Monday, April 29, 2013

யெல்லோஸ்டோனுக்கு ஒரு சாலை பயணம் - 5

அடுத்து சென்ற இடம் - ஓல்ட் ஃபெய்த்புல் (Old Faithful). 

1870இல் ஆய்வுக்கு சென்ற குழுவினர், முதன் முதலில் பார்த்த வெந்நீர் நீருற்று இது தான். பீறிட்டுக்கொண்டு அடித்த நீருற்று, கொஞ்ச நஞ்ச உயரத்தில் அல்ல... நூற்றி இருபத்தி ஐந்து அடி உயரத்திற்கு அடித்திருக்கிறது.

அவர்கள் அங்கிருந்த நேரத்தில் ஒன்பது முறை பீறிட்டு அடித்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் அடித்திருக்கிறது. சொல்லிவைத்த மாதிரி சரியான நேரத்திற்கு பீறிட்டு அடிக்க, இதற்கு பெயராக ‘பழைய நம்பிக்கை’ என்று வைத்தார்கள்.

இன்னமும் இந்த நீருற்று யாரையும் ஏமாற்றவில்லை. ஒவ்வொரு 91 நிமிடத்திற்கு ஒருமுறை பீறிடுகிறது. இதுதான் உலகில் கணிப்பு அதிகம் பொய்க்காத புவியியல் அம்சம்.


இங்கு இருக்கும் அரங்கம், வணிக வளாகங்கள் போன்றவற்றில், அடுத்த முறை எப்போது நீர் பீறிடும் என்பதை கணித்து எழுதி வைத்திருந்தார்கள். நாம் அதற்கெற்ப ஷாப்பிங் முடித்துக்கொண்டு, உணவருந்திக்கொண்டு செல்லலாம்.

நாங்கள் சென்ற போது, கேமரா சகிதம் பெருந்திரளான மக்கள் திரண்டிருந்தனர். அங்கிருந்த இருக்கைகள் நிறைந்திருந்தன. 



இதுதான் இங்குள்ள ஸ்டார் நீருற்று. அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்ட நீருற்று.

புகைந்து கொண்டிருந்தது, கணித்தது போலவே, சில நிமிடங்களில் பீறிட தொடங்கியது.


சுற்றி இருந்த கேமராக்கள் அனைத்தும், கண்கொள்ளா காட்சியாக  இந்த காட்சியை சுட்டுத் தள்ளியது.


ஏறக்குறைய மூன்று-நான்கு நிமிடங்கள் இருந்திருக்கும்.  இரு நிமிடங்கள் குறைய தண்ணீர் வந்தால், இடைவெளி 90 நிமிடங்களில் இருந்து 60 நிமிடங்களாகிவிடுமாம்.


முடியும் போது, லைட்டாக கைத்தட்டி விட்டேன். உடனே, பக்கத்தில் இருப்பவர்கள் தொடர, முடிவில் மொத்த கூட்டமும் கைத்தட்டியது. ‘அடப்பாவிங்களா, அங்கே என்ன வித்தையா காட்டுனாங்க?!!!’ என்று கமெண்ட் விட்டபடி கிளம்பினோம்.


அடுத்த முறைக்கு, கடிகாரங்கள் திருப்பி வைக்கப்பட்டன.


அன்று இரவு தங்குவதற்கு, நாங்கள் ஏற்பாடு செய்திருந்த லாட்ஜ், அங்கிருந்து 120 மைல்கள் தொலைவில் இருந்தது. சாயந்திர நேரமானதால், அப்போதே கிளம்பினோம்.


சென்ற நேரம் நன்றாக இருட்டிவிட, நாங்கள் சென்ற வழியில் ஏதோ வேலை நடக்க, வண்டியை ஓட்ட சிரமமாகிவிட்டது. காரை மெதுவாக ஓட்ட, இன்னமும் நேரமாக நடு ராத்திரி போய் சேர்ந்தோம். அங்கு சென்று சாப்பிடலாம் என்று நினைத்திருக்க, அங்கு எந்த உணவகமும் இல்லை. கைவசம் இருந்த கொஞ்சம் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு தூங்கினோம்.

இது எவ்வளவு பழைய நிகழ்வு என்பதற்கு ஒரு சம்பவம். அப்போது தான், ‘நீதானே என் பொன் வசந்தம்’ பாடல்கள் வெளியாகி இருந்தது. தூங்குவதற்கு முன்பு, என் போனில் டவுன்லோடிவிட்டு தூங்கினேன்.

.

No comments: