Sunday, October 11, 2015
மினியாபோலிஸில் ஒரு வருடம்
மினசோட்டா வந்து ஒரு வருடம் ஆகிறது. மினசோட்டா , மினியாபோலிஸ் என்றெல்லாம் இங்கு வருவதற்கு இரண்டு மாதங்கள் முன்பு வரை கேள்விப்பட்டதில்லை. நாம் அறியாத ஊர்கள், சிலருக்கு மறக்க இயலாத, வாழ்வில் பிரிக்க இயலாத ஊர்களாக இருக்கின்றன. அறிந்த பிறகு, நமக்கும் மறக்க இயலா ஊர்களாக மாறும். எனக்கும் மினியாபோலிஸ் அப்படியே.
நான் டென்வரில் இருந்து மினியாபோலிஸிற்கு வருவதற்கு சில நாட்கள் முன்பு, அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர், மினியாபோலிஸில் இருந்து டென்வருக்கு வந்திருந்தார். அவரிடம் மினியாபோலிஸைப் பற்றி விசாரிக்கும் போது, ஊரை ரொம்பவும் புகழ்ந்தார். பொதுவாக, அமெரிக்காவில் வந்த முதல் ஊரை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்திற்காக பிடித்திருக்கும். அப்படியாக இருக்கும் என நினைத்தேன்.
ஏனென்று கேட்டதற்கு ஏதேதோ சொன்னார். ஆனால், குளிர் ஓவரென்று சொன்னார். அவர் மட்டுமல்ல, மினியாபோலிஸ் என்றதும் பலரும் சொன்னது அது தான்.
ஒரு சிறு மழை பொழிந்த நாளில் தான், இங்கு வந்தோம். இந்த வருடமும், அந்த தினம், அதேபோல் தான் இருந்தது.
புதியதாக எந்த ஊருக்கு சென்றாலும், ஒரு தயக்கமும், உள்ளுக்குள் ஒரு பயமும் இருக்குமே? அப்படித்தான் ஆரம்ப நாட்கள் சென்றது.
ஆரம்ப நாட்கள் என்பதால், டென்வருக்கும் மினியாபோலிஸிற்கும் இடையேயான வித்தியாசங்கள் அப்பட்டமாக தெரிந்தது.
டென்வர் ஏர்போர்ட்டில், லாங் வீக் எண்ட் போன்ற விசேஷ நாட்களில் தான் கூட்டம் கும்மும். ஆனால், மின்னியாபோலிஸிற்கு வந்தது, ஒரு சாதாரண வீக் எண்ட் தான். ஆனாலும், ஏர்போர்ட்டிலும், நன்றாக நினைவிருக்கிறது, ஏர்போர்ட் டாய்லட்டிலும் நல்ல கூட்டம். அதை பார்த்ததுமே கலக்கமாகி விட்டது.
ஒரு முறை, நியூயார்க் - நியூஜெர்சி சென்றிருந்த போது, எங்கும் கூட்டம் நிறைந்திருப்பதை கண்ட போது, கிராமம், சிறுநகரம் போன்றவற்றில் இருந்து நகரம் சென்ற ஒருவன் அடையும் திகைப்பு, எங்களுக்கு கிடைத்தது. மக்கள் பழகும் விதம், மற்றவர்களை நடத்தும் விதம் என ஒழுக்க நிலை பெரிய நகரங்களில் கொஞ்சம் இறங்கி இருப்பதாகவே தோன்றும். அதனால், பெரும் நகரங்களுக்கு சென்று வசிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்ததில்லை.
மின்னியாபோலிஸ், நடுத்தர நகரம் என்று தான் கேள்விப்பட்டிருந்தோம். டென்வரை போல இருக்கும் என நினைத்திருந்தோம். ஆனால், இங்கோ ஏர்போர்ட், வால்மார்ட், டார்கெட், பஸ் ஸ்டாப், பஸ் என அனைத்தும் கூட்டமாக இருந்தது. இது ஒரு வகை திகைப்பை முதலில் ஏற்படுத்தியது. பிறகு, இப்போது பழகிவிட்டது.
இணையத்தில் மக்கள் தொகையை பார்த்தால், டென்வரில் தான் அதிகம் எனக் காட்டுகிறது. மாநில அளவில், இரண்டும் ஒரளவுக்கு ஒரே அளவு தான். டென்வர் வேகமாக வளரும் நகரம். மக்கள்தொகை வளர்ச்சிவிகிதம் அதிகம். கட்டிடங்கள் ரொம்ப பழமையாக இருக்காது. இங்கோ, கட்டிடங்களும், நகரின் அமைப்பும் ஒப்பிட்டளவில் பழமையானது.
கூட்டம் அதிகம் இருப்பதால் ஏற்படும் நன்மை, நிறைய நிகழ்ச்சிகள் நடைபெறுவது. வாரயிறுதி என்றால் ஏதேனும் செல்வதற்கு இருக்கும். பிசியாகவே எப்போதும் இருக்கலாம்.
விலைவாசியைப் பொறுத்தமட்டில், பெரும்பாலான பொருட்கள் டென்வரைவிட இங்கு அதிகமாக இருப்பதாக தெரியும். ஆனால், 2011 இல் நான் முதலில் வந்த டென்வருக்கும் 2014 இல் நாங்கள் கிளம்பும்போது இருந்த டென்வருக்குமே வித்தியாசம் இருந்தது. $575 இருந்த அதே அபார்ட்மெண்ட் புதுப்பிக்கப்பட்டு $950 என விலைவாசி உயர்ந்திருந்தது. இங்கு ஏற்கனவே அதற்கு மேல் ஏறியிருந்தது. டென்வரில் காலிப்ளவர் $1.50 க்கே வாங்கி பழகியிருந்தோம். இங்கோ, $2.99க்கு கம்மியாக கிடைத்தால் பெரிய விஷயம். குடைமிளகாய் டென்வரில் டாலருக்கு மூன்று கிடைக்கும். இங்கு ஒன்று தான் கிடைக்கும். இதற்கும் இங்கு சுற்றிலும் விவசாய நிலம் தான். (தற்சமயம், இணையத்தில் விலைவாசியை ஒப்பிட்டுப் பார்த்தால், டென்வர் தான் விலைவாசி மிகுந்த நகரம் என்று காட்டுகிறது. இப்ப, உயர்ந்துவிட்டதோ?!!)
மினசோட்டா என்றால் எக்கசக்க ஏரிகள் கொண்ட மாநிலம் என்று அறிந்திருந்தேன். கூகிள் மேப்பில் பார்த்தாலே, திட்டு திட்டாக நீல நிறத்தில் ஏரிகளின் பெரும் எண்ணிக்கை தெரியும். "Land of 10000 lakes" என்று தான் மாநிலத்திற்கே பெயர். பத்தாயிரம் ஏரிகள் என்று கேள்விப்பட்ட போது, சும்மா தேங்கி கிடங்கும் தண்ணீரை எல்லாம் ஏரிகள் என்று கணக்கெடுப்பார்களோ? என்று நினைத்திருந்தேன். அப்படியெல்லாம் இல்லை போலும். குறைந்த பட்சம், இத்தனை பத்து ஏக்கருக்கு மேல் உள்ள நீர் நிலைகளை மட்டுமே கணக்கெடுத்து, அதுவே பத்தாயிரத்திற்கு மேல் உள்ளது.
இதனால் எங்கு பார்த்தாலும் ஏரிகளாக இருக்கும். சில இடங்களில் கூடவே பூங்கா, நண்பர்கள் உறவினர்கள் கூடி உணவு உண்ண மேஜைகள் அமைப்புடன் பிக்னிக் ஏரியாக்கள், குழந்தைகள் விளையாட ஏரியில் மடை அமைத்து சிறு நீச்சல் குளம் போன்ற ஏற்பாடுகள், கடற்கரை போன்று ஏரிக்கரை - இவையனைத்தும் ரம்மியமாக பொழுது போக்க அருமையான இடங்களாக அமைந்திருக்கின்றன.
