ப்ளோரிடாவில் இருக்கும் நாசாவின் கென்னடி ஸ்பேஸ் செண்டர், படு சீரியஸான விண்வெளி மையம் மட்டுமல்லாது, பொதுமக்களை அன்புடன் வரவேற்கும் சுற்றுலா தலமும் கூட.
இதற்கு அரை நாள் ஒதுக்கினால் போதும் என்று நண்பர்கள் கூற கேட்டதால், மதியத்திற்கு மேல் இங்கு சென்றோம். அன்று லேசான தூறல். ஒர்லண்டோவில் இருந்து ஒரு மணி நேரம்.
நம்மூர் நெடுஞ்சாலையில் இருக்கும் டோல் கேட்டுகள் போல், இந்த வழியிலும் ஏகப்பட்ட டோல் கேட்டுகள். சன்பாஸ் என்னும் ட்ரான்ஸ்பாண்டர் வாங்கி வைத்திருந்தோமானால், நின்று நின்று போக தேவையில்லை. தானியங்கி சென்சார்கள், நம்மை கவனித்துக்கொள்ளும். ஆனால், நான் எடுத்திருந்த வாடகைக்காரில் இந்த சமாச்சாரம் இருப்பது அச்சமயம் எனக்கு தெரிந்திருக்கவில்லை. அதனால், ஒவ்வொரு டோலிலும், ஒரு டாலர், இரண்டு டாலர் என்று கொடுத்துக்கொண்டே சென்றேன்.
கென்னடி ஸ்பேஸ் செண்டர் இருப்பது, ஒரு குட்டி தீவில். செல்லும் பாதையின் இருபக்கமும், கடல். அன்று மெல்லிய மழை வேறு. பயணம் ரம்மியமாக இருந்தது.
நாசாவின் விண்வெளி மையம் என்பதால் பாதுகாப்பு சோதனை பலமாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். அப்படி ஒன்றும் இல்லை.
பொதுவாக, அமெரிக்க பார்க்கிங் தளங்களில், எங்கு பார்க்கிங் செய்தோம் என்று நினைவில் வைத்திருப்பதற்கு உதவியாக, அந்த இடங்களில் ஏதேனும் பெயர் வைத்திருப்பார்கள். உதாரணத்திற்கு, டிஸ்னியில் மிக்கி, மின்னி என்று இருக்கும். யூனிவர்சலில் அவர்கள் பட கதாபாத்திரங்கள் பெயர் இருக்கும். உ.தா. - ஸ்பைடர்மேன். எங்கூர் மாலில், அமெரிக்க மாநிலங்களின் பெயர்கள். இங்கு நாசாவில், விண்வெளி வீரர்கள் பெயர்கள்.
அஸ்ட்ரோனாட் (astronaut) என்பதற்கு ஏன் விண்வெளி வீரர் என்று தமிழில் அழைக்கிறார்கள் என்று யோசித்ததுண்டு. போலவே, கிரிக்கெட் வீரர் என்ற சொல். என்ன வீரமிகு செயல்? என்று யோசனை. அன்று உள்ளே இதை புரிந்துக்கொள்ள முடிந்தது. இதைப் பற்றி இன்னும் சில பத்திகளில் சொல்கிறேன்.
நாங்கள் உள்ளே செல்லவும், டூர் பஸ் கிளம்பவும் சரியாக இருந்தது. ஏறிக்கொண்டோம். அங்கிருக்கும் கட்டிடங்கள், ஏவுதளங்கள், ராட்சத ஏவுதள வாகனங்கள் போன்றவற்றை பஸ்ஸில் இருந்தே காட்டினார்கள். ஜாலியான வர்ணனையுடன். பஸ்ஸில் இருக்கும் டிவியிலும், அவ்வப்போது படம் காட்டினார்கள்.
ஷட்டில் க்ராலர் ட்ரான்ஸ்போர்டர் (shuttle crawler transporter) என்னும் ராட்சத வாகனம் கவனத்தை ஈர்த்தது. இது ராக்கெட் மற்றும் பிற விண்வெளி சாதனங்களை சுமந்து செல்ல உதவுகிறது. உலகின் மிக பெரிய வாகனம், இதுவாகத்தான் இருக்கும். கிட்டத்தட்ட, மூவாயிரம் டன் எடை. முன்னூறு லிட்டர் டீசல் ஊற்றினால் ஒரு கிலோமீட்டர் ஓடும் அட்டகாச மைலேஜ் கொண்டது. போலவே, ஒரு மணி நேரத்தில் அதிகபட்சமாக ஒன்றரை கிலோமீட்டர் செல்லும் அபார ஆற்றல் கொண்டது. நக்கலாக சொல்வதுபோல் இருந்தாலும், உண்மையில் அது ஒரு பலமான ராட்சத சோம்பேறி எந்திரன்.
பிறகு, ஒரு அரங்கில் நாசாவின் இந்த விண்வெளித்தளத்தைப் பற்றிய வரலாற்று செய்திப்படத்தை ஒளிப்பரப்பினார்கள்.
1960களில் சோவியத் யூனியன் விண்வெளி ஆராய்ச்சியில் நிலவை முதலில் தொட்டது, மிக பெரிய சாதனையாக இருந்தது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு யாருக்கு உலக தாதா என்னும் போட்டி சூழ்நிலையில், அமெரிக்காவிற்கு இது மிகப் பெரிய அடியாக இருந்தது. யார் எங்கு போர்க்கப்பலை நிறுத்துவது, யாரால் எவ்வளவு தூரம் ராக்கெட் விட முடியும், யாரிடம் அணு ஆயுதம் இருக்கிறது என்பவை யாருக்கு உலக வல்லரசு பட்டத்தைக் கொடுக்கலாம் என்பதற்கான தகுதியாக இருந்த காலம் அது. இச்சமயத்தில் சோவியத் யூனியன் முதலில் நிலவைத் தொட்டது, ஹீரோஷிமா-நாகஷாகியில் இரு அணுகுண்டை வீசி கர்வத்துடன் இருந்த அமெரிக்காவை அசைத்து பார்த்தது. கிட்டத்தட்ட இதே டோனில் தான், அந்த செய்திப்படத்திலும் சொன்னார்கள். (நிலவிற்கு ராக்கெட் விட முடிந்தால், நம் தலை மேலும் எதையும் பறக்கவிட முடியுமல்லவா? unfair advantage!!!...)
1970க்குள் மனிதனை நிலவுக்கு அனுப்புவது என்ற டார்கெட்டை நிர்ணயித்தார் அப்போதைய அமெரிக்க அதிபர், கென்னடி. அதில் அரசியல், அறிவியல், பாதுகாப்பு, போட்டி என பல கச்சாப்பொருட்கள் இருந்தன. அப்போது நிர்மாணிக்கப்பட்டது தான், இந்த இடம். பிறகு, ஒரு வருட காலத்தில் கென்னடி இறக்க, அவரது நினைவைப் போற்ற, கனவை நிறைவேற்ற, இவ்விடத்திற்கு அவரது பெயரையே சூட்டினார்கள்.
சொன்னது போல், 1969இல் உலகில் முதல்முறையாக மனிதனை நிலவிற்கு அனுப்பி, பத்திரமாக உலகிற்கு திரும்பக்கொண்டு வந்தார்கள். 1970க்குள் டார்கெட்டை நிறைவேற்ற போட்ட நாடகம் அது என்று சொல்பவர்களும் உண்டு.
கொசுறு செய்தி - அப்போதைய சோவியத் யூனியனின் விண்வெளி முயற்சிகளுக்கு வெளிப்படையான பெயர் எப்போது வைப்பார்கள் தெரியுமா? சக்சஸாக விண்வெளிக்குள் நுழைந்தால் மட்டும்தானாம். அப்போது தான் அது பற்றி வெளியே தெரியுமாம். தோல்விகள் கவுரவத்துடன் மறைக்கப்பட, அப்படி ஒரு ஏற்பாடு.
அந்த செய்திப்படத்திற்கு பிறகு, ஒரு கட்டுப்பாட்டு அறை போன்ற அரங்கிற்கு சென்றோம். உண்மையில் ஒரு விண்வெளி நிகழ்வு நடக்கும் சூழலை கண்முன் கொண்டு வந்து காட்டினார்கள்.
லாஞ்ச் நடக்கும் போது, அதை பார்ப்பதற்கு வெளியில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
அங்கு மையத்தில் நாசா லோகோவுடன் கம்பீரமாக நின்றுக்கொண்டு இருக்கும் விண்வெளி வாகன நிறுவும் கட்டிடம், அமெரிக்காவில் நகர்புறம் அல்லாது வெளியில் அமைந்திருக்கும் கட்டிடங்களில் உயரமானது. உலகிலேயே ஒரு தளம் மட்டும் கொண்ட கட்டிடங்களில் பெரியது.
இவை மட்டுமல்லாது, நாங்கள் சென்ற பஸ்ஸின் டிரைவர், அந்த தீவின் சூழலைப்பற்றியும், அங்கிருக்கும் உயிரினங்கள் பற்றியும் கூறிக்கொண்டே வந்தார். ஒரு மரத்தில் இருக்கும் பெரிய கழுகு கூட்டையும் காட்டினார்.
பிறகு, வேகமாக அங்கு அமைக்கப்பட்டிருந்த விண்வெளி சம்பந்தமான கண்காட்சியைக் கண்டோம். மாதிரி ராக்கெட்டுகள், சேட்டிலைட்டுகள், உடுப்புகள் மற்றும் இன்னபிற விண்வெளி சமாச்சாரங்கள் காணக்கிடைத்தன.
அங்கிருக்கும் ஐமாக்ஸ் திரையரங்கில் விண்வெளி சம்பந்தமான 3டி திரைப்படங்கள் போடுகிறார்கள். நாங்கள் ஒரு படம் பார்த்தோம். ஜர்னி டூ ஸ்பேஸ். படம் கொடுத்த சோர்வா? அல்லது பயணம் கொடுத்த சோர்வா? தெரியவில்லை. கொஞ்ச நேரம் தூங்கிவிட்டேன்.
படம் முடிய இரவு மணி ஏழாகியிருந்தது. அடுத்த நாள் மியாமி என்பதால், அதற்கு பக்கமிருக்கும் போர்ட் லாடெர்டெயில் என்னும் ஊரில் ரூம் புக் செய்திருந்தேன்.
இருட்ட தொடங்க, ஹோட்டல் ரூம் நோக்கி எங்கள் பயணத்தைத் தொடங்கினோம்.
வழியில் ஏதோ ஒரு ஊரில், ஒரு சைனீஸ் ரெஸ்டாரெண்டில் சைவ ப்ரைட் ரைஸ் சாப்பிட்டோம் (வெள்ளிக்கிழமை!!!). போகும் வழியில், ஒரு இடத்தில், ஜிபிஎஸ் சொதப்பி விட, 30 மைல்கள் தேவையில்லாமல் சுற்ற வேண்டியதாக போனது. அதில் கொஞ்சம் நேரத்தைக் கடுப்புடன் தின்றோம்.
நள்ளிரவில் நாங்கள் புக் செய்த ஹோட்டலுக்கு செல்ல, ஹோட்டல் மூடப்பட்டு, கதவில் இரண்டு பேப்பர்கள் ஒட்டப்பட்டிருந்தது. ஒவ்வொன்றிலும், ஒருவர் பெயரை குறித்து, ஒரு அறை எண்ணைக் குறிப்பிட்டு, அந்த அறையை திறக்க வழிமுறைகள் சொல்லப்பட்டு இருந்தது. இரண்டிலும், என் பெயர் இல்லை.
என்னிடம் இருந்த ரிசர்வேஷன் தாளில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைப்பேசி எண்ணுக்கு அழைத்து, தகவலைச் சொல்ல, ஒரு மூதாட்டி மாடியில் இருந்து வந்தார். முதலில் அறை இல்லை என்று பகீர் ஏற்படுத்தினார். பிறகு, விவரத்தை சொல்ல, பதிவேட்டை சோதித்து பார்த்து, என் பெயரில் எனது கார்டை பயன்படுத்தி, ஏற்கனவே ஒருவர் தங்கியிருக்கிறார் என்று இன்னொரு பகீரை தூக்கி போட்டார். என்னடா, இது சோதனை? என்று நன்றாக சோதித்துப் பார்க்க சொல்ல, பிறகு பதிவேட்டில் பதியப்பட்ட தவறை கண்டுப்பிடித்து, அம்மையார் அறை சாவியை கொடுத்தார்.
அப்பாடா, நிம்மதியாக தூங்கினேன்.
.
No comments:
Post a Comment