Friday, September 23, 2016

அறுந்த ஆனந்த யாழ் - நா. முத்துக்குமாருக்கு அஞ்சலி

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.



கடவுளுடன் சீட்டாடுவது
கொஞ்சம் கடினமானது
எவ்வளவு கவனமாக இருந்தாலும்
பார்க்காமலே அறிந்து கொள்கிறார்
2000 ஆம் ஆண்டில்  டீன்-ஏஜைக் கடந்தவர்களுக்கு, தங்களுக்கான இளமை, காதல், சோகம், பாசம் போன்ற உணர்வுகளைப் பாடல்களாக வார்த்தெடுத்துக் கொடுத்தவர், கவிஞர் நா. முத்துக்குமார். அதனாலேயே, நா. முத்துக்குமார் மறைந்த செய்தியை ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று கேட்டபோது, அது இத்தலைமுறையினருக்குப் பெரும் இழப்பைக் கொடுப்பதாக இருந்தது.
1975இல் காஞ்சிபுரத்தில் பிறந்த நா.முத்துக்குமார், இளம் வயதிலேயே தனது தாயாரை இழந்தார். அந்தச் சோகம் தனது மகன்களை எந்த நிலையிலும் வாட்டக்கூடாது என்று நினைத்த அவரது தந்தை, அதன் பிறகு, அவர்களை எந்த விழாக்களுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ அழைத்துச் செல்லாமல், தனக்கிருந்த புத்தகம் மீதான காதலைத் தனது புத்திரர்களுக்கும் புகட்டினார். இதனால், முத்துக்குமாருக்குச் சிறு வயதிலேயே புத்தகங்களுக்குடனான சினேகம் பிறந்தது. புத்தகங்களுடனே வாழ்ந்த முத்துக்குமாருக்கு இயல்பிலேயே தமிழார்வம் மிகுந்து இருந்ததால், தனது இளம் பருவத்தில் இருந்தே கவிதைகள் எழுத ஆரம்பித்தார்.
கல்லூரிக் காலத்தில் அவர் எழுதிய ‘தூர்’ என்ற கவிதை, எழுத்தாளர் சுஜாதாவைக் கவர, அவர் ஒரு விழாவில் அதைப்பற்றிப் பேச, அந்த நிகழ்ச்சியில் முத்துக்குமாரும் இருக்க, எழுந்து நின்று தான் தான் அந்தக் கவிதையை எழுதிய முத்துக்குமார் என்று சுஜாதாவிடம் கூறியிருக்கிறார். உடனே, சுஜாதா அவரை மேடைக்கு அழைத்துக் கௌரவித்திருக்கிறார். தந்தை கிணற்றில் தூர் எடுக்கும் அனுபவத்தை வைத்து எழுதிய கவிதை அது.
ஆழ் நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்...
கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி,
துருப்பிடித்த கட்டையோடு
உள் விழுந்த ராட்டினம்,
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்...
எடுப்போம் நிறையவே!
அப்போது சுஜாதா அவரிடம் கூறிய வார்த்தைகள், "சினிமா உங்களை விழுங்கி விடாமல் இருக்க வேண்டிக் கொள்கிறேன்". அந்த வேண்டுதலுக்குப் பலனில்லாமல் போனது.
இருபத்து இரண்டு வயதில் அவர் எழுதிய ‘பட்டாம்பூச்சி விற்பவன்’ புத்தகத்தில் தனது இளம் பருவ அனுபவங்களைக் கவிதைகளாக எழுதி கவிஞராக பெயர் எடுத்தார்.
”சோற்றுக்கு வரும் நாயிடம்
யார் போய்ச் சொல்வது
வீடு மாற்றுவதை?”
கவிதைகளில் புகழ் பெற்றவர், பிறகு சென்னை வந்து, கவிஞர் அறிவுமதியுடன் தங்கி, இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். 2000ஆவது ஆண்டில் சீமான் இயக்கிய “வீர நடை” படத்தில் தனது முதல் பாடலை எழுதி, பாடலாசிரியராகத் தனது திரையுலக வாழ்வைத் தொடங்கினார். அதில் தொடங்கிய அவரது ஓட்டம், தடையில்லாமல் வேகமெடுத்தது. விரைவிலேயே, தமிழ் சினிமாவில் அதிகப் பாடல்கள் எழுதும் பாடலாசிரியராக ஆனார்.
இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு !
கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்கை முழுதும் அழகு !
ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான படங்களில் பாடல்கள் எழுதுபவர், வருடக்கடைசியில் அந்தக் கணக்கையும் தவறாமல் அறிக்கையாக வெளியிடுவார். எதற்கு இதெல்லாம் என்று நினைத்தவர்கள் கூட, இனி அதைக் காண முடியாதே என்று வருந்தும் நிலை இப்போது. 16 வருடங்களில் ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமான பாடல்களை எழுதியவர், 2013 ஆம் ஆண்டும், 2014 ஆம் ஆண்டும் தொடர்ச்சியாகத் தங்க மீன்கள், சைவம் படங்களுக்காக தேசிய விருது பெற்றார். பாடல்களின் கணக்கு, அவருடைய பாடல் வரிகளின் தரத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அவருக்கான விருதுகள், இனி காலம் முழுக்கக் காத்திருக்க வேண்டியது தான்.
“ஒரு வண்ணத்துப் பூச்சி எந்தன் வழிதேடி வந்தது.. அதன் வண்ணங்கள் மட்டும் இங்கு விரலோடு உள்ளது..” என்று காதலுக்கு எழுதிய வரிகளும், “பிரித்துப் படித்து முடிக்கும் முன்னே எரியும் கடிதம் எதற்குப் பெண்ணே... உன்னால் தானே நானே வாழ்கிறேன்…” என்று பிரிவின் வலியைச் சொல்லும் வரிகளும், “நல்ல நண்பன் வேண்டும் என்று அந்த மரணம் நினைக்கின்றதா” என்று நட்பின் இழப்பைப் பேசிய வரிகளும், “அடி கோயில் எதற்குத் தெய்வங்கள் எதற்கு... உனது புன்னகை போதுமடி…” என்று மகள்களைப் பெற்ற அப்பாக்களின் மனதைப் பேசிய வரிகளும், “தலையணைப் பூக்களில் எல்லாம் கூந்தல் மணம் வருதா?” என்று துணையின் பிரிவைப் பாடிய வரிகளும் முத்துக்குமாரின் நினைவை என்றும் நமக்கு அளித்துக்கொண்டு தான் இருக்கும்.
ஒரு படைப்பாளியாக இல்லாமல், ஒரு மனிதனாகவும் தன்னைச் சுற்றி இருந்தவர்களின் மனங்கவர்ந்தவராக இருந்தவர், நா. முத்துக்குமார். எப்போதும் தனது சக கவிஞர்களிடம் நட்பு பாராட்டியே வந்தவர், தனக்கு மூத்தவர்களிடமும் மரியாதையுடன் நல்ல உறவு பேணியே வந்தார். கவிஞர் வைரமுத்துப் போன்றவர்களே, இவர் மரணத்தின் போது கட்டுப்படுத்த முடியாமல் உடைந்து போனார்கள். யார் மனமும் புண்படாதவாறு பேசுபவர், எங்கும் அதிர்ந்து பேசாதவர் என்று இருந்தவரின் மரணம், அனைவரையுமே காயப்படுத்தியிருக்கும்.
இறந்துபோனதை
அறிந்த பிறகுதான்
இறக்க வேண்டும் நான்
முத்துக்குமார் போன்றவரின் மரணம், இக்கால இளைஞர்கள் தங்கள் உடல் நலன் மேல் கொண்டிருக்கும் அக்கறை குறித்தும் யோசிக்க வைக்கிறது. முத்துக்குமாரின் மரணத்திற்கான காரணம் எதுவாக இருந்தாலும், அதன் மீதான விவாதம் அந்த மனிதனை இழிவுப்படுத்துவதாக இருந்துவிடக்கூடாது என்ற கவனமும் அவசியமாகிறது. வேலையின் மீதான கவனம், உடல்நலன் மீதும் அதே அளவில் இருக்க வேண்டும் என்பதை முத்துக்குமார், இத்தலைமுறை இளைஞர்களுக்கும், முக்கியமாகக் கலைஞர்களுக்கும் தனது மரணத்தின் மூலம் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார் என்று எடுத்துக்கொள்ளலாம். முத்துக்குமாரை இழந்து வாடும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.


.

No comments: