Sunday, October 14, 2012

மாற்றான்

இது விமர்சனம் அல்ல. நான் படம் பார்த்த அனுபவத்தையே, எப்போதும் போல் சொல்ல போகிறேன்.

பொதுவாக, இங்கு வெளியாகும் படங்களை ஒரு வெப்சைட்டைப் பார்த்து தெரிந்துக்கொள்வேன். பில்லா-2 வுக்கு பிறகு, அந்த சைட்டில் ஒரு அப்டேட்டும் இல்லை. நானும் எதுவும் தமிழ் படம் வருவதில்லை என்று நினைத்து விட்டுவிடுவேன். இண்டர்நெட்டில் யூ-ட்யூபில் டிவிடி ப்ரிண்ட் வரும்வரை வெயிட் பண்ணி பார்ப்பேன்.

சென்ற வாரம், எதெச்சையாக கூகிள் மூவிஸ் சைட்டில் உலாவிக்கொண்டிருந்தபோது தான், டென்வரில் ‘தாண்டவம்’ படம் ஓடிக்கொண்டிருந்ததே தெரியவந்தது. அதுவும் அலுவலகத்தில் இருந்து ஆபிஸ் போகும் வழியிலேயே, அந்த தியேட்டர் இருந்தது. பாருங்க, போஸ்டர் கலாச்சாரம் இல்லாவிட்டால், என்னவெல்லாம் பிரச்சினை ஏற்படுகிறது என்று?

யுனைடட் ஆர்டிஸ்ட்ஸ் எனப்படும் குரூப்பின் திரையரங்கு அது. தாண்டவத்துடன் இங்கிலிஷ் விங்கிலிஷ், பர்பி என பார்க்க நினைத்த ஹிந்திப்படங்களும் ஓடிக்கொண்டு இருந்தது.

எப்படியும் மாற்றான் இந்த திரையரங்கில் வரும் என்ற நம்பிக்கையில் அவ்வப்போது இந்த வாரம் இந்த திரையரங்கின் தளத்திற்கு சென்று பார்த்துவந்தேன். நான் இதுவரை பார்த்துவந்த மற்ற திரையரங்கில் வியாழக்கிழமை மாலை முதல் காட்சியாக தமிழ் படங்களை வெளியிடுவார்கள். அதாவது, நம்மூர் நேரத்திற்கு வெள்ளி அதிகாலை ஆறு மணியளவில்.  படத்தின் ரிசல்ட் தெரியாததால், ப்ரெஷ்ஷாக சென்று ஒரு நல்ல அனுபவமோ, அல்லது ஒரு நல்ல பல்ப்போ பெற்று வருவேன்.

ஆனால், இந்த திரையரங்கில் வெள்ளி மதியத்தில் இருந்தே புதுப்படங்களின் காட்சிகள் தொடங்குகிறது. நம்மால் மாலை அல்லது இரவே செல்ல முடியும். இணையத்தை நெருங்கினோம் என்றால் ரிசல்ட் தெரிந்துவிடுகிறது. அப்படியே இல்லையென்றால், நெட்டில் ரிவ்யூ படித்துவிட்டு, படம் நல்லாயில்லையாமே என்று துக்கம் விசாரிக்க நண்பர்கள் நேரில் வந்துவிடுகிறார்கள்.

என்னதான் ரிசல்ட் தெரிவது, காசை மிச்சப்படுத்தும் விதத்தில் நல்லது என்றாலும், வெள்ளிக்கிழமை, புதுப்படம், ஹைப், ஆசை, ஆர்வ குறுகுறுப்பு என்று எனக்கென்று இருந்த ஒருவித உணர்வை போட்டுத்தாக்குகிறது. தாண்டவம் பலர் மொக்கை என்றாலும் சிலர் ரசித்ததாக தெரிகிறது. கண்டிப்பாக அது பார்க்கவே முடியாத படமாக இருக்காது என்று நினைக்கிறேன். ஆனாலும், சிலர் மொக்கை என்று சொல்லிவிட்டபிறகு, அந்த முன்முடிவுடன் பணம் செலவளிக்க தோன்றுவதில்லை.

தமிழ் படம் திரையரங்கில் பார்த்து நாளாகிவிட்டதால், அதற்காகவே, இந்த படம் எப்படி இருந்தாலும், திரையரங்கில் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். வெள்ளி மாலையில் இருந்து காட்சிகள். 8 மணி காட்சிக்கு செல்வதாக முடிவு.

இன்னொரு விநோத விஷயமும் தெரியவந்தது. நம்மூரில் ஞாயிற்றுக்கிழமைதான் திரையரங்கில் டிக்கெட் விலை அதிகம் வைத்து விற்பார்கள். இங்கு இந்த திரையரங்கில் ஞாயிற்றுக்கிழமை டிக்கெட் ரேட் கம்மி. அஞ்சு டாலர்கள். மற்ற நாட்களில், பத்து டாலர்கள். Fandango தளம் மூலம் டிக்கெட் எடுக்கும் போதும், இன்னும் மிச்சம் பிடிக்கும் வழிமுறைகள் தெரிய வந்தது.

எப்படி இருந்தாலும், இந்த காசு மிச்சம் பிடிப்பதில்லை, வெள்ளிக்கிழமையே செல்வது என்று சென்று வந்தாயிற்று.

...

இம்முறையும் படம் சுமார் என்ற முடிவு, படம் பார்க்கும் முன்பே தெரியவந்துவிட்டது. அதனால் பெரிய எதிர்பார்ப்பு இல்லை.

டிக்கெட்டை காட்டிவிட்டு, திரையரங்கை நோக்கி செல்லும் போது, ஒரு பெண் குரல். ”லாஸ்ட் ஷோ இன்னும் முடியலை.”

திரும்பி பார்த்தால், ஒல்லியாக, வளத்தியாக, சுருள் முடியை விரித்துவிட்டவாறு, குளிர்காலத்திற்குரிய மாடர்ன் ட்ரெஸ் அணிந்துக்கொண்டு ஒரு பெண். அட, தமிழ் பெண்.

பார்த்தால், இந்திய பெண் என்று சொல்வதே கடினம். தமிழ் என்று யூகிக்கவே முடியாது. ஆச்சரியத்தோடு, புன்னகையுடன் நன்றி சொல்லிவிட்டு, அங்கேயே நின்றுக்கொண்டோம்.

சிறிது நேரத்தில், எனக்கு பொறுமையில்லாமல், மனைவியை குழந்தையுடன் அங்கேயே இருக்க சொல்லிவிட்டு, நான் மட்டும் அந்த அரங்கை பார்க்க சென்றேன். 12 அரங்குகள் பக்கம் பக்கம் இருந்தாலும், ஒரு சத்தமும் வெளியில் கேட்கவில்லை. அரங்குகளின் ஒலியமைப்புகள் ஒரு காரணமென்றாலும், இங்கு சத்தம் அதிகம் வைப்பதில்லை என்பது இன்னொரு காரணம். இது எனக்கு முன்பு பெரும் குறையாக இருந்தது. இப்போது, நிம்மதியாக இருக்கிறது. பாப்பா, டிவி பார்ப்பது போல் அசராமல் படம் பார்க்கிறாள். தூக்கம் வந்தால், அழாமல் அவளது ஸ்ட்ராலரில் தூங்கிவிடுகிறாள். இடைவேளையின் போது தான், சத்தம் இல்லாமல், என்னவோ குறைகிறதே என்பது போல் எழுந்துவிடுகிறாள்!!!

அரங்குகளின் வாசலில் யாரும் இருந்து காவல் காப்பதில்லை. உள்ளே சென்று பார்த்தால், சூர்யா சோகமாக யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். கிளைமாக்ஸாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். அரங்கில் மொத்தமே, 8 வரிசைதான். நாலு பேர் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். ஐயோ, பாவம் என்று வெளியே வந்துவிட்டேன்.

அப்புறம், அந்த நாலு பேரும் படம் முடிந்து வெளியே வரும்போது, எங்களை ஐயோ, பாவம் என்பதுபோல் பார்த்துவிட்டு சென்றார்கள்!!!

விளம்பரங்கள் மற்றும் கரண் ஜோகர் படம், ராம் கோபால் வர்மா படம் என்று யூரோஸ் வெளியிடும் படங்களின் ட்ரெய்லர்களை 20 நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக போட்டுவிட்டு, பின்பு படத்தை போட்டார்கள்.

...

படத்தை பற்றி சுருக்கமாக.



கே.வி.ஆனந்தின் படங்களை பார்க்கும் போது, ஒரு நாவல் படிக்கும்போது வரும் உணர்வு வரும். சுபாவின் பங்களிப்பினால் இருக்கும். இதிலும் இருக்கிறது.

முதல் பாதி நன்றாக செல்கிறது. காமெடி நடிகர்கள் இல்லையென்றாலும், அவ்வப்போது அகிலன் கதாபாத்திரம் பேசும் வசனங்கள் சிரிக்க வைக்கிறது. ”குண்டு குண்டா புக்க படிச்சிட்டு, அவ மேல ஏண்டா வாந்தி பண்றே?”

ஆனால், கடைசி ஒரு மணி நேரம், ஒரு சுவாரஸ்யமும் இல்லாமல், குழப்பமாக செல்கிறது. சின்ன சின்ன விஷயங்களில் லாஜிக் பார்த்தவர்கள், பெரிய பெரிய விஷயங்களை கற்பனை செய்து, அது நமக்கு ஒட்டாமல் போய்விடுகிறது.

பாரதி ஓவியம், அந்த ரஷ்ய நாடு, அந்த நாட்டு அணி ஒலிம்பிக்ஸில் கலந்துக்கொண்டு வெற்றி பெறுவது போன்ற விஷயங்களை தைரியமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

சூர்யாக்களின் அப்பாவாக வரும் வட இந்திய நடிகருக்கு நல்ல வாய்ப்பு.

டபுள் ஆக்டிங் படங்களைப் பார்க்கும் போது, இது எப்படி எடுத்திருப்பார்கள் என்று யோசித்தவாறே சிறுவயதில் இருந்தே படம் பார்ப்பது வழக்கம். இதில் அடுத்தக்கட்டம் சென்றிருக்கிறார்கள் என்று சொல்லலாம். இதில் விமலனின் தலை மட்டும் சூர்யாவுடையது என்பது என் யூகம். சில காட்சிகளில், அந்த தலை மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக தெரிகிறது. இருந்தாலும், பல்லிளிக்கிறது என்று இந்த முயற்சியை சொல்ல முடியாது.

சூர்யாவின் அப்பா, ஒரு காட்சியில் அம்பு, அதை விட்டவன், அது இது என்று ஒரு டயலாக் விடுவார். அது வரை, படம் நல்லா போகிறது. அதற்கு பிறகு வரும் காட்சிகளால், மொத்தப்படமும் பாதிக்கப்படுகிறது.

எந்தவொரு படத்திற்கும் கிளைமாக்ஸ் ரொம்ப முக்கியம். கிளைமாக்ஸ் வரை ரசிகனை ஆர்வத்துடன் உட்கார வைப்பதே, படத்தை ரசிக்க செய்யும். இல்லாவிட்டால், அதுவே மொத்தப்படத்தையும்  சுமார், மொக்கை, கொடுமை என்று சொல்லவைத்துவிடும்.

மாற்றானுக்கு அதுதான் நேர்ந்திருக்கிறது.

.

9 comments:

கிரி said...

"அலுவலகத்தில் இருந்து ஆபிஸ் போகும் வழியிலேயே, அந்த தியேட்டர் இருந்தது. பாருங்க, போஸ்டர் கலாச்சாரம் இல்லாவிட்டால், என்னவெல்லாம் பிரச்சினை ஏற்படுகிறது என்று?"

சரவணகுமரன் இனி போஸ்டர் க்கு காத்திருக்காமல் இணையத்திலேயே பார்த்துக்கொள்வீர்கள் அல்லவா! :-) போஸ்டர் தேவையில்லை ;-)

Prem S said...

விமர்சனத்தை விட நீங்கள் படம் பார்த்த அனுபவம் அருமை அன்பரே

மாதேவி said...

நன்றி.

சரவணகுமரன் said...

தேவையில்லைதான். திரும்பவும் தியேட்டர் மாத்திட்டா, கிரி?!!! :-)

சரவணகுமரன் said...

நன்றி ப்ரேம் குமார்

சரவணகுமரன் said...

நன்றி மாதேவி

SP said...

appo Mattran padam uthikicha
very good.

build up koduthatha partha padam super ah erukumnu nenaichen

திண்டுக்கல் தனபாலன் said...

...ம்... பரவாயில்லை ரகம்... tm1

Anonymous said...

மாற்றான் படம் நான் இப்போதுதான் பார்த்தேன். உங்கள் கருத்துடன் எனக்கு முழு உடன்பாடே. விமர்சனத்தை விட நீங்கள் விவரிக்கும் விதம் வழக்கம் போல் சூப்பர்...