Saturday, July 16, 2016

தீபன் - துரத்தும் துயரம்

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.

http://www.panippookkal.com/ithazh/archives/8679



சென்ற வருடம், கேன்ஸ் மற்றும் பிற திரைப்பட விழாக்களில்  கலந்துக் கொண்டு பல விருதுகளைப் பெற்ற ப்ரெஞ்ச் திரைப்படமான "தீபன்", மினியாபோலிஸ் அப்டவுண் தியேட்டரில் ஜுன் மாத நடு வாரத்தில் திரையிடப்பட்டது. ப்ரான்சில் வசிக்கும் பிரபல இலங்கைத் தமிழ் எழுத்தாளரான ஷோபா ஷக்தி, இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்கம் - ப்ரெஞ்ச் இயக்குனர் அவ்தியாத்.


---


நான் தூத்துக்குடியில் இருந்த பொழுது, சிறு வயதில் அடிக்கடி இரு சாதிகளுக்கிடையே நடைபெறும் சாதி கலவரங்களைக் காணும் பொழுது, இது போன்ற சண்டைச் சச்சரவு  இல்லாத இடத்திற்குச் சென்று விட அவ்வயதில் தோன்றும். பிறகு, கோயமுத்தூரில் படிப்பு. அங்கு அவ்வப்போது மத கலவரங்கள் நிகழ்ந்ததுண்டு. வருடந்தோறும், சில நாட்களில் பாதுகாப்பு சடங்குகள் அதிகமாகி, கலவரம் இல்லாமலே பீதி கிளம்பும்.


அப்புறம், பெங்களூரில் வேலை. கன்னட மொழிப்பற்று உள்ளவர்களிடம் தமிழில் பேசிப் பாருங்கள். இது நம்மூர் இல்லை என்பது உடனே நினைவுறுத்தப்படும்.


அச்சமயம், ஒரு கதை எழுதினேன். இது போன்ற அனுபவங்களையும், அச்சமயம் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த சில இனவெறி தாக்குதல்களையும் இணைத்து, ஒருவனை எங்கு சென்றாலும் வன்முறை துரத்துவதாக.


தீபன் படத்தின் அடிநாதமும் அதுவே. இலங்கை ஈழ போரில் போராளியாக இருந்த ஒருவன், அகதியாக இடம் பெயரும் போது, வந்த இடத்திலும் அவனைத் துரத்தும் வன்முறை நிகழ்வுகளை எவ்வாறு எதிர்கொண்டு, அதிலிருந்து அமைதியான இல்லற நேச வாழ்வுக்கு மீண்டு செல்கிறான் என்பதே தீபனின் கதை.




இலங்கை ஈழப் போர் உச்சத்தை எட்டி, புலிகள் தோல்வியடைந்த காலக்கட்டத்தில் இருந்து படம் ஆரம்பிக்கிறது. போரில் மரணமடைந்த சக போராளிகளை உடல் தகனம் செய்துவிட்டு, ப்ரான்ஸுக்கு அகதியாக கிளம்பும் தீபன், கூடவே முன்பின் அறிமுகமில்லாத யாழினி என்ற பெண்ணை மனைவியாகவும், இளயாள் எனும் சிறுமியை தனது மகளாகவும் தன்னுடன் அழைத்து செல்கிறான். ஐரோப்பியாவில் புகலிடம் பெற ஏதுவாக, ஒரே குடும்பம் எனும் வெளிச்சித்தரிப்பில், மூன்று அறிமுகமில்லாதவர்கள் ப்ரான்சிற்கு பயணிக்கிறார்கள்.


பொதுவாக, உள்ளூரில் அறிமுகமில்லாதவர்களும் வெளியூரில் சந்தித்துக் கொண்டால், ஒரே ஊர் எனும் உறவை உடனே பெற்றுவிடுவார்கள். வெளியுலகிற்காக உறவு எனும் போர்வையில் குடும்பமாக நடிப்பவர்களை, காலம் எப்படி உண்மையான  அன்னியோன்ய குடும்பமாக மாற்றுகிறது என்பதை தீபன் உணர்வுபூர்வமாகக் காட்டுகிறது.


பாரிஸில் கேர்டேக்கர் என்னும் தனிப்பட்ட குடும்ப உதவியாளர்களாக தீபனும், யாழினியும் பணிபுரிய, மகள் தினமும் பள்ளிக்கு சென்று வருகிறாள். குழந்தைகள் எதையும் சீக்கிரம் கற்றுக்கொள்வார்கள் என்பதற்கேற்ப, இளயாள் விரைவிலேயே தீபனையும், யாழினியையும் பெற்றோராக பார்க்க, பெரியவர்களான தீபனையும், யாழினியையும், இந்த போலியான கணவன்-மனைவி என்னும் சங்கிலி அலைக்கழிக்கிறது.


மகிழ்வான பொழுதில் தங்களை அறியாமல் கிண்டல் அடித்துக்கொண்டு, காமப்பொழுதில் தவிர்க்க முடியாமல் இணைந்துக்கொண்டு, சங்கடப்பொழுதில் தங்களுக்குள் அக்கறைக்கொள்பவர்கள், மனஸ்தாபம் கொள்ளும் பொழுது மட்டும், தாம் உண்மையான கணவன் - மனைவி அல்ல என்பதை நினைவுபடுத்திக்கொள்கிறார்கள். இவ்வெண்ணம் இவர்களுக்குள் ஒரு நிரந்தர கோட்டை எப்பொழுதும் போட்டு வைத்திருக்கிறது. அச்சமயம்,  இவர்கள் ஒரு பெரும் வன்முறைத்தருணத்தை எதிர்க்கொள்ள நேர,  இறுதியில் உண்மையான குடும்பமாக ஒன்றிணைகிறார்கள்.


பாரிஸில் இவர்கள் இருக்கும் பகுதியில், ஒரு வன்முறைச் சூழல் எந்நேரமும் நிகழலாம் என்பது போல் போதைப்பொருளைக் கையாளும் இரு கும்பல்கள் முட்டிக்கொண்டே இருக்கிறார்கள். தீபனும், யாழினியும் தாங்கள் பணிபுரியும் இடங்களில் இவர்களைக் கடக்க நேர்கிறது. வாழ்வின் முன் பகுதியில், பிறந்த நாட்டில் போர்ச்சூழலைச் சந்தித்த இவர்களுக்கு இச்சூழல் பெரிதாக இருக்க போவதில்லை. ஆனாலும், அதைத் தவிர்த்து செல்லவே விரும்புகிறார்கள். இருப்பினும், தவிர்க்க இயலா நிலை ஏற்படும் போது, தீபனுக்குள் இறக்காமல் இருக்கும் போராளி திரும்ப வருகிறான். முன்பு, இனத்துக்காக போராடியவன், இச்சமயம் தன் குடும்பத்தைப் போராடிக் காக்கிறான். ஒவ்வொரு குடும்பஸ்தனுமே, தன் குடும்பத்தைக் காக்கும் போராளிதானே!!


யாழினியின் உறவு, இங்கிலாந்தில் இருக்க, இவர்களும் இறுதியில் இங்கிலாந்து சென்று அமைதியான இல்லற வாழ்வில் ஈடுபடுவதாக படம் முடிகிறது. வன்முறையைத் தவிர்க்க நினைப்பவர்கள், எங்கிருந்தாலும் வன்முறையைத் தவிர்ப்பார்கள். வன்முறையை எதிர்கொள்ள நினைப்பவர்கள், எங்கிருந்தாலும் வன்முறையை எதிர்கொள்வார்கள்.


---


பொதுவாக, நான் இதுவரை பார்த்த ஈழப்போர், ஈழ மக்கள் பற்றிய படங்களில் ஒரு அன்னியத்தன்மை இருக்கும். அது பெரும்பாலும் ஈழ கலைஞர்கள் பங்களிப்பு இல்லாமல், வெளி கலைஞர்களின் படைப்பாக்கத்தால் வந்த காரணத்தால் இருக்கும். ஈழம் பற்றிய அவர்களது வெளிபுரிதல் அவ்வாறான ஒரு செயற்கைத்தன்மையை வெளிபடுத்தியிருக்கும். இந்த படத்தையும் காணச் செல்லும் முன்பு, அப்படி ஒரு எதிர்பார்ப்பே இருந்தது. காரணம், படத்தை எடுத்திருப்பது ஒரு ப்ரெஞ்ச் இயக்குனர். ஆனால், எனது அந்த எதிர்மறை எதிர்பார்ப்பு, படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே தவிடுபொடியானது. ஒரு ப்ரெஞ்ச் இயக்குனர் எடுத்த படமா? எனும் ஆச்சரியம் மேலோங்கியது. தீபன், யாழினி, இளயாள் என்ற இந்த மூன்று ஈழ மனிதர்கள் உணர்வுபூர்வமாகத் திரையில் நடமாடினார்கள். இவர்களுக்கிடையேயான காட்சிகள், தத்ரூபமாக படம் பிடிக்கப்பட்டிருந்தன. எழுத்தாளர் ஷோபா சக்தி (ஜேசுதாசன் அந்தோணிதாசன்) யின் பெயர், நடிகராக மட்டுமே படத்தில் க்ரடிட் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவரின் பங்களிப்பு அதைத் தாண்டி இருந்ததாக அறிகிறேன். அதுதான் உண்மையாக இருக்குமேன நம்புகிறேன். ஒரு கலைப்படைப்பு தத்ரூபமாகவும், கலாபூர்வமாகவும் வர, அனுபவம் வாய்ந்த இலக்கியவாதி+இயக்குனர் கூட்டணி எவ்வளவு முக்கியம் என்பதை இப்படம் காட்டுகிறது.


தீபன் என்று படத்திற்கு வைத்திருக்கும் பெயரே, இப்படத்திற்கு ஈழத்துடனான இருக்கும் உண்மையான நெருக்கத்தைக் காட்டுகிறது. ஈழ வரலாற்றில் தீபன், திலீபன் போன்ற பெயர்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் அனைவரும் அறிந்தது தானே?


படத்தில் ப்ரெஞ்ச், தமிழ், ஆங்கில மொழிகள் பேசப்பட்டிருக்கின்றன. ப்ரெஞ்ச் பேசப்படும் நேரத்தில், சப்-டைட்டிலைக் காண வேண்டி இருப்பதால், படத்துடன் முழுமையாக ஒன்ற முடியவில்லை. அது படத்தின் குறையல்ல. கதாபாத்திரங்களால் மாறி, மாறி மொழிகள் பேசப்படுவதால், ஒரு சிறு குழப்பம் ஏற்படுகிறது. தவிர, ஒரு புதிய நாட்டிற்கு வந்து சில நாட்களிலேயே, இவ்வளவு சரளமாக ஒரு அன்னிய மொழியைப் பேச முடியுமா? எனும் சந்தேகமும் நம்பகத்தன்மையைச் சிறிது குலைக்கிறது.


அவார்ட் வாங்கிய படமென்றாலே, அது ஆர்ட் படம் என்பது தெரிந்து போகும். ஆர்ட் படம் என்றாலே மெதுவாக தான் செல்லும் என்பது எழுதப்படாத இலக்கணம். அந்த புரிதல் இருந்தால், படம் மெதுவாக செல்கிறது என்பது குறையாக இருக்காது. ஒரு மன சோர்வுற்ற நேரத்தில், தீபன் மதுவருந்திவிட்டு, 'நிலா அது வானத்து மேலே' போட்டுக்கொண்டு, இளையராஜா குரலுடன் தானும் கூடவே சேர்ந்து பாடுகிறான். படத்தில் கமர்ஷியல் ரசிகன் கைத்தட்டி, ஆட்டம் போடவும் ஒரு காட்சியை வைத்திருக்கிறார் இந்த ஆர்ட் டைரக்டர். :-)


(கபாலி வாய்சில் வாசிக்கவும்) "ஆர்ட் டைரக்டர்'ன்னா எப்பவும் மெதுவா போற சீனையும், அழுற சீனையும் மட்டும் தான் எடுப்பார்'ன்னு நினைச்சியா, இது அவ்தியாத்'டா" என்று சொல்லாமல் சொல்லி, படத்தின் இரண்டாம் பகுதியில் வரும் சண்டைக்காட்சியையும் தத்ரூபமாக, அதிரடியாக ரத்தம் தெறிக்க எடுத்திருக்கிறார் இயக்குனர்.


யாழினியாக நடித்திருக்கும் தமிழ் நடிகை காளிஸ்வரியும், தீபனாக நடித்திருக்கும் எழுத்தாளர் ஷோபா சக்தியும், இவர்களின் மகளாக நடித்திருக்கும் சிறுமி க்ளாடினும் சிறப்பான நடிப்பை, மற்ற ப்ரெஞ்ச் நடிகர்களுடன் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த கதாபாத்திரங்களுக்கு இவர்களின் தேர்வே, படத்தின் நம்பகத்தன்மையை பெருமளவு கூட்டியிருக்கிறது. படம் பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தியாவில் தமிழ்நாடு ஆகிய இடங்களில் பொருத்தமான பகுதிகளில் எடுக்கப்பட்டிருப்பதும், படத்துடன் ஒன்றச் செய்கிறது.


முன்பின் அறியாதவர்களுடன் குடும்பமாக வாழும் போதும், பணிபுரியும் போதும் ஏற்படும் தயக்கம் கலந்த உணர்வை, படம் முழுக்க அழகாக வெளிபடுத்தியிருக்கிறார் காளிஸ்வரி. இவர்களைப் பிரிந்து இங்கிலாந்தில் இருக்கும் தனது உறவுகளுடன் சென்று சேர்ந்துவிட நினைக்கும் குழப்ப உணர்வையும் சரியாக வெளிகாட்டி இருந்தார். ஷோபா சக்திக்கு தான் வாழ்ந்த வாழ்க்கையை நடித்து காட்டும் வாய்ப்பு என்பதால் நடிப்பில் குறையே வைக்கவில்லை. சமிபத்தில் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிய இயல் விருதைப் பெற்ற ஷோபா சக்திக்கு, எமது வாழ்த்துகள்.


ஒரு காட்சியில், ஒரு முன்னாள் போராளியை தீபன் சந்திக்கிறான். போர் முடிவுற்றது என்பதை ஒப்புக்கொள்ள முடியாமல், இன்னமும் ஆயுதங்கள் வாங்கி அனுப்ப செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் அந்த போராளி. சிலர் மனரீதியாக பாதிக்கப்பட்டும், சிலர் போலித்தனத்துடன் இவ்வாறு வாழ்ந்துக்கொண்டு இருப்பதும், உலகின் பல பகுதிகளில் இருக்கிறது போலும். எனக்கு தமிழகத்தின் சில இயக்கங்கள் நினைவுக்கு வந்து சென்றன, இக்காட்சியின் போது.


---


இது ஈழத்தைப் பற்றிய படமோ, ஈழப்போர் பற்றிய படமோ அல்ல. முன்பே சொன்னது போல், ஈழப்போர் முடியும் காலக்கட்டத்தில் இப்படம் ஆரம்பிக்கிறது. ஒரு போரால் பாதிக்கப்பட்டு, வெளிநாடுகளில் வாழ்க்கையைத் தொடரும் ஏதிலிகள் அனுபவிக்கும் துயரத்தைக் காட்டும் படம் இது. அதை ஈழப்போரால் பாதிக்கப்பட்டு, ப்ரான்சில் அகதிகளாக வாழும் சில கதாபாத்திரங்கள் மூலம் இயக்குனர் இப்படத்தில் காட்டியிருக்கிறார்.  ஆனால், இது உலகம் முழுக்க வாழும் அனைத்து அகதிகளின் வாழ்விற்கும் பொதுவானது. அகதி வாழ்வின் மீதான நம் கண்ணோட்டத்தை மாற்ற கூடிய படமிது.



.

இந்திய தரிசனம் - 2016

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.

http://www.panippookkal.com/ithazh/archives/8674



நான் அமெரிக்காவில் கம்பெனி மாறியவன். பெங்களுர் ஏர்போர்டில், என்னை அமெரிக்காவிற்கு அனுப்பிய, நான் பணிபுரிந்த முந்தைய நிறுவனத்தின் வரவேற்பு விளம்பரத்தைப் பார்த்த போது, "வாடா மவனே வா" என்று எனக்காகவே வைத்ததை போல் மற்றும் வைவதை போல் இருந்தது.


பெங்களூர் ஏர்போர்ட்டில் வை-ஃபை தேவையென்றால், அதற்கு நாம் நமது மொபைல் நம்பரைக் கொடுத்து, அதில் அவர்கள் அனுப்பும் OTPயை எடுத்து எண்டர் செய்து, அதை அவர்கள் சரி பார்த்து, பிறகு இலவச வை-பை கொடுக்கிறார்கள். எந்த நாட்டு மொபைல் நம்பராக இருந்தாலும் OTP அனுப்பி வைக்கிறார்கள். ஏர்போர்ட்டில் வை-ஃபைக்கும் இவ்வளவு செக்யூரிட்டியா? என்று நினைத்துக்கொண்டேன்.


விமான பயணங்களில் பொதுவாக ஒரு பயம் வரும். அதற்கு மேலான பயம், பெங்களுர் சாலைகளில் பைக்கில் செல்லும் போது வருகிறது. நாம் தான் பைக்கில் சாலையின் ஓரமாக இடது பக்கம் செல்கிறோம் என்று நினைத்து சென்று கொண்டிருக்கும் போது, நமக்கு இடது பக்கம் சடாரென ஒரு எஸ்யூவி செல்லும்.


அமெரிக்க சாலைகளில் தட்டுப்படும் அனைத்து ப்ராண்ட் நேம்களும், பெங்களுர்  சாலைகளில் காணக் கிடைக்கின்றன. மோசமாகப் பிரதியெடுத்த அமெரிக்க நகரமாகத் தான், பெங்களூர் காட்சித் தருகிறது. பல வருடங்களாகவே, பிஸ்ஸா ஹட், டாமினோஸ், சப்வே இருக்கின்றன. ஜந்து வருடங்களுக்கு முன்பு, மெக்டொனால்ட்ஸ், கேஎப்சி, பேஸ்கின் ராபின்ஸ் போன்றவைகள் வந்தன. மூன்று வருடங்களுக்கு முன்பு, பர்கர் கிங், டேகோ பெல்ஸ், பாப்பா ஜோன்ஸ் போன்றவைகளைப் பார்த்தேன். தற்சமயம்,  ஆவ் போன் பெய்ன் (Au Bon Pain), டனான் (Danone) வகையறாக்களைக் கண்டேன். இந்த வெளிநாட்டு உணவகங்கள், இத்தாலிய , அமெரிக்க, மெக்சிகன், ப்ரென்ச் உணவுகளை விற்றாலும், அதில் இந்திய சுவையைப் புகுத்தி, லோக்கல் கஸ்டமைசேஷன் செய்து இந்தியாவில் கடை பரப்புவது கவனிக்க வேண்டியது. அமெரிக்காவில் இந்திய உணவகங்கள் இருந்தாலும், அவை எல்லாம் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களையே முக்கிய வாடிக்கையாளர்களாக கொண்டது. ஏன் இன்னமும் அமெரிக்கர்களை, மற்ற நாட்டினரை டார்க்கெட் செய்யும் இந்திய சார் சங்கிலி உணவகங்கள் வரவில்லை? என்ற கேள்விக்கான பதில், பெரும்பாலான இந்தியர்களின் குணாதிசயத்தோடு சம்மந்தப்பட்டது.


H & R Block, Kumon நிறுவன போர்டுகளையும் பார்த்தேன். முன்பு, உலகமயமாக்கலின்  பயனாக இந்தியாவுக்குள் நிதியின் வரவு தெரிந்தது. தற்சமயம், நம்மவர்களின் பாக்கெட்டில் இருந்து வெளியே செல்லும் செலவுகள் தெரிகின்றன. ஒரு கை இந்திய மார்க்கெட்டில் பணத்தைப் போட, இன்னொரு கை எடுத்துக் கொண்டு இருக்கிறது. அதே சமயம், இந்த மாதிரியான வெளிநாட்டு நிறுவனங்களின் பிஸினஸ் மாடலை நெருங்கி கவனித்து, அதனுடன் போட்டியிட்டு, நம் நாட்டு நிறுவனங்களும் வெளிநாடுகளில் வளர வாய்ப்பு பெருகியுள்ளது.


ஒரு நாள் பெங்களுர் மன்யதா டெக் பார்க் செல்ல வேண்டி இருந்தது. பத்து வருடங்களுக்கு முன்பு, அவுட்டர் ரிங் ரோடு என்பது வெறும் சாலை தான். சுற்றிலும் வெட்டவெளி. பிறகு, கடைகள், அலுவலகங்கள் பெருகின. ட்ராபிக் அதிகரிக்க, ஒவ்வொரு சிக்னலிலும் பாலங்கள், கீழ் வழி பாதைகள் உருவாக்கப்பட்டன. தற்சமயம், வெகு சொற்ப சிக்னல்களே இருந்தாலும், ட்ராபிக் ப்ளோ ஒன்றும் ஃப்ரியாக இருப்பதில்லை. வெயில் + ட்ராபிக் + பொல்யூசன் என்ற டெர்ரிஃபிக் காம்போவுக்கு பயந்து, பதினொரு மணி அப்பாயிண்ட்மெண்ட்டுக்கு, காலையில் ஏழு மணிக்கே கிளம்பி சென்றேன். அன்றைய தினம், ஒரு மணி நேரத்தில் சென்றது நன்றாகவே இருந்தது. அலுவலக ஏசி ரிசப்ஷனில் அன்றைய செய்தித்தாள்களை ஒரு மணி நேரமாக வாசித்தது, நேர விரயமாகப் படவில்லை. இன்னொரு முறையும் செல்ல வேண்டி இருந்தது. அந்த சமயம், பத்தரைக்கு தான் கிளம்பு முடிந்தது. அன்று இரண்டரை மணி நேரம் ஆனது. ஸப்பா!! ஒரு மாதம் இருந்தால், இந்த ட்ராபிக் எல்லாம் பழகி ஜென் நிலைக்கு சென்றுவிடுவோம்.


நெடுஞ்சாலைப் பயணங்களில் எளிய மனிதர்களின் சாலையோரக் கடைகள் தான், ட்ரைவ் இன். ஊரின் சிறப்பிற்கேற்றாற்படி, நொங்கு, மாம்பழம், திராட்சை, பனங்கிழங்கு, பதனி, கருப்பட்டி, நவ்வாப்பழம், கொய்யாபழம், இளநீர் என ப்ரெஷ்ஷாக கிடைக்கின்றன. என்று வளர்ச்சி என்ற பெயரில் இவர்களையும் விரட்டியடிப்பார்களோ, தெரியாது.


2016 இந்திய விலைவாசி குறிப்பு - அடையார் ஆனந்த பவனில் மினி டிபன் எண்பது ரூபாய், காப்பி இருபத்து ஐந்து ரூபாய். 3ஜி 1 ஜிபி டேட்டா தோராயமாக 150 ரூபாய். பெங்களுர் - தூத்துக்குடி தனியார் பஸ் கட்டணம், தொள்ளாயிரம் ரூபாய். பஸ்ஸில் ப்ரீ வை-பை (வித் ஃபுல் ஆப் இன்ட்ரப்சன்ஸ்). மட்டன் கிலோ ஐநூறு ரூபாய். சிக்கன் நூற்றைம்பது ரூபாய். திண்டுக்கல் தலப்பாக்கட்டியில் அரை ப்ளேட் பிரியாணி, இருநூறு ரூபாய். லெவிஸ் ஷோரூமில் ஜீன்ஸ் ஸ்டார்டிங் ப்ரைஸ் இரண்டாயிரத்து ஐநூறாம். டாலரில் கால்குலேட் செய்தால் மட்டுமே கொஞ்சம் நிம்மதி வந்தது. பல பொருட்கள் அமெரிக்காவில் வாங்கிக் கொள்ளலாம் எனத் தோன்றும் அளவுக்கு இந்திய விலைவாசி இருந்தது. வளர்ச்சி!!


எலக்ஷன் ரிசல்ட் பற்றி நண்பர்களிடம் கேட்டபோது, பெரும்பாலோர் சொன்னது. ஆண்ட கட்சிகள் ஜெயிக்கக் கூடாது. மற்றவர்கள் கவனிக்கத்தக்க இடங்களில் வெல்வார்கள் என்று எதிர்பார்த்ததாகக் கூறினார்கள். ரிசல்ட் ஆச்சரியம் அளித்ததாகக் கூறினார்கள். நான் சென்ற பல வீடுகளில் மிக்ஸி, ஃபேனில் அம்மாவின் ஸ்மைல்லிங்கைப் பார்த்த போது, வெற்றியின் ரகசியம் கொஞ்சம் புலப்பட்டது. தமிழர்கள் நன்றி மறக்கவில்லை போலும். அவ்வளவு ஏன், ஒரு பெங்களூர் சாட் கடையில் கூட, இப்புன்னகையை அங்குள்ள டிவி, ஃபேனில் கண்டேன். கர்நாடகத்திற்குள்ளும் கூடிய விரைவில் வாரோம்.


எங்கெங்கு காணிலும் சிசிடிவி கேமராக்கள் மயம். தெருமுனை இருபதுக்கு  பத்து டீக்கடையில் நான்கு சிசிடிவி. ஜெராக்ஸ் கடையில் சிசிடிவி. மொபைல் ரீசார்ஜ் கடையில் சிசிடிவி. கல்யாண மண்டப சமையல் கட்டில் சிசிடிவி. தீவிரவாத கண்காணிப்பு என ஆரம்பித்தது, பெட்டிக்கடை திருட்டை கண்காணிப்பதில் வந்து நிற்கிறது. அடுத்து, அப்பா சட்டைப்பை திருட்டைக் கண்காணிப்பிலும் முக்கிய பங்கை ஆற்றும் நாள், வெகு தொலைவில் இல்லை. பிறகு, விசாரித்ததில், காவல் துறை ரெக்யூர்மெண்ட்டாம் அது. எனக்கென்னமோ, சிசிடிவி கம்பெனிக்களின் வேலை என்று தோன்றுகிறது.


வெயில் - இதைச் சமாளிக்க, யூட்டா நேஷனல் பார்க்கில் ஒதுங்க இடம் இல்லாமல் நடந்து சென்ற அனுபவத்தை நினைவுபடுத்திக் கொண்டேன். பரவாயில்லை என இருந்தது. மினசோட்டா குளிரை நினைத்தேன். ரொம்ப பரவாயில்லை எனத் தோன்றியது. வெளியில் செல்லும் வேலைகளை, காலையில் சீக்கிரம் தொடங்குவதும் அல்லது மாலையில் முடித்துக் கொள்வதும் உதவிகரமாக இருந்தன. மே மாத இறுதியில் ஆங்காங்கே மழை பொழிந்து, வெப்பத்தைத் தணித்தது.


ஓய்வு விடுமுறையில் தூங்குவது கூட ப்ரொடக்டிவ் வேலைதான். இருந்தாலும், ரொட்டின் பழக்கத்தில் தினமும் ஆறு, ஏழு மணிக்கே விழிப்பு தட்டியது. பல ஊர்களுக்கிடையே அடிக்கடி பயணம் செய்ய வேண்டி இருந்தது. பெரும்பாலும், தனியார் ஸ்லீப்பர் பேருந்துகளில் பயணம். வழக்கம் போல், ஆறு மணிக்கோ அல்லது அதற்கு முன்போ விழிப்பு வரும். நம்மூர் அழகை அதிகாலையில் ரசிக்கும் வாய்ப்பாக அது இருக்கும். பிறகு, ஊருக்கு சென்று சேரவும், அடுத்த வேலையைப் பார்க்கவும் சரியாக இருக்கும். பயணக் களைப்பு இருக்காது. ஒரே ஒரு முறை, கர்நாடக அரசு பேருந்தில் பயணம் செய்தேன். அது ஸ்லீப்பர் பஸ். இரவு மூணு மணிக்கு எழுப்பி விட்டார்கள். ஹெட்லைட் எரியவில்லையாம். அதனால், வேறு பஸ் மாறச் சொன்னார்கள். அது செமி ஸ்லீப்பர். ஏனோ, அதற்கு பிறகு, தூக்கம் வரவில்லை. வீட்டுக்கு சென்ற பிறகு அன்று மதியம் வரை தூக்கம். சரி, ரிடர்ன் செல்லும் போது, கர்நாடக அரசு பேருந்தை விட பெட்டரான தனியார் சேவை எது என்று விசாரித்ததற்கு, அரசு பேருந்தே பெட்டர் என்றார்கள். தமிழ்நாட்டு நிலை வேறாக இருக்கும்.


நான் முன்பு பெங்களுரில் இருந்த சமயம், அச்சமயம் ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டு இருந்த பல கட்டுமான வேலைகள் முடிவுற்று, தற்சமயம் மக்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. புதிதாக பல வேலைகள் தொடங்கப்பட்டு, நடை பெற்றுக் கொண்டு இருக்கின்றன. சில பல   இடங்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போயுள்ளன. எம்.ஜி. ரோடு என்றாலே காதல் தேசம் படத்தில் காட்டப்படும் இளமையான சாலை தான், என் மனப்பதிவில் இருந்தது. இப்போது மெட்ரோ பில்லர்கள் சேர்ந்து உருமாறி போய், திருமணம் ஆகி இரு குழந்தை பெற்று விட்ட பெண்ணிடம், பழைய காதலியைத் தேடும் நிலைக்கு உள்ளாகிறது நமது கண்கள்.


உபெரும், ஓலாவும் இந்திய வாடகை சவாரி போக்குவரத்தை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டாலும், ஆட்டோக்களுக்கான இடம் அதற்குரிய எக்ஸ்க்ளுசிவ் தேவைக்காக, இன்னமும் இருப்பதாக தெரிகிறது. மற்ற வகை டாக்ஸிக்களுக்கு தான் பாதிப்பு இருப்பதாக தெரிகிறது. பொபைல் ஆப் டாக்ஸி சேவை இல்லாத இடங்களில், இது போன்ற சிறு உள்ளூர் சேவைகள் உள்ளன. ஆனால், பெரும்பாலும் தெரிந்த ட்ரைவர்களுக்கு போன் செய்து, அழைத்து செல்கிறார்கள். ஏர்போர்டில், இவ்வகையான ஆப் சார்ந்த சேவை வாகனங்களுக்கு தனி இடம் ஒதுக்கி உள்ளார்கள். சாலையில் செல்லும் பெரும்பாலான வாகனங்களுக்கு உள்ளே உற்று நோக்கினால், டாஷ்போர்டில் ஸ்மார்ட் போன் மாட்டப்பட்டு மேப் ஆப் செயல்பட்டுக் கொண்டு இருக்கும்.  கண்டிப்பாக, சார்ஜ் இல்லாமல் சார்ஜ் ஏற்றப்பட்டுக் கொண்டே இருக்கும். ஸ்மார்ட்போனும், மொபைல் மேப்ஸ் ஆப்களும் சேர்ந்து, இந்தியாவில் ஜிபிஎஸ் நேவிகேஷன் சிஸ்டத்திற்கான மார்க்கெட்டைப் பிடித்து வைத்திருக்கின்றன. முகவரியை இணைக்கும் சிக்கலை, கோ-ஆர்டினேட்ஸ் கொண்டு சமாளிக்கிறார்கள். இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், வண்டியை நிறுத்தி, ரோட்டில் செல்லும் யாரை வேண்டுமானாலும் வழி மறித்து, வழி கேட்டுச் செல்லும் வசதியை, எந்த ஜிபிஎஸ் சிஸ்டமும் கொண்டு வர முடியாது!!


மொபைல் போன் வளர்ச்சியால், எங்கும் எஸ்டிடி பூத்தே கண்ணில் படவில்லை. கூடிய விரைவில், ஸ்மார்ட்போன் புண்ணியத்தில் ப்ரவுசிங் செண்டர்களும் மூடப்படும். ப்ரிண்டிங், போட்டோ காப்பி தயவு தேவையிருக்கும். தெருவெங்கும் மொபைல் போன் சர்வீஸ் ரீசார்ஜ் கடைகள் என்றால், டூரிஸ்ட் தலங்களில் டிவைஸுக்கும் ரீசார்ஜ் கடைகள்.


முன்பு கையால் முற்றம் தெளித்த அம்மா, தற்சமயம் ஹோஸ் பைப்பில் தண்ணீர் அடிக்கிறார். போட்ட ரோடு மேலேயே ரோடு போட , சாலை உயர்ந்து கொண்டே போகிறது. சாலையில் இருந்து வீட்டின் உயரம், வீட்டின் வயதைக் காட்டும் அறிகுறியாகி விட்டது. வீட்டை இடிக்காமல் உயர்த்திக் கட்டும் டெக்னாலஜிக்கள் வந்துவிட்டதால், அடுத்து அதுதான் டிரெண்டாக இருக்கும். முன்பு, முன்பக்கம் இடம் விட்டு வீடு கட்டினார்கள். இப்ப, விட்ட இடங்களிலும் கான்கிரீட் கூரைகள்.


