Wednesday, October 24, 2012

தூத்துக்குடி மாவட்டம் - 25

தூத்துக்குடி மாவட்டம் பிறந்து 25 ஆண்டுகள் முடிவடைந்ததையொட்டி, ஊருக்குள் பல விழாக்கள் நடந்திருப்பதாக தெரிகிறது.

அனுராதா ஸ்ரீராமின் கச்சேரி, விவேக் உள்ளிட்ட திரையுலக கலைஞர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி, ஆங்காங்கே நடைபெற்ற விளையாட்டு போட்டிகள், உணவு திருவிழா என நான் வாசித்த கடந்த வார செய்திகளில், தூத்துக்குடி வெள்ளி விழா கொண்டாட்டங்கள் அடிபட்டுக்கொண்டே இருந்தது.

இந்த கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஒரு அனிமேஷன் பாடலை வெளியிட்டு இருக்கிறார்கள். பாடலை பார்க்கும் போது, எந்த கட்-பேஸ்ட் வேலையும் இல்லாமல், மெனக்கெட்டு உழைத்திருப்பது தெரிகிறது.

கொஞ்சம் பக்கத்து மாவட்ட ஊர் பெருமையையும் சேர்த்திருக்கிறார்கள்!!!

இருந்தாலும், ஊர் பெருமையை ஒரே பாட்டில், அனைவருக்கும் சுலபமாக புரியும்வகையில், குறிப்பாக குழந்தைகளுக்கு, உருவாக்கியிருப்பதற்கு பாராட்டுக்கள்.



இப்பாடலை உருவாக்கிய அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்!!!

Saturday, October 20, 2012

பெவர்லி ஹில்ஸ் நகர்வலம்

இந்த பதிவின் தொடர்ச்சி.

அடுத்தது நாங்கள் சென்றது சான்டா மோனிகா பீச். இங்கு இருக்கும் பல பீச்களில் ஒன்றையாவது பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்றது.

கடற்கரைக்கு போவதற்கு முன் இன்னொரு வேலை இருந்தது. லாஸ் ஏஞ்சல்ஸில் பல இடங்களை சுற்றி காட்டும்விதமாக, டபுள் டக்கர் பஸ்கள் கொண்டு டூர் நடத்தும் சர்வீஸ்கள் இருக்கின்றன.

அப்படி ஒரு டபுள் டக்கர் பஸ்ஸில் எங்காவது கொஞ்சம் போக வேண்டும் என்று ஒரு ஆசை. சான்டா மோனிகா பீச்சிற்கு எதிர்புறம் இருந்து கிளம்பும் பஸ்ஸில் ஏறிக்கொண்டோம்.

பெவர்லி ஹில்ஸ் எனப்படும் கலிபோர்னியாவின் பணக்கார நகர் வரை சென்று வரும் பஸ் அது.

லாஸ் ஏஞ்சல்ஸில் பனை மரங்களை அதிகம் பார்க்கலாம். இதுவரை கிராமப்புறங்களிலேயே, பனை மரங்களைப் பார்த்து வந்த எனக்கு, நகர பின்னணியில் இது வித்தியாசமாக தெரிந்தது. பனை மரங்கள், இங்கு ஒருவித ராயல் லுக்கை கொடுத்தது.

 
 
பஸ்ஸில் பதிவு செய்யப்பட்ட ஆடியோவை போட்டுக்கொண்டு வந்தார்கள். நாங்கள் கடந்து செல்லும் பாதையில் இருக்கும் முக்கிய இடங்களைப் பற்றியது அந்த ஆடியோ.
 

போகும் வழியில் பெவர்லி ஹில்டன் என்ற இந்த ஹோட்டலைக் கடந்து சென்றோம். இங்கு தான் வருடா வருடம், கோல்டன் க்ளோப் அவார்ட் கொடுத்துவருகிறார்கள்.


ஊரில் ஆங்காங்கே வைத்திருந்த நீருற்றுகள் அழகாக இருந்தன.


வெயில் கொஞ்சம் அதிகம் தான். உயர்ந்த கட்டிடங்களின் நிழலால், வெயிலில் இருந்து சிறிது தப்பிக்க முடிந்தது.



நடுநடுவே, ரோட்டின் மத்தியில் வைத்திருந்த மரங்களும் நிழலை கொடுத்தது.



பெவர்லி ஹில்ஸில் இருக்கும் ரோடியோ ட்ரைவ் எனப்படும் தெரு, இங்கிருக்கும் லார்டு லபக்குதாஸ்களின் ஷாப்பிங் ஏரியா. ஹாலிவுட்டின் பெரும்பாலான நட்சத்திரங்கள் தங்கியிருப்பது, பெவர்லி ஹில்ஸில் தான் என்பதால், அவர்கள் ஷாப்பிங் செய்ய இங்கே தான் வருவார்களாம்.

நட்சத்திரங்களைக் காண ஆசைப்படும் மக்களும், அப்படியே இங்கே வருவார்களாம்.


இங்கே இருக்கும் கடைகள் அனைத்தும் பெரிய பெரிய ப்ராண்டுகளுடையது. உலகில் இருக்கும் பெரிய பெரிய பேஷன் ப்ராண்டுகள் அனைத்தும் இங்கே கிடைக்குமாம்.


நட்சத்திரங்கள் மேலான மோகம், நம்மூருக்குடையது மட்டுமல்ல. உலகம் முழுவதும் நடிகர்கள் மேல் வெறிக்கொண்டவர்கள் இருக்கிறார்கள். நடிகர்களின் வீடுகளை மட்டுமே சுற்றி காட்டும் டூர்கள் பற்றி கேள்விப்பட்ட போது, நம்மூர் பரவாயில்லை என்று தோன்றியது.


பஸ்ஸில் ஓடிக்கொண்டிருந்த ஆடியோவிலும், அவ்வப்போது ‘இந்த நடிகை, அவருடைய நாலாவது கணவருடன் இந்த வீட்டில் தங்கியிருந்தார். அந்த நடிகர், அவருடைய மூன்றாவது மனைவியுடன் இந்த வீட்டில் தங்கியிருந்தார்.’ என்ற ரீதியில் சில வீடுகளைக் கடக்கும் போது சொல்லிக்கொண்டு வந்தார்கள்.

நம்மூர் பரவாயில்லை தானே?


எங்காவது இறங்கி, ஒரு வாக் சென்றுவிட்டு, திரும்ப இந்த பஸ்ஸில் ஏறி, பீச் வரலாம் என்று தான் ப்ளான் இருந்தாலும், நேரமாகிக்கொண்டே இருந்ததால், பெவர்லி ஹில்ஸில் உடனே அடுத்த பஸ்ஸில் ஏறி திரும்பிவிட்டோம்.


சுருக்கமாக ஊரில் இருக்கும் வெவ்வேறு பகுதிகளைப் பார்க்க நினைத்தால், அப்படியே இம்மாதிரி பஸ்ஸில் ஏறி சென்றால், ஒரு கழுகு இல்லையில்லை, காக்கா பார்வையில் ஊரின் பல பகுதிகளைக் காணலாம்.

.
 

Wednesday, October 17, 2012

இங்கிலிஷ் விங்கிலிஷ்

இதுவும் பட விமர்சனமல்ல. படம் பார்த்த அனுபவமுமல்ல. எனக்கு இங்கிலிஷுடனான தொடர்பு பற்றிய பதிவு. படத்தை பற்றி முடிவில் கொஞ்சம்.