வசதிக்கேற்ப, விருப்பத்திற்கேற்ப, ஏரிக்கேற்ப பெடல் போட், கயாக், மோட்டார் போட், வாட்டர் பைக் போன்றவைகளும் உண்டு. தண்ணீரில் மிதக்க ஆசைப்படுபவர்களுக்கு கொண்டாட்டமான ஊர் இது.
டென்வரில் இருக்கும் போது, வீட்டுக்கு பக்கத்திலேயே இந்திய ரெஸ்டாரண்டுகள், நம்மூர் காய்கள், கறிகள், மீன்கள் வாங்க ஆசிய, மத்திய கிழக்கு நாட்டு பலசரக்கு கடைகள் இருந்தன. எது வேண்டுமென்றாலும் உடனே வாங்கி வரலாம். சமைத்துக் கொண்டு இருக்கும்போதே ஏதேனும் இல்லாவிட்டால், அடுப்பை அணைக்காமல் வாங்கி வந்து சமையலை முடிக்கலாம். அதுபோல் தான், தமிழ் திரைப்படங்கள் திரையிடும் திரையரங்குகளும். படம் போடுவதற்கு பத்து நிமிடங்கள் முன்பு வீட்டில் இருந்து கிளம்பலாம்.
இங்கு நாங்கள் இருக்கும் அபார்ட்மெண்ட் அமைந்திருக்கும் பகுதிக்கு தான் இந்த நிலைமையா, தெரியவில்லை. அனைத்தும் 10, 15, 20 மைல் தொலைவுகளில். எதையும் பொடிநடையாக சென்று வாங்கி வர முடியாது. இரண்டு திரையரங்குகளில் தமிழ்த் திரைப்படங்கள் வந்தாலும், சில படங்களுக்கு முதல் நாள் டிக்கெட் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவும். அதனால், படம் பார்க்க, டிக்கெட் ரிசர்வ் செய்து, ஒரு மணி நேரத்திற்கு முன்பே கிளம்பினால் தான், படம் போடும் நேரத்திற்கு திரையரங்கை அடைந்து முதலில் இருந்து படம் பார்க்க முடியும். மற்றபடி, ஆங்கிலப் படங்கள் காண வீட்டின் பக்கத்திலேயே ஒரு நல்ல தியேட்டர் இருக்கிறது. படுத்துக் கொண்டே படம் பார்ப்பதற்கு ஏதுவான சோபாக்கள் கொண்ட தியேட்டர். செவ்வாய்கிழமைகளில் ஐந்து டாலர் டிக்கெட்.
மினசோட்டாவின் முக்கிய அம்சமான குளிரைப் பற்றி பேசுவோம். டென்வரில் செப்டம்பரிலேயே பனி பெய்யத் தொடங்கி பார்த்திருக்கிறேன். போலவே, மே மாதம் வரை பெய்தும் பார்த்திருக்கிறேன். ஆனால், ஒருநாள் பனி பெய்தால், அடுத்த நாள் வெயில் அடிக்கும். பனி உருகும். குளிர் ரொம்பவும் வாட்டாது. ஆனால், இங்கு நவம்பரில் தொடங்கும் பனி, பிப்ரவரியில் முடிந்தாலும், அதன் வீரியம் அதிகம். வெளியில் ஒரு நிமிடம் நிற்க முடியாது. கட்டிடங்களுக்குள்ளேயே நம்மை கட்டுப்படுத்தி வைத்துவிடும்.
குளிர் காலங்களில் வெளியில் நடமாடுவதில் இருக்கும் பிரச்சினையைச் கருத்தில் கொண்டு, மினியாபோலிஸ் மற்றும் செயிண்ட் பால் - இரு ஊர்களிலும் ஸ்கைவே எனப்படும் கட்டிடங்களை இணைக்கும் நடைபாதைகளை அமைத்திருக்கிறார்கள். அதை பற்றி விலாவரியாக, நான் எழுதிய கட்டுரை இங்கே.
பஸ் வசதி அனைத்து இடங்களிலுமே மினியாபோலிஸில் உண்டு. ஆனால், அனைத்தும் டவுண்டவுனுக்கு தான். டவுண்டவுனில் வேலை பார்ப்பவர்கள், அனைத்து சுற்று வட்டாரத்தில் இருந்தும் வந்து விடலாம். டவுண்டவுன் வழியில் இல்லாதவர்களுக்கு சிரமம்தான் என்று நினைக்கிறேன். டென்வரில் இவ்வளவு பஸ்கள் பார்த்ததில்லை என்றாலும், பலதரப்பட்ட இடங்களுக்கு செல்வதை, சென்று பார்த்திருக்கிறேன். அதே சமயம், இங்கு மாநில பொருட்காட்சி, விளையாட்டு போட்டிகள் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு பேருந்துகள் அனைத்து பகுதிகளில் இருந்தும் விடுவார்கள். சில சமயம், இலவச சேவையாக. நிறைய இடங்களில், காரை பார்க் செய்து விட்டு பஸ்ஸில் செல்வதற்கு ஏதுவாக, பார்க் & ரைட் (Park and Ride) வசதிகள் உள்ளன. அது இங்கு இலவசம். டென்வரில் மாத கட்டணம் உண்டு.
பெரும்பாலும், வேலை நாட்களில் பஸ்ஸில் செல்வது தான் வசதி. நகரமெங்கும் நிறைய ஹைவேக்கள் உள்ளன. அதிலும் பேருந்துகளுக்கும், மாற்று திறனாளிகளுக்கும், கூட்டாக ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் செல்லும் வாகனங்களுக்கும் (Car pool) தனி பாதைகள் (Lane) இருக்கும். மொத்த சாலையும் ட்ராபிக்கில் திணறும் போது, இதில் சிரமமில்லாமல் செல்லலாம். மாத கட்டணம் செலுத்தியும் இதில் செல்லலாம்.
நான் டென்வரில் கார் டிரைவிங் லைசன்ஸ் எடுத்திருந்தேன். அங்கு டிரைவிங் லைசன்ஸ் எடுக்க, முதலில் ஒரு பரீட்சை எழுத வேண்டும். பிறகு, வெளியிடங்களில் கார் ஓட்ட கற்றுக் கொடுக்கும் இடங்களிலேயே, நாம் கார் ஓட்டுவதை சோதித்து ஒரு சான்றிதழ் கொடுப்பார்கள். அதைக் கொண்டு சென்று, அரசு போக்குவரத்து அலுவலகத்தில் கொடுத்தால், கண் பரிசோதனை செய்து விட்டு விசா ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் லைசன்ஸ் கொடுத்து விடுவார்கள். இங்கும் அதேப்போல் தான். ஆனால், அரசு அதிகாரியே அரசாங்க சோதனை மையத்தில் நாம் கார் ஓட்டுவதைப் பரிசோதிப்பார்கள். சோதனை தான். விசாரித்த வரையில், இது கஷ்டம் என்கிறார்கள். நான் டென்வரில் லைசன்ஸ் எடுத்திருந்ததால், இங்கு வந்த பின் மினசோட்டா லைசன்ஸ் வாங்க வேண்டியிருந்தது. நல்ல வேளை, பரீட்சை மட்டும் எழுத சொன்னார்கள். அதுவே சிரமபட்டு எழுதி தான் வாங்கினேன்.
இந்த ஊர் சிறப்பு என்று farmers market என்றழைக்கப்படும் உள்ளுர் உழவர் சந்தையைச் சொல்லலாம். நகரின் பல இடங்களில் இது நடைபெறுகிறது. டவுண்டவுன் பக்கம் லின்டேல் அவின்யூவில் வாரயிறுதியில் நடைபெறும் சந்தை பெரியது. அனைத்து வித காய்கறிகளும் கீரைகள், பழங்கள், மலர்கள், ரொட்டி, சீஸ் போன்ற உணவு பொருட்களும் கிடைக்கும். விற்பனை பொருட்கள், சின்ன சின்ன அட்டை பெட்டிகளில் பிரித்து வைக்கப்பட்டு ஒரு பெட்டி $3 க்கும் இரண்டு எடுத்தால் $5க்கும் என விற்பனை செய்யப்படுகிறது. பட்டர் பீன்ஸ் என்று ஊரில் விற்கப்படும் ஒரு வகை பீன்ஸ்ஸை நீண்ட நாட்கள் கழித்து அமெரிக்காவில் முதல் முறையாக இங்கு வாங்க முடிந்தது. கீரை வகைகள் எக்கச்சக்கமாக இங்கு கிடைக்கும். போய் பார்த்தோமானால், ஆளுக்கொரு மரக்கொப்புடன் சுற்றுவார்கள்.
டைம் பாஸ் என்று பார்த்தால், பார்க், பீல் எல்லாம் ஏரிகள் தான். குளிர்காலத்தில் செல்ல மால் ஆப் அமெரிக்கா. எல்லாம் மால்களைப் போல தான். என்ன, கொஞ்சம் பெரிசு. மாலின் நட்ட நடுவில் ஒரு குழந்தைகள் விளையாட ஒரு தீம் பார்க். அப்புறம், ஒரு அக்வேரியம். மற்றபடி, எல்லா மால்களிலும் உள்ள துணிக்கடைகள், உணவகங்கள் என இருப்பது தான். குளிர்காலத்தில், அவுட்டோர் எங்கும் செல்ல முடியாதபோது, மால் ஆப் அமெரிக்காவும் மற்ற மால்களும் தான் தஞ்சம் புக ஏற்ற இடங்கள். என்னளவில், கோடைக்காலத்தில் இதை யோசிக்க முடியாத வகையில், பல்வேறு நிகழ்வுகள் இங்கே நடைபெறுகிறது.
இந்த ஊரில் இரண்டு தமிழ்ச் சங்கங்கள் இருக்கின்றன. சங்கங்கள் பிளவுபடாமல் ஒருங்கிணைந்து இருந்தால் நன்றாக இருக்கும். இந்திய நிகழ்ச்சிகளில் இரு வேறு குழுக்களாக தமிழகம் இடம் பெறுவதைப் பார்க்கும் போது நன்றாக இருப்பதில்லை. இச்சங்கங்கள் இரண்டு தமிழ் பள்ளிகளை நடத்துகின்றன. ஆக, குழந்தைகள் தமிழ் கற்றுக் கொள்வதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. எனக்கும் தமிழ் சொல்லிக் கொடுப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது, தனிப்பட்ட அளவில் மகிழ்ச்சியை தந்தது. இந்தியாவில் கூட, தமிழ்நாடு தவிர்த்து வெளி மாநிலங்களில் இருப்பவர்களுக்கு தமிழ் கற்றுக்கொள்ள கிடைக்காத வாய்ப்பு, அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு இருக்கிறது.
முன்பே, பனிப் பூக்கள் பற்றி எழுதியிருக்கிறேன். மினசோட்டாவில் இருந்து வெளிவரும் சஞ்சிகை. நான் எழுதிய கட்டுரைகளும் வெளிவருவதுண்டு. பனிப்பூக்கள் மூலமாக தமிழகப் பேச்சாளர் திருமதி. சுமதி ஸ்ரீ அவர்களை நேர்காணல் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
ஊரை விட்டு வெளியே பார்த்தோமானால், பக்கத்திலேயே சிகாகோ இருப்பதால், காரை எடுத்துக்கொண்டு அடிக்கடி சென்று வரலாம். சில மாதங்கள் முன்பு, ரஹ்மான் வந்திருந்தபோது, போய் பார்த்துவிட்டு வந்தோம். கச்சேரியில் தான்!!
மொத்தத்தில், மினியாபோலிஸில் முதல் வருடம் நன்றாகவே சென்றது. ஆபிஸ், வீடு என்றில்லாமல் வேறு பல வேலைகளில் ஈடுபடுத்திக்கொள்ள வாய்ப்புகள் கிடைத்துள்ளதால், அதுவும் மகிழ்ச்சியே. குளிர் நம்மை கட்டுபடுத்தி வைப்பதால், அது ஒரு கடியாக இருக்கிறது. அதை ஆளுவதற்கும் சில திட்டங்கள் உள்ளன. அதை இந்த வருடம் செயல்படுத்தி, என்ன ஆனதென அடுத்த வருடம் சொல்கிறேன்.
.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Wishing you many more happy years :-)
Straight forward without prejudice.
Post a Comment