மங்கோலியன் சமையல், சைனீஸ் வகையை சேர்ந்தது தான். ஆனால், கடையின் அமைப்பும், சமைக்கும் முறையும் தான் வித்தியாசமானது, சுவாரஸ்யமானது.
டென்வரில் இருக்கும் மங்கோலிய உணவகங்களில் ஒன்றின் பெயர் - செஞ்சிஸ் க்ரில். மற்றொன்றின் பெயர் - யுவான் பார்பேக்யூ. இன்னும் ஆங்காங்கே இப்படிப்பட்ட வரலாற்றில் கேள்விப்பட்ட பெயர்களை நினைவுப்படுத்தும் பல உணவகங்கள் இருக்கின்றன. யாராச்சும் குப்ளாகான் என்று கடை திறக்கலாம்.
சரி, இந்த உணவகங்களில் அப்படி என்ன சுவாரஸ்யம்?
உள்ளே நுழைந்ததும், திருவோடு போல ஒரு பவுல் கொடுப்பார்கள். சில கடைகளில் எல்லாம் ஒரே சைஸில் இருக்கும். சில கடைகளில் ஸ்மால், மீடியம், லார்ஜ் என அவரவர் கொள்ளளவுக்கு ஏற்றாற் போல கொடுப்பார்கள். ஒரு டாலர் வித்தியாசம் இருக்கும்.
அதை வாங்கிக்கொண்டு வரிசையில் நிற்க வேண்டும். முதலில் புரதங்கள். சிக்கன், டர்கி, மட்டன், பீப், மீன், இறால், டோஃபு போன்ற வகையறாக்கள் இருக்கும். பிறகு, காய்கறிகள். காளான், சோளம், வெங்காயம், தக்காளி, கீரை போன்றவை. அனைத்தும் சமைக்காதவை. பிறகு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், இஞ்சி, பூண்டு, உப்பு போன்ற பொடி வகைகள். கடைசியில் விதவிதமான சாஸ்கள். ஒவ்வொரு கடையிலும், இவற்றில் சில மாறுதல்கள் இருக்கும். இவையெல்லாவற்றையும் நமது விருப்பத்திற்கேற்ப, பாத்திரத்தில் அள்ளிப்போட்டுக்கொண்டு செல்ல வேண்டும். சரியாக திட்டமிடாவிட்டால் பாதியிலேயே பாத்திரம் நிறைந்து விடும்.
இதனுடன் நூடுல்ஸோ, சாதமோ சேர்த்துக்கொள்ளலாம். முடிவில் இதை சமையல்காரரிடம் ஒப்படைக்கவேண்டும். அவர் நமக்கு நம்பரை கொடுப்பார். அதை எடுத்துக்கொண்டு, ஒரு டேபிளில் போய் உட்கார்ந்துக்கொள்ளலாம். இல்லாவிட்டாலும், அங்கேயே நின்று வேடிக்கையும் பார்க்கலாம்.
நாம் கொடுத்தவற்றை அங்கிருக்கும் பெரிய தோசை கல்லில் கொட்டி, கையில் இருக்கும் பெரிய குச்சியில், அப்படி இப்படி இழுத்துவிடுவார். இதுபோல், பல பேரின் சட்டிகள் அங்கே கவிழ்க்கப்படும். ஒரே கல் சமத்துவம்.
அதிக நேரம் எடுக்க மாட்டார்கள். ஒன்றிரண்டு நிமிடங்கள் தான். அந்த சமைக்காத மாமிசங்கள் எப்படி ஒன்றிரண்டு நிமிடங்களில் வேகுகிறதோ? சந்தேகமாக தான் இருந்தது. ஆனால், நன்றாகவே வெந்திருந்தது.
சுவை சைனீஸ் வகை போல் தான். ஆனால் வாணலியில் போடாமல், கல்லில் வாட்டுவதால், பார்பேக்யூ சுவை வருகிறது. ஆனால், சுவை நன்றாக இல்லை என்று இக்கடைகளில் குறை சொல்ல முடியாது. ஏனென்றால் நாம் தானே எல்லாவற்றையும் எடுத்துக்கொடுக்கிறோம்? உப்பு உட்பட!!! (சில கடைகளில் அவர்களே உப்பு தண்ணீர் தெளித்து சமைப்பார்கள்.)
மங்கோலியர்களின் சாப்பாட்டை விட சமைக்கும் முறை தான் இண்ட்ரஸ்டிங். இதற்காகவே, செங்கிஸ்கான் போல் விடாமல் படையெடுக்கலாம்.
.
No comments:
Post a Comment