Thursday, October 31, 2013

ஆரம்பம் - தல தீபாவளி ஸ்பெஷல்

நிறைய முறை பார்த்தஒரு பழிவாங்கும் கதைதான். அதை கொஞ்சம் பெரிய லெவலில் தீவிரவாதம், அரசியல், ஊழல் என்று நாம் செய்திகளில் பார்த்தவைகளை மசாலாவாக எடுத்திருக்கிறார்கள். ஆங்காங்கே சுவாரஸ்யமான காட்சிகள், பஞ்ச்கள் என்று போராடிக்காமல் செல்கிறது. தல ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும்.


அஜித், கோட் போடுவதை குறைத்து கொண்டாலும், கண்ணாடியுடன் ஸ்லோமோஷனில் நடப்பதை குறைக்கவில்லை. படத்தில் அவருடைய வெயிட் (நிஜமான எடையை சொன்னேன்!) ஏறி இறங்குகிறது. அஜித்தின் நடிப்பையும், வசன உச்சரிப்பையும் நக்கல் விடாமல் பார்க்க வைப்பது, சில இயக்குனர்களால் தான் முடியும். விஷ்ணுவர்தனும் அதில் முக்கியமானவர்.

முதல் பாதியில் கொடுக்கும் ட்விஸ்ட்டுகளை விட, குண்டு ஆர்யாவின் எபிஸோட் பிடித்திருந்தது. (திரைக்கு முன்னால் அமர்ந்திருந்ததால், எல்லோருமே குண்டாக தான் தெரிந்தார்கள்!!!). முதலில் பார்க்கும் போது, ஒரு மாதிரியாக இருந்தாலும், போக போக அந்த மேக்கப்பில் குறை தெரியவில்லை. நல்ல மேக்கப். முக்கியமாக, காமெடிக்கு வரும் சின்ன எபிசோடு என்றாலும், மெனக்கெட்டு எடுத்து இருக்கிறார்கள். அங்கேயே ஸ்கோர் செய்து விடுகிறார் ஆர்யா. (அங்கே மட்டும் தான். அதுக்கு அப்புறம் எப்போதும் போல் ‘ஏன் பாஸ்?’ என்று கேட்பதற்கு பதில் ‘ஏன் சீஃப்’ என்று அஜித்தை பார்த்து அவ்வப்போது கேட்டு கொண்டு, பின்னால் அலைகிறார்!!)



நயந்தாரா வரும் சில சீன்களை பார்க்கும் போது, சில்க் ஸ்மிதா நினைவுக்கு வந்தார். அம்மணியோட வழக்கமான அழகு மிஸ்ஸிங். படத்தில் விஷம் குடித்து பிழைத்து வந்ததால், இப்படி இருக்கிறாரோ என்னமோ? டாப்ஸிக்கு வழக்கமான ’பேக்கு’ கேரக்டர். ஆனால், சும்மா வராமல், எல்லோருமோ கதையின் ஓட்டத்தோடு வருவது ப்ளஸ்.

ஏகப்பட்ட நட்சத்திர கூட்டம். இதனால, துணை நடிகர்களாக வருபவர்கள் கூட, எந்த ஸ்டேட்டிலோ பிரிமீயர் ஆக்டராக இருப்பாரோ என்று உற்று நோக்க வேண்டி இருக்கிறது. பின்னால் மற்றவர்கள் விமர்சனம் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.



கதைக்கேற்ப, மும்பை, சென்னை, துபாய், திராஸ் என்று காட்சிகள் மாற, பார்ப்பதற்கு நல்ல விஷுவல். நீரவ்ஷா இல்லாதது குறை என்றாலும், அது படத்தில் தெரியவில்லை.

மாற்றானில் சொதப்பிய சுபா கதை, இதில் எடுபட்டிருக்கிறது. எண்பதுகளில் வந்தது போன்ற கதைதான் என்றாலும், இன்றைய காலக்கட்டத்திற்குகேற்ப திரைக்கதை தைத்திருக்கிறார்கள். பாதுகாப்பு கவச ஊழல், ஆயுத ஊழல், சவபெட்டி ஊழல் என்று காங்கிரஸுக்கு எதிரான படமாகவும் தெரிகிறது!!! தீவிரவாத தாக்குதல் காட்சியிலும், பிற காட்சிகளிலும் மதரீதியாக அடக்கிவாசித்திருப்பதால், நல்லவேளை, மோடிக்கு ஆதரவாக படமாக தெரியவில்லை!!! வசனங்கள் ஆங்காங்கே பஞ்ச்சாக வருகிறது. விஜயகாந்த் படம் வராத குறையே, இப்பல்லாம் இல்லை. படத்திற்கு ஏன் ஆரம்பம் என்ற பெயரை வைத்தார்களோ?

படத்தின் ட்ரெய்லர் ஓகே என்றாலும், எனக்கு பாடல்கள்  ரொம்பவும் பிடிக்கவில்லை. யுவன், அஜித்துக்காக போடும் தீம் இசையும் இல்லை என்பது இன்னொரு குறை. படத்திலும் பிரத்யேக தீம் இசை இல்லை. நல்லா இருந்த ஒரு பாடலையும் காணும் (ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா - யாருக்காவது காட்டினார்களா?) :-(

கூடை கூடையாக கனகாம்பரத்தை படம் முழுக்க நம் மேல் கொட்டினாலும், அவை சுவாரஸ்யம் என்பதை ஒத்துக்கொள்ளதான் வேண்டும். கதையை எங்கே சுட்டாலும், தமிழ் ரசிகர்களுக்கேற்ப அதை கொடுப்பதற்கு ஒரு திறமை வேண்டும். ஒரு சிலருக்கே அது இருக்கிறது. இப்போது, அது விஷ்ணுவர்தன். கிளைமாக்ஸில் வில்லன் சாவதை ஒரு காமெடி சீனாக எடுத்திருப்பது வழக்கமில்லாத சிறப்பு. ரசித்தேன்.

படம் பார்க்கும் போது, ரெண்டு முறை கொட்டாவி விட்டாலும், தூங்கவில்லை. டென்வரில் இருக்கும் 10-12 அஜித் ரசிகர்களே, ஆங்காங்கே தியேட்டரில் கத்தும்போது, தமிழ்நாட்டில் தெறிக்கும்.

.