என் மனைவி இந்த விஷயத்தைச் சொன்னவுடன் பகீரென்று இருந்தது. 'ஒவ்வொருவருக்கும் ஒரு கஷ்டம்' என்று எதற்கோ நான் சொன்னதற்கு, இந்த விஷயத்தைக் கூறினாள். விஷயம் இதுதான்.
மனைவியின் நண்பியும், அவரது கணவரும் இங்கே அமெரிக்காவில் சில வருடங்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை இருக்கிறாள். சமீபத்தில் நாங்கள் எல்லாம் குடும்பங்களாக, பெண்கள் தினத்திற்காக potluck நடத்தினோம். பொழுது ஜாலியாகச் சென்றது. அப்போது தான், குடும்பமாக அவர்களைச் சந்தித்தது. அதற்கு முன்பு, பள்ளியில் சில நாட்கள், குழந்தையும், அவரது மனைவியையும் பார்த்திருக்கிறேன். Potluck இல் நண்பர் குடும்பம் மிகவும் மகிழ்வுடன், அன்னியோன்யமாக, ஒருவருக்கொருவர் கிண்டலடித்துக் கொண்டு இருந்தனர். காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களாம்.
சில நாட்களுக்கு முன்பு, திடீரென்று இந்தியா கிளம்பி சென்றனர். நண்பரது தந்தை காலமாகி விட்டாராம். அதனால் உடனே கிளம்பி சென்றிருந்தனர்.
அவர்கள் காதலித்த காலத்தில், இரு வீட்டினருடனும் எதிர்ப்பு கிளம்பிய போது, நண்பரின் அப்பா தான் முதலில் ஆதரவு அளித்தாராம். எதிர்ப்புகள் இருந்தாலும், பின்பு ஒருவழியாக இரு வீட்டினரும் சேர்ந்தே திருமணத்தை நடத்தியுள்ளனர்.
இப்போது இந்தியா சென்றிருந்த போது, என்ன நடந்ததோ தெரியவில்லை, மனைவியையும், குழந்தையும் மனைவியின் வீட்டுக்கு அனுப்பி விட்டு, தான் மட்டும் தன் தாயுடன் இருந்திருக்கிறார். விசா ஸ்டாம்பிங் செல்லும் போதும், தான் மட்டும் சென்றிருக்கிறார். பிறகு, நான் கேட்டது தான் உச்சகட்ட அதிர்ச்சியைக் கொடுத்தது.
மனைவியையும், குழந்தையும் விட்டு விட்டு அம்மாவைக் கூட்டிக் கொண்டு அமெரிக்கா வருகிறாராம். மனைவியிடம் எதுவும் சொல்லவில்லையாம். மனைவி போன் செய்தாலும் எடுப்பதில்லையாம். அவருக்கு என்ன ஆயிற்று? என்று தெரியவில்லை. பிரச்சினை முழுமையாகப் புரியவில்லை என்றாலும், முன்பொரு முறை பள்ளியில் பார்த்த அந்த மூன்று வயது குழந்தையின் மழலை முகம் நினைவில் வந்து, மனதைப் பிசைகிறது. 'அப்பா எங்கே?' என்று கேட்கும் போது, அந்த தாயார் படும் பாடு என்னவாக இருக்கும்?
மனித மனம் எடுக்கும் நிலை இவ்வாறு புதிராகும் போது, அதனால் பாதிக்கப்படுவோரின் நிலை கொடுமையானது. அவர் இங்கு வந்த பிறகு பேசிப் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment