Sunday, June 19, 2016

உள்ளூரில் ஒரு உலகச் சுற்றுப்பயணம்

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.

http://www.panippookkal.com/ithazh/archives/8391

மினசோட்டாவின் செயிண்ட் பால் ரிவர்செண்டரில் வருடாவருடம் நடைபெறும் 'பெஸ்டிவல் ஆப் நேஷன்ஸ்' (Festival of Nations) திருவிழா, இவ்வருடம் மே மாதத்தின் 5, 6, 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் சிறப்பாக நடைப்பெற்று முடிந்தது.



சென்ற வருட விழாவைப் பற்றிய நமது கட்டுரையில், இந்த நிகழ்வு பற்றிய பல தகவல்களைக் குறிப்பிட்டிருந்தோம். அதை இந்த இணைப்பில் காணலாம்.


இந்த வருட விழாவின் சிறப்பம்சமாக, நம் தமிழர் (கவனிக்க, நாம் தமிழர் அல்ல!!) குழுவின் பங்களிப்பை, முக்கிய நிகழ்வாக தமிழர்கள் நாம் எடுத்துக்கொள்ளலாம். தமிழர்களின் பங்களிப்பை, அங்கிருந்த மற்ற சங்கதிகளுடன் சேர்த்து ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.



நுழைவுச்சீட்டு வாங்கிக்கொண்டு, ரிவர்செண்டர் அரங்கிற்குள் நுழையும் பொழுது, முதலில் வரவேற்பு தளத்திலேயே ஏதேனும் நாட்டின் நடனம் நடைபெற்றுக்கொண்டிருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி. உங்களை வரவேற்கவே அந்த நடனம் என்று எண்ணிக்கொள்ளலாம்.

பக்கத்திலேயே தகவல் மையம். எங்கே, என்ன, ஏது நடக்கிறது என்று கேட்டுத் தெரிந்துக்கொண்டு நடக்க தொடங்கலாம். நமது வசதிக்காகவே, ஆளுக்கொரு தகவல் கையேடு, கையோடு கொடுக்கிறார்கள். ரிவர்செண்டர் அரங்கில், இத்திருவிழாவை ஐந்து தளங்களாகப் பிரித்து, ஒவ்வொரு கலாச்சார அடுக்கையும், ஒவ்வொரு தளத்தில் பார்வையிட்டு, அறிந்துக்கொண்டு, அனுபவம் கொண்டு, உணரச்செய்து செல்லும் வகையில் அமைத்திருக்கிறார்கள்.

முகப்பு வாயிலில் இசை நிகழ்ச்சிகளும், நடன நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடந்தவாறு இருந்தன. ஒவ்வொரு மணி நேரமும், ஒரு நாட்டின் கலாச்சார நடனம் அல்லது பாரம்பரிய இசை. உங்களை உலக கலாச்சாரத்தினுள் மூழ்கடிக்க, வேறென்ன வேண்டும்?

அடுத்தது, பெரும்பாலான மக்களின் ஆர்வமான, உலக உணவு உற்சவம். உற்சாகத்திற்கு குறைவிருக்குமா என்ன? முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் உணவு வகைகள் வரிசை கட்டி அமைந்திருந்தன. இந்தியா, பாகிஸ்தான், கம்போடியா, சீனா, துருக்கி, இத்தாலி, மெக்சிகன் என உலக நாடுகளின் சமையற்கட்டுகள் அனைத்தும் அக்கம்பக்கத்தில் அமைந்திருந்தன. நகர, நகர ஒவ்வொரு நாட்டின் உணவு மணமும், சுவையும், பார்வையாளர்களைத் திக்குமுக்காடச் செய்திருக்கும்.  ஒரு வாய் திபேத் மொமொ, ஒரு கடி ஹங்கேரியன் டம்ப்ளிங், ஒரு மடக்கு பிலிப்பினோ பப்புள் டீ என்று திவ்வியமாக உலக உணவுகளை ரவுண்டு கட்ட ஏற்ற இடம். இந்திய கடையில் சமோசாவும், தந்தூரி சிக்கனும் விற்றுக்கொண்டிருந்தார்கள். அடுத்த முறை, ஒரு தமிழ் கடையைத் திறந்து இட்லியும், பொங்கலும் விற்றால், யாம் பெற்ற இன்பத்தை, உலக மக்களுக்கும் அறிமுகப்படுத்தியதாக இருக்கும்.



உணவு அரங்கிலும், கலை நிகழ்ச்சிகளுக்கென்று ஒரு மேடை அமைத்திருந்தனர். நிகழ்ச்சி இடைவேளையில் உண்ணவும், உணவு இடைவேளையில் நிகழ்ச்சியைப் பார்க்கவும் தோதாக. ஆங்காங்கே, இள வயதினோர் ஆர்வத்துடன் விளையாட ஒரு 'மெகா' செஸ் போர்டும், ஒரு 'மினி' கோல்ப் க்ரவுண்டும் அமைத்திருந்தனர்.

இங்கிருந்த கடை ஒன்றில், பச்சை திரை (Green Mat) மூலம் கிராபிக்ஸில் நமது படத்தை, உலக புகழ்பெற்ற இடங்களின் முன் இணைத்து விற்றுக்கொண்டிருந்தனர். எங்கூரில் உள்ள போட்டோ ஸ்டுடியோவில், இந்த மாதிரி படமெடுக்கும் வசதி இருந்ததை, சிறு வயதில் பார்த்தது நினைவுக்கு வந்தது. என்ன, அது பெயிண்டில் வரையப்பட்ட திரை, இது டிஜிட்டல் க்ரின் மேட் டெக்னாலஜி. அவ்ளோ தான்!!



உணவு அரங்கிற்கு அடுத்தது, உலகக் கடைவீதி. ஒவ்வொரு நாட்டின் கைவினை பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. பொதுவாக, நாம் ஒரு ஊருக்கு பயணப்பட்டால், அந்த ஊர் ஞாபகார்த்தமாக ஏதேனும் வாங்கி வருவோம். இங்கு எதை வாங்க, எதை விட என்று குழப்பம் தான் வரும். அவ்வளவு கண்ணை கவரும் பொருட்கள். குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் பக்கம் ஓட, பெண்கள் அலங்கார, உடை பகுதிகளுக்கு செல்ல, ஆண்கள் பாடுதான் கொஞ்சம் திண்டாட்டமாக இருந்தது. இங்கிருந்த இந்தியக்கடையில் பட்டம் விற்றுக்கொண்டிருந்தார்கள். கவனிக்க, வானில் பறக்க விடும் பட்டம் தான்!!

இத்தளத்திற்கு மேல், 'வேர்ல்ட் ஸ்டேஜ்' என்றழைக்கப்படும் பெரிய ஆடிட்டோரியம் உள்ளது. மற்ற அரங்கில், சிறு சிறு குழுக்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் என்றால், இங்கு பெரிய குழுக்களின் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாம் சென்றிருந்த சமயம், தமிழ் குழுவின் நிகழ்ச்சியும் நடைபெற இருந்தது. அரங்கில் அமைக்கப்பெற்றிருந்த அகண்ட திரையில், எகிப்து, துருக்கி, செக் ஆகிய நாட்டின் பெயர்களுடன் தமிழ் என்ற எழுத்துகள் ஒளிர்ந்தபோது, அதை காணவே ஜிவ்வென்றிருந்தது.


ஒவ்வொரு குழு வரும்பொழுதும், அந்த இனத்தைப் பற்றிய அறிமுகமும், அவற்றின் பண்பாடு குறித்த தகவல்களும் சொல்லப்பட்டது. தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய பல பகுதிகளில் பேசப்படும் மொழியாக தமிழ் அறிமுகப்படுத்தப்பட்டது.

சென்றமுறை, நாம் இங்கு பார்த்த அனுபவத்தை எழுதியிருந்தபோது, யுவன் சங்கர் ராஜா, அனிருத் ஆகியோரின் 'உலக இசை'க்கு நம்மவர்கள் ஆடியதை சிறு வருத்தத்துடன் குறிப்பிட்டு இருந்தோம். இம்முறை அந்த வருத்தம் சுத்தமாக போக்கப்பட்டிருந்தது. கரகாட்டம், சிலம்பாட்டம், பறை, பொய்கால் குதிரை ஆட்டம் என நம்மூர் கலைகள் முதன் முறையாக, பெஸ்டிவல் ஆப் நேஷன்ஸ் திருவிழாவில் அரங்கேற்றம் செய்யப்பட்டன. இவற்றுக்கு பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. இன்னும் பல கலைஞர்கள் ஒன்று சேர ஒருங்கிணைந்து பங்குபெற்று இருந்தால், மேலும் சிறப்பாக இருந்திருக்கும். வரும் காலத்தில் இது போல் கண்டிப்பாக நடைபெற்று, நமது கலைகள் இங்கு உலக புகழ் பெறும் என்று நிச்சயம் நம்பலாம்.


இதற்கு பக்கத்தில் இருந்த அடுத்த அரங்கில் பண்பாட்டு கண்காட்சி நடைபெற்றது. ஒவ்வொரு நாட்டிற்கும், இனத்திற்கும் ஒரு தகவல் மையம் அமைத்து, அந்நாட்டின் சிறப்பைப் பற்றி பகிர்ந்துக்கொண்டிருந்தனர். இங்கும் ஒரு சிறு மேடை அமைக்கப்பட்டு, இசை கச்சேரி நடைபெற்று வந்தது. நாம் சென்ற சமயம், ஒரு துருக்கிய குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. அங்கு அமர்ந்து அதைக் கேட்டபோது, அதனுள் நம்மால் சுலபமாக ஒன்றி ரசிக்க முடிந்தது. அதற்கு இசை - ஒரு உலக பொது மொழி என்பது ஒரு காரணமென்றால், நம்மூர் திரையிசை பாடல்களிலேயே, தற்சமயம் பல்வேறு நாடுகளின் இசை கருவி பங்களிப்பையும், இசை வடிவத்தையும் கேட்க முடிவது, இன்னொரு காரணமாக இருக்கக்கூடும்.

இங்கிருந்த தமிழ் அரங்கில் சிலப்பதிகாரம் குறித்த ஓவியங்களும், தமிழ் கலைஞர்களின் அலங்கரித்த புகைப்படங்களும் வைக்கப்பட்டிருந்தன. கரகம், பறை, சலங்கை, நாட்டுபுற கலைஞர்களின் ஆடைகளும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அரங்கில் இருந்த அன்பர், திரு. சச்சிதானந்தம் அவர்கள் அங்கு வருகை தந்த அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் சோர்வில்லாமல் தமிழ் பற்றியும், தமிழ் பண்பாட்டு கலைகள் பற்றியும் கூறி வந்தார். குழந்தைகளுக்கு அவர்களது பெயர்களைத் தமிழில் எழுதியும்,  'வணக்கம்', 'நன்றி' போன்ற தமிழ் வார்த்தைகளை அறிமுகம் செய்தும் சலிப்பில்லாமல், தமிழ் சேவையாற்றிக் கொண்டிருந்தார். இதுபோல், பல்வேறு நாடுகளின் சிறப்பம்சங்களை, இங்கிருந்த அரங்குகளில் சென்று அறிந்துக்கொள்ள வசதி செய்யப்பட்டிருந்தது. இந்திய மருதாணிக்கடையிலும் வழக்கம் போல் இங்குள்ளவர்கள் ஆர்வத்துடன் 'தற்காலிக பச்சை' குத்திக்கொண்டிருந்தனர்.

எண்பது வருடங்களுக்கு முன்பு, முதன் முதலில் இந்த விழா ஆரம்பிக்கப்பட்டபோது, பத்திற்கும் குறைவான இனக்குழுக்களின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது, எண்பதுக்கும் மேற்பட்ட குழுக்கள் கலந்துகொள்கிறார்கள். வருங்காலங்களில் இந்த எண்ணிக்கை இன்னமும் கூடும். பலன் - மினசோட்டா மக்கள், விசா இல்லாமல் உள்ளூர் ரிவர்செண்டரிலேயே உலகைச் சுற்றிப்பார்க்கலாம். இது மினசோட்டாவாசிகள் மிஸ் பண்ணக்கூடாத நிகழ்வு.

.

நீங்களும் பிஎம்பி (PMP) ஆகலாம்!!

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.

http://www.panippookkal.com/ithazh/archives/8194

முதலில், தலைப்பின் நடு வார்த்தையை விவரித்து விடலாம். பிஎம்பி (PMP) என்றால் ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் ப்ரொபஷனல் (Project Management Professional). எந்த துறையிலும் ப்ராஜக்ட் மேனேஜராக இருப்பவர்கள், தங்கள் தகுதியை நிரூபித்துக் கொள்வதற்கான தேர்வைப் பற்றிய கட்டுரை இது. ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் இன்ஸ்ட்டிட்யுட் - பிஎம்ஐ (PMI), இதை நிர்வகிக்கிறது. மேனேஜராக வேலைப் பார்க்க ஏதாவது கத்துக்க வேணுமா? என்று நக்கல் அடிப்பவரா? நீங்களும் இதை வாசிக்கலாம்.

சரி, நிரூபிப்பது இருக்கட்டும். ப்ராஜக்ட் மேனேஜராக இருப்பதற்கான தகுதி என்னவென்று தெரிந்துக் கொள்ள வேணும், பிஎம்பி சர்டிபிகேஷனுக்கான சிலபஸைப் பார்ப்பது அவசியமாகிறது.

சரி, ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் என்றால் என்ன? தமிழில், திட்டப்பணி மேலாண்மை எனலாம். (என்னது, திட்டற பணியா? அதல்ல!!) அதாவது, திட்டம் போட்டு செய்யும் பணியை மேலாண்மை செய்வது. 'எதையும் ப்ளான் பண்ணி செய்யணும்'ங்கறாங்கல. அதான்.

மேலாளர்கள், இரு வழிகளில் உருவாகிறார்கள். ஒன்று, எம்பிஏ போன்ற மேலாண்மை சம்பந்தமான படிப்பைப் படித்து, நேரடியாக மேனேஜர் ஆவது . அடுத்தது, வேறு வேலையில் தொடங்கி, ஒரு மேனேஜரிடம் வேலைப் பார்த்து, அங்கு மேலாண்மை கற்றுக் கொண்டு, அது போல் மேனேஜர் ஆவது.

இரண்டாம் முறையில், மேனேஜர் ஆனவர்களுக்கு தங்கள் அலுவலகத்தில் என்ன விதத்தில் வேலை நிர்வகிக்கப்படுகிறதோ, அது மட்டுமே தெரிந்திருக்கும். தங்களுக்கு சொல்லிக் கொடுத்த பாணியில், தங்கள் மேலாளர் செய்த பாணியில், தங்கள் வேலைகளைச் செய்வார்கள்.

இதற்கெல்லாம் ஒரு விதிமுறை வைத்து, இந்த வேலையை எப்படி செய்யலாம், எப்படி செய்வது சரி, சரியாக முடிப்பதற்கு வேறு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைச் சொல்லித் தந்து, அதில் நமக்கு தெரிந்தது என்ன? தெரியாதது என்ன? போன்றவற்றை அறிந்துக் கொள்ள, பிஎம்பி போன்ற மதிப்பீடு முறைகள் உதவுகின்றன.

மேனேஜர் என்று சொல்லிக் கொள்ளும் அனைவருக்கும் மேனேஜ்மெண்ட் துறையின் 'நாற்பத்துயேழு' கலைகளும் தெரிவதில்லை. அப்படி அனைவரும் ஒரே மாதிரி கற்றுக் கொள்ள 'பிம்பாக்' எனப்படும் மேனேஜ்மென்ட் புத்தகத்தை உருவாக்கி, அதை அஸ்திவாரமாகக் கொண்டு, அனைத்து செயல் முறைகளையும் (மொத்தம் 47) கற்று தேர்பவர்களுக்கு அல்லது தேறுபவர்களுக்கு பிஎம்பி சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இப்போது, 'பிஎம்பி' ஆக என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். இதற்குத் தயாராக, 'சுய மேலாண்மை' தேவைப்படும். அதையும், கூடவே பார்ப்போம். பிஎம்பி ஆக, ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் அனுபவம் தேவை. நான்கு வருட டிகிரி படிப்பு இருந்தால், 4500 மணி நேர திட்ட மேலாண்மை அனுபவமும், அவ்வித டிகிரி இல்லாதவர்களுக்கு, 7500 மணி நேர அனுபவமும் பிஎம்பிக்கு விண்ணப்பிப்பதற்குத் தேவைப்படுகிறது.

சரி, அனுபவம் இருக்கிறது. அடுத்து என்ன தேவை? நேரடியாக 35 மணி நேர ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் படிப்பில் ஈடுபட்டிருக்க வேண்டும். இதற்கு சில நிறுவனங்களில், அவர்களது பணியாளர்களுக்கான கற்கும் தளத்தில் (Learning System), இது சம்பந்தமான அங்கீகரிக்கப்பட்ட பாடங்கள் இருப்பின், அதில் கற்று இந்த 35 மணி நேர பாட அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளலாம். உலகமெங்கும் இருக்கும் பிஎம்ஐ கிளைகளில் (PMI Chapter) நடத்தும் வகுப்புகளில் கலந்துக்கொண்டும் இதைப் பெறலாம். அப்படி இல்லாவிட்டால், இவ்வாறு முறையாக ஆங்கீகரிக்கப்பட்ட வகுப்புகள் இணையத்தில் இலவசமாகவும், கட்டணத்திற்கும் நடைபெறுகின்றன. அவற்றில் பங்குபெற்று, இந்த 35 மணி நேர நேரடி பாட அனுபவத்தைப் பெறலாம்.

வேலை அனுபவமும், பாட அனுபவமும் இருப்பின், அடுத்த கட்டம் - பிஎம்பி'க்கு விண்ணப்பிப்பது தான். இது கொஞ்சம் நேரம் பிடிக்கும் வேலைதான். நமது பணி அனுபவத்திற்கும், படிப்பு அனுபவத்திற்கும் சான்றுகள் கொடுக்க வேண்டும். அதற்காக, எந்தெந்த ப்ராஜக்டில் எந்த வருடம், எவ்வளவு மாதங்கள், மணி நேரங்கள், யாருடன், என்ன மேலாண்மை வேலை பார்த்தோம் என்று ஆவணப்படுத்த வேண்டும். உங்களுடைய ரெஸ்யூம் தயார் நிலையில், சுலபமாக அதில் இருந்து வேண்டிய தகவல்களை எடுத்துக் கொள்ளலாம். இல்லாவிடில், கடந்த மூன்று-நான்கு ஆண்டுகளுக்கான ப்ராஜக்ட் குறிப்புகளை, நினைவேடுகளிலிருந்தோ, உடன் பணியாற்றியவர்களிடமிருந்தோ பெற்று தயார் செய்துக் கொள்ள வேண்டும். தகவல் மேலாண்மையும், சரியான ஆவணப்படுத்தலும் இருப்பின், இது சுலபமாகிறது.

இத்தகவல்களை விண்ணப்பத்தில் இணைத்து, அச்சமயங்களில் நம்முடன் பணியாற்றிய மேனேஜர், க்ளையண்ட் தொடர்பு தகவல்களையும் கொடுக்க வேண்டும். பெறும் விண்ணப்பங்களில் இருந்து, சில தணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அப்படி எடுத்துக் கொள்ளப்படுமானால், உங்கள் தகவல்களைச் சரிப்பார்க்க, நீங்கள் தொடர்புக்குக் கொடுத்துள்ளவர்களிடம் பிஎம்ஐ அமைப்பு தொடர்பு கொள்ளும். அதனால், விண்ணப்பிக்கும் போதே, உங்கள் தொடர்புகளிடம் ஒரு முறை பேசி விடவும். தகவல்களைச் சரிப்பார்க்க, தேவைப்படும் சான்றுகள் கேட்கப்படும். அதனால், அனைத்து தகவல்களும் சரியாக, உண்மையாக இருப்பது அவசியம். சக்சஸுக்கான சீக்ரெட் நேர்மை, நேர்மை, நேர்மை தான் என்று வாலியே சொல்லியிருக்காரே!!