நான் படித்தது முழுக்க மெட்ரிக்குலேஷன் என்றாலும், பள்ளியை விட்டு வெளியே வரும் வரை, ஆங்கிலத்தில் உரையாடியதே கிடையாது. மூன்றாம் வகுப்பில் தான், ஏபிசிடியை முழுதாக மனப்பாடம் செய்தேன். எங்கள் பள்ளியிலும் ஆங்கில கண்டிப்பாக பேச வேண்டும் என்று எந்த விதிமுறைகளும் கிடையாது. அதுவே எங்கள் ஊரில் இருக்கும் ஹோலி க்ராஸ் என்னும் பெண்கள் பள்ளியில் நேரெதிர் சட்டத்திட்டங்கள். ரோட்டில் போகும் போது கூட, ஆங்கிலத்தில் பேச வேண்டும். இதனாலேயே, அப்பள்ளியில் படிக்கும் பெண்கள், ஹோலி ஏஞ்சல்ஸ் போல் போய் வந்துக்கொண்டிருந்தார்கள்.

இப்படி ஆங்கிலம் பேசாமல் வளர்ந்த வளர்ப்பு, ஆங்கிலம் என்றாலே கசக்க வைத்தது. இன்ஜினியரிங் முதலாம் ஆண்டில் ஆங்கிலம் ஒரு வகுப்பு இருக்கும். முதல் வகுப்பிலேயே, எங்களுக்கு வந்த ப்ரபசர், ஒரு திட்டம் சொன்னார். அதாவது, ஒவ்வொரு மாணவரும் ஒருநாள் ஒரு தலைப்பில் பேச வேண்டும். முக்கியமாக, ஆங்கிலத்தில் பேச வேண்டும். சீட்டு குலுக்கி போட்டு, ஒரு நம்பர் எடுக்க, முதல் நம்பரே என் ரோல் நம்பர். தலைப்பிற்கு இன்னொரு சீட்டு குலுக்கல். வந்த தலைப்பு - டிஸ்சிப்ளின்.

என்ன பேசினேன் என்று தெரியாது. தத்தக்காபித்தக்காவென்று ஏதோ உளறிக்கொட்டினேன். தயாராக நேரம் கொடுக்காததால், உளறினேன் என்று மற்றவர்கள் நினைத்திருப்பார்கள். எவ்வளவு நேரம் கொடுத்தாலும், அப்படி தான் உளறியிருப்பேன் என்பது எனக்கு தான் தெரியும்.

முதல் நாளே, எனது முறை முடிந்ததால், அதற்கு பிறகு மற்றவர்கள் படும் பாட்டை ஜாலியாக  பார்த்துக்கொண்டு இருந்தேன். இந்த தொல்லைக்காகவே, பேப்பர் ப்ரசண்டேஷன் எதற்கும் சென்றது இல்லை. இறுதியாண்டு ப்ராஜக்ட் ப்ரசண்டேஷனில் எங்கள் அணிக்குள் யார் என்ன பேச வேண்டும் என்று பேசி வைத்து, பிறகு அதை பேசி சமாளித்தேன்.

வேலை தேடும் காலத்தில் தான், ஆங்கிலத்தின் அருமை புரிந்தது. நான் போன  முதல் வேலைக்கான தேர்வில் இருந்தே, எழுத்து முறையிலான முதல் கட்ட தேர்வில் தேர்ச்சியடைய தொடங்கினேன். நேர்முக தேர்விலும் தொழில்நுட்ப கேள்விகளுக்கு சரியாக பதிலளித்துக்கொண்டிருந்தேன். இதிலும் கடைசிக்கட்ட நேர்காணலிலும் பிற கேள்விகளுக்கு பதிலளிப்பதில் தான், தத்தக்கா பித்தக்கா ஆங்கிலத்தினால் சொதப்பிக்கொண்டிருந்தேன். ஒரே ஒருமுறை மட்டும், ஒரு நிறுவனத்தில் குரூப் டிஸ்கஷனில் கலந்துக்கொண்டு, ‘யாரடி நீ மோகினி’ தனுஷ் போல் ‘ஆ... ஊ...’ என்று நான் ஏதாவது சொல்ல தொடங்க, மற்றவர்கள் அதை கண்டுக்கொள்ளாமல் சண்டைப்போட்டு கொண்டு இருந்தார்கள். எனக்கு இப்படி அடித்துக்கொள்வது பிடிக்காததால் விட்டுவிட்டேன்!!!