ஆடு, மாடு, கோழி, நாய், பூனை, பெருச்சாளி, யானை, பாம்பு, மயில் ஆகியவற்றை Zooக்கு செல்லாமல் சாலைகளிலோ அல்லது வீட்டிலேயே காண முடிந்தது. ஐம்பது ரூபாய்க்கு யானை சவாரி, வீட்டு படிக்கட்டில் கிடைக்கிறது. பெங்களூர் புறநகர் பகுதிகளில், பாம்புகள் சட்டையைக் கழற்றிப் போட்டு விட்டு, ஹாயாகச் சுற்றுகிறனவாம். பின்ன, அவுங்க ஏரியாவுல நாம வீடு கட்டுனா, என்ன செய்யும்? என்று கேட்டு விட்டு, கழற்றிப்போடப்பட்ட சட்டைகளை ஒதுக்கிவிட்டு செல்கிறார்கள் புறநகர்வாசிகள்.


ஊரில் யாரைப் பார்த்தாலும், சுகர், பிபி என்று மாத்திரையும், கையுமாக தான் சுற்றுகிறார்கள். அது எந்த லெவலில் இருந்தாலும், மாத்திரை போட்டுக்கொள்ளலாம் என்று இன்னொரு பக்கம் சுவையாகச் சாப்பிட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள். நம்மூர் உணவு ரசனையைப் பற்றி சொல்லவா வேண்டும்? பதனியில் நொங்கைப் பிச்சுப் போடுவது, மாம்பழத்தை வெட்டி போடுவது, பரோட்டாவை சால்னாவில் ஊறவிடுவது, தோசைக்குள் கறியை ஒளித்து வைப்பது என அபாரமான சமையல் ரசனைவாதிகள்.


சனிக்கிழமை மதியம் ஆன்லைனில் ஒரு மொபைல் வாங்கினால், ஞாயிற்றுக்கிழமை காலை வந்து டெலிவரி செய்துவிட்டு போகிறார்கள். எதிர்பார்ப்புகளைச் சமயங்களில் எகிறியடித்து செல்கிறார்கள். எனக்கு நேர்ந்தது, விதிவிலக்குகளாக கூட இருக்கலாம். நல்ல விதிவிலக்குகளில் நாம் இருப்பது நமது அதிர்ஷ்டம் என்று நினைத்துக்கொள்ள வேண்டியது தான். இந்த டெலிவரி மக்கள், ஒரு குட்டி வேனில் எடுத்து செல்லக்கூடிய அளவுக்கு பொருட்களை முதுகில் சுமந்து செல்லும் வகையில் அமைந்த விநோத பைகளைத் தோளில் மாட்டிக்கொண்டு, டெலிவரி கங்காருங்களாக பைக்கில் சல்லென வந்து செல்கிறார்கள்.


எங்கும் இருப்பது போல், மக்கள் கால் வைக்கா இடங்களில் உச்சக்கட்ட அழகு மிச்சம் இருக்கிறது. அப்படி அழகான இடங்களில், ஆக்கிரமிக்க நினைக்கும் மனிதன் நுழைந்தவுடன் ஒரு சிலையை வைத்து விடுகிறான். இடங்கள் பிரபலமடைகின்றன. மனிதர்கள் படையெடுக்கிறார்கள். கடவுளுடன் சேர்ந்து, இயற்கையையும் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. பிறகு, அந்த இயற்கை அழகை சீரழிக்க தொடங்குவது தான் துரதிஷ்ட நிகழ்வாகி போகிறது. இருந்தாலும், அந்த மிச்ச சொச்ச அழகே கண்களுக்கு பெருவிருந்தாகி போகிறது.


அவ்வப்போது, வழமையான அலுவல்களில் இருந்து விடுபட்டு, புது இடங்களுக்கு சென்று வருகிற பயணங்கள், சலிப்புற்ற வாழ்வில் புத்துணர்ச்சியைக் கொடுக்கவல்லது. அதேப்போல், வெளியூர்களில் இருந்து, வெளிநாடுகளில் இருந்து, இந்தியாவுக்கு, சொந்த ஊருக்கு சென்று வருகிற அனுபவம், நமது மறந்த நினைவை மீட்டுவதாகவும், மறந்துக்கொண்டு இருக்கும் குறிகோள்களை நினைவுப்படுத்துவதாகவும் அமைகின்றன. பல ஆண்டுகளுக்கு கழித்து செல்பவர்களுக்கு, சொந்த ஊர் பயணம், அவர்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய திருப்புமுனைப் பயணமாகக் கூட அமையக்கூடும். நாம் தான் தினமும் கஷ்டப்பட்டு வாழ்கிறோம் அல்லது நாம் சுகவாசியாக வாழ்கிறோம் என்ற இருவேறு எண்ணங்களையுமே மறுபரிசீலனைக்கு உட்படும் தருணங்களை, இந்திய பயணங்கள் ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

.

கபாலி ஃபீவர்

பனிப்பூக்களுக்காக எழுதிய கட்டுரை.

http://www.panippookkal.com/ithazh/archives/8801



ரஜினி - ரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் என்று ஒரு புதிய கூட்டணி உருவான போது ரசிகர்களுக்கு எழும்பிய காய்ச்சல் இது. படத்தைப் பற்றிய செய்திகளும், புகைப்படங்களும் வெளியாகும் போதெல்லாம், இன்னும் பலருக்கு பரவத் தொங்கியது. முதல் டீசர் வெளியான நேரத்தில் 'நெருப்புடா' என்று கொதித்தது, தற்போது பாடல்கள் வெளியாகிய நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமாக கொளுந்து விட்டு எரிந்துக் கொண்டிருக்கிறது.

லிங்கா சர்ச்சைகளுக்கு பிறகு, ரஜினி தாணுவின் தயாரிப்பில் நடிக்க முடிவெடுத்து, இயக்குனராக ரஞ்சித்தைத் தேர்வு செய்தார். இயக்குனர் ரஞ்சித் முன்னதாக எடுத்திருந்த 'மெட்ராஸ்' அனைத்து தரப்பிலும் நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தது. எப்பொழுதும் பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர் என்றே சென்றுக் கொண்டிருந்த ரஜினியின் இயக்குனர் தேர்வு, இந்த நூற்றாண்டில் முதன்முறையாக ஒரு புதிய அலை இயக்குனரை நோக்கிச் சென்றதே, பலருக்கு ஆச்சரியம் அளிப்பதாகவும், மகிழ்ச்சியளிப்பதாகவும் இருந்தது.

அதனாலேயே, இதற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட ஷங்கரின் பிரம்மாண்ட 'எந்திரன் 2.0' படத்தை விட, இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகியது.

படத்தின் படப்பிடிப்பு சென்னையிலும், பெருமளவு மலேசியாவிலும் நடைபெற்றது. அதிலும், மலேசியாவில் வெளியிடங்களில் நடைபெற்ற படப்பிடிப்புகளின் போது, ரசிகர்களின் தொடர் பின்தொடர்வு நிகழ்வுகளால், தமிழகத்தில் இருந்து கிளம்பிய புயல், அச்சமயம் மலேசியாவில் மையம் கொண்டது.

படத்தில் ரஜினி வயதான கெட்டப்பில் நடிக்கிறார் என்பது தெரிந்ததும், சீரியஸ் விமர்சகர்கள் தங்களின் நெடுநாளைய ஆசை நிறைவேற்றப்பட்ட சந்தோஷத்தில், அவர்களும் நேர்மறை எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்த துவங்கினர். ரஜினி படத்தில் வரும் செண்டிமெண்டல் ரெகுலர் நடிகர்கள் இல்லாமல், ரஞ்சித்தின் ஆஸ்தான நடிகர்கள் இதில் பல கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மொத்தத்தில், இது ரஞ்சித் படமாக உருவாவதில், ரஜினி ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி தான்.

விறுவிறுவென படப்பிடிப்பு நடைப்பெற்று முடிய, படத்தின் எடிட்டிங், டப்பிங் என படத்தின் உருவாக்கம் வேகம் பிடித்தது. ரஜினியும் உடனே அடுத்ததாக, எந்திரன் இரண்டாம் பாகமான 2.0வில் நடிக்க சென்றுவிட்டார். புதிய இளம் கூட்டணி மீதான ஆர்வம்,  ரஞ்சித்தின் இயக்கம் மீதான எதிர்பார்ப்பு என்று பாசிட்டிவாக இருந்தாலும், ரஜினி என்ற பளீர் ஸ்டைல் மன்னனை, மண் குடிசையில் குடியிருக்க வைத்து விடுவாரோ என்ற சந்தேகமும் லைட்டாக ரசிகர்களிடம் இருக்கத்தான் செய்தது.

அதனாலேயே தயாரிப்பாளர் தாணு, ஏப்ரல் 30 ஆம் தேதி டீசர் வெளியிட போவதாக அறிவித்தவுடன், ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது, அனைத்து திரைப்பட ரசிகர்களும், யூ-ட்யூப்பை ஓபன் செய்து உட்கார்ந்துவிட்டனர். 'நெருப்புடா' என்று வெளிவந்த அந்த டீசரின் பார்வைக்கணக்கு பற்றிக்கொண்டு எரிய துவங்க, அதுவரை தமிழ் ரசிகர்கள் மட்டும் கவனித்துக்கொண்டிருந்த கபாலியை, இந்திய, உலக திரைப்பட ஆர்வலர்கள் பலரும் கவனிக்க துவங்கினர். படத்திற்கு கபாலி என்று பெயர் வைத்தவுடன், பலருக்கும் எழும்பிய கேள்விக்கு பதில் சொல்வது போல், ரஜினி டீசரில் தனக்கே உரிய பிரத்யேக உடல்மொழியில் பேசிய 'கபாலிடா' வசனம், அனைவரையும் கவர்ந்து இளம் பட்டாளங்களின் மீம் உலகில் முக்கிய வசனமாகியது.

ரசிகர்களிடம் இருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகத்தையும் போக்கிய அந்த டீசர், அனைவரையும் 'நெருப்புடா', 'மகிழ்ச்சி' என ஸ்டேடஸும், ட்வீட்டும் போட வைத்தது. அதுவரை வயசான கெட்டப்பில் ரஜினியை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, டீசரின் முடிவில் ஒரு ஆனந்த அதிர்ச்சியை வைத்திருந்தார் இயக்குனர் ரஞ்சித். அது இளம் தோற்றத்தில், தனது வழக்கமான ஸ்டைல் நடையில், பந்தாவாக தலைமுடியைக் கோதியவாறு ரஜினி நடந்து செல்லும் காட்சி. ரஜினியை மட்டுமல்லாமல், ரசிகர்களையும் அந்த சில நொடிகளில், 80களுக்கு கொண்டு சென்று விட்டார். இன்னொரு பெரும் மகிழ்ச்சியை அளித்தவர், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். அவரும் அவர் பங்குக்கு படு மாஸான இசையை டீசரில் அளித்திருந்தார்.

டீசரின் வெற்றியை, யூ-ட்யூபின் ஹிட் கவுண்ட் என்றென்றும் சொல்லும். ஒரு மணி நேரத்தில் ஒரு மில்லியன் என்று தொடங்கிய ஹிட் கணக்கு, 22 மணி நேரத்தில் 5 மில்லியனைத் தொட்டது. அதிகம் பார்க்கப்பட்ட இந்திய திரைப்பட டீசர் என்ற சாதனையையும் தொட்டது. அடுத்தது, ட்ரெய்லர், பாடல்களுக்கான எதிர்பார்ப்பு தொடங்கிவிட்டது.

படத்தின் பாடல்கள் எளிமையான நிகழ்வுடன் ஜூன் பனிரெண்டாம் தேதியன்று வெளியிடப்பட்டது. கடந்த இருபத்து ஐந்து வருடங்களாக, ரஜினியின் பெரும்பாலான படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைத்து வருகிறார். முத்து படத்தில் தொடங்கிய பயணம், கடைசியாக வந்த லிங்கா வரை தொடர்ந்து வந்திருக்கிறது. அடுத்து வெளிவரும் 2.0லும் ரஹ்மானே. நடு நடுவே, வித்யாசாகரும், ஜி.வி. பிரகாஷும் இசையமைத்திருக்கிறார்கள். இப்போது, ரஞ்சித்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ், ரஜினி படத்திற்கு முதன்முதலாக இசையமைத்திருக்கிறார். இது ஒரு புதுவித எதிர்பார்ப்பைத் தோற்றுவித்திருந்தது.

தொடர்ந்து, இளையராஜா, பிறகு தேவா என்று வந்த ரஜினி படங்களின் இசை, முத்துவில் ரஹ்மானின் இசையில் வேறுவிதமாக வெளிவந்தபோது, ரசிகர்களால் முதலில் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிறகு, ஒருவழியாக அவை உள்வாங்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டு, ரசிக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில், ரஜினிக்கு ரஹ்மான் பின்னணி பாடி, அதுவும் ஹிட்டானது.

கிட்டத்தட்ட, அது போன்ற நிலையே தற்போதும். சந்தோஷ் நாராயணனின் பாடல்கள், ஒருவித தனித்துவம் கொண்டது. அதிக ஆர்பாட்டம் இல்லாதது. பெரிய ஏற்ற இறக்கங்கள் இல்லாதது. வித்தியாசமான புது குரல்கள் கொண்டது. மெலிதான இசையில், மனதைக் கொள்ளை கொள்ள கூடிய பாடல்களை, பின்னணி இசையை பிட்ஸா, அட்டக்கத்தி, மெட்ராஸ், ஜிகர்தண்டா, பதினாறு வயதினிலே, இறுதிச்சுற்று போன்ற படங்களில் வழங்கியிருந்தார். அவர் ரஜினியின் படத்திற்கு எப்படி இசையமைப்பார் என்ற எதிர்பார்ப்பு, இசை ரசிகர்களிடம் ஏற்பட்டிருந்தது.

ஆனால், அவர் தனது பாணியிலேயே இசையமைத்திருந்தார். ரஜினி படங்களில் முதல் பாடலைப் பாடும் எஸ்.பி.பி. இல்லை. ரஜினி படங்களில் பலப் பாடல்களை எழுதும் வைரமுத்து இல்லை. வழக்கமான புகழ் மொழியில் எழுதப்பட்டப் பாடல்கள் இல்லை. செண்டிமெண்ட்டைப் பொருட்படுத்தாமல், படத்திற்கேற்ற பாடல்களுடன் கபாலி ஆல்பம் வெளியாகியது. இரண்டு விதமான விமர்சனங்களையும் பெற்றது.

சந்தோஷ் நாராயணன் பாணி புரிந்து ரசிப்பவர்களுக்கு, பாடல்கள் பிடித்தது. வழக்கமான ரஜினி படப்பாடல்களை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனால், அனைத்துத் தரப்பினரையும், 'நெருப்புடா' பாடல் கவர்ந்துவிட்டது. தளபதி படத்தில் போலீஸ் ஸ்டேசனில் ரஜினி கூறும் 'இது சூர்யா சார், உரசாதீங்க.. தொட்றா பாக்கலாம், தொட்றா' என்ற பட்டையைக் கிளப்பிய வசனத்தில் இருந்து பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் அவர்கள் இப்பாடலை உருவாக்கி, வெறியூட்டும் விதத்தில் பாடியும் இருந்தார். கிட்டார் இசை, பாடலில் முக்கியத்துவம் பெற்று, மாஸைக் கூட்டியது.

"வீர துறந்தரா" பாடலை, சந்தோஷ் நாராயணின் ஆஸ்தான பாடகரான, கானா பாலாவுடன் லாரன்ஸ், பிரதீப், ரோஷன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். வழக்கமாக கானா பாடல்களைப் பாடும் கானா பாலா, இதில் ஸ்டைலிஷான இந்த பாடலைப் பாடியுள்ளார். 80களின் கேங்க்ஸ்டர் பின்னணியைக் கூறும் பாடல். கானா பாலாவின் வித்தியாச குரலும், ராப் இசையும் இந்த பாடலைக் கவர செய்தது. இப்பாடலையும், "மாய நதி" பாடலையும் உமா தேவி அவர்கள் எழுதியுள்ளார். "மாய நதி" மெலோடி ரசிகர்களை முதலில் கவரும் பாடல். மெல்லிய இசையில் மனதைத் வருடும் பாடல். நீண்ட நாட்களுக்கு, ரசிகர்களின் மனதை விட்டு நீங்காதப் பாடலாக இது இருக்கும். அனந்து, பிரதீப், ஸ்வேதா மோகன் ஆகியோர் இப்பாடலைப் பாடியுள்ளனர்.

இன்னொரு மெலோடி - "வானம் பார்த்தேன்" என்ற பாடல். மிகவும் மெல்ல செல்லும் பாடல். சந்தோஷ் நாராயணனின் வழக்கமான வரிகளை வாசிக்கும் பாணி பாடல். இணையை இழந்த சோகப்பாடலாகத் தெரிகிறது. படத்துடன் பார்க்கும் போது, என்ன விதமான உணர்வைக் கொடுக்கிறதோ, பார்க்கலாம். இப்பாடலையும் பிரதீப் அவர்களே பாடியுள்ளார். பிரதீப், சந்தோஷ் நாராயணனின் இசைக்குழுவைச் சேர்ந்தவர்.

"உலகம் ஒருவனுக்கா" பாடல், கபாலியின் புரட்சிப்பாடல். இப்பாடலின் சில வரிகள் ஆங்காங்கே சர்ச்சையும் கிளப்பியது. "நாங்க எங்க பொறந்த உனக்கென்ன போயா... தமிழனுக்காக வந்து நின்னவன் தமிழண்டா..." போன்ற ரஜினிக்கான டிபிக்கல் வரிகள் இப்பாடலில் உண்டு. "மேட்டுக்குடியின் கூப்பாடு, இனி நாட்டுக்குள்ளே கேட்காது" போன்ற ரஞ்சித்தின் டிபிக்கல் வரிகளும் இப்பாடலில் உண்டு.

டீசரிலும், பாடல்களிலும் ரஞ்சித் படங்கள் பேசும் சமூக அரசியலை வம்படியாகக் கண்டவர்கள், ஏற்கனவே சில விவாதங்களைக் கிளப்பியுள்ளனர். படம் வெளியானப் பிறகு, மேலும் பல விவாதங்களை கபாலி கிளப்புவான் என நம்பலாம். 80களில் ஒரு பிரச்சினைக்காக சிறைக்கு சென்று திரும்பிய ஒரு டானின் கதை என்பது தெரிந்தாலும், அதில் ரஞ்சித் சேர்த்திருக்கும் மசாலாவுக்காக ரசிகன் பசியுடன் காத்திருக்கிறான்.

அடுத்ததாக, ஒரு முழு நீள ட்ரெய்லர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் ஆரம்பித்ததில் இருந்தே, பல ட்ரெய்லர்கள் ரசிகர்களின் கைவண்ணத்தில் உருவாகி வெளிவந்துக்கொண்டே இருக்கின்றன. அதில் சில குறிப்பிட்டு சொல்லும் வகையில், உயர் தரத்தில் உருவாக்கப்பட்டிருந்தன. கபாலி குழுவின் சவால் இது தான். பல விதத்திலும் வைக்கப்படும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். கபாலி நிறைவேற்றுவானா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

தற்சமயம், படம் ஜூலை இருபத்தி இரண்டாம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, ஹிந்தி, மலாய் ஆகிய மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்படுகிறது. படம் வெளியாகும் அன்று, ஒரு தனியார் விமான சேவை நிறுவனம், கபாலிக்காக ஸ்பெஷல் விமானச் சேவை அளிக்கிறார்களாம். இது எங்கும் இல்லாத சினிமா மார்க்கெட்டிங். ஐரோப்பாவின் பெரிய திரையரங்கமான பாரீஸ் ரெக்ஸ் திரையரங்கில் கபாலியின் ப்ரிமியர் ஷோவுக்கு முன்பதிவு தொடங்கிவிட்டது. தந்தி ஸ்டுடியோவுக்கு வரும் அரசியல்வாதிகளை வாரு வாரு என வாரும் ரங்கராஜ் பாண்டேவே, ரஜினி ரசிகர் போல் பவ்யமாக தாணுவுடன் படத்தைப் பற்றிய செய்திகளைக் கெஞ்சலாகக் கேட்கிறார். இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ!! அந்த கபாலிக்கே வெளிச்சம்.

.