ஒரு வட இந்திய நண்பர் வீட்டில் குழுமியிருந்தோம். அந்த அன்பரின் மனைவி, இட்லி சுட்டு அடுக்கினார். சாம்பார், சட்னி வேறு வைத்திருந்தார். வட இந்தியர்கள் என்பதால், எனக்கு பெரிய நம்பிக்கையில்லை. ஏதோ சுமாராக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஒரு வாய் வைத்தவுடன், என் அவநம்பிக்கை தவிடுபொடியானது. கர்னாடகத்தினர், தெலுங்கர் போல் ரவை அரிசியில் இட்லி சுட்டிருந்தாலும், சுவை அபாரம். இட்லி தான் இப்படி ஆச்சரியத்தை கொடுத்தது என்றால், ஒவ்வொருத்தர் சொன்ன ஐடியாக்கள் வியப்பைக் கொடுத்தது.
யெல்லோஸ்டோன் (Yellowstone) போகலாம் என்றார்கள். வாரயிறுதிக்கு ஒருநாள் தான் இருந்தது. டென்வரில் இருந்து கிட்டதட்ட ஆயிரம் கிலோமீட்டர்கள். வாடகை கார் எடுத்து போய்விட்டு வந்துவிடலாம் என்றார்கள். பாப்பா அப்போது எட்டு மாதம். எனக்கு இந்த ட்ரிப் கொஞ்சம் ஓவராக தெரிந்தாலும், போய்விட வேண்டும் என்று தான் தோன்றியது. இந்த மாதிரி கூட்டணி அமைவதும், அதற்கு நேரம் அமைவதும், முக்கியமாக இப்படி அனைவருக்கும் மனது அமைவதும் பெரிதாக தெரிந்தது.
போகிறோம் என்று முடிவெடுத்துவிட்டோம்.
---
சனிக்கிழமையன்று காலையில் கிளம்புவதாக ப்ளான். அதற்கு முந்திய தினமான வெள்ளிக்கிழமை தான் கார் தேடினோம். நீண்ட வாரயிறுதி என்பதால், கார் கிடைக்க சிரமமாக இருந்தாலும், அதிர்ஷ்டவசமாக வெள்ளி மாலையில் இரண்டு மினி வேன்கள் கிடைத்தது. நான்கு குடும்பங்கள். குடும்பத்திற்கு ஒரு குட்டிஸ் என்று குடும்பத்தில் மொத்தம் 3 பேர்கள். ஆக மொத்தம் 12 பேர்கள். இரண்டு மினி வேன்கள் என்பது இங்கு சரியாக இருக்கும்.
அமெரிக்காவில் எவ்வளவு சிறு குழந்தை என்றாலும், வாகனத்தில் பயணம் செய்யும் போது அவர்களுக்கு என்று கார் சீட் இருக்க வேண்டும். அது பிறந்த குழந்தை என்றாலும். ரொம்ப நல்ல விஷயம் என்றாலும், குழந்தைகளுக்கு விவரம் புரிந்து, அட்ஜஸ்ட் செய்துக்கொள்ள தெரியும் வரை, பெற்றோர்களுக்கு இது கொஞ்சம் சிரமத்தை கொடுக்கும். நாங்கள் எடுத்திருந்த மினி வேனில் ஏழு சீட்களும் அதற்கு பின்னால் லக்கேஜ் வைக்க இடமும் இருந்ததால் வசதியாக இருந்தது.
நான்கு தின பயணம் என்பதால், மூன்று தினங்கள் லாட்ஜில் தங்க வேண்டி இருந்தது. முதல் இரண்டு தினங்களுக்கு மட்டும் இரு வேறு லாட்ஜில் புக் செய்தோம். மூன்றாம் தினத்திற்கு அங்கு போய் முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்துக்கொண்டோம். போவது ஒரு இடம் என்றாலும், ஏன் இப்படி மூன்று இடங்களில் தங்க வேண்டும்? போகும் இடம் அப்படிப்பட்டது.
யெல்லோஸ்டோனில் என்ன இருக்கிறது? யெல்லோஸ்டோன் என்பது அமெரிக்காவின் ஒரு தேசியப்பூங்கா. பூங்கா என்றவுடன் அதிகப்பட்சம் ஒரு கிலோமீட்டர் அளவில் மரம் செடி கொடிகளுடன் ஒரு இடம் மன திரையில் வருகிறதா? அழித்துவிடுங்கள். இது கிட்டத்தட்ட 9000 சதுர கிலோமீட்டர் அளவிலான இயற்கை வனம். மிக பழமையானது. ஒரு விசித்திர காடு எனலாம். 2012 படத்தில் யெல்லோஸ்டோனில் இருந்து தான் படம் ஆரம்பிக்கும். உலகம் அழிய ஆரம்பிப்பது இங்கு இருந்து தான் என்று காட்டியிருப்பார்கள்.
இந்த இடத்தை பற்றி மேலும் பல தகவல்களை வரும் பதிவுகளில் காணலாம்.
---
ஆளாளுக்கு சாப்பாடுக்கென்று ஒவ்வொரு ஐட்டம் செய்து எடுத்துக்கொண்டோம். சப்பாத்தி, வெங்காய தக்காளி குருமா, புளி சாதம், தயிர் சாதம் என்று இருந்தது மெனு. யெல்லோஸ்டோன் வனப்பகுதிக்குள் நுழைந்துவிட்டால், விதவிதமாக சாப்பிட எதுவும் கிடைக்காது என்று தெரிந்திருந்ததால், எல்லாமே ஓரளவுக்கு நிறையவே எடுத்துக்கொண்டோம். உணவுப்பொருட்கள், குழந்தைகளுக்கான உணவுகள் கெட்டுப்போய்விடாமல் இருப்பதற்காக ஐஸ் டப்பாவும் அதில் ஐஸ் கட்டிகளும் எடுத்துக்கொண்டார்கள். இதெல்லாம் எனக்கு புதுசு.
காலையில் கிளம்ப ஆறு ஏழாகிவிட்டது. ஒவ்வொரு வேனிலும் இரு குடும்பங்கள் என்பதால், இரு டிரைவர்கள். நெடுதூர பயணமும் புதிது, அதில் இப்படி ட்ரைவ் செய்வதும் எனக்கு புதிது. அதனால் நண்பர் முதலில் வண்டியை எடுத்தார்.
எங்களுக்கு கிடைத்த இரு வேன்களும் ரொம்பவும் புதுசு. ஆயிரத்திற்கு குறைவான மைல்களே ஓடியிருந்தன. நம்ம வழக்கப்படி ஒரு சாமி பாட்டை போட்டபடி காரை கிளப்பினோம். அப்புறம் இளையராஜா, ரஹ்மான்...
அமெரிக்காவில் கார் ஓட்டுவது சுலபம். வண்டியில் கியர் இருக்காது. பொருட்காட்சி கார் போல, சும்மா ஆக்சிலேட்டரை அழுத்தினால் போதும். அவ்வப்போது ப்ரேக்கை, மானே தேனே என்பது போல் போட்டுக்கொள்ள வேண்டும். ஹாரன் - ம்ஹூம். அமெரிக்காவில் அதிகம் உபயோகிக்கப்படாத கார் உபகரணம், ஹாரனாகத்தான் இருக்கும். யாராவது நம் முன்னால் சும்மா காரை நிறுத்திவிட்டு, சில நிமிடங்கள் கனவுலகிற்கு சென்று விட்டால், அவரை பழையபடி நிகழுலகத்திற்கு கொண்டு வர மட்டுமே, ஹாரனை பயன்படுத்த வேண்டும். அதேப்போல் இங்கே பைக் வைத்திருப்பதும், ஓட்டுவதும், காரை விட பெரிய சமாச்சாரம்.
இப்படி கார் ஓட்டுவதும் சுலபம், சாலை வசதிகளும் நன்றாக இருந்து, அனைவரும் சாலை விதிகளை பெருமளவு கடைப்பிடிப்பதால், அதிக தூரத்தை வேகமாக கடந்து சீக்கிரம் சென்று சேர்ந்துவிடலாம். ஆயிரம் கிலோமீட்டரை 9 - 10 மணி நேரத்தில் கடக்கலாம் என்று தான் கூகிள் மேப்ஸ், ஜிபிஎஸ் என அனைத்தும் பரிந்துரைக்கும்.
சில நூறு மைல்கள் ஒன்றாக இரு வேன்களில் சென்று கொண்டிருந்தோம். அதற்கு பிறகு, கொஞ்ச நேரத்திற்கு இன்னொரு வேனைக் காணவில்லை. ஒரு இடத்தில் நிறுத்தி போன் செய்து விசாரிக்க, அந்த வேனை ஹைவே போலீஸ் பிடித்தது தெரியவந்தது. அந்த ஹைவேயில் அதிகபட்சம் 75 மைலில் செல்லலாம். மீட்டருக்கு மேல் ஐந்து மைல்கள் அன்-அபிஸியலாக செல்லாம். 90-100 மைல் என்று சென்றால், எங்கிருந்து வருவார்கள் என்று தெரியாது, சரியாக வந்து நிறுத்தி, புன்சிரிப்புடன் வந்து, கெட்ட வார்த்தையில் திட்டாமல், அமைதியாக பைன் போட்டு விட்டு சென்றுவிடுவார்கள். 150 டாலர்கள் அவருக்கு அபராதம் விதிக்க, அதற்கு பிறகு அவர் மட்டுமல்ல, நாங்களும் எண்பது மைல்களுக்கு மேல் ஓட்டவில்லை.
வண்டியில் க்ரூஸ் கண்ட்ரோல் வேறு இருக்க, ஆக்ஸிலேட்டரை அழுத்தும் வேலையும் இல்லை. ப்ரேக்கில் மட்டும் காலை வைத்துக்கொண்டால் போதும். பாருங்க, எந்தளவுக்கு மனிதனை சோம்பேறியாக்குகிறார்கள் என்று!!! இப்படி இருந்தால், எங்கிருந்து களைப்பு வர?
காலை உணவை ‘பர்கர் கிங்’ என்னும் சாலையோர உணவகத்தை சாப்பிட்டோம். மதிய உணவிற்கு, ஒரு சிறு ஊரில் நிறுத்தினோம். பெட்ரோல் போட்டுவிட்டு, பக்கமிருந்த சாலையோர இளைப்பாறல் நிலையத்தில் கொண்டுவந்திருந்த உணவை சாப்பிட்டோம். சாலையோரத்தில் ஆங்காங்கே இந்த மாதிரி இளைப்பாறுவதற்கு வசதி செய்து வைத்திருக்கிறார்கள். இரண்டு-மூன்று டேபிள்களும் அதை சுற்றி சேர்களும், குடிநீர் வசதி, பிறகு கழிப்பிட வசதி என சிம்பிளாக ஒரளவு சுத்தமாக இருந்தது. நமக்கு இது போதாது? சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம்.
ஒரு சமயம், நாங்கள் இருவரும் வெவ்வேறு வழிகளில் சென்று கொண்டு இருந்தோம். நாங்கள் சென்ற வழி, மலைகளுக்கிடையே, ஒரு நதியோரமாக செல்ல, கண்ணுக்கு குளிர்ச்சி. ஒரு இடத்தில் நிறுத்தி ஆசுவாசப்படுத்திக்கொண்டோம்.
காலையில் கிளம்பிய பயணம், நடுவில் காலை உணவு, மதிய உணவு என்று நிறுத்தி, மாலையில் கோடி (Cody) என்ற ஊருக்கு சென்று சேர்ந்தோம். அந்த தினத்திற்கு வேறு எந்த திட்டமும் கிடையாது. ரெஸ்ட் மட்டுமே. அங்கிருந்த லாட்ஜில் ஏற்கனவே ரிசர்வ் செய்திருந்தோம். நான் மட்டும் லைட்டாக வெளியே ஒரு வாக் சென்று வந்தேன். சின்ன ஊர். இருட்டிவிட்டதால், ஊரின் அழகு தெரியவில்லை.
அந்த லாட்ஜில் இருந்த ஹாலில் நாங்கள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து கதை பேசிக்கொண்டு இரவு உணவை உண்டோம். அடுத்த நாள் காலை, யெல்லோஸ்டோனின் கிழக்கு நுழைவுவாயில் வழியாக உள்ளே செல்லலாம் என்று முடிவெடுத்துக்கொண்டு உறங்கக்கிளம்பினோம்.
.
10 comments:
அவ்வப்போது ப்ரேக்கை, மானே தேனே என்பது போல் போட்டுக்கொள்ள வேண்டும்///////
ஹா ஹா ஹா
ஆவலை தூண்டும் பயண கட்டுரை நன்றி
Really nice feelinga as we are also travelling with yours and Great start.. We follows your Journey..
பையா படத்துல மாதிரி கிளம்பிட்டீங்க.. ரைட்டு :-)
super start..koduthu vachi irrukenga..
நன்றி ஆனந்த். உங்கள் பின்னூட்டம் எனக்கும் பதிவை சிறப்பாக எழுதும் ஆவலை கொடுத்துள்ளது. :-)
நன்றி அன்பு. வாங்க போகலாம். :-)
கிரி,
ஹி ஹி... பையாவா? குழந்தை குட்டிகளோட போயிட்டு இருக்கோம்!!! :-)
நன்றி அமுதா கிருஷ்ணா...
Super, Enna camera use panreengaa? pics-lam nachunu irukku... yethachum Photoshop vela paneengala?
பயணம் அருமையாக இருக்கின்றது.
தொடர்கின்றேன்....
Post a Comment