Monday, April 29, 2013

யெல்லோஸ்டோனுக்கு ஒரு சாலை பயணம் - 4

பயணத்தை தொடருவதற்கு முன்பு, கொஞ்சம் சொந்த கதை.

---

இந்த பயணத்தொடரை சீரியஸாக தொடர்ந்து வந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். பின்ன, நாலு நாள் போயிட்டு வந்த டூரை பத்தி நாலு மாத இடைவெளியில் கதை விட்டு கொண்டு இருந்தால்?!!  அதான்...

ஜனவரியில் இருந்தே அலுவலகத்தில் வேறு வேலை. அதை கற்றுக்கொண்டு வேலையை முடிப்பதற்கு, சில சமயம் வீடு வந்தும் வேலை செய்ய வேண்டி இருந்தது. வீட்டில் மனைவியுடன் உரையாடாமல், குழந்தையுடன் விளையாடாமல், அலுவலக வேலைக்காக லேப்டாப்பை பார்த்துக்கொண்டு இருப்பதே ஓவர். இதில் ப்ளாக்கர், பேஸ்புக், ட்விட்டர் இத்யாதிகளை ஓப்பன் செய்வது பெரும் பாவமாகப்பட்டதால், கைவசம் எழுத ஏகப்பட்ட சமாச்சாரங்கள் வந்து தேங்கினாலும், எழுதவில்லை.



நான் ப்ளாக்கர் பக்கமே வராவிட்டாலும், சில நல்லவர்கள் ‘குமரன் குடில்’ க்கு வருகை புரிவது மகிழ்ச்சியே என்றாலும், ப்ளாக்கரில் புள்ளிவிவரங்கள் எடுப்பதில் ஏதேனும் Bug இருக்கிறதோ என்ற சந்தேகத்தையும் கிளப்புகிறது.

----

பயணத்தைத் தொடருவோம். எங்கே விட்டோம்? ரீ-கேப்.

...முன்பு அபார்ட்மெண்ட் வீடாக இருந்ததை விடுதியாக மாற்றியிருந்தார்கள். இரண்டு பெட்ரூம்கள், ஒரு கிச்சன், ஹால் என்று இரு குடும்பங்கள் தங்குவதற்கு ரொம்ப வசதியாக இருந்தது. அன்றைய தினம் தங்குவதற்கு செய்திருந்த ஏற்பாடுகள் சொதப்பினாலும், ஏதோ நல்ல நேரத்திற்கு ஒரு நல்ல இடம் கிடைக்க, நிம்மதியுடன் தூங்கினோம். ஆன்லைனில் புக் செய்யும் போது, இனி கவனமாக இருக்க வேண்டும் என்ற அனுபவம் அந்த தினம் கிடைத்தது.....

இதுதான் நாங்கள் தங்கியிருந்த இடம். காலையில் வெளிச்சத்தில் பார்த்தபோது, மலையடிவாரத்தில் ரொம்ப ரம்மியமாக இருந்தது.




திரும்ப வடக்கு நுழைவுவாயில் வழியாக யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவிற்குள் நுழைந்தோம்.


மேலுள்ள படத்தில் A'யில் இருந்து B’க்கு, கிட்டத்தட்ட 135 மைலை, முதல் நாளில் கடந்திருந்தோம். இன்று கடக்க வேண்டிய தூரம் - 175 மைல்கள். (படத்தில் B இல் இருந்து C)

போகும் வழியில் இருப்பவை தான், நாம் இன்று காணப்போவது. கிளம்பும்போதே, தங்கியிருந்த இடத்திற்கு பக்கத்தில் இருந்த சப்வேயில் ப்ரெக்ஃபாஸ்ட்டை முடித்தோம். வடக்கு நுழைவுவாயிலுக்கு வெகு அருகிலேயே. இதோ வடக்கு நுழைவுவாயில்.



ஆரம்பத்தில், யெல்லோஸ்டோன் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தபோது கட்டப்பட்டது. ரூஸ்வெல்ட் ஆர்ச்.



முதலில் சென்ற இடம் - நொரிஸ் ஹாட் ஸ்ப்ரிங்ஸ்.

 சென்ற வழியில், நிறைய இடங்களில் மரங்கள் கருகி சாய்ந்து கிடந்தன.  யெல்லோஸ்டோனில் வருடம்தோறும் காட்டுத்தீ உருவாவது உண்டு. போன நூற்றாண்டின் ஆரம்பத்தில் காட்டுத்தீயை முழுமையாக கட்டுப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இருந்தது. பின்பு, இந்த காட்டுத்தீயும் இந்த வனசூழலுக்கு தேவையான இயற்கையான ஒன்று என்ற புரிதல் ஏற்பட்ட பிறகு, காட்டுத்தீயால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுவதை தவிர்ப்பது, காட்டைவிட்டு வெளியே பரவுவதை தடுப்பது போன்றவை மட்டுமே அரசாங்கத்தின் நோக்கமானது. ஆனாலும், 1988 ஆண்டு வந்த தீ, ரொம்பவே ஆட்டம் காட்டிவிட்டதாம்.



அதனால், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மரங்கள் அங்கேயே அப்படியே இருந்து மக்கி, பிறகு புது மரங்கள் வளர்வது என முடிந்தவரை வனச்சூழலை அப்படியே பாதுகாக்கிறார்கள். மரக்கட்டைகளை அடுக்கி கொண்டு வரிசையாக செல்லும் லாரிகளை காண முடியவில்லை. :-(


நொரிஸ் ஹாட் ஸ்ப்ரிங்ஸில் எனக்கொன்றும் விசேஷமாக தெரியவில்லை. வழக்கம்போல், ஆங்காங்கே புகைந்துக்கொண்டு, கொதித்துக்கொண்டு இருந்தது. இப்படி ஒரு ஆச்சரியமான விஷயம், இங்கே விசேஷமாக தெரியாத அளவுக்கு, யெல்லோஸ்டோனில் நிறைய இடங்களில் இயற்கையின் புதிர்கள்.

ஒரு இடத்தில், இந்த நீருற்றுகள், எரிமலைகள் பற்றியெல்லாம் சுலபமாக புரிந்துக்கொள்ளும் வகையில் பலகை வடிவமைப்புகள் இருந்தன. குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது சம்பந்தமான படிப்புகளில் ஆர்வமேற்பட உதவும்.


உலகில் எங்கெங்கெல்லாம் இம்மாதிரி இருக்கிறது என்று காட்டும் ஒரு படமும் அதில் இருந்தது. இந்தியா அதில் இல்லை. ஆனால், இந்தியாவிலும் வட இந்தியாவில், இமய மலை அருகில், வெந்நீர் ஊற்றுகள் இருப்பதாக அறிகிறேன்.



சுற்றி சுற்றி வந்தோம். நடப்பதற்கு மர பலகைகள் அமைத்திருந்தார்கள். அதை விட்டு, கீழே இறங்கி வேண்டாம் என்று எச்சரிக்கை வேறு. என் பொண்ணு, கையில் வைத்திருந்த கண் கண்ணாடியை கீழே போட்டு விட, எதற்கு ரிஸ்க் என்று அப்படியே விட்டு விட்டு வந்தோம். ஏதோ, எங்களால் முடிந்த இயற்கைக்கு உபத்திரவம்.



இங்கு எடுத்த வீடியோக்களை எல்லாம், மொத்தமாக சேர்த்து ஒண்ணு செஞ்சு வச்சுருக்கேன். அப்புறமா காட்டுறேன்.


போகும் வழியில் ஒரு ஏரியை காண, அதில் கப்பல் விட்டு, இயற்கை சூழலில் குப்பையை சேர்த்தோம். சொல்லி பார்த்தேன். ஒரு சின்ன பேப்பரால் ஒன்றும் ஆகாது என்று சாக்கு சொல்லப்பட்டது. ஆமாம், பேப்பர் தானே!!!


அடுத்து சென்ற இடம் - ஓல்ட் ஃபெய்த்புல் (Old faithful). கொஞ்சம் விலாவரியாக, அடுத்த பதிவில் பார்ப்போம்.

.

No comments: