Friday, September 23, 2016

தமிழில் இணையதளப் பெயர்கள்

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.


உங்கள் கணினி இணைய உலாவியில் (browser), என்றேனும் www.panippookkal.com என்பதற்குப் பதில் பனிப்பூக்கள்.com என்று தட்டச்சுச் செய்து, பின்பு திருத்தியிருக்கிறீர்களா? இனி திருத்த வேண்டாம். அதுவும் உங்களைப் பனிப்பூக்கள் தளத்திற்குச் சரியாகக் கொண்டு வந்துவிடும்.
அதாவது, இணையத்தளங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல், தமிழ் போன்ற மற்ற உலக மொழிகளிலும் வைப்பதற்கு வழிவகைகள் இருக்கின்றன. இனி, அழகுத்தமிழிலேயே இணையதளங்களுக்குப் பெயர் வைக்கலாம். அவ்வாறே, உலாவியில் தமிழில் குறிப்பிட்டு, அத்தளங்களுக்குச் சென்று அடையலாம்.
இது எப்படிச் செயல்படுகிறது?
முதலில், பொதுவாக இணைய தளங்கள் எவ்வாறு வேலை செய்கிறது என்பதைப் பார்ப்போம். உதாரணத்திற்கு, நீங்கள் பனிப்பூக்கள் தளத்திற்கு வர, www.panippookkal.com என்று தட்டச்சு செய்கிறீர்கள். இதற்குப் பின்னால், என்ன நடக்கிறது? (இதெல்லாம் தெரிந்த டெக்கீஸ், கீழே இருக்கும் புகைப்படத்திற்கு அருகே நேராகச் சென்று விடலாம்)
நாம் மனிதர்கள் ஒன்று சேர்ந்து வாழும் இடமான இந்த உலகம் போல், இணையம் (Internet) என்பது இணைய தளங்களின் கூட்டு மெய்நிகர் உலகம். நாம் வாடகை வீட்டிலோ, அல்லது சொந்த வீட்டிலோ இருப்பது போல், இணைய தளங்களின் வீடுகள் - Server எனும் வகையைச் சார்ந்த கணினிகள்.
அடுத்து, நமது வீட்டுக்கு யாரேனும் வர வேண்டுமென்றால், நாம் நமது வீட்டு முகவரியைக் கொடுப்போம். அதில் சில எண்கள், எழுத்துகள் இருக்கும். உதாரணமாக, 250, 310/A இப்படி இருக்கும். கணினிகள் உலகில், அதன் ஐபி (IP) அட்ரஸ்கள் தான் அதன் முகவரி. அது 192.168.0.1 என்பது போல் இருக்கும்.
சில வீடுகளுக்குப் பெயர்கள் இருக்கும். அன்னை இல்லம், வேதா நிலையம், கணேஷ் பவனம், ராம் நிவாஸ் என்பது போல. அப்படியே இல்லாவிட்டாலும், முனுசாமி வீடு, வாத்தியார் வீடு, பாய் வீடு என்று கேட்டே சில வீடுகளை அடையாளம் காணலாம். அதாவது, சில எண்களை நினைவு கொண்டு அடையாளம் காண்பதை விட, பெயர்கள் கொண்டு அடையாளம் காண்பது எளிது அல்லவா? இணையத்தில், இணைய தளங்களின் பெயர்கள் (Domain name) இது போல் தான் சௌகரியம் அளித்து உதவுகின்றன.
உதாரணத்திற்கு, ஃபேஸ்புக் தளம் பல சர்வர்களில் செயல்பட்டுக் கொண்டு இருக்கும். ஒவ்வொரு சர்வருக்கும், ஒரு ஐபி அட்ரஸ் இருக்கும். ஃபேஸ்புக் பார்க்க வேண்டும் எனில், அதன் ஐபி அட்ரஸ் தெரிந்திருக்க வேண்டும் என்றால் அது எவ்வளவு சிரமத்தைக் கொடுக்கும்!! அந்தக் கஷ்டத்தைத் தீர்ப்பதே, டொமைன் (Domain) எனப்படும் இணைய தளப் பெயர்கள்.
இணைய உலாவியில், ஒரு தளத்தின் பெயரை அடித்தவுடன், அந்தத் தளம் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் சர்வரின் ஐபி அட்ரஸ் உலாவிக்குக் கிடைக்கும். யார் கொடுப்பார்கள்? ஏற்கனவே சென்ற இணைய தளம் என்றால் உலாவிக்கே தெரிந்திருக்கலாம், அல்லது உங்கள் கணினிக்குத் தெரிந்திருக்கலாம். அப்படித் தெரியாத பட்சத்தில், உங்களுக்கு இணையச் சேவை தரும் நிறுவனத்திற்கு (ISP - Internet Service Provider) தெரிந்திருக்கும். இணையச் சேவை நிறுவனத்திடம் இருக்கும் DNS (Domain Name System) எனப்படும் இணையத் தகவல் கிடங்கில் இருந்து இந்த ஐபி அட்ரஸ் தகவலை எடுத்துக் கொடுக்கும். DNS என்பது டெலிஃபோன் டைரக்டரி போன்றது. ஒரு இணைய தளப் பெயரைக் கொடுத்தால், அது அந்த இணைய தளத்திற்கான ஐபி அட்ரஸைக் கொடுக்கும். எப்படி ஒரு நபரின் பெயரைக் கொண்டு, அவரது தொலைபேசி எண்ணைக் கண்டு பிடிப்போம், அது போல.
உலகில் இருக்கும் அனைத்து இணைய தளங்களின் ஐபி அட்ரஸ்களும், ஒரு DNSக்கு தெரிந்திருக்காது என்பதால், அது அதற்குத் தெரிந்த இன்னொரு DNSஇடம் கேட்க சொல்லும். அதற்கும் தெரியாவிட்டால், இன்னொன்றுக்கு. இப்படியே தொடர் சங்கிலி போல் கேட்டு, எப்படியாவது கண்டுபிடித்து விடும்.

சரி, கட்டுரையின் சங்கதிக்கு வரலாம். இணையம் உருவான காலத்தில் இருந்தே, இணைய தளங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் தான் இருந்து வருகிறது. ஏனெனில், கணினிகள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் மொழியான ASCIIயில் எண்களையும், ஆங்கில எழுத்துகளையும், சில குறியீட்டு வடிவங்களையும் தான் குறிப்பிட முடியும். பிறகு, மற்ற மொழிகளின் வடிவங்களையும் கணினியில் பயன்படுத்த, யூனிகோட் முறை உருவானது.
யூனிகோட் முறை வந்தபின்பு, கணினி மற்றும் இணையத்தில், தமிழிலும், மற்ற மொழிகளிலும் எழுத முடிந்தாலும், இணைய தளங்களுக்கு ஆங்கிலத்தில் மட்டும் தான் பெயர் வைக்க முடிந்தது. தொண்ணூறுகளின் இறுதியில் IDN (Internationalized Domain Name) உருவாகிய பின், மற்ற மொழிகளிலும் இணைய தளங்களுக்குப் பெயர் வைக்கலாம் என்ற நிலை உருவாகியது.
உலக மொழிகளில் இணைய தளங்களின் பெயரை டைப் செய்ய, நாம் பயன்படுத்தும் உலாவியும் IDN புரிந்த செயலியாக இருக்க வேண்டும். நாம் உள்ளீடு செய்யும் ஒவ்வொரு யூனிகோட் எழுத்தும், அதற்குரிய ப்யூனிகோட் (Punycode) எழுத்துகளாக உலாவி மாற்றும். உதாரணத்திற்கு, நாம் '' என்று எழுதினால், உலாவி 'xn--vkc' என மாற்றும். 'xn--' என்று தொடங்கினால், அது ப்யூனிகோட் என்று புரிந்துக்கொள்ளலாம். Unicode ASCIIஆக மாற்ற, Punycode பயன்படுகிறது.
'' என்ற யூனிகோட் எழுத்து, 'xn--vkc' என்ற அதற்கு இணையான ப்யூனிகோட் ஆக மாறும்போது, இந்த ப்யூனிகோடில் இருக்கும் x, n, - போன்ற எழுத்துகள் எல்லாம் வேறென்றும் இல்லை, ASCII தான். நமது உலாவியிலேயே தமிழ் இணைய தளப் பெயர்கள், அதற்கு இணையான ASCII எழுத்துகளாக மாற்றம் அடைந்த பிறகு, அதற்கு அடுத்துப் பின்னால் நடைபெறும் செயல்களில் ஏதும் மாற்றம் கிடையாது. DNS என்று முன்னால் நாம் பார்த்த டைரக்டரியில், இந்த ப்யூனிகோட் இணைய தளப் பெயர்களுக்கு உரிய ஐபி அட்ரஸ் இருக்கும். அதன் மூலம் நாம் செல்ல நினைத்த தளங்களுக்கு நம்மை உலாவி எடுத்துச் செல்லும்.
ஏன் இதில் இவ்வளவு சிக்கல்? எல்லாவற்றையும் யூனிகோட் என்று மாற்றினால், ப்யூனிகோட், பிறகு ASCII என்று இவ்வளவு மாற்றங்கள் தேவையில்லை எனத் தோன்றும். ஆனால், இணையத் தொழில்நுட்பத்திற்கு முக்கியப் பின்புலனாக இருக்கும் HTTP நெறிமுறை ASCII சார்ந்தது. எனவே, இது போன்ற இடைநிலை மொழி மாற்றங்கள் தேவைப்படுகின்றன.
சரி, இவ்வளவு கஷ்டப்பட்டு என்ன சாதித்தோம்?
இன்னமும், தமிழில் இது பெருமளவில் பயன்பாட்டுக்கு வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இன்னமும் பலரை இது சென்று சேரவில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், இது நல்ல வளர்ச்சியை அடையும் போது, இதன் பலன்கள் கண்கூடும் வாய்ப்பு வரும். அவரவர் சொந்த மொழியில் இணைய தளங்களுக்குப் பெயர் வைக்கும் போது, இணையம் மேலும் பாமர மக்களிடம் சென்று சேர வாய்ப்பு அதிகமாகும். கடை முகப்பில், தமிழில் பெயர் பலகை வைத்திருக்கும் நிறுவனங்கள், அது போலவே இணையத்திலும் கடையின் பெயரையே, இணையக்கடைக்கும் பெயராக வைக்கலாம். மின்னஞ்சல் முகவரியும் முழுமையாகத் தமிழில் சாத்தியம் ஆகும். மொபைல் ஃபோனும், அதில் இருக்கும் தமிழ் கீ-போர்டும் ஏற்கனவே பலரை இணையத் தொடர்பில் இணைத்து விட்டிருப்பதைக் காண்கிறோம். இது போன்ற மேலும் தமிழ் மயமாக்கத்திற்கான வாய்ப்பு அதிகரிக்கும் போது, அது மென்மேலும் இணையப் பயன்பாட்டை அதிகரிக்கும் என நம்பலாம்.
மேலும் தகவல்களுக்கு,
http://computer.howstuffworks.com/dns.htm
https://en.wikipedia.org/wiki/Internationalized_domain_name
https://www.w3.org/International/articles/idn-and-iri/

.

No comments: