அடுத்தது நாங்கள் சென்றது சான்டா மோனிகா பீச். இங்கு இருக்கும் பல பீச்களில் ஒன்றையாவது பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்றது.
கடற்கரைக்கு போவதற்கு முன் இன்னொரு வேலை இருந்தது. லாஸ் ஏஞ்சல்ஸில் பல இடங்களை சுற்றி காட்டும்விதமாக, டபுள் டக்கர் பஸ்கள் கொண்டு டூர் நடத்தும் சர்வீஸ்கள் இருக்கின்றன.
அப்படி ஒரு டபுள் டக்கர் பஸ்ஸில் எங்காவது கொஞ்சம் போக வேண்டும் என்று ஒரு ஆசை. சான்டா மோனிகா பீச்சிற்கு எதிர்புறம் இருந்து கிளம்பும் பஸ்ஸில் ஏறிக்கொண்டோம்.
பெவர்லி ஹில்ஸ் எனப்படும் கலிபோர்னியாவின் பணக்கார நகர் வரை சென்று வரும் பஸ் அது.
லாஸ் ஏஞ்சல்ஸில் பனை மரங்களை அதிகம் பார்க்கலாம். இதுவரை கிராமப்புறங்களிலேயே, பனை மரங்களைப் பார்த்து வந்த எனக்கு, நகர பின்னணியில் இது வித்தியாசமாக தெரிந்தது. பனை மரங்கள், இங்கு ஒருவித ராயல் லுக்கை கொடுத்தது.
பஸ்ஸில் பதிவு செய்யப்பட்ட ஆடியோவை போட்டுக்கொண்டு வந்தார்கள். நாங்கள் கடந்து செல்லும் பாதையில் இருக்கும் முக்கிய இடங்களைப் பற்றியது அந்த ஆடியோ.
போகும் வழியில் பெவர்லி ஹில்டன் என்ற இந்த ஹோட்டலைக் கடந்து சென்றோம். இங்கு தான் வருடா வருடம், கோல்டன் க்ளோப் அவார்ட் கொடுத்துவருகிறார்கள்.
ஊரில் ஆங்காங்கே வைத்திருந்த நீருற்றுகள் அழகாக இருந்தன.
வெயில் கொஞ்சம் அதிகம் தான். உயர்ந்த கட்டிடங்களின் நிழலால், வெயிலில் இருந்து சிறிது தப்பிக்க முடிந்தது.
நடுநடுவே, ரோட்டின் மத்தியில் வைத்திருந்த மரங்களும் நிழலை கொடுத்தது.
பெவர்லி ஹில்ஸில் இருக்கும் ரோடியோ ட்ரைவ் எனப்படும் தெரு, இங்கிருக்கும் லார்டு லபக்குதாஸ்களின் ஷாப்பிங் ஏரியா. ஹாலிவுட்டின் பெரும்பாலான நட்சத்திரங்கள் தங்கியிருப்பது, பெவர்லி ஹில்ஸில் தான் என்பதால், அவர்கள் ஷாப்பிங் செய்ய இங்கே தான் வருவார்களாம்.
நட்சத்திரங்களைக் காண ஆசைப்படும் மக்களும், அப்படியே இங்கே வருவார்களாம்.
இங்கே இருக்கும் கடைகள் அனைத்தும் பெரிய பெரிய ப்ராண்டுகளுடையது. உலகில் இருக்கும் பெரிய பெரிய பேஷன் ப்ராண்டுகள் அனைத்தும் இங்கே கிடைக்குமாம்.
நட்சத்திரங்கள் மேலான மோகம், நம்மூருக்குடையது மட்டுமல்ல. உலகம் முழுவதும் நடிகர்கள் மேல் வெறிக்கொண்டவர்கள் இருக்கிறார்கள். நடிகர்களின் வீடுகளை மட்டுமே சுற்றி காட்டும் டூர்கள் பற்றி கேள்விப்பட்ட போது, நம்மூர் பரவாயில்லை என்று தோன்றியது.
பஸ்ஸில் ஓடிக்கொண்டிருந்த ஆடியோவிலும், அவ்வப்போது ‘இந்த நடிகை, அவருடைய நாலாவது கணவருடன் இந்த வீட்டில் தங்கியிருந்தார். அந்த நடிகர், அவருடைய மூன்றாவது மனைவியுடன் இந்த வீட்டில் தங்கியிருந்தார்.’ என்ற ரீதியில் சில வீடுகளைக் கடக்கும் போது சொல்லிக்கொண்டு வந்தார்கள்.
நம்மூர் பரவாயில்லை தானே?
எங்காவது இறங்கி, ஒரு வாக் சென்றுவிட்டு, திரும்ப இந்த பஸ்ஸில் ஏறி, பீச் வரலாம் என்று தான் ப்ளான் இருந்தாலும், நேரமாகிக்கொண்டே இருந்ததால், பெவர்லி ஹில்ஸில் உடனே அடுத்த பஸ்ஸில் ஏறி திரும்பிவிட்டோம்.
சுருக்கமாக ஊரில் இருக்கும் வெவ்வேறு பகுதிகளைப் பார்க்க நினைத்தால், அப்படியே இம்மாதிரி பஸ்ஸில் ஏறி சென்றால், ஒரு கழுகு இல்லையில்லை, காக்கா பார்வையில் ஊரின் பல பகுதிகளைக் காணலாம்.
.
2 comments:
இனிய பயண அனுபவம்... படங்கள் சூப்பர்ப்...
நன்றி...
ellam ok than. ethula unga photo enge
Post a Comment