மின்னியாபோலிஸில் இருக்கும் லைப்ரரிகள் அனைத்தும் ஒன்றிணைந்தது. அதாவது எங்காவது புத்தகம் எடுத்தால், எங்கு வேண்டுமானாலும் திருப்பிக் கொடுக்கலாம். அமெரிக்காவில் அனைத்து ஊர்களிலும் அப்படி தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
மகளை அழைத்துக் கொண்டு, அருகே இருக்கும் நூலகத்திற்கு வார வாரம் செல்வதுண்டு. அஞ்சாறு குழந்தைகள் புத்தகங்களும், இரண்டு மூன்று குழந்தைகள் டிவிடிகளும் எடுத்து வருவோம். நான் வாசிக்க என்று எடுத்த வந்த புத்தகங்கள் எதையும் வாசித்ததில்லை என்பதால் எனக்கென்று புத்தகங்கள் எதுவும் தற்சமயம் எடுப்பதில்லை.
சரி, பதிவின் நோக்கம் - இங்கிருக்கும் நூலகங்களில் இருக்கும் ஒரு நடைமுறையைப் பகிர்வது.
அது என்னவென்றால், வாரத்தில் இரு நாட்கள் கதை நேரம் என்னும் நிகழ்ச்சி நடைபெறுவது. ஒரு நாள் காலை நேரத்திலும், இன்னொரு நாள் மாலை நேரத்திலும் நடைபெறும்.
சுமார் 45 நிமிடங்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் குழந்தைகளுடன் பெற்றோர்கள் கலந்துக் கொள்ளலாம். அந்த நூலகத்தில் இருக்கும் ஒரு 'கதை சொல்லி' நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்துக்கிறார்.
நிகழ்வின் முக்கிய அம்சம் - சில புத்தகங்களை எடுத்து அதில் உள்ள கதைகளைச் சொல்வது. ஒருநாளுக்கு ஒரு ஆங்கில எழுத்தை எடுத்துக் கொண்டு, அதில் ஆரம்பிக்கும் ஆங்கில வார்த்தைகளைப் பற்றியும், அவ்வார்த்தைகள் கொண்ட கதைகளையும் சொல்லுகிறார்கள்.
நடுநடுவே, பாடல்களும் உண்டு. பாடலுக்கு குழந்தைகளுடன் பெற்றோர்களையும் ஆட சொல்லுவார்கள். (நமக்கு சங்கடமான இடம் அதுதான்)
கதைகளை அதற்கேற்ற ஏற்ற இறக்கங்களுடன், உணர்வு வெளிப்பாடுகளுடன் சொல்லுவது, குழந்தைகளை மட்டுமில்லாமல், பெரியோர்களையும் கவர்வதாக இருக்கும்.
முடிவில், குழந்தைகளை வரிசையில் வரச் சொல்லி, கையில் அந்த நாளின் எழுத்தையும், அது சம்மந்தமான ஒரு சின்னத்தையும் அச்சு பதித்து அனுப்புவார்கள்.
ஒரு முறை அழைத்து சென்றால், மறு முறையும் ஆர்வத்துடன் குழந்தைகள் வருகிறார்கள். இது போல் நடைமுறை, இந்திய நூலகங்களில் எங்காவது இருக்கிறதா என்று தெரியவில்லை. இல்லாவிட்டால், ஆர்வமுள்ளவர்கள் முன்னெடுத்து தொடங்கலாம்.
No comments:
Post a Comment