Tuesday, June 25, 2013

ராஞ்ஜனா


என்னுடன் பணிபுரியும் ஹிந்தி நண்பனுடன் ‘ராஞ்ஜனா’ பட ட்ரெய்லர் வந்த போது, அது பற்றி பேசியபோது, ‘ஹி இஸ் லுக்கிங் ஹாரிபிள்’ என்றான். நம்மாட்களும் இப்படிதானே பலகாலம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்! இருந்தாலும், காட்சி மாறும் என்று எண்ணிக்கொண்டே, ‘நேஷனல் அவார்ட் வாங்கிய யங்கெஸ்ட் ஆக்டர்’ என்றேன். ‘அப்படியா’ என்றவன், கடந்த வெள்ளியே படத்தைப் பார்த்துவிட்டு வந்தான். அவன் பார்த்துவிட்டு வந்து சொன்ன பிறகு தான், படம் வந்ததே எனக்கு தெரியும். காட்சி மாறியிருந்தது. ‘சூப்பர் மேன்... ஹி எஸ் ஆவ்சம். எக்சலண்ட் ஆக்டிங்’ என்று பாராட்டு மழை பொழிந்தான். ‘படம் சூப்பர் ஹிட்’ என்று உறுதியளித்துவிட்டு சென்றான். தனுஷிடம் என்னமோ இருக்கிறது என்று 465வது முறை நினைத்துக்கொண்டேன்.

நான் ஞாயிறன்று படம் பார்க்க சென்றேன். இங்குள்ள நிலவரத்திற்கு, நல்ல கூட்டம். எங்கள் அலுவலகத்தில் இருந்தே பலர் வந்திருந்தனர். அனைவருமே ரசித்து பார்த்தார்கள். முதல் பாதியில் தனுஷின் கோமாளித்தனமான ஜாலியான நடிப்பில் படமும் ஜாலியாக சென்றது. இரண்டாம் பாதியில், தனுஷ் சோகமான நடிப்பில் பிழிய, படமும் செண்டியானது. ஆனால், படம் முழுக்க வசனங்கள் சுவாரஸ்யம்.

நான் தியேட்டருக்குள் நுழையும் போதே, என்னை பார்த்த ஒரு நண்பர், எனக்கு ஹிந்தி தெரியாது என்பதால், சப்-டைட்டில் கிடையாதாம் என்று நக்கல் விட்டார். அதுலாம் போடுவார்கள் என்று சொல்லிவிட்டு சென்றேன். போட்டார்கள். படத்தில் இரு காட்சிகளில், தமிழில் வசனங்கள் வரும். அப்போது சப்-டைட்டில் போடவில்லை. என்னவென்று என்னிடம் கேட்டார்கள். ‘இப்ப எங்கிட்ட தான் கேட்டாகணும், பாருங்க’ என்று சொல்லிவிட்டு விளக்கினேன்.

தனுஷ் ஹிந்தி படத்தில் நடிக்கிறார் என்று நியூஸ் வந்தபோது, இந்த படத்தின் தலைப்பை சொல்லி ஒரு ஹிந்தி நண்பரிடம் அர்த்தம் கேட்டபோது தெரியவில்லை. அப்படி ஒரு ஹிந்தி வார்த்தையே கிடையாது என்றார். அடப்பாவி என்று இன்னொருவரிடம் கேட்டபோது, லைலா-மஜ்னு போல இது இன்னொரு காவிய காதல் கதாபாத்திரம். அன்-கண்டிஷனல் லவ்வர் என்று வைத்துக்கொள்ளலாம் என்றார். இதிலேயே கதையின் போக்கு தெரிந்துவிட்டேன். எவ்வளவு அசிங்கப்பட்டாலும், அடிபட்டாலும் லவ் பண்ணுவேன் என்பது தான் கதை. நம்மூரில் தனுஷ் நடித்த பல படங்களில் இது தான் கதை. ஹீரோயின் யாரையாவது காதலிப்பார். தனுஷ் கடைசிவரை ஹீரோயினை காதலிப்பார். ஆனாலும் எனக்கு பிடித்திருந்தது.

ஹீரோ ஹீரோயின் தவிர ஹீரோ நண்பர், நண்பரின் தங்கை, ஹீரோயினின் காதலர் என்று மற்ற கதாபாத்திரங்களும் நன்றாக இருந்தது. நன்றாக நடித்திருந்தனர். இது தவிர, வசனங்கள், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, (மிளகா ஹீரோ) நட்ராஜின் ஒளிப்பதிவு, லொக்கேஷன்கள் என்று படத்தில் பிடிக்க மற்ற விஷயங்களும் இருந்தன.

முடிவில், தனுஷின் உணர்வுகளின் குரலாக ஒலிக்கும் அந்த வசனம் அருமை. அந்த முடிவு எனக்கு பிடித்திருந்தது.

----

டிட்-பிஸ்

முகேஷின் கேன்சர் விளம்பரத்தை இங்கு தான் பார்த்தேன்.

மீசையை எடுத்த பத்து வயசு குறைஞ்ச மாதிரி என்போம். அது தனுஷுக்கு மிக பொருத்தம். தனது மைனஸாக மற்றவர்கள் கூறியதை, ப்ளஸாக வைத்துக்கொண்டு பயணிக்கிறார்.

தனுஷின் எனர்ஜி மிகுந்த நடனம் பலருக்கு பிடித்திருந்தது. பல காட்சிகளில், ரஜினியை பிரதியெடுத்திருந்தார். இவர் மட்டுமல்ல, இப்போது பலரும் அப்படிதான். சிங்கம் 2 ஷூட்டிங் காட்டினார்கள். சூர்யாவும் ரஜினி ஸ்டைலில் ஆடிக்கொண்டிருந்தார்.

ஹிந்தியில் தனுஷ் கதாபாத்திரத்தின் பெயர், குந்தன். தமிழில் கந்தன் என்று வைப்பார்களோ என்று நினைத்தேன். சிவாவாம்.

ஒரு காட்சியில் படித்த அறிவுஜீவிகள், தனுஷ் திருடனான காரணத்தை விடிய விடிய அலசுவார்கள். வாய்விட்டு சிரித்தேன்.

வாட்டசாட்ட, சிக்ஸ் பேக் ஹிந்தி சினிமா உலகில் தனுஷா? என்ற கேள்வி எனக்கும் இருந்தது. இதோ, தனுஷின் ஒல்லி வருகையை, பாசிட்டிவாக அலச ஆரம்பித்துவிட்டார்கள்.

.