Wednesday, October 22, 2014
இந்திய சேவை. என்ன தேவை?
ஃப்ளிப்கார்டில் ஒரு பரிசு பொருள் ஆர்டர் செய்திருந்தேன். சொன்ன தேதிக்கு போய் சேரவில்லை. போன் செய்து பார்த்தால், ஏதோ கதையை சொன்னார்கள். கஸ்டமர் கேர்காரர்களுக்கு மன்னிப்பு கேட்பதில் எந்த ஈகோவும் இருப்பதில்லை.மன்னிப்பு கேட்பது பெரிய மனுஷத்தனம் என்ற கமலின் கூற்றின்படி, இவர்கள் பெரிய மனிதர்கள்.
சரி, ஒண்ணும் பிரச்சினை இல்லை. சர்ப்ரைஸ் கிப்ட் தானே? சர்ப்ரைஸா மெதுவா போகட்டும் என்று விட்டுவிட்டேன்.
இங்கு அமெரிக்காவில் பெரும்பாலான பொருட்களை ஆன்லைனில் தான் வாங்குவேன். 90% சொன்ன தேதிக்கு வரும். 5% சொன்ன தேதிக்கு ஒருநாள் பிறகு வரும். 5% சொன்ன தேதிக்கு முன்பு வரும். இது என்னோட புள்ளிவிபரம். சொல்லவரும் விஷயம் என்னவென்றால், பெரும்பாலான சமயங்களில் சொன்ன தேதிக்கு முன்பே வரும் என்பது தான்.
தொடர்வதற்கு முன்பு, இன்னொரு விஷயம். இந்தியாவில் இருக்கும் போது, யாராவது இந்தியாவை மட்டம் தட்டி, அங்க அப்படி, இங்க இப்படி என்று சொன்னால் கடியாக இருக்கும். இப்படி நானும் எரிச்சல் கிளப்பக்கூடாது என்று தான் பல பதிவுகளை எழுத நினைத்து, எழுத ஆரம்பித்து விட்டிருக்கிறேன். இதுவும் அப்படி ஒரு பதிவுதான். இருந்தாலும், எழுதுகிறேன். யாரையேனும் புண்படுத்தினால், மன்னிக்கவும்.
ஃப்ளிப்கார்ட்டில் இப்படி ஆனதும், நான் நினைத்தது, ஃப்ளிப்கார்ட், ஒரு இந்திய கம்பெனி என்பதால், இம்மாதிரி பிரச்சினைகள் இருக்கிறது என்று. ஈபே, அமேசான் போன்ற அமெரிக்க கம்பெனிகளின் இந்திய தளங்கள் நல்லபடியாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.
அது தவறு என்று விரைவிலேயே தெரிந்தது. போன வருடம், என் அண்ணன் ஈபேயில் ஒரு நோக்கியா போன் வாங்கியிருக்கிறார். புது போன் தான். இந்த வருடம், ஏதோ பிரச்சினை வந்திருக்கிறது. நோக்கியாவில் கேட்டால், வாரண்டி போன வருடமே முடிந்திருக்கிறது. போன் வாங்குவதற்கு முன்பு. அதாவது, வாரண்டி முடிந்த பிறகு, பழைய போனை புது போன் என்று பொய் சொல்லி விற்றிருக்கிறார்கள். ஈபேயில் கேட்டால், இது விற்பனையாளர் தவறு. நீங்கள் வாங்கி இரண்டு மாதத்திற்குள் புகார் சொல்லியிருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அடுத்தது, சமீபத்தில் அபிலாஷின் இந்த பதிவை படித்தேன். அமேசானின் டெலிவரி குளறுபடி பற்றியது.
இப்ப எனக்கு தோன்றுவது, ஃப்ளிப்கார்ட் அமெரிக்க தளம் ஆரம்பித்தாலும், இந்தியாவில் இருக்கும் பிரச்சினைகள் இருக்க போவதில்லை என்று.
அதாவது, பிரச்சினை இருப்பது, நிறுவனத்தின் விதிமுறைகளிலோ, செயல்முறைகளிலோ இல்லை. ஊழியர்களிடம். ஊழியர்களாகிய மனிதர்களின் மனநிலையில். மனிதர்கள் வாழும் சூழலில்.
இவையெல்லாம் மாறாமல், இம்மாதிரி சேவைகளின் தரம் மாற போவதில்லை.
.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment