Sunday, May 21, 2017

மினசோட்டா ஸ்டேட் ஃபேர்

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.



எந்தவொரு மக்கள் வாழும் இடமென்றாலும், வருடத்திற்கொரு முறையேனும் மக்கள் ஒரு இடத்தில் ஒன்று சேர்ந்து, ஏதேனும் வகையில் விழா எடுப்பது பல்வேறு பிரதேசங்களில், கலாச்சாரங்களில் ஒரு வழக்கமாக பல காலமாக இருந்து வருகிறது. இந்திய, தமிழக கிராமங்களை எடுத்துக் கொண்டால், அங்கிருக்கும் கோவில்களில் வருடத்திற்கு ஒரு முறையேனும் திருவிழா நடக்கும். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தேவாலயங்களிலும், மசூதிகளிலும் இப்படியான  திருவிழாக்கள் நடப்பதுண்டு.

கால ஓட்டத்தில், மக்கள் நகரங்களில் குடியேறத் தொடங்கிய பின், இத்திருவிழாக்கள் இன்னமும் அவசியமானது. மக்களை மண்ணுடன் இணைக்கும் வேராக இத்திருவிழாக்கள் பங்காற்றியது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும், வருடத்திற்கு ஒருமுறையேனும் தங்கள் பூர்வீகத்தை கண்டு வருவதற்கு ஊர் திருவிழாக்கள் ஒரு காரணமாக இருக்கின்றன.

அமெரிக்க மாகாணங்களில் நடத்தப்படும் ஸ்டேட் ஃபேரும் (State fair) அப்படியான ஊர் திருவிழாவாகவே காட்சியளிக்கின்றன. மினசோட்டா ஸ்டேட் ஃபேர், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாத இறுதி வாரத்தில் ஆரம்பித்து செப்டம்பர் முதல் வாரத்தில் வரும் லேபர் டே வரை 12 நாட்கள் நடைபெறும். மினசோட்டா ஸ்டேட் ஃபேருக்கு இம்மாநில மக்கள் கொடுக்கும் ஆதரவு அபரிமிதமானது. இந்த நிகழ்வுக்கு கிடைக்கும் வரவேற்பைக் காண வேண்டுமெனில், இதற்காக நகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் நிலையங்களுக்கு சென்று பார்க்க வேண்டும். தொடர்ந்து பேருந்துகள் சென்றுக் கொண்டிருக்க, மக்கள் காத்துக் கொண்டிருக்கும் வரிசையின் குறையாமல் கூடிக் கொண்டே இருக்கும். ரெகுலராக, அங்கு தங்களது வாகனங்களைப் பார்க்கில் செய்பவர்கள், இடமில்லாமல் வேறு இடம் சென்று கொண்டிருப்பர்.

1859 ஆம் ஆண்டில் இருந்து நடக்கும் ஸ்டேட் ஃபேர் இது. அதாவது மினசோட்டா என்று மாகாண அந்தஸ்து பெறுவதற்கு முன்பிருந்தே நடைப்பெற்று வருகிறது. ஒரு சில வருடங்கள் போர் காரணங்களால் நடை பெறவில்லை. மற்றபடி, தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக மக்கள் வரவேற்புடன் ஆரவாரத்துடன் நடைபெற்று வருகிறது. தினசரி வருகையாளர்களின் சராசரி எண்ணிக்கை அடிப்படையில் இது தான் அமெரிக்காவின் மிகப் பெரிய ஸ்டேட் ஃபேர். மொத்த வருகையாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் டெக்ஸாஸிற்கு அடுத்தபடியாக மிகப் பெரிய ஸ்டேட் ஃபேர் என மிகவும் பிரசித்திப் பெற்றது.

2016 ஆம் ஆண்டின் ஸ்டேட் ஃபேர், ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை, இதற்காகவே இருக்கும் ஸ்டேட் ஃபேர் மைதானத்தில் நடைபெற்றது. இதற்கான நுழைவுக் கட்டணம், வாயிலில் 13 டாலர்கள். முன்பே வாங்கியிருந்தால், பத்து டாலர்கள். அதுபோல, அங்கிருக்கும் விளையாட்டுகளுக்கான டிக்கெட்டுகளும் முன்பே வாங்கினோம் என்றால் மலிவாகக் கிடைக்கும்.

ஸ்டேட் ஃபேரின் முக்கிய அம்சமாக பலரும் கருதுவது, அங்கு விற்கப்படும் உணவுப் பொருட்கள் தான். வழக்கமாக கிடைக்கும் உணவு வகைகளும், சில பிரத்யேக வகைகளும் இங்கு உணவுப் பிரியர்களை அழைத்து வந்து விடும். "எண்ணெயில் பொறி, குச்சியில் குத்து" என்பவை இங்குள்ள சமையல் கலைஞர்களின் பொதுவான சமையல் குறிப்புகள். காய், கறி , பழம் என கையில் கிடைக்கும் அனைத்தையும் எண்ணெய்யில் பொரித்து, ஒரு குச்சியில் சொருகி வழங்குவது, ஸ்டேட் ஃபேர் உணவு வியாபாரிகளின் வழக்கம்.

பெரியவர்களைக்  கவர்வது கலோரிகளை ஏற்றும் தீனி என்றால் சிறுவர்களைக் கவர்பவை, அட்ரினலை ஏற்றும் சாகச விளையாட்டுகள். விளையாட்டுக்கேற்ப, சில பல டிக்கெட்டுகள் கொடுத்து ஆடிக்கொள்ளலாம். எல்லா விளையாட்டையும் ஆடிப் பார்க்க வேண்டுமென்றால், கண்டிப்பாக பர்ஸ்க்கு சேதாரம் தான். ஒரு நாள் கூத்து என்றால் ஓகே.

இவை தவிர, பல்வேறு கண்காட்சி மையங்கள், கலை நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு. ஆடு, மாடு, குதிரை, கோழி போன்ற வளர்ப்பு உயிரினங்களைக் காண குழந்தைகளுக்கு ஆர்வமிருக்கும். பால் உற்பத்தி, தோட்டக்கலை, தேனீ வளர்ப்பு போன்ற மினசோட்டாவின் விவசாயம் சார்ந்த விஷயங்களை அறிந்துக் கொள்ளவும் வாய்ப்புண்டு. இங்குள்ள பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்த மைதானத்திலேயே அரங்கு அமைத்து தொடர்ச்சியாக ஸ்டேட் ஃபேர் குறித்த செய்திகள் வழங்கி கொண்டிருப்பார்கள்.

மினசோட்டா ஸ்டேட் ஃபேர் மேலிருக்கும் பிரியம் மக்களுக்கு குறையவே இல்லை என்பதற்கு சான்றாக இவ்வாண்டு ஒருநாளின் வருகை எண்ணிக்கை உச்சமாக 2,60,374 யைத் தொட்டதைக் குறிப்பிடலாம். மினசோட்டா மாநிலம் மட்டுமில்லாமல் அக்கம் பக்கம் மாநிலத்தவரும் சகோதர பாசத்துடன் வந்து செல்கிறார்கள். அவ்வகையில் மாநிலம் கடந்தும் மக்களை இணைக்கும் நிகழ்வாக மினசோட்டா ஸ்டேட் ஃபேர் இருக்கிறது.


.

No comments: