Wednesday, April 22, 2015

மியாமியில் கொஞ்சம் ஓய்வு


முந்தைய கென்னடி ஸ்பேஸ் செண்டர் பதிவின் தொடர்ச்சி.

கடந்த இரண்டு தினங்களாக, ரொம்ப திட்டமிட்டு, விரட்டி விரட்டி சென்றதால் நன்றாகவே டயர்ட் ஆகி இருந்தோம். அதனால் மியாமியில் எவ்வித டைட் பிளானும் இல்லாமல், சாவகாசமாக சுற்றலாம் என்று ப்ளான் செய்திருந்தோம். அதாவது, ப்ளான் வேண்டாம் என்று ஒரு ப்ளான்!!

மியாமி என்றாலே நீலநிற கடல் பரப்பும், வெளீர் மணல் பரப்பும் கொண்ட பீச் தானே மன பிம்பத்தில் வரும்? அதனால், அச்சூழலை அனுபவிப்பது மட்டும் தான், முதல் குறிக்கோளாக இருந்தது. அது என்னமோ, கடல் என்றாலே ஒரு நெருக்கம் வந்துவிடுகிறது.



காலையில் போர்ட் லாடெர்டெயில் ஹோட்டலில் ப்ரேக்பாஸ்ட் சாப்பிடும்போது பார்த்தவரை, அங்கு தங்கியிருந்தவர்கள் அனைவரும் தாத்தா-பாட்டிகளே. பேகலும் ஜூஸும் சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம். வெளியில் மழை பொழிய தொடங்கியிருந்தது.

போகும் வழியெங்கும் மழை அதிகரித்திருந்தது. ஐயய்யோ! இன்றைய ப்ளான் சொதப்பல்ஸா என்று நினைத்துக்கொண்டே, மியாமி பீச்சை நெருங்கும் போது, அங்கே மழையே இல்லை. ஆனால், எப்போது வேண்டுமானால் பெய்ய தொடங்கும் போல் இருந்தது.



எங்களை கடலையோட்டிய பெரும் உயர கட்டிடங்கள் வரவேற்றது. நாங்கள் முதலில் செல்ல நினைத்தது - சவுத் பீச். அது நகரத்தை ஒட்டி இருக்கும் தீவு.  சில பாலங்களைக் கொண்டு நகரத்தின் நிலபரப்புடன் இணைக்கப்பட்டிருந்தது. சில பெரிய க்ரூஸ் கப்பல்களை போகும் வழியில் காண முடிந்தது.




ஆர்ட் டெகொ எனப்படும் கட்டிடக்கலையில் உருவான கட்டிடங்களை, மியாமியில் பெருமளவில் காணலாம் என்று கேள்விப்பட்டிருந்ததால், அவ்வகை கட்டிடங்களை இருக்கும் பக்கம் காரில் சென்றோம். சிறு சிறு சாலைகளே. மக்கள் நடந்தும், சைக்கிளிலும் பேசி சிரித்து சென்றுக்கொண்டிருந்தார்கள். எங்கெங்கோ இருந்து வந்தவர்கள், இவ்வூரில் தங்கள் கதையை பேசி காற்றில் கரைத்துக்கொண்டிருந்தார்கள்.



ஓசன் ட்ரைவ் என்னும் சாலையில் நுழைந்திருந்தோம். சாலையோர பார்க்கிங் அனைத்தும் புல். ஒரு பக்கத்தில் வரிசையாக ரெஸ்டாரண்டுகள். வாசலுக்கு வெளியே, குடைகள் அமைக்கப்பட்டு, சாலையோரத்தில் மேஜை நாற்காலிகள் போடப்பட்டு, மறுபக்கம் இருக்கும் கடலை பார்த்துக்கொண்டும், கடல் காற்றை சுவாசித்துக்கொண்டும் சாப்பிடுவதற்கு ஏதுவான அமைப்பு.

பக்கத்திலேயே ஒரு சிறு சந்தில் நுழைய, அங்கிருக்கும் அரசாங்க பார்க்கிங் கட்டிடம் கண்ணில் பட்டது. முதலாம் தளத்தில் பார்க்கிங் செய்து விட்டு, ஓசன் ட்ரைவ் சாலையோர உணவகங்கள் ஊடே நடந்தோம். நடப்போர்க்கு இருபக்கமும் உணவகத்தில் உண்பவர்கள். அவர்கள் ப்ளேட்டைப் பார்ப்பது டீசண்ட் இல்லையென்றாலும், உள்ளூர் கலாசாரத்தைக் காண இதைவிட சிறந்த வழியில்லையே!!! பெரிய பெரிய கோப்பைகளில் எலுமிச்சை மிதந்த தண்ணீர் போல் காட்சியளித்த திரவம், வோட்காவாக இருக்கலாம். அது பொதுவான அம்சமாக இருந்தது.


சாலைக்கு மறுபுறம் சென்று, கடற்கரைக்குள் நுழைந்தோம். கடலில் இறங்கி, சிறிது நேரம் காலை நனைத்தோம். என் பெண் உடையை மாற்றிக்கொண்டு, உள்ளே இறங்கி, முழுவதுமாக நனைந்திருந்தாள்.






அவ்வளவு கூட்டமில்லை. கடற்கரையில் தரையிலும் படுத்து, சூரிய குளியல் எடுக்கலாம். அங்கு போடப்பட்டிருந்த மர சாய்வு நாற்காலி+படுக்கையிலும் படுத்து அதை அனுபவிக்கலாம். சிலவற்றை மட்டும் விட்டு விட்டு, ஓரிரண்டு பேர்கள்  அந்த படுக்கைகளை எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தார்கள். பிறகு, பக்கமிருந்த குழந்தைகளுக்கான விளையாட்டுகள் கொண்ட பூங்காவில் சிறிது நேரம் செலவிட்டோம். கடலில் குளித்துவிட்டு வருபவர்கள் குளிக்க, அங்கு திறந்தவெளி ஷவர்கள் அமைக்கப்பட்டு இருந்தது.



அருகே இருந்த ஒரு ரெஸ்டாரண்ட்டில், அவ்வப்போது ஒரு இசை கலைஞர் ட்ரம்ஸ் இசையமைக்க, கூட்டம் எல்லாப்பக்கமும் இருந்து கூடியது. உண்மையிலேயே, ஆட்டம் போட வைக்கும் இசை. கேளிக்கை வாழ்வு, ரசனையுடன்.



மதியம் ஆகியிருக்க, பசியெடுக்க ஆரம்பித்தது. இவ்வளவு ரெஸ்டாரண்டுகள் இருக்க, எதற்கு செல்லலாம் என்ற யோசனை வந்தது. மொபைலில் ட் ரிப் அட்வைசரில் அட்வைஸ் கேட்டதற்கு, 'விசா-ஓ1 எக்ஸ்ட்ரா ஆர்ட்னரி பிட்ஸா' என்று ஒரு கடையை பரிந்துரைத்தது. நாங்க நின்ற இடத்தில் இருந்து ஒரு மைல் தூரம் இருக்கும். சரி, ஊரை சுற்றி பார்த்துக்கொண்டே செல்லலாம் என்று கதை பேசிக்கொண்டு கிளம்பினோம்.

கிட்டத்தட்ட கடைக்கு அருகே வந்துவிட்டோம் என்று மொபைல் சொல்லியது. ஆனால், கடை கண்ணில் படவில்லை. சுற்றி சுற்றி வந்தோம். அட்ரஸில் கொடுத்திருந்த எண் குறிப்பிடப்பட்டிருந்த கட்டிடத்திற்கு முன்புதான் நின்றுக்கொண்டிருந்தோம். ஆனால், அப்படி ஒரு பிட்ஸா கடை இருப்பதற்கான அறிகுறிகளே இல்லை. ஒருவேளை, கடையை காலி செய்து சென்றிருப்பார்களே? நல்லவிதமாக போட்டிருக்கிறதே! ஒருவேளை, முன்னேறி வேறு இடத்தில் பெரிய கடை போட்டிருப்பார்களோ? என் யோசனை இப்படி. மனைவி முறைத்துக்கொண்டிருக்கிறாள். பசி.

எங்களுக்கு பக்கத்திலேயே இன்னொரு பெண்ணும் அவருடைய பெண்ணும் எங்களைப் போலவே எதையோ தேடுவது போல் இருந்தது.

சரி, கடை பெயர் இல்லாவிட்டாலும், ஒகே, அந்த கட்டிடத்திற்குள் சென்று பார்க்கலாம் என்று நுழைந்தோம். உள்ளே அக்ஸஸ் கார்டு மூலம் அனுமதிக்கும் கண்ணாடி கதவு இருந்தது. ஏதோ ஆபிஸ் பில்டிங் போல. கதவுக்கு பக்கத்திலேயே ஒரு இளம் பெண் உட்கார்ந்திருந்தார். எங்களை தயக்கத்துடன் இருப்பது கண்டு 'பிட்ஸா?' என்றார். நாங்களும் எஸ் என்று தலையை அசைக்க, கதவை திறந்து உள்ளே வழிக்காட்டினார். எங்களைத் தொடர்ந்து அந்த இன்னொரு குடும்பமும் உள்ளே வந்தது.

அது வெகு சிறிய கடை. மொத்தம் ஆறோ எட்டோ சிறு டேபிள்கள். ஒவ்வொன்றிலும் இரண்டு அல்லது நான்கு சின்ன சேர்கள். ஆனால், கடை முழுவதும் நிரம்பியிருந்தது. மொத்தம் நான்கு பேர் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். பட்டப்படிப்பு படித்து, ஏதோ பேஷனில் பிட்ஸா கடை வைத்தது போல இருந்தார்கள்.

10 நிமிடங்கள் வெளியே காத்திருக்க சொன்னார்கள். உட்காரக்கூட வெளியே சேர் இல்லை. நின்றுக்கொண்டு இருந்தோம்.

எங்களுடன் உள்ளே வந்த பெண், சாப்பிட்டு விட்டு வெளியே வந்த ஒரு பெண்ணிடம், சுவைப் பற்றி கேட்டார். அவர் புகழ்ந்துவிட்டு சென்றார். காத்துக்கொண்டு நிற்பது, பெரிதாக தெரியவில்லை.

கிட்டத்தட்ட, அனைவரும் ஆன்லைன் ரிவ்யூஸ் மூலமாகவே வந்திருப்பது தெரிந்தது. இணையம் மூலம் திறமைக்கு கிடைக்கும் பலன் - கண்கூடாக தெரிந்தது.

உள்ளே அழைத்தார்கள். கல்லாவில் இருக்கும் பெண் தான், சர்வ் செய்வதும். சமையலறையில் மூன்று பேர்கள். முன்பு சாப்பிட்டு விட்டு, புகழ்ந்து சென்ற பெண், ஸ்டார் பிட்ஸா என்றொரு வகையை பரிந்துரைத்துவிட்டு சென்றிருந்தார். அதையே ஆர்டர் செய்தோம். விலையும் குறைவும் இல்லை. அதிகமும் இல்லை.



இரண்டு மீடியம் சைஸ் இருவகை பிட்ஸாக்கள் ஆர்டர் செய்திருந்தோம். இரண்டுமே நல்ல சுவை. சீக்கிரமே காலியானது.

வெளியே வரும் போது, தேடியலைந்து இன்னும் சிலர் உள்ளே நுழைந்தார்கள்.

அடுத்ததாக சென்றது, கொஞ்சம் பக்கத்தில் இருந்த, கொலோகாஸ்ட் (holocaust) நினைவு சின்னம்.





கொலோகாஸ்ட் என்பது ஜெர்மனியில் நாஜிக்களால் பல லட்சம் யூதர்கள் கொல்லப்பட்ட இனப் படுகொலை நிகழ்வைக் குறிப்பதாகும். சரி, அதற்கான நினைவு சின்னம் எதற்கு மியாமியில்? ஜாலி பண்ண உலகம் முழுக்க இருந்து வரும் இடத்தில் எதற்கு சோக மண்டபம் என்ற கேள்வியும் எதிர்ப்பும் இவ்விடம் உருவாக எழுந்த முயற்சியின் போதே கிளம்பியது. இதற்கான ஏற்பாட்டை தொடங்கிய, இனப்படுகொலை நிகழ்வில் இருந்த தப்பியவர்கள், அந்த கேள்வியை தான் பதிலாக சொன்னார்கள். அவ்வாறு தப்பிவந்தவர்கள், அதிகம் வசிப்பது இந்த மாகாணப்பகுதி என்பது இன்னொரு காரணம்.







அவ்வளவு கொண்டாட்ட மனநிலையையும், ஒரு நிமிடத்தில் மாற்றிவிடும் வல்லமைக்கொண்டது இந்த இடம். தண்ணீருக்கு மத்தியில், ஒரு பிரமாண்ட கை. அந்த கையெங்கும் தப்பிக்க உதவி கேட்கும் கேட்கும் மனிதர்கள். கிட்டே சென்றால், உள்ளே நிறைய பரிதாப உருவங்கள். மனதை நடுங்க வைக்கும் இசை பின்னணியில். சுவரெங்கும் அந்த இனப்படுகொலையில் கொல்லப்பட்ட மனிதர்களின் பெயர்கள். வரலாற்றைப் படிக்கும் விருப்பம் இல்லாதவர்களுக்கும், இம்மாதிரி நினைவு சின்னங்கள் தான் வரலாற்றின் கொடூர பக்கத்தை தெரியப்படுத்துவதாகவும், நினைவுப்படுத்துவதாகவும் இருக்கிறது. சொற்பமானவர்களே, இவ்விடத்திற்கு வருகிறார்கள்.



பக்கத்திலேயே ஒரு சின்ன பொட்டானிகல் கார்டன் இருக்கிறது. ஆனாலும், நாங்கள் செல்லவில்லை. மெதுவாக நடந்து, பக்கத்தில் இருக்கும் லிங்கன் சாலைக்கு சென்றோம். அது அங்கிருக்கும் பிரபல கடைத்தெரு. நிறைய ரெஸ்டாரெண்டுகள் இங்கும் வழியெங்கும். ஒரு மிட்டாய்கடையில் விதவிதமாக கிடைத்த பல வகை இனிப்பு வகைகளை வாங்கினோம். பிறகு, நினைவு பொருட்களாக சில டீ-சர்ட்கள், காந்த நினைவுச்சின்னங்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு பக்கத்தில் இருக்கும் பீச்சிற்கு சென்றோம்.




நல்ல காற்று. அவ்வளவாக கூட்டம் இல்லை. பேசிக்கொண்டு மெதுவாக நடந்தோம். பட்டாணி, சுண்டல் இல்லாததது பெருங்குறையாக இருந்தது!!



இருட்டத் தொடங்கவே அங்கிருந்து கிளம்பினோம்.

ப்ளோரிடா, கியூபாவிற்கு ரொம்ப பக்கம் என்பதால், இங்கு கியூபாவில் இருந்து வந்த மக்கள் அதிகம். அந்த காரணத்தினால், இங்கு கியூப உணவு அதிகம் கிடைக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால், அடுத்ததாக இரவு உணவிற்கு ஒரு கியூப உணவகத்திற்கு செல்ல கிளம்பினோம். அது பற்றி அடுத்த பதிவில்.

போவதற்கு முன்...

மியாமியில் மட்டுமே சுற்ற, சில நாட்களை ஒதுக்கலாம். எனக்கு ஒர்லாண்டோ தீம் பார்க்குகளிலே சுற்றி கொண்டிருப்பது போர் என்பதால் மியாமிக்கும் ஒரு நாள் ஒதுக்கி இருந்தேன். ஒரு நாளில் ரொம்பவும் திட்டமிடமுடியாததால்,  அதிகம் அலட்டிக்கொள்ளாமல், மனம் போன போக்கில் அன்றைய தினத்தை அமைத்துக்கொண்டோம். மனதிற்கும், உடலுக்கும் அன்றைய தினம் பெரும் ஓய்வாக இருந்தது. பின்ன, மியாமி செல்வதற்கு ஓய்வுக்கு தானே?

.

Friday, April 17, 2015

ஒகே கண்மணி - ஒகேவான மணிரத்னம்



பல நாட்களாக ஒரு ஆசை. மணிரத்னம் உட்கார்ந்து பார்க்குற மாதிரி ஒரு படம் எடுத்துற மாட்டாரா? என்று. ஆசையை இன்று நிறைவேற்றிவிட்டார்.

எத்தனை ப்ளாப் கொடுத்தாலும், மணிரத்னத்தை ரசிப்பவர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள். நம்பிக்கை வைத்து, முதல் நாளே செல்கிறார்கள். நான் எதிர்பார்க்கவேயில்லை. எங்கூர் (மின்னியாபோலிஸ்) தியேட்டர் இப்படி நிரம்பி கிடக்கும் என்று. நானும் நண்பரும் குடும்பத்துடன் சென்றிருந்தோம். கொஞ்சம் லேட்டாக சென்றதால், இடம் கிடைக்காமல் மனைவிமார்கள் தனியாக உட்கார, நாங்கள் தனியாக உட்கார்ந்தோம். இம்மாதிரி நடந்தது முதல் முறை.

கதை ஏற்கனவே வைரமுத்து சொன்னது தான். லிவிங் டூகெதர் பற்றியது. அதை சிரமப்படாமல், மணிரத்னத்திற்கே உரிய ஸ்டைலில் சொல்லியிருக்கிறார்.

படம் எனக்கு பிடித்திருந்தது. நான் எதிர்பார்ப்பே இல்லாமல் சென்றிருந்தேன். என்னை உட்கார்ந்து நெளியாமல் பார்க்க வைத்தால் போதும் என்பது தான் எனது அதிகபட்ச எதிர்பார்ப்பு. அதை படம் நிறைவேற்றிவிட்டது.

சிறிய நடிக பட்டாளம். அனைவரும் அளவாக நடித்திருக்கிறார்கள். மணிரத்னம் டெம்ப்ளேட் புரிந்தவர்களுக்கு, யார் யார் எதற்கு எதற்கு திரைக்கதையில் உதவ போகிறார்கள் என்று கதாபாத்திர அறிமுகங்களின் போதே தெரிந்திருக்கும். அலைபாயுதேவில் கொஞ்ச நேரம் வரும் அரவிந்த்சாமி என்றால் இதில் படம் முழுக்க வரும் பிரகாஷ்ராஜ். யாரையும் போட்டு தாக்காமல், பில்குட்டுடனே படம் முடிகிறது.

படம் வருவதற்கு முன்பு 'மெண்டல் மனதில்' பாடல் மட்டுமே கேட்க பிடித்திருந்தது. படத்தில் கேட்க, அனைத்து பாடல்களும் நன்றாக இருந்தது. 'பறந்து செல்லவா' முதலில் கேட்கும் போது, என்னடா இதுவென்பது போல் இருந்தது. படத்தில் லூபி ஆப் பற்றி சொல்லிவிட்டு வரும்போது, ரஹ்மான் இசையின் மேஜிக் தெரிந்தது. அது யாருப்பா? பிஜிஎம்மில் ரஹ்மானுடன் பங்கு போட்டுக்கொண்டது?

பொதுவாக மணிரத்னம் படங்களில் ரஹ்மான் பாடல்கள் நன்றாக படமாக்கப்படும் என்பது போல், வேஸ்ட் செய்யப்படுவதும் நடக்கும். இந்த படத்தில் நன்றாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. ரஹ்மான் மகன் பாடல் கூட சரியான இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பி.சி. ஸ்ரீராம் கேமராவை ஆட்ட வேண்டிய இடத்தில் ஆட்டி, நனைக்க வேண்டிய இடத்தில் நனைத்து, நம்மை காட்சிக்குள் கொண்டு செல்கிறார்.

படமாக்கத்தில் பணிபுரிந்திருக்கும் அனைத்து கலைஞர்களும் லெஜண்ட்ஸ் என்றாலும் லைட்டாக, ஜாலியாக ஒரு படம் எடுத்திருக்கிறார்கள்.

ரயில், கடற்கரை, புறா என்று மணிரத்னம் க்ளிஷே இல்லாமல் இல்லை. அதெல்லாம் சேர்ந்ததுதானே 'ஏ மணிரத்னம் பிலிம்'.

யூகிக்கக்கூடிய திரைக்கதை, அழுத்தமில்லா காட்சிகள் என்று இருந்தாலும் போதிய நடைச்சுவையுடன் சலிப்பில்லாமல் செல்லும் படம் என்பதால் ஒகே கண்மணி ஓகே ஓகே.

மணிரத்னம் 80-90களில் ஸ்கோர் செய்த படங்களினால், இப்பொழுதும் அவர் படங்களுக்கு மார்க் போட ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர் தான் தயாரில்லாமல் இருந்தார். இதோ, இப்பொழுது இன்று மார்க் வேண்டி ரசிகர்களின் தேவைக்கேற்ப படம் எடுத்திருக்கிறார். ரசிகர்கள் மார்க் கேரண்டி.

மணிரத்னத்தின் அடுத்த 10 படங்களுக்கும் கூட்டம் தயார்.

.

Saturday, April 4, 2015

நாசா - கென்னடி ஸ்பேஸ் செண்டர்


ப்ளோரிடாவில் இருக்கும் நாசாவின் கென்னடி ஸ்பேஸ் செண்டர், படு சீரியஸான விண்வெளி மையம் மட்டுமல்லாது, பொதுமக்களை அன்புடன் வரவேற்கும் சுற்றுலா தலமும் கூட.

இதற்கு அரை நாள் ஒதுக்கினால் போதும் என்று நண்பர்கள் கூற கேட்டதால், மதியத்திற்கு மேல் இங்கு சென்றோம். அன்று லேசான தூறல். ஒர்லண்டோவில் இருந்து ஒரு மணி நேரம்.

நம்மூர் நெடுஞ்சாலையில் இருக்கும் டோல் கேட்டுகள் போல், இந்த வழியிலும் ஏகப்பட்ட டோல் கேட்டுகள். சன்பாஸ் என்னும் ட்ரான்ஸ்பாண்டர் வாங்கி வைத்திருந்தோமானால், நின்று நின்று போக தேவையில்லை. தானியங்கி சென்சார்கள், நம்மை கவனித்துக்கொள்ளும். ஆனால், நான் எடுத்திருந்த வாடகைக்காரில் இந்த சமாச்சாரம் இருப்பது அச்சமயம் எனக்கு தெரிந்திருக்கவில்லை. அதனால், ஒவ்வொரு டோலிலும், ஒரு டாலர், இரண்டு டாலர் என்று கொடுத்துக்கொண்டே சென்றேன்.

கென்னடி ஸ்பேஸ் செண்டர் இருப்பது, ஒரு குட்டி தீவில். செல்லும் பாதையின் இருபக்கமும், கடல். அன்று மெல்லிய மழை வேறு. பயணம் ரம்மியமாக இருந்தது.

நாசாவின் விண்வெளி மையம் என்பதால் பாதுகாப்பு சோதனை பலமாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். அப்படி ஒன்றும் இல்லை.

பொதுவாக, அமெரிக்க பார்க்கிங் தளங்களில், எங்கு பார்க்கிங் செய்தோம் என்று நினைவில் வைத்திருப்பதற்கு உதவியாக, அந்த இடங்களில் ஏதேனும் பெயர் வைத்திருப்பார்கள். உதாரணத்திற்கு, டிஸ்னியில் மிக்கி, மின்னி என்று இருக்கும். யூனிவர்சலில் அவர்கள் பட கதாபாத்திரங்கள் பெயர் இருக்கும். உ.தா. - ஸ்பைடர்மேன். எங்கூர் மாலில், அமெரிக்க மாநிலங்களின் பெயர்கள். இங்கு நாசாவில், விண்வெளி வீரர்கள் பெயர்கள்.

அஸ்ட்ரோனாட் (astronaut) என்பதற்கு ஏன் விண்வெளி வீரர் என்று தமிழில் அழைக்கிறார்கள் என்று யோசித்ததுண்டு. போலவே, கிரிக்கெட் வீரர் என்ற சொல். என்ன வீரமிகு செயல்? என்று யோசனை. அன்று உள்ளே இதை புரிந்துக்கொள்ள முடிந்தது. இதைப் பற்றி இன்னும் சில பத்திகளில் சொல்கிறேன்.


நாங்கள் உள்ளே செல்லவும், டூர் பஸ் கிளம்பவும் சரியாக இருந்தது. ஏறிக்கொண்டோம். அங்கிருக்கும் கட்டிடங்கள், ஏவுதளங்கள், ராட்சத ஏவுதள வாகனங்கள் போன்றவற்றை பஸ்ஸில் இருந்தே காட்டினார்கள். ஜாலியான வர்ணனையுடன். பஸ்ஸில் இருக்கும் டிவியிலும், அவ்வப்போது படம் காட்டினார்கள்.


ஷட்டில் க்ராலர் ட்ரான்ஸ்போர்டர் (shuttle crawler transporter) என்னும் ராட்சத வாகனம் கவனத்தை ஈர்த்தது. இது ராக்கெட் மற்றும் பிற விண்வெளி சாதனங்களை சுமந்து செல்ல உதவுகிறது. உலகின் மிக பெரிய வாகனம், இதுவாகத்தான் இருக்கும். கிட்டத்தட்ட, மூவாயிரம் டன் எடை. முன்னூறு லிட்டர் டீசல் ஊற்றினால் ஒரு கிலோமீட்டர் ஓடும் அட்டகாச மைலேஜ் கொண்டது. போலவே, ஒரு மணி நேரத்தில் அதிகபட்சமாக ஒன்றரை கிலோமீட்டர் செல்லும் அபார ஆற்றல் கொண்டது. நக்கலாக சொல்வதுபோல் இருந்தாலும், உண்மையில் அது ஒரு பலமான ராட்சத சோம்பேறி எந்திரன்.


பிறகு, ஒரு அரங்கில் நாசாவின் இந்த விண்வெளித்தளத்தைப் பற்றிய வரலாற்று செய்திப்படத்தை ஒளிப்பரப்பினார்கள்.


1960களில் சோவியத் யூனியன் விண்வெளி ஆராய்ச்சியில் நிலவை முதலில் தொட்டது, மிக பெரிய சாதனையாக இருந்தது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு யாருக்கு உலக தாதா என்னும் போட்டி சூழ்நிலையில், அமெரிக்காவிற்கு இது மிகப் பெரிய அடியாக இருந்தது. யார் எங்கு போர்க்கப்பலை நிறுத்துவது, யாரால் எவ்வளவு தூரம் ராக்கெட் விட முடியும், யாரிடம் அணு ஆயுதம் இருக்கிறது என்பவை யாருக்கு உலக வல்லரசு பட்டத்தைக் கொடுக்கலாம் என்பதற்கான தகுதியாக இருந்த காலம் அது. இச்சமயத்தில் சோவியத் யூனியன் முதலில் நிலவைத் தொட்டது, ஹீரோஷிமா-நாகஷாகியில் இரு அணுகுண்டை வீசி கர்வத்துடன் இருந்த அமெரிக்காவை அசைத்து பார்த்தது. கிட்டத்தட்ட இதே டோனில் தான், அந்த செய்திப்படத்திலும் சொன்னார்கள். (நிலவிற்கு ராக்கெட் விட முடிந்தால், நம் தலை மேலும் எதையும் பறக்கவிட முடியுமல்லவா? unfair advantage!!!...)


1970க்குள் மனிதனை நிலவுக்கு அனுப்புவது என்ற டார்கெட்டை நிர்ணயித்தார் அப்போதைய அமெரிக்க அதிபர், கென்னடி. அதில் அரசியல், அறிவியல், பாதுகாப்பு, போட்டி என பல கச்சாப்பொருட்கள் இருந்தன. அப்போது நிர்மாணிக்கப்பட்டது தான், இந்த இடம். பிறகு, ஒரு வருட காலத்தில் கென்னடி இறக்க, அவரது நினைவைப் போற்ற, கனவை நிறைவேற்ற, இவ்விடத்திற்கு அவரது பெயரையே சூட்டினார்கள்.

சொன்னது போல், 1969இல் உலகில் முதல்முறையாக மனிதனை நிலவிற்கு அனுப்பி, பத்திரமாக உலகிற்கு திரும்பக்கொண்டு வந்தார்கள். 1970க்குள் டார்கெட்டை நிறைவேற்ற போட்ட நாடகம் அது என்று சொல்பவர்களும் உண்டு.


கொசுறு செய்தி - அப்போதைய சோவியத் யூனியனின் விண்வெளி முயற்சிகளுக்கு வெளிப்படையான பெயர் எப்போது வைப்பார்கள் தெரியுமா? சக்சஸாக விண்வெளிக்குள் நுழைந்தால் மட்டும்தானாம். அப்போது தான் அது பற்றி வெளியே தெரியுமாம். தோல்விகள் கவுரவத்துடன் மறைக்கப்பட, அப்படி ஒரு ஏற்பாடு.


அந்த செய்திப்படத்திற்கு பிறகு, ஒரு கட்டுப்பாட்டு அறை போன்ற அரங்கிற்கு சென்றோம். உண்மையில் ஒரு விண்வெளி நிகழ்வு நடக்கும் சூழலை கண்முன் கொண்டு வந்து காட்டினார்கள். 

லாஞ்ச் நடக்கும் போது, அதை பார்ப்பதற்கு வெளியில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. 


அங்கு மையத்தில் நாசா லோகோவுடன் கம்பீரமாக நின்றுக்கொண்டு இருக்கும் விண்வெளி வாகன நிறுவும் கட்டிடம், அமெரிக்காவில் நகர்புறம் அல்லாது வெளியில் அமைந்திருக்கும் கட்டிடங்களில் உயரமானது. உலகிலேயே ஒரு தளம் மட்டும் கொண்ட கட்டிடங்களில் பெரியது. 

இவை மட்டுமல்லாது, நாங்கள் சென்ற பஸ்ஸின் டிரைவர், அந்த தீவின் சூழலைப்பற்றியும், அங்கிருக்கும் உயிரினங்கள் பற்றியும் கூறிக்கொண்டே வந்தார். ஒரு மரத்தில் இருக்கும் பெரிய கழுகு கூட்டையும் காட்டினார்.


பிறகு, வேகமாக அங்கு அமைக்கப்பட்டிருந்த விண்வெளி சம்பந்தமான கண்காட்சியைக் கண்டோம். மாதிரி ராக்கெட்டுகள், சேட்டிலைட்டுகள், உடுப்புகள் மற்றும் இன்னபிற விண்வெளி சமாச்சாரங்கள் காணக்கிடைத்தன.


அங்கிருக்கும் ஐமாக்ஸ் திரையரங்கில் விண்வெளி சம்பந்தமான 3டி திரைப்படங்கள் போடுகிறார்கள். நாங்கள் ஒரு படம் பார்த்தோம். ஜர்னி டூ ஸ்பேஸ். படம் கொடுத்த சோர்வா? அல்லது பயணம் கொடுத்த சோர்வா? தெரியவில்லை. கொஞ்ச நேரம் தூங்கிவிட்டேன்.

படம் முடிய இரவு மணி ஏழாகியிருந்தது. அடுத்த நாள் மியாமி என்பதால், அதற்கு பக்கமிருக்கும் போர்ட் லாடெர்டெயில் என்னும் ஊரில் ரூம் புக் செய்திருந்தேன். 

இருட்ட தொடங்க, ஹோட்டல் ரூம் நோக்கி எங்கள் பயணத்தைத் தொடங்கினோம்.

வழியில் ஏதோ ஒரு ஊரில், ஒரு சைனீஸ் ரெஸ்டாரெண்டில் சைவ ப்ரைட் ரைஸ் சாப்பிட்டோம் (வெள்ளிக்கிழமை!!!). போகும் வழியில், ஒரு இடத்தில், ஜிபிஎஸ் சொதப்பி விட, 30 மைல்கள் தேவையில்லாமல் சுற்ற வேண்டியதாக போனது. அதில் கொஞ்சம் நேரத்தைக் கடுப்புடன் தின்றோம்.

நள்ளிரவில் நாங்கள் புக் செய்த ஹோட்டலுக்கு செல்ல, ஹோட்டல் மூடப்பட்டு, கதவில் இரண்டு பேப்பர்கள் ஒட்டப்பட்டிருந்தது. ஒவ்வொன்றிலும், ஒருவர் பெயரை குறித்து, ஒரு அறை எண்ணைக் குறிப்பிட்டு, அந்த அறையை திறக்க வழிமுறைகள் சொல்லப்பட்டு இருந்தது. இரண்டிலும், என் பெயர் இல்லை.

என்னிடம் இருந்த ரிசர்வேஷன் தாளில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைப்பேசி எண்ணுக்கு அழைத்து, தகவலைச் சொல்ல, ஒரு மூதாட்டி மாடியில் இருந்து வந்தார். முதலில் அறை இல்லை என்று பகீர் ஏற்படுத்தினார். பிறகு, விவரத்தை சொல்ல, பதிவேட்டை சோதித்து பார்த்து, என் பெயரில் எனது கார்டை பயன்படுத்தி, ஏற்கனவே ஒருவர் தங்கியிருக்கிறார் என்று இன்னொரு பகீரை தூக்கி போட்டார். என்னடா, இது சோதனை? என்று நன்றாக சோதித்துப் பார்க்க சொல்ல, பிறகு பதிவேட்டில் பதியப்பட்ட தவறை கண்டுப்பிடித்து, அம்மையார் அறை சாவியை கொடுத்தார்.

அப்பாடா, நிம்மதியாக தூங்கினேன்.

.