Sunday, May 21, 2017

2016 - டாப் டென் பாடல்கள்

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.

பாடல்கள் பல தரப்புச் சமூகங்களிடம் எப்படி ஒருமித்த ரசனையை ஏற்படுத்துகிறதோ, அதுபோல் அவை ஒவ்வொருவருக்குமான தனி ரகசிய மொழியும் அழகும் கொண்டிருப்பவை. ஒருவர் கேட்டு ரசித்திராத ஒரு பாடல், இன்னொருவருக்கு மிகவும் நெருக்கமான உணர்வைக் கொடுக்கும்.
இங்கு உள்ளவை, எனது தனிப்பட்ட அனுபவத்தைக் கொண்டு, ரசனையின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட பத்துப் பாடல்கள். பிடித்த பாடல், நல்ல பாடல் என்றால் எழுதிக்கொண்டே போகலாம். அதனால், ஒரு சில விதிமுறைகளைக் கடைப்பிடித்திருக்கிறேன். எண்ணிக்கை, பத்து மட்டுமே. ஒரு படத்திற்கு ஒரு பாடல் மட்டுமே. மற்றபடி, வேறு எந்தக் கோட்டாவும் இல்லை. எந்த வரிசைக்கிரமமும் இல்லை.

உங்களுக்குப் பிடித்த ஏதேனுமொரு பாடல், இதில் இல்லையென்றால் மன்னிக்கவும். கீழே, கமெண்ட் பகுதியில் நீங்களும் பட்டியலிடுங்கள். நல்ல பாடல்களை, மற்றவரும் தெரிந்துக் கொள்ளலாம், அல்லவா?

ரஜினி முருகன் - உன் மேல ஒரு கண்ணு

இந்தாண்டு மட்டும் பத்துப் படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார் இமான். அவர் வேலையைச் சரியாகச் செய்தும், காலை வாரிய படங்கள் ஏராளம். ரஜினி முருகன், ஆல்பமாக, படமாக வெற்றியைக் கொடுத்த படம். உறவினரிடையே நடக்கும் சிறு நகரத்து வீட்டு விசேஷத்தின் பின்னணியில் அமைந்த காதல் பாடல். இமானின் ஆஸ்தான கவிஞர் யுகபாரதி எழுதிய பாடல். சிவகார்த்திக்கேயனும், கீர்த்திச் சுரேஷும் இப்பாடலில் ஆங்காங்கே கொடுத்திருக்கும் எக்ஸ்ப்ரேஷனால், எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பைக் கொடுக்காத பாடல்.

“சொல்லாம கொள்ளாம மூடி வச்சு
என்ன அங்கேயும் இங்கேயும் அலைய விட்ட
அள்ளாம கிள்ளாம நோக வச்சு என்ன
முன்னாலும் பின்னாலும் முணங்க விட்ட”

https://www.youtube.com/watch?v=nngwP1WWva4

சேதுபதி - கொஞ்சி பேசிட வேணாம்

சேதுபதி படத்தில் இடம்பெற்றிருந்த இந்தப் பாடல், மணமான, குழந்தைகள் உடைய தம்பதிகளிடையே இருக்கும் மெல்லிய ஊடல் கலந்த காதலை, பிரிவைச் சொல்லிய பாடல். பாடலுக்கு இசையமைத்தவர், நிவாஸ் கே. பிரசன்னா. பாடியவர்கள், சித்ராவும், ஸ்ரீராம் பார்த்தசாரதியும். மறைந்த கவிஞர் .முத்துக்குமார் எழுதிய பாடல் இது. கேட்க மட்டுமில்லாமல், விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடிப்பில் காணவும் நன்றாக இருக்கும் பாடல்.

“தனிமை உன்னைச் சுடுதா
நினைவில் அனல் தருதா
தலையணைப் பூக்களில் எல்லாம்
கூந்தல் மணம் வருதா ?”

https://www.youtube.com/watch?v=foi_2Id7uaw

கபாலி - மாய நதி

ரஜினி படத்திற்குச் சந்தோஷ் நாராயணன் இசை என்றதும் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. முதலில் வெளிவந்த 'நெருப்புடா', அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்திச் செய்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னமும் அதிகம் கூட்ட உதவியது. ஆனால், படத்தில் இருந்த மற்ற பாடல்களால் ரஜினி ரசிகர்களை, அந்த அளவுக்குக் கவர்ந்திழுக்க முடியவில்லை என்றே சொல்லலாம். பொதுவான இசை ரசிகர்களுக்கு 'மாயநதி' பிடித்த மெலடியானது. ரஜினி என்பதற்காகத் தனது பாணியை மாற்றாமல், அவரது ஸ்டைலிலேயே இசையமைத்தது, சந்தோஷிற்குப் பாராட்டையும், கூடவே கொஞ்சம் திட்டையும் கொடுத்தது.

“ஆயிரம் கோடி முறை நான் தினம் இருந்தேன்
நான் என்னை உயிர்த்தேன் பிரிவில் பிரிவில்”

https://www.youtube.com/watch?v=9cHXA6l4e4Q

ஒருநாள் கூத்து - அடியே அழகே

'ஒருநாள் கூத்து'ப் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், படத்தைப் போலவே ஆரவாரமில்லாமல் மனதைக் கவர்ந்தது. ஜஸ்டின் பிரபாகரன் இசையில், விவேக் எழுதிய பாடல் வரிகளைப் பாடியவர்கள், ஷான் ரோல்டனும், பத்மலதாவும். காதலர்களிடையே இருக்கும் தயக்கம், குழப்பம், கோபம், வலி போன்றவற்றை அழகாகப் பதிவு செய்தப் பாடல்.

“போனாப் போறா தானா வருவா மெதப்புல திரிஞ்சேன்
வீராப்பெல்லாம் வீணாப்போச்சு பொசுக்குனு ஒடஞ்சேன்”

https://www.youtube.com/watch?v=SDAMyv1hbCo


இறுதி சுற்று - ஏய், சண்டக்காரா

இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளராக இருந்த சுதா அவர்கள் இயக்கி தமிழிலும், இந்தியிலும் வெளியாகிய 'இறுதி சுற்று'ப் படத்தில் இடம்பெற்றிருந்த இந்தப் பாடலின் வரிகள், ரொம்பவும் எளிமையானது. அது போலவே, இசையும் பாடிய குரலும். ஆனாலும், ஒரு எளிய பெண்ணின் காதலுக்குப் பொருத்தமாக அமைந்தது. சந்தோஷ் நாராயணனால் ஒரு படத்தின் வண்ணத்தை மாற்ற முடிகிறது. ஆயிரம் முறை பார்த்த சிச்சுவேஷனுக்கும், தனது தனித்துவ இசையால் புதுமையைப் புகுத்த முடிகிறது. இன்னொரு எளிய ட்யூனான 'வா மச்சான்' பாடலும், இப்படத்தில் வெகுஜன ஹிட் ஆனது.

“சிறு ஓடையில் ஒரு ஓரமா
மனசோட ஒரு காதல் மிதந்தோடுதடா
உனைப் பாத்ததும் வழியோரமா
உயிரோட ஒருபாதி கழண்டோடுதடா”

https://www.youtube.com/watch?v=ywaT2bNkDcg

தெறி - ராங்கு

நடிக்கச் சென்ற பிறகு, ஜி.வி. பிரகாஷ் முத்திரை பதித்த பாடல்கள் என்று சொல்லுவதற்கு அதிகம் இல்லாமல் போனது. இந்த வருடத்தில் அவருடைய பெரிய ஹிட் என்றால் தெறி தான். அதற்கு அவரை மட்டும் காரணம் சொல்ல முடியாது. பாடலாசிரியர், பாடகர் தவிர்த்து, இயக்குனர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர், நடிகர்கள், நடன ஆசிரியர் என்று பலரது கைவண்ணத்தில் இப்படப் பாடல்கள் வெற்றியடைந்தன. இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் ஹிட் என்றாலும், என்னைக் கவர்ந்தவை ஈனா மீனா டீகாவும், ராங்கு பாடலும் தான். லிஸ்டில் ஒரு குத்துப்பாட்டிற்கு இடம் கொடுக்கலாம் என்று நம்ம தல டி.ராஜேந்தர் பாடிய 'ராங்கு' பாடலைச் சேர்த்திருக்கிறேன். மனிதர் பேசினாலும், பாடினாலும் கலகலப்பிற்குப் பஞ்சமிருக்காது.

“கண்ண குழி
பொண்ணு நான்தானே.
பல்லாங்குழி
ஆடு நீதானே”

https://www.youtube.com/watch?v=AwMSJlNkOUg

பிச்சைக்காரன் - நெஞ்சோரத்தில்

ஒரு துறையில் நன்றாகப் பேரெடுத்துக் கொண்டிருக்கும் ஒருவர், ஏதோ ஒரு காரணத்தால் இன்னொரு துறைக்கு மாறிச் சென்றால், பெரும்பாலும் அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சும். விஜய் ஆண்டனி விதிவிலக்கு. தனக்கேற்ற நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். இசையிலும் குறை வைப்பதில்லை. ஒரே குறை, இசையமைப்பதைக் குறைத்துக் கொண்டது தான். இந்த வருடம் அவர் கொடுத்த ஹிட் படமான பிச்சைக்காரனில் சுப்பிரியா பாடிய "நெஞ்சோரத்தில்", இசையமைப்பாளராக அவர் வெற்றிக் கொண்ட பாடல். ஆனால், இதை விடத் தயாரிப்பாளராக அவர் பெற்ற வெற்றியே பெரிது. இப்பாடலை எழுதிய கவிஞர் அண்ணாமலை இந்தாண்டு மறைந்தது, விஜய் ஆண்டனிக்கும் அவரது ரசிகர்களுக்கும் பெரும் இழப்பு.

“உன் கைகள் தொட்ட இடம் பார்த்து
நான் ஆயிரம் முத்தம் கொடுக்கிறேன்
சிறு காகிதம் கையில் கிடைத்தாலும்
உன் பெயரை எழுதி ரசிக்கிறேன் “

https://www.youtube.com/watch?v=guaGqSR4QE4

தர்மதுரை - மக்கா கலங்குதப்பா

யுவன், "ரீ என்டரி'ன்னு சொல்லாதீங்க, நான் இங்க தான் இருக்கேன்" என்று சொன்னாலும், உண்மையில் இந்தாண்டு வெளிவந்த தர்மதுரையை அவரது ரீ-என்ட்ரியாகக் கருதலாம். இந்தத் தலைமுறை இசையமைப்பாளர்களிலே கிராமத்து இசையை, அதன் அசல் தன்மையின் நெருக்கத்துடன் ரசிக்கும் படி தருவது யுவன் தான் என்று உறுதியாகச் சொல்ல முடியும். "மக்கா கலங்குதப்பா" அதற்கு நல்ல ஒரு உதாரணம். வைரமுத்து எழுதி, மதுரையைச் சேர்ந்த கும்மிப்பாட்டுக் கலைஞர் மதிச்சியம் பாலா பாடிய இப்பாடல், இந்த வருடம் பட்டித்தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது. படத்தின் மற்ற பாடல்களும் சிறப்பாகவே வந்திருந்தன.

https://www.youtube.com/watch?v=OxDKZ6WfD7M

ரெமோ - தமிழ்செல்வி

இந்த வருடம் அனிருத்திற்குச் சுமாரான வருடம் தான். பெரிய ஹிட் ஆல்பம் என்று எதையும் சொல்ல முடியாது. ரெமோ தான் அவருக்கு ஆறுதலாக அமைந்த படம். இந்தப் பாடலின் படமாக்கம், பாடலிற்குப் பலமாக அமைந்தது என்று சொல்லலாம். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு, ராஜு சுந்தரம் நடனம் என்று சீனியர்ஸ் பங்களிப்பு, பாடலின் தரத்தை மேலும் உயர்த்தியது. சிவகார்த்திக்கேயன் - கீர்த்திச் சுரேஷ் ஜோடிக்கு இது வருடத்தின் இரண்டாவது ஹிட்.

“ஒரு வாட்டி நீ சொல்லிப் பாரு
உசுர உனக்கே எழுதி தரேன்
மடங்காத நீயும் அடங்காத நானும்
மனசோடு மனசு சிங் ஆனா போதும்”

https://www.youtube.com/watch?v=PAhTLB1LBR0


அச்சம் என்பது மடமையடா - அவளும் நானும்

பாரதிதாசன் பாடல்கள் இசை நயம் கூடியது என்று சொல்லுவார்கள். இந்தப் பாடலைக் கேட்டால், அது புரியும். எத்தனை வருடங்கள் ஆனாலும், அதில் இருக்கும் நவீனம் தெரியும். 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, விஜய் ஜேசுதாஸ் பாடிய இப்பாடல், மெல்லிய மெலடி என்றால், சித் ஸ்ரீராமின் 'தள்ளிப் போகாதே' ஒரு அதிரடி மெலடி . அது என்ன டைப் என்கிறீர்களா? அது தான் ரஹ்மான்.

“நானும் அவளும்.. உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும்.. பூவும் மணமும்”

https://www.youtube.com/watch?v=LKelAJrI3e0

இவை தவிர, உன்னைப் பார்த்தா போதும் (அழகு குட்டி செல்லம்), அழகே நீ அசைந்தால் (கதகளி), குச்சி மிட்டாய் (அரண்மனை 2), அவள் குழல் (மனிதன்), அடடா (தொடரி), சல்மார் (தேவி), கண்ண காட்டு போதும், கண்ணம்மா (றெக்க), இளந்தாரி (மாவீரன் கிட்டு), மெய் நிகர, நான் உன் (24), நீ கிடைத்தாய், சொப்பனச் சுந்தரி (சென்னை 600028 - 2) போன்ற பாடல்களையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இந்த வரு,டம் வந்த பாடல்களைக் கவனித்துப் பாருங்கள். நிறைய இளம் இசையமைப்பாளர்கள் நல்ல பாடல்களை அளித்திருக்கிறார்கள். பரவலாகத் திறமை, திறமைக்கேற்ற வாய்ப்பு, கிடைத்த வாய்ப்பில் முத்திரை என ஆரோக்கியமான சூழல் 2016ல் இருந்திருக்கிறது. இது போல், இளம் கலைஞர்களும், மூத்த கலைஞர்களும், தொடர்ந்து நம் தமிழ் திரையிசை ரசிகர்களின் ரசனைக்குத் தீனி போடும் சூழலே, நமது அடுத்தடுத்த ஆண்டுக்களுக்கான எதிர்பார்ப்பு.

.

2016 - ஒரு பார்வை

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.



எல்லா வருடங்களைப் போலவே, இந்த ஆண்டிலும் உலகம் பல ஏற்றத்தாழ்வுகளைக் கண்டிருக்கிறது. பல நல்லது கெட்டதுகளைச் சந்தித்திருக்கிறது. தூக்கி வாரிப்போடும் சம்பவங்களைச் சகஜமாகக் கடந்திருக்கிறோம். சிலது வெறும் சம்பவங்கள், சிலது மைல்கல்கள், சிலது திருப்புமுனைகள். ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதேனும் வகையில் முத்திரை பதித்திருக்கும் 2016ஆம் ஆண்டின் டைரிக்குறிப்புகளில் எழுதப்பட்ட முக்கிய உலக நிகழ்வுகளைத் திரும்பிப் பார்க்கலாமா?

கனடா தமிழர் பாரம்பரிய மாதம்

அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதியன்று, கனடா பாராளுமன்றத்தில் ஜனவரி மாதத்தைத் தமிழர் பாரம்பரிய மாதமாக அங்கீகரிக்கும் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழ் மொழியின் சிறப்பு, கனடிய தமிழர்கள் கனடா நாட்டிற்கு ஆற்றிய சேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இச்சட்டம் கனடா நாட்டுப் பாராளுமன்றத்தில் ஏற்கப்பட்டது. ஜனவரி மாதத்தில் தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகை வருவதால், இம்மாதம் தமிழர் பாரம்பரிய மாதமாகக் கொண்டாடப்படப்போகிறது. இதில் அரசியல் நோக்கம் இருக்கிறது என்று குரல்கள் கேட்கப்பட்டாலும், தமிழர்களுக்கு இது ஒரு இனிமையான செய்தி. இது போன்ற சட்டங்களும், நடைமுறைகளும் அனைத்து நாடுகளிலும் வரப் போகும் நாள் தொலைவில் இல்லை.

தமிழகச் சட்டசபை தேர்தல்

தமிழ்நாட்டின் பதினைந்தாம் சட்டசபைக்கான தேர்தல் இந்தாண்டு மே மாதம் நடைபெற்றது. பொதுவாக, கடந்த சில ஆண்டுகளாக, திமுக-அதிமுக என இரு அணிகளாகப் பிரிந்து, பெரும்பாலான முக்கியக் கட்சிகள் அனைத்தும் தமிழகத் தேர்தலில் போட்டியிடும். இந்தாண்டு வித்தியாசமாக, பல அணிகள் மற்றும் பல கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன. தேர்தலுக்கு முன்பு வரை, பல அணி போட்டியாகத் தெரிந்த தேர்தல் களம், தேர்தல் முடிவுக்குப் பிறகு, பழையபடி, இருமுனை போட்டியாகவே அறியப்பட்டது. இந்தத் தேர்தலில் கட்சிகள் கற்ற பாடம், அவர்களது அடுத்தடுத்த தேர்தல் போட்டி முடிவுகளுக்கு உதவும் என்ற வகையில் 2016 தேர்தல், தமிழக அரசியல் கட்சிகளுக்கு முக்கியமான தேர்தல் எனலாம். 1982 ஆம் ஆண்டுக்கு பிறகு, ஆளும்கட்சியே ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்ட தேர்தலும் இதுவே.

ஒலிம்பிக்

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் விளையாட்டு போட்டி, இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ப்ரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெற்றது. இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் பத்தாயிரம் போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த ஒலிம்பிக்கில் முதல் இடத்தை அமெரிக்காவும், இரண்டாம் இடத்தைப் பிரிட்டனும், மூன்றாம் இடத்தைச் சைனாவும் பிடித்தன. இந்தியாவிற்கு ஒரு வெள்ளியும், ஒரு வெண்கலமும் கிடைத்தன. இரண்டுமே சிந்து, சாக் ஷி என்ற பெண் வீரர்களால் கிடைத்தவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானுக்கு ஒன்று கூடக் கிடைக்கவில்லை என்பது இந்திய தேசப்பக்தி விளையாட்டு ரசிகர்களுக்குப் போதுமான செய்தியாக இருந்தது.

ப்ரெக்ஸிட்

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது என்னும் முடிவுக்கு இவ்வருடம் ஜூன் மாதம் நடைபெற்ற வாக்குப்பதிவில் பிரிட்டன் மக்கள் வாக்களித்தனர். இதன் தாக்கம், உலகமெங்கும் எதிரொலித்தது. உலகமெங்கும் உலகமயமாக்கலுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருப்பதாகக் கருதுவதற்கு ஏதுவாக அமைந்த முடிவு இது. இந்த முடிவிற்குப் பிறகு, பிரதமர் பதவியில் இருந்து டேவிட் கேமரூன் விலகி, தெரெசா மே அவர்கள் பதவிக்கு வந்தார்கள். இதன் பாதிப்பு என்னவாக இருக்கும் எனப் பல கணிப்புகள் வந்தாலும், உண்மை நிலை, வரும் நாட்களில், நாடுகளின், அமைப்புகளின், நிறுவனங்களின் செயல்திட்டங்கள் மூலம் தெரிய வரும்.

ஜிகா வைரஸ்

கடந்த காலங்களில், தென் அமெரிக்க நாட்டு மக்களை, குறிப்பாகக் கர்ப்பிணி பெண்களைப் பதற வைத்துக்கொண்டு இருந்த ஜிகா வைரஸ், 2016 இல் உலகளவில் தனது ஆதிக்கத்தைக் காட்டத் தொடங்கியது. ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் உடல் நல குறைவுடனும், சிறிய தலையுடனும் பிறப்பதாலும், அதைக் குணப்படுத்தக்கூடிய மருந்து இன்னமும் கண்டுப்பிடிக்க இயலாத நிலையில், அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நாட்டின் அரசுகள், அதன் மக்களைக் குழந்தை பெறுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தும் நிலை ஏற்பட்டது. ஜனவரி 2016ல் உலகச் சுகாதார மையம், இந்த வைரஸ் அமெரிக்காவெங்கும் பரவும் நிலை இந்தாண்டு இறுதிக்குள் ஏற்படும் என்று எச்சரிக்கை மணி அடித்தது. ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்ட ப்ரேசில் நாட்டில் இந்தாண்டு ஒலிம்பிக்ஸ் நடக்க, இது மேலும் பரவும் என்று உலகளவில் அச்சம் ஏற்பட்டது. நவம்பர் 2016இல் உலகச் சுகாதார மையம் தனது எச்சரிக்கை அளவைக் குறைத்துக்கொண்டது, இவ்வருடத்தின் நிம்மதி எனலாம்.

சிரியா போர் அகதிகள்

2011 இல் ஆரம்பித்த உள்நாட்டு போர், உலக நாடுகளின் பங்களிப்புடன் இன்னமும் தொடர்ந்து வருகிறது. உலகில் அதிகளவில் அகதிகளை உருவாக்கிய போர் இது என்று வர்ணிக்கப்படுகிறது. சிரியா அகதிகளின் பிரச்சினை உலகளவில் விவாதிக்கப்படும் நிலை 2016 இல் உருவானது. இது ஐரோப்பிய நாடுகளிடையே அகதிகளாகக் குடியேறும் மக்களை ஏற்பதில் முரண்பாட்டை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் தேர்தலிலும் விவாதப்பொருளாக இருந்தது. ஒம்ரான் என்னும் போரில் பாதிக்கப்பட்ட சிறுவன், ஆம்புலன்ஸில் ஆரஞ்சு நிற சீட்டில் அழாமல் தனது கூரியத் துக்கத்தை வெளிப்படுத்திய புகைப்படம், உலகளவில் சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை உண்டாக்கியது.


தமிழ் சினிமா

இந்தாண்டு இதுவரை 180க்கு மேலான திரைப்படங்கள் வெளியாகி உள்ள தமிழ் திரையுலகில், வழக்கம் போல் வெற்றி விகிதம் குறைவே. ரஜினி முருகன், பிச்சைக்காரன், தெறி, கபாலி, ரெமோ போன்ற படங்கள் வசூலில் வெற்றிபெற, இறுதிச்சுற்று, விசாரணை, ஜோக்கர், மனிதன், அப்பா, குற்றமே தண்டனை போன்றவை விமர்சகர்களால் பாராட்டப்பட்ட படங்களாக வந்தன. இதில் விசாரணை ஆஸ்கருக்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்டது மகிழ்வைக் கொடுத்தாலும், அது இறுதிசுற்றுக்குத் தேர்வுபெறாமல் போனது படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்தது. அதே சமயம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பீலே படத்திற்காக இன்னமும் ஆஸ்கர் போட்டியில் இருப்பது, நம்மவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் செய்தி. 2016 இல் நிகழ்ந்த கதாசிரியர், தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம், கவிஞர் நா. முத்துக்குமார், கவிஞர் அண்ணாமலை போன்றோரின் மரணங்கள், திரையுலகினர் மட்டுமில்லாமல், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

ஜியோ மொபைல்

ரிலையன்ஸ் நிறுவனத்தால், செப்டம்பர் மாதம் இந்திய மார்க்கெட்டில் இறக்கிவிடப்பட்ட ஜியோ மொபைல் சேவை, பயனாளிகளுக்கு இலவசத்தை அள்ளிவிட, இந்திய அலைபேசி சேவை தனது அடுத்தக்கட்டத்திற்குத் தாவியது. இலவச உள்நாட்டு அழைப்புகள், சல்லிசான விலையில் 4ஜி இணையச்சேவை போன்றவை, பிற இந்திய அலைபேசி சேவை நிறுவனங்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியது. சேவை அறிமுகமான ஒரே மாதத்தில் 16 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பிடித்தார்கள். 83 நாட்களில் 50 மில்லியன் வாடிக்கையாளர்கள் என்ற பொழுது, இது எந்த நாட்டிலிலும் இல்லாத ரெக்கார்ட் ஆனது. இதற்கு முன்பு, ஏர்டெல் 50 மில்லியன் வாடிக்கையாளர்களைச் சேர்க்க 12 வருடங்கள் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. வருங்காலப் பரிமாற்றங்கள் அனைத்தும் அலைபேசி வழியே என்னும் நிலை இந்தியாவில் வருவதற்கு, ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொண்ட அதிரடி தொடக்கம் இது எனலாம். உண்மையான பயன் யாருக்கு என்பது போகப் போகத் தான் தெரியும்.

அமெரிக்கத் தேர்தல்

உலகமே ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த 58வது அமெரிக்கத் தேர்தலில் பாப்புலர் வாக்குகளின் முடிவுகள், நவம்பர் 9 ஆம் தேதியன்று வெளியானது. பெரும்பாலான கணிப்புகளுக்கு நேரெதிராக இத்தேர்தலில் அமெரிக்கத் தொழிலதிபர் ட்ரம்ப் அவர்கள் வெற்றிப்பெற்றது, அனைவருக்குமே வியப்பை அளிப்பதாக இருந்தது. பிரமிளா ஜெயபால், கமலா ஹாரிஸ், ரோ கன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, அமி பேரா ஆகிய இந்திய வம்சாவழி வேட்பாளர்கள் இத்தேர்தலில் வெற்றி பெற்றார்கள். அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹிலாரி இத்தேர்தலில் தோல்வியடைய, பிரச்சாரத்தின் போது சர்ச்சைகள் பல கிளப்பிய ட்ரம்ப் வெற்றிப்பெற்றதால், நாட்டின் பல பகுதிகளில் எதிர்ப்புப் பேரணிகள் சில நாட்கள் நடைபெற்றன. இந்தத் தேர்தல் முடிவில் ரஷ்யாவின் பங்கு இருக்கிறது என அடுத்தச் சர்ச்சை கிளம்ப, தேர்தல் சூடு இன்னமும் அணையாமல் இருக்கிறது. ட்ரம்ப் அவர்கள் அமெரிக்க அதிபராக 2017 ஜனவரியில் பதவியேற்க உள்ளார். தற்சமயம், தன்னுடன் அமைச்சர்களாகப் பணிபுரிய உள்ள சகாக்களைத் தேர்ந்தெடுப்பதில் பிசியாக உள்ளார்.

ரூபாய் 500 & 1000 பண மதிப்பிழப்பு

கருப்புப்பணத்தை ஒழிப்பேன் என்று ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடியினால், நவம்பர் 9ஆம் தேதியன்று ஐநூறு, ஆயிரம் ரூபாய் தாள்கள் மதிப்பிழக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஒருபக்கம் கருப்புப்பணத்தை அழிக்கும், கள்ளப்பணத்தை ஒழிக்கும், தீவிரவாதத்தைக் குறைக்கும், மின்னணுப் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் என்று ஆதரவு குரல்கள் கேட்டாலும், மறுபக்கம் ஏடிஎம் வாசலில் பணத்திற்காகக் காத்திருக்கும் மக்களிடம் இருந்து எழுந்த கோபக்குரல்கள் குறைந்த பாடில்லை. இந்தியாவின் எதிர்காலப் பொருளாதார மேம்பாட்டுக்கு இது கண்டிப்பாக உதவும் என்று நம்பிக்கை கூறப்படும் இந்த நடவடிக்கை, இந்த ஆண்டின் முக்கியமான இந்தியப் பொருளாதார நிகழ்வு என்றால் அது மிகையில்லை. முடிவு எப்படி இருக்கும் என்பது வரும் ஆண்டுகளில் தான் தெரியும்.

முதல்வர் ஜெயலலிதாவின் மரணம்

ஜெயலலிதாவிற்கு அரசியல் உச்சத்தையும், வாழ்வின் மறைவையும் ஒருங்கே பதிவுச் செய்த வருடம் இது. மே மாதம் நடந்த தேர்தலில் வெற்றிப்பெற்று, தமிழக அரசியலில் எம்.ஜி.ஆருக்கு பிறகு, தொடர்ச்சியாக ஆட்சியைத் தன் பக்கம் தக்க வைத்துக் கொண்டார். செப்டம்பர் மாதம், உடல் நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதியன்று மரணித்தார். ஜெயலலிதா அவர்களின் மரணம், அவருடைய கட்சியான அதிமுகவிலும், தமிழக அரசியலிலும் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி இருப்பதால், இது ஒரு புதுத் தலைமையை உருவாக்கும் சூழலைக் கொண்டு வந்து தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

சென்னை வர்தா புயல்

2004 ல் சுனாமி, 2015 ல் வெள்ளம் என்று இயற்கை பேரிடர்களைச் சந்தித்த சென்னை மக்கள், இந்தாண்டு எதிர்க்கொண்டது, வர்தா புயலை. பாகிஸ்தானால் வர்தா என்று பெயர் வைக்கப்பட்ட இந்தப் புயல், டிசம்பர் 12 ஆம் தேதியன்று சென்னையைக் கடக்க, மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் அடித்த புயல் காற்றின் வீரியத்தை, இந்தத் தலைமுறை மக்களால் நேரடியாகக் காண முடிந்தது.. மரங்கள், மின் கம்பங்கள், வாகனங்கள் எனப் புயலில் அடித்துக் கவிழ்க்கப்பட்ட சேதாரங்கள் ஏராளம். இதுவும் கடந்து போகும் என்று சென்னை மக்கள் சில நாட்களில் சகஜ வாழ்வுக்குத் திரும்பினர்.

பிரபலங்களின் மரணங்கள்

2016 இல் உலகின் பல பிரபலங்களின் மரணங்களைக் காண வேண்டியதாகப் போனது. கியூபப் புரட்சியாளரும், முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ அவர்கள் நவம்பர் 25ஆம் தேதியன்று மறைந்தார். இது கியூபா மட்டுமின்றி உலகமெங்கும் அவரைப் பின் தொடர்ந்து வந்தவர்களைக் கவலையுறச் செய்தது.

மினசோட்டாவைச் சார்ந்த அமெரிக்காவின் புகழ்பெற்ற இசைக்கலைஞரான ப்ரின்ஸின் மரணம், மினசோட்டாவில் அவரைப் பற்றியே சில நாட்கள் அனைவரையும் பேச வைத்தது. ஏப்ரல் 21க்குப் பிறகான நாட்களில், எங்கும் செவ்வூதாவாக இருந்தது. அவர் மரணம் மினசோட்டா மக்களிடையே ஏற்படுத்திய தாக்கத்தை அந்நாட்களில் நேரடியாகக் காண முடிந்தது,

தமிழ்நாட்டின் மூத்த கர்னாடக இசைக்கலைஞரான பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் நவம்பர் 22ஆம் தேதி அன்று மறைந்தார். பாடல்கள் மட்டுமின்றித் தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையும் அமைத்திருக்கிறார். பலருக்கு இசை ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். அவர் பெறாத விருதில்லை எனலாம். அவரின் மரணம், கண்டிப்பாக இசையுலகிற்குப் பெரும் இழப்பே.

மூத்த பத்திரிக்கையாளரும், அரசியல் யுக்தியாளருமான சோ ராமஸ்வாமி, டிசம்பர் 7ஆம் தேதியன்று மறைந்தார். பத்திரிக்கையாளர், அரசியல் ஆலோசகர் என்பதெல்லாம் அவருடைய சுருக்கமான அடையாளங்கள். மேடை நாடக, சினிமா மற்றும் டிவி நாடக நடிகர், இயக்குனர், வக்கீல், எம்பி, எம்டி என்று அவர் பார்த்த வேலைகள் ஏராளம். பழகிய ஆளுமைகள் பலர். கொண்ட அனுபவங்கள் எக்கச்சக்கம். ஹாஸ்ய உணர்வு மிக்கவர். எவ்வளவு பேருக்கு அவரைப் பிடிக்குமோ, அதே போல் அவர் மேல் வெறுப்புக்கொண்டவர்களும் ஏராளம். ஆனால், அது எதையும் கண்டுக்கொள்ளாமல், தன் கருத்தைப் பயப்படாமல், எந்தத் தயக்கமுமின்றி வெளிப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே.

இப்படி மரணித்த பிரபலங்கள் மட்டுமின்றி உதித்த பிரபலங்கள் பலர் இந்த ஆண்டில் உள்ளனர். அவர்களெல்லாம் யார் என்பதை வருங்காலம் அடையாளம் காட்டும்!!

2016 உங்கள் வாழ்வில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தாலும், அது வரும் ஆண்டில் நல்ல பலன்களைக் கொண்டு வர, அனைவருக்கும் எங்களது ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

.

நன்றி நவிலலும், நுகர்வோர் கூத்தும்

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.




நவம்பர் மாதம் வந்து விட்டால், தேங்க்ஸ் கிவிங்கிற்கு (Thanksgiving) என்ன செய்யலாம் என்று அமெரிக்கர்கள் யோசிப்பார்களோ, இல்லையோ, என்ன வாங்கலாம் என்று அமெரிக்காவில் இந்தியர்கள் யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஒரு பொருள் தேவையோ, இல்லையோ, டிஸ்கவுண்ட் என்ற சொல் மீது அலாதி ப்ரியம் நம்மவர்களுக்கு.
டிஸ்கவுண்ட் என்று வந்து விட்டால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்போம், டீல் இல்லையென்றால் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என்பது போல் சுற்றிக் கொண்டிருப்பார்கள். அமெரிக்கத் தேங்க்ஸ் கிவிங் வரலாறு பதினாறாம் நூற்றாண்டில் தொடங்குகிறது. விவசாயப் பெருங்குடி மக்கள், விளைச்சல் காலத்திற்குப் பிறகு நன்றி தெரிவிக்கும் காலமாக இது ஆரம்பித்தது. பிறகு, மத ரீதியான நன்றி நவிலல் வழிபாடுகள் ஆரம்பித்தன. தற்சமயம், நவம்பர் மாதத்தின் நாலாம் வியாழன் அன்று அதிகாரபூர்வமாக விடுமுறை விடப்பட்டு, அமெரிக்கா எங்கும் தேங்க்ஸ் கிவிங் டே (Thanksgiving Day) கொண்டாடப்பட்டு வருகிறது.
வருமானம் அளிக்கும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம், அவர்களுக்கு இந்த நாளில் குறைந்த விலையில் பொருட்கள் விற்கிறார்கள் என்று நம்பப்படும் கன்ஸ்யூமர் ஐதீகம் இது. "அவ்வளவு நல்லவங்களாடா நீங்க?" என்று எந்தக் கேள்வி கேட்காமல், கார்ப்பரேட் நிறுவனங்களை நம்பி, அடிக்கிற கார்த்திகை மாசக் குளிரில், தெருத் தெருவாக, கடை கடையாக நம்ம ஜனங்கள் ஓடிக்கொண்டிருப்பார்கள். நாமதான் ஓ.பி.கொ.கு ரகமாச்சே!!!
இந்த நுகர்வோர் சடங்கு நம்மவர்களுக்கு ஒன்றிரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்குகிறது என்றால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கி விடுகிறது. மலிவாகத் தோன்றும் வகையில், ஒரு பொருளின் விற்பனை விலையை நிர்ணயித்துவிட்டு, அதற்கேற்றாற் போல் வடிவமைத்து, கண்டிப்பாக லாபம் இருக்கும் வகையில் ஆசியத் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்து, நவம்பர் நாலாம் வியாழன் கிழமை கடையில் பண்டல் இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள். நம்மவர்களும் பிற்பகலிலேயே கிளம்பி, இந்தப் பண்டலின் மீது கையை வைத்துக் கொண்டு, விஜிபி கோல்டன் பீச் சிப்பாய் போல் நிற்க ஆரம்பித்து விடுவார்கள். அந்தப் பண்டல் 6 மணிக்கோ, 8 மணிக்கோ அல்லது 10 மணிக்கோ திறக்கப்படும். அதுவரை, தீபாவளிக்குத் தட்கலில் ட்ரெயின் டிக்கெட் எடுக்கக் காத்துக் கிடப்பவர்கள் போல், நம்மவர்கள் இங்கு நிற்பார்கள். குறிப்பிட்ட நேரம் வந்தவுடன், பிள்ளையார் கோவில் முன்பு உடைக்கப்பட்ட சிதறு தேங்காயைப் பொறுக்கிக் கொண்டு ஓடுவதுபோல் இங்கு பொருட்களை அள்ளிக்கொண்டு ஓடுவார்கள்.
இப்படிக் கொரில்லாத் தாக்குதல் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் கடைக்குள் நீண்ட நீண்ட க்யூக்கள் ஆங்காங்கே நிற்கும். எங்கு ஆரம்பிக்கிறது, எங்கு முடிகிறது, என்ன கொடுப்பார்கள், அது நமக்குக் கிடைக்குமா என்பது எல்லாம் புரிந்தும், புரியாமலும் பேங்கில் செல்லாத 500-1000 ரூபாயை மாற்ற வந்தவர்கள் போல் நிற்பார்கள். இதிலேயே பக்காவாக ப்ளான் செய்து, குடும்ப உறுப்பினர்களையோ, அல்லது நண்பர்களையோ ஆங்காங்கே அனுப்பி விட்டு, பொருட்களை வாங்கி வர, சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் முறையில் ஷாப்பிங் செய்பவர்களும் உண்டு.
இப்படி எதுவும் இல்லாமல் வேடிக்கை பார்க்க மட்டுமே ஒரு கூட்டம் வரும். என்ன விற்கிறார்கள், என்ன வாங்க வந்தோம் என்று தெரியாமல், எல்லாக் களேபரமும் முடிந்த பின்னர், அப்பல்லோ வாசல் அப்பாவித் தொண்டர்கள் போல் கலைந்து, களைத்துச் செல்வார்கள்.
இவர்கள் எல்லோரையும் விடப் போற்றிப் புகழ வேண்டிய பாகுபலிகள், கடைக்கு வெளியே அடிக்கிற சில்லென்ற குளிரில், போர்வை போர்த்திக் கொண்டு நிற்கும் நமது ஷாப்பிங் ஜவான்ஸ். நடுஇரவு பனிரெண்டு மணிக்குத் திறக்கும் கடைக்கு, இரவு எட்டு மணிக்கே டின்னர் முடித்துப் பங்ச்சுவலாக வந்து நிற்பார்கள். நேரமாக நேரமாக க்யூ வளைந்து அங்கிங்கு செல்லும். பனிரெண்டு மணிக்குக் கடை திறந்த பின்பு, உள்ளே ஓடும் கூட்டத்தில் முதல் பத்து - பதினைந்து பேருக்குத் தான் சொல்லிக் கொள்ளும்படி ஏதேனும் கிடைக்கும். மற்றவர்கள், அந்தப் பத்து - பதினைந்து பொருட்களைத் தூக்கிக் கொண்டு பில்லிங் முடித்துச் செல்லும் அழகைத் தான் காண முடியும்.
இந்த நாளுக்காக இவர்கள் ஆயத்தமாவதையும் குறிப்பிட வேண்டும். ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே, இந்த வருடம் என்ன சீப்பாகக் கிடைக்கும் என்று தங்கள் எஃப்.பி.ஐ. மூளையை முடுக்கிவிட்டு, இணையத்தில் தேட ஆரம்பிப்பார்கள். இவர்களுக்கு ஏற்றாற்போல் தகவல் கொடுக்கவும் இணைய தளங்கள் நிறைய இருக்கின்றன. இருக்குற தளங்களை எல்லாம் க்ரால் செய்து, டேட்டா மைனிங், ஆனலிட்டிக்ஸ் எல்லாம் புரிந்து, எக்ஸல் ரிப்போர்ட் தயார் செய்வார்கள். எந்தக் கடைக்கு, எப்ப போனா, என்ன கிடைக்கும் என்பதைப் பாய்ஸ் படத்தில் வரும் செந்தில் போல் ரெடி செய்து (இன்பர்மேஷன் இஸ் வெல்த்!!), தாங்கள் கொண்ட செல்வம், பெறுக இவ்வையகம் என்ற பொதுவுடமைத் தத்துவத்தின்படி, வாட்ஸ் அப், மெஸ்ஸஞ்சர், ஃபேஸ்புக், ட்வீட்டர், ப்ளஸ் என்று சமூக ஊடகத்தின் சகல சாத்தியங்களையும் பயன்படுத்தி நம்மை நெருக்குவார்கள்.
மெய்யுலக ஷாப்பிங் மட்டுமில்லாமல், மெய்நிகர் உலக ஷாப்பிங்கும் குறைவில்லாமல் நடக்கும். இதற்காக ப்ளாக் ஃப்ரைடே, சைபர் மண்டே, காதல் செவ்வாய், காவிய புதன் என்று வகைவகையான பெயரில், நமது மெயில்பாக்ஸிற்கு அழைப்பிதழ் அனுப்புவார்கள். நாமும் சும்மா இல்லாமல், இங்கே இந்த ரேட், அங்க என்ன ரேட் என்று ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் போல் சுற்றியலைந்து கொண்டிருப்போம்.
அடுத்தக்கட்டமாக, இந்த ஜூரம் கண்டம் கடந்து இந்தியா வரை சென்றுவிட்டது. ஆடிக் கழிவுப் பாரம்பரியத்தில் இருந்து பிக் பில்லியன் டே கலாச்சாரத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கோம். அது போதாது என்று, அமெரிக்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஃபோன் போட்டுத் தேங்க்ஸ் கிவிங் வாழ்த்துச் சொல்லிவிட்டு, ஷாப்பிங் ஆர்டர் கொடுக்கவும் தயாராகிவிட்டார்கள். 'எப்படி அனுப்புவது?' என்று கேட்டால், அதற்கும் ஃபோன் போட்டு யாரையாவது தயார் செய்து வைத்திருக்கிறார்கள். நமது நேரம் எப்படியோ, சமயங்களில் நாமும் குருவி வேலை பார்க்க வேண்டி வரும்.
இத்தனை கலாட்டாவில், இந்தத் தினத்தின் முக்கிய அம்சமான நன்றி நவிலலை மறந்து விட்டு, மற்றவரை இடித்துக்கொண்டு, காலை மிதித்தாலும் மன்னிப்புக் கேட்க நேரம் இல்லாமல் ஓடும் நுகர்வோர் வெறியை உருவாக்கியிருக்கும் கார்ப்பரேட் உலகிற்கு நம்மால் எப்படி நன்றி கூற முடியும் என்று தெரியவில்லை.
இச்சந்தர்ப்பத்தில் ஜப்பானில் பிரபலமாகிவரும் மினிமலிஸம் (Minimalism) போன்ற வாழ்க்கைமுறை அறிதல் தான் அவசியமாகிறது. பழகிவிட்ட இந்த யுகத்தில், எல்லோராலும் மினிமலிஸத்தை எந்த அளவிற்குக் கடைப்பிடிக்க முடியுமோ, தெரியாது. ஆனால், அது போன்ற வாழ்வு முறையைத் தெரிந்து கொண்டு, நமது அடுத்த தலைமுறைக்குக் கற்றுக்கொடுப்பது, அவர்களது நன்றியை நாம் பெறுவதற்குத் தகுதியை ஏற்படுத்திக்கொடுக்கும்.
அனைவருக்கும் நன்றி நவிலல் வாழ்த்துகள்.