விண்ணப்பித்து சில நாட்களில், உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா, அல்லது மேற்படி தணிக்கை ஆய்வுக்கு அனுப்பப்பட்டதா என்று தகவல் வரும். ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றால் ஒரு வருடத்திற்குள், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஒரு தேதியைத் தெரிவுச் செய்து, அந்நன்னாளில் பரீட்சைக்கு செல்லலாம். தணிக்கைக்கு அனுப்பப்படும்பட்சத்தில், எல்லாம் சரிப்பார்க்க, மேலும் சில காலம் எடுத்துக் கொள்வார்கள்.

அடுத்து, தேர்வுக்கு தயாராகுதல். பெரும்பாலும், இந்த சான்றிதழ் வாங்குபவர்கள், மேனேஜர் அனுபவம் கொண்டவர்கள் என்பதால், முப்பதுக்கு பக்கமோ, அதற்கு மேலோ வயது கொண்டவர்களாக இருப்பார்கள். இத்தேர்வுக்கு தயாராகுவதில், அவர்களது முக்கிய பிரச்சினையே, பணி, குடும்பம், இவற்றுக்கு மேலே கிடைக்கும் நேரத்தை இதற்கு செலவிட்டு படிப்பதே. நேரம் தாராளமாக கிடைத்தால், முதல் பிரச்சினை தீர்ந்தது. இல்லாவிட்டால், இதற்கு நேர மேலாண்மை தேவைப்படும்.

என்ன படிக்க வேண்டும்? கண்டிப்பாக, பிம்பாக் (PMBOK). அதற்கு மேல், அவரவர் வசதிக்கு ஏற்றாற் போல், பிஎம்பி தேர்வுக்கான ஒரு புத்தகம். பிம்பாக் என்றால் ப்ராஜக்ட் மேனேஜ்மென்ட் பாடி ஃஆப் நாலேட்ஜ் (Project Management Body of Knowledge). அதாவது, மேலாண்மை துறைக்கான வேதம். (பைபிள், குரான், பகவத் கீதை - இப்படி உங்கள் வசதிக்கேற்ப எதை வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்) இது படித்தால் தான், மேலாண்மைக்கான அறிவு, தகுதி கிடைக்குமா? என்றால் இல்லை. அனுபவரீதியாகவே, நிர்வாகம் குறித்து கற்று தேர்ந்து சிறந்து செயல்படுபவர்கள் பலர் உள்ளனர். ஆனால், ஒவ்வொரு நேரடி அனுபவத்திற்கும் காத்து இருக்க முடியாதல்லவா? அதே போல், இதைக் கற்று தெரிந்திருந்தால், முதல் அனுபவத்திலேயே தவறில்லாமல் நடக்கலாம் இல்லையா? அதற்கு தான், இம்மாதிரி புத்தகங்களும், வாசிப்பும் தேவைப்படுகிறது. விப்ரோ நிறுவனர் அசிம் ப்ரேம்ஜி, தனது தந்தை இறந்த பின்பு, விப்ரோ நிர்வாகத்தை எடுத்து நடத்தும் போது, தனது அனுபவக்குறையை ஈடுகட்ட, மேலாண்மை, நிர்வாகம் போன்றவற்றைப் பற்றிய புத்தகங்களைத் தொடர்ந்து வாங்கி படித்தாராம். அது போல், தேர்வு எண்ணம் இல்லாதவர்களும், ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் குறித்த விபரங்கள் தெரிய, பிம்பாக்'கை அணுகலாம்.

அதே சமயம், பிம்பாக் ஒன்றும் சுவாரஸ்யமான நடையில் எழுதப்பட்ட புத்தகம் அல்ல. ஆர்வமும், தேவையும், பொறுமையும் இருந்தால் மட்டுமே படிக்க இயலும் புத்தகம். இந்த புத்தகத்தை முழுவதும் உருப்போடத் தேவையில்லை. ஆனால், ஒருமுறையேனும் முழுவதுமாக வாசிக்க வேண்டும். அடிப்படை புரிய வேண்டும்.

ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட்டை வகை வாரியாக, வரிசை வாரியாக பிரித்து, ஒரு அமைப்பாக புரிந்துக் கொள்ளும் வகையில் பிம்பாக் இருக்கும். பிறகு, ஒவ்வொரு ப்ராசஸிற்கும் செயல்படுத்த எவை தேவை, செயல்படுத்திய பிறகு உருவாகுபவை எவை என்பவை விளக்கப்பட்டிருக்கும். இந்த ப்ராசஸ், இன்புட்ஸ், அவுட்புட்ஸ் எதுவும் மனப்பாடம் புரிய தேவையில்லை. புரிந்தே படித்து விட இயலும். அப்படி படிப்பதே போதும்.

பிம்பாக் படித்தால், ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் புரிந்துக் கொள்ளலாம். ஆனால், தேர்வு பெற பிம்பாக் மட்டும் உதவாது. ஏனென்றால், கேள்விகள் தியரட்டிக்கலாக இருப்பதில்லை. ப்ரடிக்கலாகவே இருக்கும். இந்த சூழ்நிலையில் என்ன செய்வீர்? அந்த சூழ்நிலையில் என்ன செய்வீர்? என்பது போல் இருப்பவை. கணக்கு போடும் வகை கேள்விகளும் உண்டு. இதனால், பிம்பாக்'க்கு மேலான படிப்பும் தேவைப்படும்.

பிஎம்பி தேர்வுக்கென்றே ஃபேமஸ் ஆன ரீட்டா (Rita) அவர்களின் தேர்வுக்கு தயார்படுத்தும் புத்தகத்தை (PMP Exam Prep) வாசிக்கலாம். அல்லது, இது போலவே கிடைக்கும், மற்ற புத்தகங்களான Head First Pmp, PMP Project Management Professional Exam Study Guide ஆகியவற்றையும் ரெஃபர் செய்யலாம். பிம்பாக்'கிற்குமேல், இம்மாதிரியான புத்தகங்களில் ஒன்றை வாசிப்பதே போதுமானது. நேரமும், தேவையும் இருப்பின் கூடுதல் புத்தகங்களை வாசிக்கலாம். படிக்கும் போதே, உங்களுக்கு ஏற்ப குறிப்புகள் எழுதி வைத்துக்கொள்ளவும். இது பின்னால் தேவைப்படும்.

சிலர் கட்டணம் செலுத்தி வகுப்பிற்கு செல்வார்கள். ஒரு வாரம் போல் வகுப்பு நடத்துவார்கள். உட்கார்ந்து வாசிக்க நேரமில்லாதவர்கள், சோம்பல்படுபவர்கள், பணப் பிச்சினை இல்லாதவர்கள், இந்த வழியைத் தேர்ந்தெடுக்கலாம். எப்படியானாலும், மண்டையில் சிலவற்றை ஏற்றியே ஆக வேண்டும்.

ஒரு வயதிற்கு மேல், இம்மாதிரி குண்டு குண்டு புத்தகங்கள் படிப்பது சிரமம்தான். ஒரு கோல் இல்லாமல், அலுவலக, குடும்ப வேலைகளுக்கிடையே, இந்த தண்டி தண்டியான புத்தகங்களை, கதைப் புஸ்தகங்களை வாசிப்பது போல், அனைவராலும் உடனே வாசித்து விட முடியாது. தடைகளாக பல விஷயங்கள் வரும். அதற்கு என்ன செய்யலாம் என்றால், இரு மாதங்களைத் தாண்டி ஒரு தேதியை முடிவு செய்து, பரீட்சைக்கு அப்பாயிண்மெண்ட் புக் செய்து விட்டால், பரீட்சைக்கு பயந்து தினசரி படிக்க ஆரம்பித்துவிடுவோம். இது ப்ரியாரிட்டி ஆகிவிடும். தேர்தல் தேதி முடிவான பிறகு, கூட்டணி முடிவெடுத்துத் தானே ஆக வேண்டும். புக்கே கதி என்று ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ படிக்க தொடங்கி விடுவோம்.

ஒழுங்காக தான் படிக்கிறோமா என்று நமக்கு நாமே சோதனை நடத்திக் கொள்ள, பல வழிகள் உள்ளன. தேர்வுக்கு தயார் படுத்தும் புத்தகங்களிலே, ஒவ்வொரு பாடத்திற்கும் பிறகு முடிவில் கேள்விகள் இருக்கும். அதை பிட்டடிக்காமல் முயற்சிக்கலாம். பிஎம்பி கேள்விகள் என்று கூகிளாரிடம் கேட்டால், அவரும் கேள்விகளைக் கொட்டுவார். அதை முயற்சிக்கலாம். கேள்விகளுக்கென்றே புத்தகங்கள், சிடிக்கள் உள்ளன. அவற்றை வாங்கியோ, லைப்ரரியில் எடுத்தோ முயற்சிக்கலாம்.

பிஎம்பி பாடங்களைப் பிம்பாக்கிலும், மற்ற புத்தகங்களிலும் படித்து முடித்த பின்னர், குறைந்த பட்சம் ஒரு வாரமாவது, தொடர்ந்து தேர்வுக்கென உள்ள இணையத்தளங்களிலோ, அல்லது தேர்வு மென்பொருளை நிறுவியோ, பயிற்சி பெற வேண்டும். எங்கெல்லாம் சரியான பதிலை தவறவிடுகிறோமோ, அவற்றை குறித்து வைத்துக்கொண்டால், பிறகு அவற்றையும் கற்று தேறலாம்.

தேர்வில் ' ப்ரைய்ன் டம்ப்' (Brain Dump) எனப்படும் படித்தவற்றை மூளையில் இருந்து தாளில் தரவிறக்கம் முறை மிகவும் உதவிகரமாக இருக்கும். அதென்ன முறை? பிஎம்பி தேர்வு ஆரம்பிப்பதற்கு முன்பு, கணினியில் தேர்வு குறித்த குறிப்புகள் காட்டப்படும். அதற்கு 15 நிமிடங்கள் கொடுக்கப்படும். எப்படி அடுத்த கேள்விக்கு செல்வது, பதில்களை மாற்றுவது எப்படி என்பனப் போன்ற தேர்வுக்கு தயார்படுத்தும் குறிப்புகள் அவை. அதை அங்கு சென்று வாசிக்க வேண்டும் என்றில்லை. பல வருடங்களாக ஒரே குறிப்புகள் தான் அவை. அவற்றை முன்னமே தெரிந்து கொண்டோமானால், தேர்வு சமயத்தில் அந்த நேரத்தை வேறு வகையில் பயனுள்ளதாக்கிக் கொள்ளலாம். எப்படி? அந்த சமயத்தில் 'பிட்' எழுதலாம்!!

என்னது, பிட்டா? என்று மிரள வேண்டாம். புத்தகத்தைப் பார்த்து, தேர்வில் காப்பி அடிக்க குறிப்புகள் எழுதினால், அது 'பிட்'. அதுவே, புத்தகத்தைப் பார்க்காமல், படித்தவற்றை நினைவில் இருந்து எடுத்து எழுதினால், அது "ப்ரெய்ன் டம்ப்''. பரீட்சை சமயம், பார்முலாக்களை, முக்கிய பாடங்களை மறப்பதைத் தவிர்க்க இது உதவும். இது போன்ற மன குறிப்புகளும், இணைத்தில் ரெடிமெடாகக் கிடைக்கின்றன. நீங்கள் படிக்கும் போது எழுதிய குறிப்புகள், இதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

அப்புறமென்ன, தேர்வெழுதுங்கள். பாஸாகுங்கள். ஸ்வீட் எடு. கொண்டாடு!!

உண்மையில், ப்ராஜக்ட் மேனெஜ்மெண்ட் என்பது ஒரு கலைதான். பாடமாக படித்தோ, இம்மாதிரி தேர்வுகள் எழுதியோ மட்டும், அதில் விற்பன்னர் ஆகி விட முடியாது தான். ஆர்வமும், அனுபவமும், சுய ஒழுக்கமும் & மேம்பாடும், பரிசோதனைகளும் மிக முக்கிய அம்சங்களாக தேவைப்படுகின்றன. அதற்கு மேல், இம்மாதிரி தேர்வுகள், அவற்றை செழுமைப்படுத்துபவை. சட்டென்று அனைவராலும், உடனே பிஎம்பி சான்றிதழைப் பெற்றுவிட முடியாதென்பதால், இதற்கென்று ஒரு மதிப்பு இருக்கத்தான் செய்கிறது. உங்கள் பெயருக்கு பின்னால், பிஎம்பி என்று போடும்போது, நீங்களே அதை உணருவீர்கள். அலுவலகத்தில் மற்றவர்கள், உங்களைப் பார்க்கும் பார்வை மாறுவதையும் உணரலாம். உங்கள் அலுவலக வேலை முன்னேற்றத்திற்கு நிச்சயம், இது ஒரு படிக்கல்லாக இருக்கும்.

கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு. தொடர்ச்சியான கற்றல், மென்மேலும் சிறப்பு!! பிஎம்பி ஆக வாழ்த்துகள்.

மேலதிக தகவலுக்கு,
http://www.pmi.org/certification/project-management-professional-pmp.aspx

.

கண்டுப்பிடி மிஸ்டர் ஸ்லையை!!

ஊடக அறம் என்ற வார்த்தை பிரயோகம், சமீப காலங்களில் அடிக்கடி நம்மிடம் அடிப்படுகிறது. ஊடக நிறுவனங்களின் வியாபார வெறியினால் பலமாக அது மிதிபடுவதினால் ஏற்படும் சத்தம் காரணமாக இருக்கக்கூடும். தொலைகாட்சிகள், டிஆர்பிக்காக நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களைக் கோர்த்துவிட்டு, தூண்டிவிட்டு, குழாயடி சண்டையை ஏற்படுத்துகிறார்கள் என்றால், பத்திரிக்கைகள் சர்குலேஷனைக் கூட்ட கருத்து கணிப்பு, புலனாய்வு போன்றவற்றை உட்கார்ந்த இடத்தில் இருந்தே செய்கிறார்கள்.

சர்குலேஷனைக் கூட்ட, பத்திரிக்கைகள் கடைப்பிடிக்கும் பல யுக்திகளைக் கண்டிருக்கிறோம். உற்பத்தி செலவுக்கு கீழே பத்திரிக்கையை விற்று, வாசகர் எண்ணிக்கையைக் கூட்டிய நிறுவனத்தைத் தமிழ் வாசகர்கள் அறிவார்கள். புது பேப்பரை வாங்கி, எடைக்குப் போட்ட வரலாறும் நம்மூரில் உண்டு.

சர்குலேஷனை அதிகரிக்க, பலவித வழிமுறைகளை உலகம் முழுக்க இருக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்பு, மினசோட்டாவின் ட்ரிப்யூன் நாளிதழ் செய்த ஒரு ஐடியா, இன்றும் கேட்க சுவையானது. ஒப்பிட்டுக்குரியது.



1907இல் அமெரிக்காவில் ஒரு நாளிதழின் விலை - ஒரு செண்ட். நீண்டகால சந்தாதாரர்களை அதிகரிக்க, மினசோட்டாவின் ட்ரிப்யூன் நாளிதழ் உருவாக்கிய கதாபாத்திரம் தான் - மிஸ்டர் ஸ்லை (Mr. Sly). கற்பனை கதாபாத்திரத்தை, நிஜத்தில் உலவவிட்டு, அவரைச் சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு டாலர் ஐம்பதில் இருந்து இருநூற்று ஐம்பது டாலர் வரை பரிசு என்று அறிவிக்கப்பட்டது.

போட்டி அறிவித்த நாளில் இருந்து, தினமும் அவர்களது நாளிதழில் திருவாளர் ஸ்லையின் அடையாளங்கள் சிறு குறிப்புகளாக விவரிக்கப்பட்டது. மின்னியாபோலிஸ் நகரின் எந்த ஏரியாவில், அவர் ரவுண்ட்ஸ் வருவார் என்பதும் தெரிவிக்கப்பட்டது. வாசகர்கள், யார் மிஸ்டர் ஸ்லை என்று நினைக்கிறார்களோ, அவரிடம் சென்று "நீங்கள் தானே மிஸ்டர் ஸ்லை?" என்று கேட்க வேண்டும். உண்மையிலேயே, அவர்தான் மிஸ்டர் ஸ்லை என்றால் மறுக்காமல் ஒத்துக்கொள்வார். கையில் அன்றைய நாளிதழோடு, அவரை அப்படியே நாளிதழின் அலுவலகத்திற்கு கூட்டி சென்றால் ஐம்பது டாலர்கள் கொடுப்பார்கள். கூடவே, ஆறு மாத சந்தா வைத்திருந்தால், நூற்றி ஐம்பது டாலர்கள் பரிசு. ஒரு வருட சந்தா என்றால் இருநூற்று ஐம்பது டாலர்கள் பரிசு. என்னவொரு ஐடியா!! அன்றைய காலக்கட்டத்தில், ஒரு செண்ட்டில் விற்றுக்கொண்டிருந்த நாளிதழ், இருநூற்று ஐம்பது டாலர்கள் பரிசாக அளிக்கிறதென்றால், அதற்கு ஆசைப்படும் மக்கள், ஒரு வருட சந்தா வாங்க மாட்டார்களா? வாங்கினார்கள். வாங்கி ரசீதைக் கையோடு வைத்துக்கொண்டு, இந்த போட்டி நடைபெறும் சமயம் தெருவெங்கும் 'துப்பறியும் சாம்பு'வாக சுற்றிக்கொண்டிருந்தார்கள். போட்டிக்கான காலம், மிஸ்டர் ஸ்லை பிடிபடும் வரை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மிஸ்டர் ஸ்லையும், நாளிதழில் தினமும் தான் சுற்றி வந்த அனுபவத்தை எழுதிக்கொண்டு வந்தார். தான் அன்று ஒரு ட்ராபிக் போலீஸை சந்தித்தேன், அந்த துணிக்கடைக்கு சென்றேன், கல்லூரியில் ஒரு நபரிடம் பேசினேன் என்பது போல ஒவ்வொரு தினத்தின் நடப்புகளையும் எழுதி வந்தார். அவரை சந்தித்தவர்கள் அதை படித்தால், அடடா விட்டுவிட்டோமே!! என்று நினைக்கும்வாறு ஆனது. சிலர், 'அவனா நீ?' என்று நினைவு அடுக்குகளில் அவரது பிம்ப அடையாளத்தை தூசு தட்டி எடுத்து, அடுத்த நாளில் பிடித்துவிடலாம் என்று வீராவேசத்துடன் கிளம்பினார்கள். பத்திரிக்கையிலும், தலை, நாடி, காது என்று சிறு சிறு படங்களை வெளியிட்டு, தினசரி ஹைப் கூட்டினார்கள்.

பரிசு பெறும் ஆசையில், அவரைப் போல இருந்த சிலரை, பத்திரிக்கை ஆபிஸிற்கு இழுத்து வந்து சில ஆர்வ கோளாறுகள் பரிசு கேட்டார்கள். 'நான் அவன் இல்லை' என்று இப்படிப்பட்டவர்களிடம் இருந்து தப்பித்து செல்வது பெரும்பாடாகியது. ரொம்ப அல்பமா இருக்கே!! இப்படியெல்லாமா அமெரிக்கர்கள் நடந்துக்கொள்வார்கள்? என்று நினைப்பே தேவையில்லை. ஓசியில் கொடுத்தால், பினாயிலையே குடிக்க தயாராகும் கலாச்சாரம், உலகம் முழுக்க உண்டு. அமெரிக்காவில், தேங்க்ஸ்கிவிங் (Thanksgiving) டீல் என்றால் பெஸ்ட் பை (Best Buy) கடை முன்னால், பெட் தலையணை சகிதம் படுப்பவர்களும் உண்டு. ஐக்கியாவில் முதல் நாள் டிஸ்கவுண்ட் சேல் என்றால், அலுவலகத்திற்கு லீவ் எடுத்து ஷாப்பிங் செல்பவர்களும் உண்டு. அதனால், மிஸ்டர் ஸ்லையை எப்படியாவது கண்டுபிடித்திட வேண்டும் என்று வெறியுடன் பல பேர் அன்றைய மின்னியாபோலிஸில் 'மிருதன்'களாக சுற்றிக்கொண்டிருந்தனர் என்பது நம்ப கடினமான செய்தி இல்லை.

இவர்களுடைய கண்களுக்கு டிமிக்கி கொடுத்துக்கொண்டு, மிஸ்டர் ஸ்லை தெரு தெருவாக சுற்றிக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட இரு வாரங்களுக்கு மேலானது, அவர் மாட்டிக்கொள்ள. ஒரு சுபயோக தினத்தில், மிஸ்டர் ஸ்லை ஒரு ஹோட்டலின் வாசலில், சட்டக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த ரிச்சர்ட்சன் என்பவரிடம் கையும், சந்தா ரசீதுடன் மாட்டிக்கொண்டார். ஒரு வருட சந்தா வைத்திருந்ததால், டாப் ப்ரைஸான இருநூற்று ஐம்பது டாலர்களைப் பரிசாக பெற்றார் ரிச்சர்ட்சன். மிஸ்டர் ஸ்லை தேடுதல் கூத்தும் அன்றுடன் முடிவுக்கு வந்தது. பரிசு பணத்தை படிப்புக்காக செலவிட போவதாக ரிச்சர்ட்சன் தெரிவித்தார். பிறகு, என்ன செய்தாரோ? ரிச்சர்ட்சனுக்கே வெளிச்சம்.

---

இந்த தேடுதல் கூத்தை வாசிக்கும் போது, நம்மூரின் தேர்தல் கூத்து தான் நினைவுக்கு வருகிறது. இதுவரை 'அடுத்த முதல்வர் நாந்தான்' என்று கிளம்பி வந்தவர்கள், தற்சமயம் ஒபாமா, கேஜ்ரிவால், பிரபு போன்றோரின் புண்ணியத்தில் 'மாற்றம்', 'மாற்று அரசியல்', 'நம்பிக்கை' (அதானே எல்லாம்!!) என்று கீவேர்ட்ஸை மாற்றிப்போட்டு கிளம்பிவிட்டார்கள். "எங்கள் மேல் ஊழல் குற்றசாட்டே இல்லை' என்று பவுசாக கூறுபவர்கள், மைண்ட் வாய்ஸில் 'இதுவரை அதற்கான வாய்ப்பே எங்களுக்கு கிடைக்கவில்லை' என்று கவலையுடன் கூறிக்கொள்வதும் மக்களுக்கு கேட்கத்தான் செய்கிறது.

மக்கள் நிலையும் குழப்ப நிலைதான். 250 டாலர் பரிசுக்காக, மிஸ்டர் ஸ்லையை தேடியலைந்த மினசோட்டா வாசகர்கள் போல், தங்களைக் காக்க வரும் தேவதூதன் யார் என்று தெரியாமல், விஜயகாந்த், அன்புமணி, வைகோ, திருமாவளவன், நல்லகண்ணு, சகாயம், கலாம் உதவியாளர் என்று வருபவர்களை எல்லாம் பார்த்து, எது மாற்றம், எது ஏமாற்றம் என்று தெரியாமல் குழம்பி போய் நிற்கிறார்கள். நல்லா கேள்விக் கேக்குறாரே என்று ரங்கராஜ் பாண்டேவைக்கூட சட்டசபைக்கு அனுப்பி வைக்கலாமே என்று சிலர் யோசிக்கும் நிலை வந்துவிட்டது. அரே, ஒ சம்பா!!

உங்களுக்காவது தெரியுமா, நம்மூரில் மறைந்து நடமாடும் அந்த மிஸ்டர் ஸ்லை யாரென்று?

.

ஆப்பிள் - கொய்யவும், கொறிக்கவும்

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.

http://www.panippookkal.com/ithazh/archives/6503

ஆப்பிள் என்று சொல்லிவிட்டு, சாப்பிடும் ஆப்பிள் என அழுத்திச் சொல்லும் காலத்தில் இருக்கிறோம். இது சாப்பிடும் ஆப்பிளைப் பற்றிய கட்டுரை.



ஆதாம் ஏவாள் தான் உலகின் முதல் மனிதர்கள் என்றால், ஆப்பிள் தான் முதல் பழம்.

ஒரு பவுண்ட் ஆப்பிள் - வகையைப் பொறுத்து ஒரு டாலரில் இருந்து கிடைக்கிறது. ஒரு அவகடோ, கிட்டத்தட்ட ஒரு டாலர். ஒரு மாதுளை, கிட்டத்தட்ட இரண்டு டாலர். கொய்யா - வகையைப் பொறுத்து பவுண்ட் இரண்டில் இருந்து ஐந்து டாலருக்கு மேலே கூடப் பார்த்திருக்கிறேன். ஒரு அன்னாசி, மூன்று நான்கு டாலர். இந்தக் கணக்கைப் பார்த்தால் ஆப்பிள் தான் சீப்பாகத் தெரிகிறது.

இருந்தாலும், ஆப்பிள் ஒரு பணக்காரப் பழம் என்ற கண்ணோட்டம் இன்னமும் மறையவில்லை. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரிடம் செல்லத் தேவையில்லை என்று ஒரு ஆங்கிலப் பழமொழியை இன்று வரை சொல்லி வருகிறார்கள். கண்டிப்பாக, இதை ஒரு டாக்டர் சொல்லியிருக்க மாட்டார். வேண்டுமானால், ஒரு ஆப்பிள் வியாபாரி சொல்லியிருக்கலாம். இது போல், ஆப்பிளுக்கு ஒரு புனிதப் பிம்பம் கொடுக்கப்பட்டு, அதன் மேல் இருக்கும் மதிப்புக் குறைந்ததேயில்லை.



உண்மையில், ஆப்பிள் ஒரு சத்து மிகுந்த பழம் தான். விட்டமின்களும், நார்சத்தும் கொண்ட பழம். இதய நோயும், புற்று நோயும் வராமல் தடுக்கவல்லது. அதே சமயம், அதை எப்படிச் சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம். பூச்சிக் கொல்லி மருந்து, மெழுகு போன்றவற்றைப் போக்க தண்ணீரில் கழுவுவது அவசியம். ஜீஸ், சாஸ் எனப் பிராசஸ் செய்யாமல், முழுப் பழமாகச் சாப்பிடுவது நல்லது. தோலுடன் சாப்பிட வேண்டும். தோலின் உட்பகுதியில் உடலுக்குத் தேவையான முக்கியச் சத்துகள் உள்ளன. அதனால், அப்படியே சாப்பிடவும். விதைகளை மட்டும் விட்டுவிடவும். ஒன்றிரண்டு தெரியாமல் விழுங்கினால் பிரச்சினை இல்லை. பொழுது போகாமல், கால் கிலோ விதையை எடுத்துக் கடித்துத் தின்றால் தான் பிரச்சினை. அதேபோல், கத்தியில் வெட்டிச் சாப்பிடாமல், அப்படியே கடித்துச் சாப்பிடவும். கத்தியில் வெட்டும் போது, பழம் மட்டும் வெட்டுப் படாமல், அதில் இருக்கும் செல்களும் பாதிப்படைகின்றன. வெட்டிச் சிறிது நேரத்தில், வெட்டப்பட்ட ஆப்பிளின் நிறம் மாறும். இப்படி மாறுவதால், பிரச்சினை எதுவுமில்லை. மாறுவதைத் தடுக்க, எலுமிச்சை, உப்பு போன்றவற்றைப் பயன்படுத்தலாம். மற்றபடி, ஆப்பிள் தினமும் உட்கொள்ளக் கூடிய, வேண்டிய பழம் தான்.

இதில் தான் பிரச்சினை. தினமும் சாப்பிடுவதில் என்ன பிரச்சினை? ஆப்பிள் தான் வருடம் முழுக்கக் கடைகளில் கிடைக்கிறதே என்கிறீர்களா? கடைகளில் வருடம் முழுவதும் கிடைக்கிறது. ஆனால், மரத்தில் வருடம் முழுக்கப் பழுப்பதில்லையே? ஒரு வருடத்தில், ஒரு குறிப்பிட்ட காலம்தான் ஆப்பிள்கள் கனியும். அமெரிக்காவில் ஆகஸ்ட் முதல் நவம்பருக்கு இடைபட்ட காலத்தில். ஆனாலும், நமக்கு வருடம் முழுக்க ஆப்பிள்கள் கிடைக்கிறது. எல்லாம் நவீன அறிவியலின் பலனால்.



சில நேரங்களில், நீங்கள் சாப்பிட்ட ஆப்பிள், ஒரு வருடத்திற்கு முன்பு மரத்தில் பறிக்கப்பட்டதாக இருக்கலாம். எல்லா ஆப்பிள்களும் மரத்தில் பறிக்கபட்ட உவுடன், கடைக்கு வருவதில்லை. வழியில் பதனப்படுத்தும் கிடங்கில் ஒன்றிரண்டு மாதங்களோ, சமயங்களில், ஒரு வருடம் கூடத் தங்கிவிட்டு வரும். அவ்வளவு நாட்கள் கெடாமல் இருக்க, மெழுகுப் பூச்சுடனும், இரசாயனப் பூச்சுடனும் குளிர் நிலையில் பாதுகாக்கப்படும்.

இதைக் கேட்டு, இவ்வளவு நாட்கள் கழித்துச் சாப்பிட வேண்டி இயிருக்கிறதே என்று வருத்தமும் படலாம். சீசன் என்றில்லாமல் வருடம் முழுக்க ஆப்பிள் கிடைக்கிறதே என்று சந்தோஷமும் படலாம். இப்படிச் சாப்பிடுவதால் பெரிய கெடுதல் என்று எதுவுமில்லை. இரசாயனப் பூச்சும், மெழுகுப் பூச்சும் போக்க, நன்றாகக் கழுவ வேண்டும். எவ்வளவு நாட்கள் பழையது என்பதைப் பொறுத்துப் பழத்தில் சத்துகள் குறைந்தோ, இல்லாமலோ இருக்கும்.

இதையெல்லாம் தவிர்க்க, ஆப்பிள் ரசிகர்கள் தவறாமல் செய்ய வேண்டிய வேலை, ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதங்களில் நேரடியாக ஆப்பிள் தோட்டத்திற்குச் செல்வது தான். அதுவும் மினசோட்டாவில், எக்கச்சக்க ஆப்பிள் தோட்டங்கள் இருப்பதால், இம்மாதங்களில் வார வாரா வாரம் அங்கு சென்று ஆப்பிள் பறிக்கலாம்.

இம்மாதங்களில், சில கடைகளில் கூட, புதுப் பழங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ள ஆப்பிள்களை, அதிக விலைகளில் விற்று, "இவ்வளவு நாளு பழைய பழத்தையடா பழத்தையாடா வித்தீங்க?" மொமெண்ட்டை நமக்கு ஏற்படுத்துவார்கள்.

தமிழர்களுக்கு ஆப்பிள் மரம் என்பதே அதிசயம் தான். தமிழ்நாட்டில் எங்கு சென்று ஆப்பிள் மரம் பார்ப்பது? அப்படி உணர்பவர்கள், ஒரு முறையாவது இங்கு ஒரு விசிட் அடிக்கலாம்.

இங்குள்ள சில தோட்டங்களில் பறித்த பழங்களை, தோட்டத்திற்கு வெளியே சிறு கடை அமைத்து விற்கிறார்கள். சில தோட்டங்களில் கட்டணம் வசூலித்துக் கொண்டு, பழம் பறிக்க தோட்டத்திற்குள் அனுமதிக்கிறார்கள். பழம் பறிப்பது என்பதோடு விடாமல், குழந்தைகளுக்கான விளையாட்டுகள், சிறு உணவகம் என்று பாதி நாளைக் கழிக்கும் ஏற்பாடுகளும் இருக்கின்றன.

ஆப்பிள் மரம், ரொம்பப் பெரியதாக வளருவதில்லை. மரத்தின் அளவுக்கும் ஆப்பிள்களின் எண்ணிக்கைக்கும் சம்பந்தமில்லை. இங்குள்ள சில மரங்களில், பழங்கள் ஏராளமாகக் காய்த்துக் குலுங்குகின்றன. மரத்தின் கீழேயேயும் நிறையப் பழங்கள் உதிர்ந்து விழுந்து கிடக்கின்றன.

இப்படிப் பறிக்க வருபவர்களுக்காக, தோட்டத்தின் சில பகுதியை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். பழங்களைப் பறித்துப் போட்டு எடுத்துச் செல்வதற்குப் பைகள் விற்கிறார்கள். பையின் விலை அந்தப் பையிற்கு என்றில்லாமல், ஆப்பிளுக்கும் சேர்ந்ததாக இருக்கிறது. அதாவது, ஒரு பிளாஸ்டிக் பையின் விலை இருபது-முப்பது டாலர்கள் என உள்ளது. அதில் எவ்வளவு வேண்டுமானாலும் அள்ளிப் போட்டு எடுத்துச் செல்லலாம். ஒன்றிரண்டு போதும் என்று நினைப்பவர்கள், அங்கேயே ஒரு மரத்தின் கீழே அமர்ந்து, வேண்டும் வரை பறித்துச் சாப்பிட்டு விட்டு வரலாம்.

கடை ஆப்பிளையே சாப்பிட்டு வருபவர்கள், முதல் கடியைக் கடித்தவுடனேயே ஒரு புது சுவையை உணரலாம். மரத்தில் பறித்த ஆப்பிளுக்கும், கடை ஆப்பிளுக்கும் உள்ள வித்தியாசம், சூப்பர் ஸ்டாருக்கும், பவர் ஸ்டாருக்கும் உள்ள வித்தியாசம் போன்றது. இவ்வளவு நாட்கள் பவர் ஸ்டாரயா, சூப்பர் ஸ்டார் என்று நினைத்திருந்தோம் என்று நீங்கள் ஏமாந்த விஷயமும் புரிபடும்.

அதனால், ஆப்பிளின் உண்மைச் சுவையை அறிய, உடனே மினசோட்டாவின் ஏதோவொரு ஆப்பிள் தோட்டத்திற்கு விரைந்திடுங்கள்.

ஆப்பிளைப் பறிப்போம். ஆப்பிளைக் கொறிப்போம். :-)

.