmas) எனப்படும் இரு நீர்பரப்புக்கு இடையேயான நிலப்பரப்பில் இருக்கும் ஒரே பேரவை இது தான்.
  3. விஸ்கான்சின் மாநிலத்தின் தலைநகரான மேடிசனின் மத்திய புள்ளியில் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
  4. இக்கட்டிடத்தின் குவிமாடம் (Dome) தான், அமெரிக்காவில் இருக்கும் பேரவை கட்டிடங்களில் இருப்பதில் பெரியது.
  5. பளிங்குக் கற்களில் தொல்லுயிர் எச்சங்களாகி (Fossil) போன நட்சத்திர மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்களை, இக்கட்டிடச் சுவர்களெங்கும் காணலாம். இவற்றைத் தேடிப் பிடிப்பதையே ஒரு விளையாட்டாக இங்கு விளையாடலாம்.
  6. வாஷிங்டன் டிசியில் (Washington DC) இருக்கும் ஆப்ரகாம் லிங்கனின் சிலையை வடிவமைத்த டேனியல் ப்ரஞ்ச் (Daniel French) என்ற சிற்பி தான், இந்தப் பேரவைக் கட்டிடத்தின் மேலிருக்கும் விஸ்கான்சின் தேவியின் சிலையை வடிவமைத்தார்.
  7. பேரவை மன்றத்தில் இருக்கும் நாற்காலி எண்ணிக்கை, அங்கு இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட ஒன்று அதிகமாக இருக்கும். யாரும் உட்காராத அந்த நாற்காலியைப் பற்றி, அங்கிருக்கும் உறுப்பினர்களிடையே ஒரு அமானுஷ்யக் கதை பேசப்படுகிறது.
  8. மேடிசனில் இருக்கும் உயரமான கட்டிடம், இந்தப் பேரவை மன்றக் கட்டிடம் தான். இதை விட உயரமான கட்டிடம் கட்ட மேடிசனில் தடைச் சட்டம் உள்ளது.
  9. இந்தக் கட்டிடத்தில் இருக்கும் எந்தப் பகுதியையும் சுற்றிப்பார்க்க பொதுமக்களுக்கு எந்தத் தடையும் இல்லை. “கதவைத் தள்ளிப் பாருங்க. திறந்தா உள்ளே போய்ப் பாருங்க” என்ற அளவில் சொல்லி அனுப்புவார்கள்.
  10. இக்கட்டிடம் இவ்வருடத்துடன் நூற்றாண்டுக் கண்ட கட்டிடம் என்ற பெருமையைப் பெறுகிறது.

.

எஸ்பிபி 50 - சிகாகோ இசைக் கச்சேரி

பனிப்பூக்களில் வெளிவந்த கட்டுரை.



“பாடும் நிலா” என்று இசை ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ஐம்பது ஆண்டுத் திரையுலகப் பயணத்தைக் கவுரவிக்கும் விதமாக, எஸ்பிபி 50 என்ற பெயரில் உலகமெங்கும் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார் அவருடைய புதல்வரான எஸ்.பி.பி.சரண்.

இந்தத் தொடர் இசை கச்சேரிகளின் ஒரு நிகழ்ச்சி, சிகாகோ நகர் ஓடியம் அரங்கில் ஏப்ரல் 15 ஆம் தேதியன்று நடந்தது. இந்த இசை நிகழ்ச்சிக்குத் திரையிசை ரசிகர்கள் குடும்பத்துடன் அக்கம் பக்கத்து மாநிலங்களில் இருந்தும் வந்திருந்தனர். தமிழ், தெலுங்கு ரசிகர்களால் அரங்கு நிறைந்து காணப்பட்டது.

இந்த இசை கச்சேரியில் எஸ்.எஸ்.பி.யுடன்
சித்ரா, சைலஜா, ஹரிஸ் ராகவேந்தர் எனப் பிற பிரபல பாடகர்களும் கலந்துக்கொண்டு எஸ்.பி.பி.யின் பாடல்களைப் பாடி, வந்திருந்த ரசிகர்களை இசை வெள்ளத்தில் மூழ்கடித்தனர். நிகழ்ச்சியின் தயாரிப்பாளரான எஸ்.பி.பி.சரணும் சில பாடல்களைப் பாடினார்.

இந்நிகழ்ச்சியை 8K மீடியா நிறுவனம், சிகாகோ தமிழ்ச் சங்கம் மற்றும் தெலுங்குச் சங்கம் ஆகியவற்றின் துணையுடன் நடத்தினர். நிகழ்ச்சிக்கு கடந்த அமெரிக்கத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பிரதிநிதியான ராஜா கிருஷ்ணமூர்த்தி வந்திருந்து எஸ்.பி.பி.யை வாழ்த்தி விட்டு சென்றார்.

நிகழ்ச்சியின் முதல் பாடலை ஹரிஸ் ராகவேந்தர் பாடினார். அது எஸ்.பி.பி. இசையமைத்த சிகரம் படத்தில் வந்த 'அகரம் இப்ப சிகரம் ஆச்சு' என்ற பாடல். அதற்குப் பிறகு, சாம்சரண் ஒரு தெலுங்கு பாடலையும், எஸ்.பி.பி. சரண் 'தங்கத் தாமரை மகளே' பாடலையும் பாடி கச்சேரியைத் தொடங்கி வைத்தனர். எஸ்.பி.பி.க்கு தேசிய விருது வாங்கிக் கொடுத்த இந்தப் பாடலை மேடையிலும் அவரே பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அதற்குப் பிறகு, மேடையில் பலத்த கரகோஷத்திற்குப் பிறகு தோன்றிய எஸ்.பி.பி. சித்ராவுடனும், சைலஜாவுடன் இணைந்து பல பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி பாடல்கள் என இந்தியாவின் பன்முகச் சிறப்பைக் காட்டும் கச்சேரியாக இருந்தது. முதலிலேயே, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முத்துப் படத்தில் இருந்து "ஒருவன் ஒருவன் முதலாளி” பாடலைத் தனக்கே உரிய கம்பீரக் குரலில் பாடினார். ரசிகர்களின் கரகோஷத்தைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

இளையராஜா பாடல் இல்லாத கச்சேரியா என்று யாருக்குமே முதலில் தோன்றினாலும், எஸ்.பி.பி. போன்ற திரையுலகில் ஐம்பதாண்டைக் கடந்த ஒரு ஆளுமைக்கு அது எந்த வித சிரமத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. எம்.எஸ்.வி.யில் இருந்து தற்போது ஜி.வி.பி. வரை பாடிக் கொண்டிருப்பவருக்கு, ஒரு கச்சேரியில் ஒரு இசையமைப்பாளர் இசையமைத்த பாடல்களை மட்டும் பாடாமல் இருப்பது சிரமமேயில்லை. 80,90களில் வந்த நல்ல பாடல்களை எல்லாம் இளையராஜாவின் கணக்கிலேயே சேர்த்து வந்தவர்களுக்கு, "ஓ! இதுவெல்லாம் இளையராஜா இசையமைத்தது இல்லையா” என்று தெரிந்துக் கொள்ளும் நல்வாய்ப்பை மக்களுக்கு இளையராஜா அளித்திருக்கிறார் என்று நினைத்துக் கொள்ள வேண்டியது தான்.

ஏ.ஆர்.ரஹ்மானின் வருகைக்குப் பிறகு தான், படங்களில் எஸ்.பி.பி.யின் பாடல் எண்ணிக்கை குறைந்தது. எஸ்.பி.பி. இல்லாத திரைப்பட ஆல்பமா என்ற நிலையில் இருந்து, ஏராளமான பாடகர்கள் அறிமுகமாகி, எல்.பி.பி. இல்லாத ஆல்பம்கள் சாதாரணமாக நிகழ்வாயின. ஆனால், இந்த இசை கச்சேரிகளில் இப்போது ஏராளமான ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களே பாடப்பட்டது. காப்பிரைட் விதிமுறைகளைக் கறாராகக் கடைப்பிடிக்கும் ரஹ்மானுடைய பாடல்கள் எப்படி இசையமைக்கப்பட்டது? ஒன்று, அதற்காக முறையாகக் கட்டணம் செலுத்தி அனுமதி வாங்கப்பட்டிருக்கும். அல்லது, தனிப்பட்ட முறையிலாவது பேசியிருப்பார்கள். இளையராஜா விஷயத்தில் ஏன் இரண்டுமே சாத்தியம் இல்லாமல் போனது என்று தெரியவில்லை. தனிப்பட்ட காரணங்களில்லாமல் வேறெதுமாக இருக்கப் போவதில்லை.

இது எஸ்.பி.பி.யை முன்னிலைப்படுத்தி நடக்கும் நிகழ்ச்சி என்பதால், அவர் பாடிய பாடல்களை மற்ற பாடகர்கள் பாடினார்கள். அவருடன் இணைந்து ஜானகி போன்ற பிற பாடகர்கள் பாடிய பாடல்களை, சித்ரா, சைலஜா போன்றோர் பாடினர். ரஜினி, சிரஞ்சிவி போன்றவர்களின் ஸ்டார் வேல்யூ பாடல்களுடன், எஸ்.பி.பி. மனதிற்கு நெருக்கமான பாடல்கள் சேர்ந்து, ஒன்றன்பின் ஒன்றாகப் பாடப்பட்டது. ரஜினி பாடல்களைப் பாடிய போது, அவரைப் போலவே ஸ்டைல் செய்து காட்டி மேலும் கைத்தட்டல் பெற்றார்.

நிகழ்ச்சியின் நடுவே அவ்வப்போது, அங்கிருந்த திரையில் இந்தக் கச்சேரிக்காக, தெலுங்கு நடிகர் கிருஷ்ணா, இயக்குனர் ராம் கோபால் வர்மா, கமலஹாசன் போன்ற பிரபலங்கள் கூறிய வாழ்த்துகள் ஒளிப்பரப்பப்பட்டன.

சங்கரா (சங்கராபரணம்), சிப்பி இருக்குது முத்தும் இருக்குது (வறுமையின் நிறம் சிகப்பு), கொண்டையில் தாழம்பூ (அண்ணாமலை), அஞ்சலி அஞ்சலி (டூயட்) போன்ற பாடல்களுக்குப் பெரும் வரவேற்பு இருந்தது. சும்மா பாடிவிட்டுப் போவோம் என்றில்லாமல் பாடல்களைப் பற்றி, பாடலாசிரியர் பற்றி, இசையமைப்பாளர் பற்றியும் பேசினார். எஸ்.எஸ்.பி.யிடம் அனைவருக்கும் பிடிக்கும் குணமே, அவரின் கடிந்திராத மென் பேச்சே. இந்த மேடையிலும் அது தொடர்ந்தது. இது போன்ற குணங்களை ஏன் பெரிதாகச் சொல்ல வேண்டியிருக்கிறதென்றால், அவரைச் சார்ந்தவர்களுக்கே அக்குணம் இருப்பதில்லை. அதையும் இந்த மேடையில் காண முடிந்தது.

இந்த நிகழ்ச்சி நடைபெற்ற ஓடியம் அரங்கம், இது போன்ற இசைக்கச்சேரி நடத்த சிறந்த இடம் என்று சொல்ல முடியாது. முதலில் பாடிய ஹரிஸ், உடனே அரங்கில் எழும்பும் எதிரொலியைக் கவனித்துக் குறிப்பிட்டார். விளையாட்டுப் போட்டிகளும், கண்காட்சிகளும் நடத்தும் இடத்தில் இசைக்கச்சேரிகளுக்கான நேர்த்தியை எதிர்பார்க்க முடியாது. அதே சமயம், பள்ளி அரங்கங்களில், இவ்வளவு கூட்டத்தை அடைக்கவும் முடியாது. சிகாகோவில் இருக்கும் இசைக்கச்சேரிக்களுக்கான பிரத்யேக அரங்கங்களில் இது போன்ற கட்டணத்தில் கச்சேரி நடத்த முடியாது என்று நினைக்கிறேன்.

இது தவிர, இருக்கை அமைப்புகளும் பிரமாதமாக இருக்கவில்லை. சாதாரண வகை இருக்கை என்பதைக் குறையாகச் சொல்லவில்லை. அதை எங்கு வேண்டுமானாலும் போடலாம் என்பதற்காக, ஒரு கட்டுப்பாடே இல்லாமல் கிடைத்த இடங்களில் எல்லாம் போட்டு நிரம்பி விட்டார்கள்.

மற்றபடி, இந்தியத் திரையுலகச் சரித்திரத்தில் மறுக்கவியலா ஒரு இடத்தைக் கொண்டிருக்கும் மக்களுக்கான இசைக் கலைஞனை, மக்களிடம் நேரடியாகத் தொடர்ந்து கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும், அமைப்புகளுக்கும் நன்றிகள். நாம் பல ஆண்டுக்காலமாக ரசித்துக் கொண்டிருக்கும் பாடல்களை, மீண்டும் நம் கண் முன்னே இசைத்து, பாடி காட்டிய எஸ்.பி.பி.யின் குழுவிற்கும், அவர்களது உலக இசைப் பயணம் வெற்றிகரமாகத் தொடர வாழ்த்துகள்.

இது நாள் வரை, ஒவ்வொருவருக்கும் எவ்வளவோ நினைவுகள் இந்தப் பாடல்களுடன் பின்னிப் பிணைந்திருக்கும். இனி அந்த நினைவுகளுடன் சேர்ந்து, இந்தச் சிகாகோ நிகழ்வும் இணையும்.

.