Saturday, October 18, 2014
சுந்தர் சியின் திறமை
அரண்மனையை டெண்ட்கொட்டாயில் (tentkotta.com) பார்த்தேன்.
சுந்தர் சியின் திறமையை பாராட்ட தோன்றியது. ஆயிரம் ஜென்மங்கள், சந்திரமுகி என்று என்ன சொன்னாலும், போரடிக்காமல், சிரிக்க வைக்குமாறு படம் எடுப்பதில் சுந்தர் சி நிபுணர் தான்.
சுந்தர் சியிடம் நான் ஆச்சரியத்துடன் பார்ப்பது என்னவென்றால், இந்த long term consistency தான். காமெடியில் கவுண்டரில் ஆரம்பித்தவர், விவேக், வடிவேலு என்று இப்போது சந்தானத்துடன் ஹாட்ரிக் அடித்துக்கொண்டிருக்கிறார்.
நடிகர்களிலும் கார்த்திக், சரத்குமார், சத்யராஜ் என்று ஆரம்பித்து ரஜினி, கமல் என்று சென்று பிரபுதேவா, பிரசாந்த், அஜித், மாதவன் போன்ற அடுத்த தலைமுறையினரை இயக்கி, இப்போது விஷால், சித்தார்த், விமல், வினய் போன்றோர்களை இயக்கிக்கொண்டிருக்கிறார்.
நடுவே ஹீரோவாக நடித்து கொஞ்சம் சரிவை பார்த்தாலும், இயக்கத்தில் வண்டியை சரியாகவே ஓட்டிக்கொண்டிருக்கிறார்.
இவருடைய வெற்றிக்கு காரணமாக, நான் நினைப்பது - காலத்திற்கேற்ப படமெடுப்பது. இதை மக்களின் ரசனைக்கேற்ப படமெடுப்பது என்றும் சொல்லலாம். எந்த வகை படங்கள் ஓடுகிறதோ, அதை மக்கள் ரசனையாக எடுத்து கொள்வாராக இருக்கும். பெரும்பாலும் நகைச்சுவை படங்கள் என்றாலும், நடுநடுவே ட்ரெண்டுக்கேற்ப படமெடுத்து மெயின்ஸ்ட்ரீமுடன் நிலை நிறுத்திக்கொள்வார். நகைச்சுவை எல்லா படங்களிலும் இருப்பதால், அதை விடலாம். கிராமத்து கதை, சிட்டி கதை, வெளிநாட்டு கதை, காதல், சென்டிமென்ட் கதை, ஆக்ஷன் கதை, பேய் கதை என்று எல்லாவித கதைகளையும் எடுத்து வெற்றி கொடுத்திருக்கிறார்.
இது சுலபமல்ல. எல்லோராலும், எல்லாவித படங்களை எடுக்க முடியாது.
உதாரணத்திற்கு, துள்ளுவதோ இளமை போன்ற கில்மா படங்கள் வந்தபோது, ஷங்கரும் அதை போல எடுக்க நினைத்து, பாய்ஸ் கொடுத்தார். மக்கள் அதற்குள் திருந்தி, ச்சீ த்தூ என்றார்கள். பாயசம் செய்தால், உடனே சூடாக கொடுக்க வேண்டும். ஆறியது என்றால் கூட பரவாயில்லை. பாய்ஸன் ஆனப்பிறகா கொடுப்பது? இந்த விஷயத்தில் சுந்தர் சி ஹாட்டு.
இதற்கும் இவருடைய படமெல்லாம், எங்கிருந்தோ ஜெராக்ஸ் செய்யப்பட்டதாக இருக்கும். காட்சிகள் பார்த்ததாக இருக்கும். இருந்தாலும், ஒட்டுமொத்த செய்நேர்த்தியில் குறை கூற முடியாதபடி படமெடுப்பது இவருடைய பலம்.
இப்படி இருந்தும், இவருடைய மதகஜராஜா வெளிவர போராடுவது தான் வியப்பாக இருக்கிறது. எனக்கு தெரிந்து, விஷால் சொந்த குரலில் பாடியது தான், காரணமாக இருக்க கூடும். (அட, சுந்தர் சியே பாடிய சண்டை, குரு சிஷ்யன் வெளிவந்திருக்கிறது!!!)
.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment