இது எனக்கு எப்போதுமே பிடித்த படம். 20 வருடங்களுக்கு முன்பு சிறு வயதில் இதற்கு முன்பு தியேட்டரில் பார்த்த படம் என்றால், டெர்மினேட்டர், டென் கமாண்ட்மெண்ட்ஸ் போன்றவை நினைவுக்கு வருகிறது. இந்த படங்கள் எல்லாம் லேட் ரிலீஸ்கள். அதில் டென் கமாண்ட்மெண்ட்ஸ், எங்கள் ஊரில் இருக்கும் கிருஸ்துவ பள்ளிகளைக் கணக்கில் கொண்டு ‘கிளியோபட்ரா’வில் ரிலீஸ் செய்யப்பட்டது. எப்போது சீன் படங்களையே போடும் ‘காரனேஷன்’க்கு பள்ளி குழந்தைகளை அழைத்துவர செய்த படம், ஜூராசிக் பார்க்.
பள்ளியில் இருந்து நடத்திக்கூட்டி வந்து படம் காட்டினார்கள். சாலையில் வரிசையாக பேசிக்கொண்டு நடந்துவந்தோம். தியேட்டரைப் பற்றி எங்களுக்குள் குசுகுசுவென பேசிக்கொண்டோம். தியேட்டரில், எதற்கெடுத்தாலும் கத்திக்கொண்டு இருந்தோம். இருட்டு, ஆசிரியர்கள் மேலான பயத்தை மறைத்திருந்தது.
அதற்கு பிறகு ஒரு காலத்தில், எப்போது ஸ்டார் மூவிஸில் இந்த படத்தை போட்டாலும், உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்பேன். மின்சார வேலி
பக்கம் இரு கார்களை துவம்சம் செய்யும் காட்சி, பாட்ஷா இண்டர்வெல் காட்சி போல், போர் அடிக்கவே அடிக்காது.
எனக்கு மட்டுமல்ல, என் மனைவிக்கும் அப்படி தான் போல. அவள் இன்னும் சிறுவயதில் பார்த்தது. பல முறை பார்த்த படம் என்றாலும், கடைசி முறை பார்த்து நாட்களாகியிருந்தால், இன்னொரு முறை பார்க்க சில நாட்களுக்கு முன்பே முடிவெடுத்தோம். தள்ளி சென்றுக்கொண்டே இருந்தது. அடுத்த வாரம், தூக்கிவிடுவார்கள் போல தெரிந்தது. அதனால், இந்த வாரயிறுதியில் செகண்ட் ஷோ போய் பார்த்தோம்.
சில மாதங்களுக்கு முன்பு, சூட்-அவுட் நடந்திருந்த தியேட்டர். படம் பார்க்கும் த்ரில்லை விட, இந்த தியேட்டரில் படம் பார்க்கும் த்ரில், ராத்திரியில் அதிகமாயிருந்தது. இரண்டு போலிஸ்காரர்கள், வாசலிலேயே நின்று நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார்கள். அரங்கிற்குள் நுழைந்தால், நாங்கள் மட்டும் தான்.
நம்மூரில் ஆள் சேராவிட்டால், தியேட்டரில் என்ன செய்வார்கள் என்று பேசிக்கொண்டிருந்தோம். இங்கே எங்கள் இருவருக்காக படம் போட்டார்கள். பாப்பா தூங்கிக்கொண்டிருந்தாள்.
படம் பார்க்கும்வரை, இது பழைய படம் என்ற நினைப்பே இருக்கவில்லை. படத்தில் வரும் ட்ரஸ்களைப் பார்த்தபிறகு தான், 20 வருட பழையப்படம் என்ற நினைப்பு வந்தது. ஆரம்ப காட்சிகளில், டைனோசரைக் காட்டாமலே, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் பயம் காட்ட தொடங்குவார். டைனோசர்கள் மட்டுமில்லாமல், படத்தில் மேலிருந்துவிழும் கார், மின்சார கம்பி என்று மற்ற காட்சிகளிலும் பரபரப்பு இருக்கும். இதற்கு மேல், குழந்தைகளே பிடிக்காத ஒரு மனிதன், இறுதி காட்சியில் இரு குழந்தைகளும் தோளில் சாய ஹெலிகாப்டரில் செல்லும் காட்சி சொல்லும், இம்மாதிரியான படங்கள் ஜெயிக்க காரணமாக இருக்கும் மனித உணர்வை.
அமெரிக்காவில் டூர் அடித்த அனுபவத்தில் இப்படத்தை பார்க்கும் போது, இன்னும் பார்க் டூர், விசிட்டர் செண்டர் போன்ற காண்டெக்ஸ்ட் புரிகிறது.
எந்திரன் பட விமர்சனத்தில், அது எப்படி ஒரே சயிண்டிஸ்ட் இரு உதவியாளருடன் சேர்ந்து இப்படி ஒரு ரோபோ தயாரித்தார்? என்று பலர் கேள்வி கேட்டு இருந்தார்கள். இந்த படத்தில் இரு சாப்ட்வெர் இஞ்னியர்கள், ஒரு பாதுகாப்பு காவலர் என அவ்வளவு பெரிய பார்க்கிற்கு இவ்வளவு தான் கதாபாத்திரங்கள்.
அப்போது அவ்வளவு பிரமாண்டமாக தெரிந்த படம், இப்போது பட்ஜெட் படமாக தெரிகிறது. பெரிய கதவு, சிறியதாக தெரிகிறது. அப்போது அவ்வளவு தத்ரூபமாக தெரிந்த படம், இப்போது கொஞ்சம் பொம்மை டைனோசர் படமாக தெரிகிறது. ஆனாலும், அந்த ஸ்க்ரீன்ப்ளே இன்னும் ப்ரஷ். எத்தனை படங்கள், இதே திரைக்கதை பாணியில் வந்திருக்கிறது?
அந்த வகையில் இது சந்தேகமேயில்லாமல் க்ளாசிக்.
.