.

மினசோட்டாவில் கார் ட்ரைவிங் லைசன்ஸ் வாங்குவது எப்படி?

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.


பொறுப்புத் துறப்பு - இது தனிப்பட்ட, சொந்த அனுபவம் சார்ந்து எழுதபட்டது. ஆளாளுக்கு வேறுபடலாம்.
ஓட்டுனர் உரிமம் வாங்க, கார் ஓட்ட தெரிந்தால் மட்டும் போதாது. அது ஓரளவுக்குச் சுலபம். வாகனத்துறை தேர்வாளரைத் திருப்திபடுத்துமளவுக்கு, கார் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். அது தான் சிரமம். தேர்வாளர் மனதிற்குள் வைத்திருக்கும் அளவுகோல்கள் ஊருக்கு ஊர் மாறுபடும். ஆளாளுக்கு மாறுபடும். அது புரிபட்டு விட்டால், உங்களுக்கான லைசன்ஸ் தயார்.
மேலோட்டமாகச் சொல்லுவது என்றால், கார் லைசன்ஸ் என்னும் மாயக் கிளியை நெருங்க, இரு மலைகளைத் தாண்ட வேண்டும். முதல் மலை, இன்ஸ்ட்ரக்ஷன் பெர்மிட் (Instruction Permit) எனப்படும் பயிலுவதற்கான உரிமச் சான்றிதழ் வாங்குவதற்கு நடத்தப்படும் கணினி தேர்வு. கணினி தேர்வு தானே என்று குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது.

புதிதாக ஓட்டுனர் உரிமம் வாங்க வேண்டும் என்றாலும் சரி, வேறு ஊரில் உரிமம் வைத்திருந்து மினசோட்டா உரிமம் வாங்க வேண்டுமென்றாலும் சரி, கணினி தேர்வு கட்டாயம் உண்டு. நான் மினசோட்டா வந்த சமயம், டென்வர் மாநில ஓட்டுனர் உரிமம் வைத்திருந்தேன். அதை மினசோட்டா மாநில உரிமமாக மாற்ற பரீட்சை எடுக்க வேண்டி இருந்தது. நமக்குத் தான் கார் ஓட்ட தெரியுமே என்று படிக்காமல் சென்று விட்டேன். முதலில், ஒரு உதாரணக் கேள்வி காட்டினார்கள். மினசோட்டாவின் தலைநகரம் எது? ரொம்ப மப்பாக, மினியாபோலிஸ் என்று பதிலளித்துப் பல்ப் வாங்கினேன். அந்த உதாரணக் கேள்வியே எனது அன்றைய ரிசல்ட்டைக் காட்டிவிட்டது.

அடுத்த முறை, ஒழுங்காகப் படித்துச் சென்று பயிலுனர் உரிமம் வாங்கி வந்தேன். அதனால், இந்தத் தேர்வுக்குப் போக்குவரத்து விதிகளை வாசித்தல் அவசியமாகிறது. இதற்கான மினசோட்டாவின் போக்குவரத்து விதிகள் கையேடு, வாகனத்துறை இணையத்தளத்தில் பிடிஎப் வடிவிலும், ஒலிவடிவிலும், வாகனத்துறை அலுவலகங்களில் காகிதப்புத்தக வடிவிலும் கிடைக்கின்றன. அவரவர் வசதிக்கேற்ப, இதை வாங்கிப் படிக்கலாம். கேட்கலாம்.




அடுத்து, படித்தது ஒழுங்காக மண்டையில் ஏறியிருக்கிறதா என அறிந்து கொள்ள, மாதிரி தேர்வுகளை எடுக்கலாம். மாதிரி தேர்வுகள், பல இணையத்தளங்களில் கிடைக்கின்றன. அவுட்டான கேள்வித் தாள் கிடைக்குமா என்று தேடுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. ஓரிரு முறை இந்த மாதிரி தேர்வுகளில் பாஸ் செய்து விட்டீர்கள் எனில் நேரடியாகத் தேர்வுக்குச் சென்று விடலாம்.
நகரைச் சுற்றி பல இடங்களில் தேர்வு மையங்கள் உள்ளன. போவதற்கு முன், அங்குக் கணினி தேர்வு எடுக்க முடியுமா என்று இணையத்தில் பார்த்து விட்டு செல்லவும். சில வாகனத்துறை அலுவலகங்களில் தேர்வு எடுக்க முடியாது. எந்த அலுவலகத்தில் என்னென்ன வசதிகள் உள்ளன என்று இந்த இணைப்பில் சென்று பார்க்கவும்.




மறக்காமல், தேவைப்படும் டாகுமெண்ட்ஸை எடுத்து செல்லவும். அடையாள அட்டைகள், முகவரி சான்றிதழ் போன்றவை இதற்குத் தேவை. மேலும் தகவலுக்கு, இந்த லிங்கைக் காணவும்.


தேர்வு நிலையத்தில் கணினியும், ஹெட் போனும் இருக்கும். ஒவ்வொரு கேள்வியையும் ஒலிவடிவத்தில் கேட்கவும் செய்யலாம். நன்கு நிதானமாகப் பார்த்து, கேட்டு எழுத அவகாசம் இருக்கும். மொத்தம் 40 கேள்விகள். 32 கேள்விகளுக்காவது சரியான பதில்களை அளித்திருக்க வேண்டும். பாஸா, ஃபெயிலா என்பதைப் பரீட்சை முடிந்தவுடன் உடனே தெரிந்துக் கொள்ளலாம். சிலருக்குப் பரீட்சை நடக்கும் போதே தெரிந்து விடும். தேர்ச்சி பெறாவிட்டால், இன்னொரு முறை இலவச தேர்வு எடுக்கலாம். மூன்றாவது முறையில் இருந்து பத்து டாலர் கட்டணம் உண்டு.

பாஸானால், விண்ணப்பம் பூர்த்திச் செய்து, கட்டணம் செலுத்தி, ஃபோட்டோ எடுத்து, பயிலுனர் உரிமச் சான்றிதழை உடனே வாங்கிக் கொள்ளலாம். அட்டை வீட்டிற்குச் சில வாரங்கள் ஆகும். அது வரும் வரை கார் ஓட்டிப் பழகக் காத்திருக்கத் தேவையில்லை. பயிற்சியைத் தொடங்கிவிடலாம்.

இனி அடுத்தக் கட்டம். பயிற்சி மற்றும் சாலை தேர்வு. இந்தியாவில் கார் ஓட்ட தெரிந்திருந்தால், இங்குக் கார் ஓட்ட சிரமம் இருக்காது. அங்குச் சாலை விதிகளைக் கண்டு கொள்ளாமல் ஓட்டி விட்டு, அவற்றை இங்குக் கடைபிடிப்பது தான் முதலில் சிரமமாக இருக்கும். இன்னொன்று, ஹைவேயில் வேகமாகக் கார் ஓட்டுவது மற்றும் அதே வேகத்தில் லேன் மாறுவது. இதுவும், சிலருக்குச் சிரமமாக இருக்கும். இந்திய லைசன்ஸ் வைத்திருந்து, சாலை தேர்வுக்கு இடமிருந்து, உங்களுக்கு ரொம்பவும் தன்னம்பிக்கை இருந்தால், கணினி தேர்வை முடித்த கையோடு, சாலை தேர்வையும் ஒரு கை பார்த்துவிடலாம். அப்படி இல்லையெனில், பயிற்சி எடுத்துக்கொண்டு, சாலை தேர்வுக்கு முன்பதிவு செய்துவிட்டு செல்லவும்.

இங்குள்ள கார்களில் கியர், கிளட்ச் இருப்பதில்லை என்பதால், கார் ஓட்ட பயில்வது சுலபமே. தொடர் பயிற்சி இருந்தால், உள்ளூர இருக்கும் சாலைகளில் ஓட்டி, ஓரிரு வாரங்களில் ஓட்டப் பழகிவிடலாம். அதிக வாகனங்கள் இல்லாத தொலைத்தூர பயணங்களில் ஓட்டுவதும் ஓகே தான். உடன் வருபவரின் கண்காணிப்புச் சரியாக இருக்க வேண்டும். நகருக்குள் இருக்கும் நெடுஞ்சாலைகளில், வாகனகங்களுக்கிடையே ஓட்ட, திறமையைக் காட்ட வேண்டியிருக்கும். சாலை தேர்வில், அனைத்துவகைப் பார்க்கிங் (Parallel parking, 90 degree parking, Uphill parking & downhill parking) பற்றியும் கேட்டு, காரை நிறுத்த சொல்லி சோதிப்பார்கள். அதனால், இவை அனைத்தையும் முறையாகப் பயிற்சி செய்து, இவற்றில் தேர்ச்சிப் பெறுவது அவசியமாகிறது. இதற்காக, கோன்களுடன் (cones) கூடிய மாதிரி பார்க்கிங் இடங்கள் சில பள்ளி கார் நிறுத்துமிடங்களில் இருக்கும். பக்கத்தில் இருக்கும் பள்ளிகளில் சென்று, இந்தப் பயிற்சியைப் பெறலாம். பார்க்கிங் சரியாக வராதவரை, லைசன்ஸ் கிடைக்காது என்று நினைத்துக்கொண்டு பயிற்சி பெறவேண்டும். இணைவான கார் நிறுத்தல், செங்குத்தான கார் நிறுத்தல் - இவை இரண்டிற்கும் சில சுலப வழிமுறைகள் உள்ளன. அவற்றை யூ-ட்யூபில் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம். இது பற்றி தெரிந்தவர்கள் நேரடியாகச் சொல்லிக்கொடுத்தால் இன்னும் உசிதம். ஏற்றமான இடங்களில் காரை நிறுத்துவதற்கும், இறக்கமான இடங்களில் காரை நிறுத்துவதற்கும், கார் டயரை எந்தப் பக்கமாகத் திருப்பி வைக்க வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும்.

கற்றுக்கொள்வதற்கு, அடுத்த முக்கியமான விஷயம் - லேன் எனப்படும் சாலைகளில் இருக்கும் கோடுகளைப் பற்றி அறிந்துக்கொள்வதும், எங்கு எப்போது எப்படி மாறுவது என்று தெரிந்துக்கொள்வது. தேர்வின் போது, திருப்பங்களில் எந்த லேனில் இருந்து எந்த லேனிற்கு மாற வேண்டும் என்பதைத் தெரிந்து மாற வேண்டும். நாம் சாலையில் ஓட்டிக் கற்றுக்கொள்ளும் போது, இவற்றைப் பெரிதாகக் கவனிக்க மாட்டோம். தேர்வின் போது, இவற்றை நுணுக்கமாகக் கவனிப்பார்கள். நிறையப் பேரின் முதல் தோல்விகளுக்கு, இவையே காரணமாக இருக்கும். தேர்வு நடைபெறும் மையங்களில் இருக்கும் சில சாலைகளில், இந்தக் கோடுகளே இருக்காது. இது மேலும் குழப்பத்தைக் கொடுக்கும். அதனால், கோடுகள் இல்லாவிட்டாலும், கோடுகள் இருப்பதாக நினைத்து ஓட்டுவது எப்படி என்று தெரிந்திருக்க வேண்டும். இதற்கு ஒரு சுலப வழி - கூகிள் மேப்ஸ் போன்று ஏதேனும் ஒரு மேப்ஸ் இணையத்தளத்திற்குச் செல்லவும். நாம் தேர்வு எடுக்கப்போகும் தேர்வு மையத்தை வரைப்படமாகப் பார்க்கவும். எந்தச் சாலைகள் எப்படிச் செல்கிறது என்று தெரியும். எது ஓர் வழி சாலை, எது இருவழி சாலை என்று தெரியும். எங்குக் கோடுகள் உள்ளன, எங்கு இல்லை என்று தெரியும். நமது சாலைத் தேர்வை, வீட்டிலேயே பேப்பரில் ஹோம் வொர்க் செய்துக்கொள்ள இது உதவும்.


கார் ஓட்டுவதைத் தவிர, இன்னும் சிலவற்றை அறிந்துக்கொள்ள வேண்டும். சில பரிசோதகர்கள், நாம் காலணி அணிந்து கார் ஓட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அதனால், காலணி அணிந்து கார் ஓட்டவும். சிலர் நாம் எப்படிக் கார் ஸ்ட்டியரீங்கை பிடிக்கிறோம், எப்படி ப்ரேக் பிடிக்கிறோம் என்பதைக் கவனிப்பார்கள். என்ன வேகத்தில் ஓட்டுகிறோம் என்று கவனிப்பார்கள். பதட்டமாக இருக்கிறோமா என்று பார்ப்பார்கள். அதனால், சகஜமாக இருப்பது அவசியம். சில சந்தேகங்கள் இருந்தால், தேர்வாளரிடம் தேர்வு தொடங்குவதற்கு முன்பு கேட்டுக்கொள்ளலாம். சந்தேகத்தில், பயத்தில் கார் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

தேர்வின் போது, காரில் ஏறி உட்கார்ந்தவுடன், காரில் இருக்கும் கருவிகளைப் பற்றிக் கேட்பார்கள். உதாரணத்திற்கு, எமர்ஜென்ஸி விளக்குப் பொத்தான்கள், ஹாண்ட் ப்ரெக் போன்றவை எங்கு இருக்கும் என்று கேட்பார்கள். அதனால், அது பற்றித் தெரிந்திருக்க வேண்டும். தேர்வு முடிந்தவுடன், நாம் கார் ஓட்டியதைப் பற்றிய அவர்களது கருத்தைக் கேட்டுக் கொள்வது நல்லது. தேர்வில் தேர்ச்சி அடையாவிட்டால், இது அடுத்தத் தேர்வுக்கு உதவும். மூன்றாவது தேர்வில் இருந்து இருபது டாலர்கள் கட்டணம் உண்டு. தேர்ச்சி அடைந்துவிட்டால், அடுத்து அலுவலகத்திற்குள் சென்று விண்ணப்பம் பூர்த்திச் செய்து, புகைப்படம் எடுத்துவிட்டு மகிழ்வுடன் வீடு திரும்பலாம். ஓட்டுனர் உரிம அட்டை வீடு வந்து சேர, சில வாரங்கள் எடுக்கும். அதுவரை, அவர்கள் கொடுக்கும் சான்றிதழ் கொண்டு கார் ஓட்டலாம்.


மினசோட்டாவில் சாலை தேர்வுக்கு அப்பாயின்மெண்ட் எடுக்க வேண்டும். இந்த அப்பாயின்மெண்ட் கிடைப்பது அவ்வளவு சுலபமில்லை. அப்பாயின்மெண்ட் இல்லாமல், அங்குச் சென்று காத்திருந்து தேர்வு எடுக்கவும் வழியுண்டு. ஆனால், தேர்வு எடுப்பது உறுதி கிடையாது. வேறு ஏதும் வேலை இல்லை எனில், இப்படிக் காத்திருக்கலாம். இல்லாவிட்டால், முன்பதிவு உதவும். நமக்குப் பக்கத்தில் இருக்கும் மையத்தில் முன்பதிவு இல்லை என்றால், அடுத்துத் தொலைவில் இருப்பதில் முயற்சி செய்யலாம். சிலர் ஒரு மையத்தில் எடுப்பது சுலபம், மற்றதில் கடினம் என்பார்கள். அதை நம்பாதீர்கள். உங்களது பயிற்சி சரியாக இருந்தால் எங்கு வேண்டுமென்றாலும் உங்களால் தேர்ச்சி பெற முடியும்.


தனியார் பயிற்சி மையங்களில் ஒரு மணி நேர பயிற்சிக்கு 40-50 டாலர்கள் கட்டணம் பெற்றுக்கொண்டு பயிற்சி அளிப்பார்கள். அங்குச் சென்று பயிற்சி எடுக்க வேண்டுமா என்றால் அது கட்டாயம் தேவையில்லை. உங்களுடன் நேரம் செலவிட்டு, கார் ஓட்ட கற்றுக்கொடுக்க ஒரு ஜீவன் இருக்கிறதென்றால் அதுவே போதும். சில டெக்னிக்ஸ் தெரிந்து கொள்ள, இது போன்ற தனியார் பயிற்சியாளர்கள் உதவுவார்கள். மற்றபடி, தொடர் பயிற்சி கண்டிப்பாகத் தேர்ச்சியினைக் கொடுக்கும். விரைவில் தேர்ச்சி பெற்று உரிமம் பெறவும், பாதுகாப்பாகக் கார் ஓட்டவும் எங்களது வாழ்த்துகள்.

மேலும் தகவலுக்கு,

https://dps.mn.gov

.

அனோகா ஹாலோவீன் அணி வகுப்பு

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.



96 ஆண்டுகால பாரம்பரியம் கொண்டது, மினசோட்டாவின் அனோகாவில் (Anoka) நடக்கும் ஹலோவீன் கொண்டாட்டங்கள். 1920 ஆம் ஆண்டில், அனோகாவின் இளைஞர் பட்டாளம், ஹலோவீனின் போது நடத்தும் வேடிக்கை விளையாட்டுகள், மக்களிடையே திண்டாட்டத்தை ஏற்படுத்த, அனோகா நிர்வாகத்தினர் கூடி, எவ்விதப் பிரச்சினைகளுக்கும் இடமில்லாமல், ஒருமித்த திட்டத்துடன் நடத்தத் தொடங்கியவை, இக்கொண்டாட்ட நிகழ்வுகள்.
இங்கு அக்டோபர் மத்தியில் இருந்தே ஹாலோவீன் நிகழ்வுகள் தொடங்கிவிடுகின்றன. குழந்தைகள், பெரியோர்களுக்கான விளையாட்டுகள், வேடிக்கையாக திகில் ஏற்படுத்தும் வீடுகள், ஒப்பனை நிகழ்வுகள், திரைப்பட ஒளிபரப்பு என ஒரு பெரிய ஊர்த் திருவிழாவாக அக்டோபர் மாத இறுதிவரை நடைபெறுகிறது. அனோகாவில் மட்டுமின்றி, மினசோட்டாவின் மற்ற ஊர்களில் இருந்தும் மக்கள், இங்கு இந்த விழாவின் போது குவிகிறார்கள். பக்கத்தில் இருக்கும் மற்ற மாநிலங்களில் இருந்தும் பங்களிப்பு இருக்கிறது.
அமெரிக்காவில் இது போன்ற ஒரு கொண்டாட்டம், அனோகாவில் தான் முதன்முதலில் தொடங்கியது என்பதால், அனோகாவை உலகின் ஹலோவீன் தலைநகர் (The Halloween Capital of the World) என்று குறிப்பிடுகிறார்கள்.
இக்கொண்டாட்டங்களின் முக்கிய அம்சமாக இங்கு நடக்கும் பெருதின அணிவகுப்பைச் (Grand Day Parade) சொல்லலாம். விதவிதமான உடைகள், இசை வாத்தியங்கள், நடனங்கள், விளையாட்டுகள், இனிப்பு வகைகளை, இந்த அணிவகுப்பில் காணலாம். அக்டோபர் 29ஆம் தேதி நடந்த அணிவகுப்பில் எடுத்த புகைப்படங்களை இங்கு காணலாம்.

கல்வி நிறுவனங்கள், விளையாட்டு அமைப்புகள், வணிக நிறுவனங்கள், அரசு நிர்வாகங்கள் என பலதரப்பட்ட அமைப்புகளின் கூட்டு ஒருங்கிணைப்பில் அழகாக இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. மெல்லிய சாரலும், குளிரும் இருந்தாலும், மக்கள் பெரும் திரளாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, அணிவகுப்பில் கலந்து கொண்டவர்களை உற்சாகத்துடன் ஊக்கப்படுத்தினர்.

.