அதன் பிறகு, ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் அளித்து, அதை கற்க தொடங்கினேன். பள்ளியில் படித்த போது வாங்கிய ரென் & மார்ட்டின் என்னும் புத்தகம், அப்படியே புதிதாக இருக்க, அதில் அடிப்படைகளை (இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம்) வாசித்து ரிப்ரெஷ் செய்தேன். ஆங்கில பத்திரிக்கைகளை எப்போதுமே ஒரு பார்வை பார்ப்பேன் என்றாலும், அப்போது கூர்ந்து வாசிக்க தொடங்கினேன். ’டைம்ஸ் ஆப் இந்தியா’ என்னும் குஜால் பத்திரிக்கையை படித்தால் நல்ல ஆங்கிலம் தெரிந்துக்கொள்ள முடியாது. ஹிந்து ஓகே என்று பலர் சொன்னார்கள் அப்போது.

நான் தான் இப்படி. என் தந்தை ஆங்கிலத்தில் பொளந்துக்கட்டுவார். இந்த காலத்திலும் கடிதங்கள் மேல் பெரும் நம்பிக்கை கொண்டவர். அவர் ஆங்கிலத்தில் எழுதும் கடிதங்கள், அவ்வளவு ப்ரொபஷனலாக இருக்கும். எதற்கெடுத்தாலும், ஒரு லெட்டர் எழுதிவிடுவார். ஹிந்துக்கு வாசகர் கடிதம் போடும் ஆள். பேங்கில் போய் பணம் கட்டினால், அதனுடனேயே ஒரு கடிதம் எழுதி, அதில் மேனேஜர் கையெழுத்தை வாங்கி வைத்துக்கொள்வார். ஏதாவது ஒரு அதிகாரி இதை இப்படி செய்தால் இப்படி ஆகும், அப்படி செய்தால் அப்படி ஆகும் என்று கூறினால், ஒரு உத்தரவாதத்திற்கு, அதையே கடிதமாக எழுதி, அவரை கையெழுத்து போட சொல்வார். அப்படி அவர் எழுதும் கடிதங்களை சுமாராக ஆங்கிலம் தெரிந்தவர்கள், ஒரு டிக்‌ஷனரியுடன் படித்தால் தான் புரியாத சில வார்த்தைகளை புரிந்துக்கொள்ளலாம். அப்படிப்பட்டவருக்கு மகனாக பிறந்தும், நான் ‘பீட்டராக’ இல்லாமல், தமிழ் குமரனாகவே இருந்தேன். (அதற்காக தமிழிலும் புலமை பெற்றவன் என்று சொல்லமுடியாது. ஒற்றுப்பிழைகளைக் கவனிங்கள்!!!)

பிறகு, என்டிடிவி ஆங்கில செய்திகளைத் தினமும் பார்ப்பேன். ப்ரணாய் ராய் வாசிப்பது பிடிக்கும். ரொம்ப கேஷுவலாக சிம்பிள் ஆங்கிலமாக தான் இருக்கும். ஆங்கிலத்தில், நண்பர்களுக்குள் டம்மி இண்டர்வியூக்கள் நடத்திப்பார்த்தோம். இருந்தாலும், ஆங்கிலத்தின் மேலான தயக்கம் அப்படியே இருந்தது. எனது அண்ணனின் நண்பர் ஒருவர், ஆங்கிலம் - ஒரு தொடர்புக்கான மொழிதான் - என்று ஒருநாள் கொடுத்த ஊக்கமிக்க பேச்சு, கொஞ்சம் வேலை செய்தது. தப்பாக பேசினாலும், அதை தைரியமாக பேச தொடங்கினேன். வேலையும் சீக்கிரமே கிடைத்தது.

வேலைக்கு போன பிறகு, ஆங்கிலத்தில் பேச வேண்டுமே? முதலில் டீமுடன் அவ்வப்போது ஏதாவது பேச வேண்டுமே? அன்றன்றைக்கு செய்திகளில் வரும் சுவாரஸ்ய செய்தியை வாசித்துவிட்டு போய் புகைய விடுவேன். சமயங்களில் அது பத்திக்கொண்டு எறியும்.

ஆரம்பத்தில் வெளிநாடு போக பெரிதும் ஆர்வமில்லாததற்கு, ஆங்கிலமும் ஒரு காரணமாக இருந்தது. பிறகு வந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளால், வெளிநாடு வந்தாலும், ஆங்கிலம் அப்படியே தான் இருக்கிறது. சரளமாக அரை மணி நேரம் எல்லாம் பேச முடியாது. நடுநடுவில், சில வார்த்தைகள் சரியாக வராமல், மாற்று வார்த்தைகளைப் போட்டு சமாளிப்பேன்.

என்னை பொறுத்தவரை, ஆங்கிலம் ஒரு தொடர்புக்கான மொழி என்பதால், அதை ஸ்டைலாக பேச முயலுவதே இல்லை. ஜஸ்ட் பேசிக் இங்கிலிஷ் தான். சரியாக கம்யூனிகேட் செய்ய வேண்டும் என்பதற்காக, எதையுமே முதலில் டாகுமெண்ட், ஈமெயில் என்று எழுத்தில் கொண்டு வருவேன். ஒரு கோர்வை இருக்க வேண்டும் என்பதற்காக, சரியான தகவல்களுடன் ஆரம்பிக்க, எங்கிருந்தோ ஆரம்பித்து மெனக்கெடுவேன். சொல்ல வந்ததில் பெரும் பகுதியை சுலபமாக சொல்லிவிடலாம் என்பதால், பல படங்களைப் போட்டு தள்ளுவேன்.

இதற்கு மேலே ஒரு சமாச்சாரம் இருக்கிறது. ஒன்றை எழுதும்போது, யார் என்ன நினைப்பார்கள், அவர்களுக்கு என்ன கேள்வி எழும் என்று நினைக்க தோன்றும். அதற்கெல்லாம் பதிலை ஆங்காங்கே எழுதிவிட்டு போவேன். இதற்கு பெரிதும் உதவியது, இந்த ப்ளாக் தான்.சாதாரணமாக இங்கே எதையும் எழுதிவிட்டு போய் விட முடியாது. எதை எழுதினாலும் கவனமாக எழுத வேண்டும். அதற்கு பயிற்சியளித்தது, இணையத்தில் எழுதியது தான்.

இதற்காகவே, என்னைப்பொறுத்தவரை என் ஆங்கிலம் நொண்டியடிப்பதாக எனக்கு தோன்றினாலும், ஆங்கிலம் மட்டுமே தெரிந்த க்ளையண்டுகள் உள்பட, பலர் எனக்கு நல்ல கம்யூனிகேஷன் என்று பாராட்டவும் செய்திருக்கிறார்கள். அப்படியே பொழப்ப ஓட்டிக்கொண்டு இருக்கிறேன்.

சிலர் நவீனமாக பேசுகிறேன் என்று வாயை ‘நாணி கோணி’ பேசும்போது, போலியாக தோன்றும். அது அவரவர் ஸ்டைல் என்று நினைத்துக்கொண்டு, ஒன்றும் சொல்லாமல் விட்டுவிடுவேன்.

பேசும் விஷயத்தில் ஸ்ட்ராங்காக இருந்தோமானால், ஆங்கிலம் ஒன்றுமே இல்லை என்பது தான் இதுவரை நான் கற்றுக்கொண்டது.

...

இனி லைட்டா படம் பார்த்த கதை.



இங்கு சண்டே மலிவு விலை டிக்கெட் என்பதாலும், படம் குடும்பத்துடன் கண்டிப்பாக பார்க்க வேண்டியது என்று பலர் கூற கேட்டதாலும், போன வாரம் சண்டே ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ சென்றேன்.

படத்தைப் பற்றி கூற வேண்டுமானால், எல்லோரும் கூறியது தான். பீல் குட் பிலிம். விதவிதமான சுவாரஸ்யமான குணாதிசயங்கள் கொண்டவர்கள் உள்ள க்ளாஸ் என்பதால், நல்ல டைம் பாஸ். செண்டிமெண்ட், குடும்பத்திற்கான நீதி போதனை போன்றவை இருப்பதால், நல்ல படம் பார்த்த உணர்வும் கிடைக்கிறது. குடும்பத்தில் லவ்வும், ரெஸ்பெக்ட்டும் முக்கியம் என்று கதையின் நாயகி ஸ்ரீதேவி முடிவில் கூறுகிறார். இதற்கு அடிப்படையான ’அண்டர்ஸ்டாண்டிங்’கும் முக்கியம் என்பதையும் இயக்குனர் சொல்லியிருக்கலாம். (இது ஒரு புது வியாதி. டைரக்டர் ஒரு மாதிரி எடுத்தால், அதை அப்படி எடுத்திருக்கலாம். நான் வேறு மாதிரி எடுப்பேன் என்று சொல்வது!!!)

ஏன் இந்த படத்தை பற்றி யாரும் இன்னமும், ஆணாதிக்கம், பெண்ணடிமை, அமெரிக்க கோர முகம், இந்திய அடிமைத்தனம் என்றெல்லாம் எழுதவில்லை என்று தெரியவில்லை. யாராவது எழுதியிருந்தால் சொல்லவும். படிக்க ஆர்வமுடன் இருக்கிறேன்!!!

 இந்தி பதிப்பில் ஸ்ரீதேவி அமிதாப்புடன் ப்ளைட்டில் ஒயின் குடிக்கிறார். தமிழில் இல்லை. அஜித் வாழ்க!

இந்த படத்தில் நடித்த பல பேரை எங்கேயோ பார்த்த ஞாபகம். எந்தெந்த படங்களில் என்று தான் தெரியவில்லை.

சப் டைட்டில் இல்லாவிட்டாலே, இந்த படம் புரியும் என்றாலும், சப் டைட்டிலுடன் திரையிட்டதால், வரி தவறாமல் படத்தை புரிந்துக்கொள்ள முடிந்தது. இதே நிலை தொடருமானால், ஹிந்தி படங்களின் விமர்சனங்களை இந்த தளத்தில் நீங்கள் காணும் அபாயம் நேரலாம்.

.

Sunday, October 14, 2012

மாற்றான்

இது விமர்சனம் அல்ல. நான் படம் பார்த்த அனுபவத்தையே, எப்போதும் போல் சொல்ல போகிறேன்.

பொதுவாக, இங்கு வெளியாகும் படங்களை ஒரு வெப்சைட்டைப் பார்த்து தெரிந்துக்கொள்வேன். பில்லா-2 வுக்கு பிறகு, அந்த சைட்டில் ஒரு அப்டேட்டும் இல்லை. நானும் எதுவும் தமிழ் படம் வருவதில்லை என்று நினைத்து விட்டுவிடுவேன். இண்டர்நெட்டில் யூ-ட்யூபில் டிவிடி ப்ரிண்ட் வரும்வரை வெயிட் பண்ணி பார்ப்பேன்.

சென்ற வாரம், எதெச்சையாக கூகிள் மூவிஸ் சைட்டில் உலாவிக்கொண்டிருந்தபோது தான், டென்வரில் ‘தாண்டவம்’ படம் ஓடிக்கொண்டிருந்ததே தெரியவந்தது. அதுவும் அலுவலகத்தில் இருந்து ஆபிஸ் போகும் வழியிலேயே, அந்த தியேட்டர் இருந்தது. பாருங்க, போஸ்டர் கலாச்சாரம் இல்லாவிட்டால், என்னவெல்லாம் பிரச்சினை ஏற்படுகிறது என்று?

யுனைடட் ஆர்டிஸ்ட்ஸ் எனப்படும் குரூப்பின் திரையரங்கு அது. தாண்டவத்துடன் இங்கிலிஷ் விங்கிலிஷ், பர்பி என பார்க்க நினைத்த ஹிந்திப்படங்களும் ஓடிக்கொண்டு இருந்தது.

எப்படியும் மாற்றான் இந்த திரையரங்கில் வரும் என்ற நம்பிக்கையில் அவ்வப்போது இந்த வாரம் இந்த திரையரங்கின் தளத்திற்கு சென்று பார்த்துவந்தேன். நான் இதுவரை பார்த்துவந்த மற்ற திரையரங்கில் வியாழக்கிழமை மாலை முதல் காட்சியாக தமிழ் படங்களை வெளியிடுவார்கள். அதாவது, நம்மூர் நேரத்திற்கு வெள்ளி அதிகாலை ஆறு மணியளவில்.  படத்தின் ரிசல்ட் தெரியாததால், ப்ரெஷ்ஷாக சென்று ஒரு நல்ல அனுபவமோ, அல்லது ஒரு நல்ல பல்ப்போ பெற்று வருவேன்.

ஆனால், இந்த திரையரங்கில் வெள்ளி மதியத்தில் இருந்தே புதுப்படங்களின் காட்சிகள் தொடங்குகிறது. நம்மால் மாலை அல்லது இரவே செல்ல முடியும். இணையத்தை நெருங்கினோம் என்றால் ரிசல்ட் தெரிந்துவிடுகிறது. அப்படியே இல்லையென்றால், நெட்டில் ரிவ்யூ படித்துவிட்டு, படம் நல்லாயில்லையாமே என்று துக்கம் விசாரிக்க நண்பர்கள் நேரில் வந்துவிடுகிறார்கள்.

என்னதான் ரிசல்ட் தெரிவது, காசை மிச்சப்படுத்தும் விதத்தில் நல்லது என்றாலும், வெள்ளிக்கிழமை, புதுப்படம், ஹைப், ஆசை, ஆர்வ குறுகுறுப்பு என்று எனக்கென்று இருந்த ஒருவித உணர்வை போட்டுத்தாக்குகிறது. தாண்டவம் பலர் மொக்கை என்றாலும் சிலர் ரசித்ததாக தெரிகிறது. கண்டிப்பாக அது பார்க்கவே முடியாத படமாக இருக்காது என்று நினைக்கிறேன். ஆனாலும், சிலர் மொக்கை என்று சொல்லிவிட்டபிறகு, அந்த முன்முடிவுடன் பணம் செலவளிக்க தோன்றுவதில்லை.

தமிழ் படம் திரையரங்கில் பார்த்து நாளாகிவிட்டதால், அதற்காகவே, இந்த படம் எப்படி இருந்தாலும், திரையரங்கில் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். வெள்ளி மாலையில் இருந்து காட்சிகள். 8 மணி காட்சிக்கு செல்வதாக முடிவு.

இன்னொரு விநோத விஷயமும் தெரியவந்தது. நம்மூரில் ஞாயிற்றுக்கிழமைதான் திரையரங்கில் டிக்கெட் விலை அதிகம் வைத்து விற்பார்கள். இங்கு இந்த திரையரங்கில் ஞாயிற்றுக்கிழமை டிக்கெட் ரேட் கம்மி. அஞ்சு டாலர்கள். மற்ற நாட்களில், பத்து டாலர்கள். Fandango தளம் மூலம் டிக்கெட் எடுக்கும் போதும், இன்னும் மிச்சம் பிடிக்கும் வழிமுறைகள் தெரிய வந்தது.

எப்படி இருந்தாலும், இந்த காசு மிச்சம் பிடிப்பதில்லை, வெள்ளிக்கிழமையே செல்வது என்று சென்று வந்தாயிற்று.

...

இம்முறையும் படம் சுமார் என்ற முடிவு, படம் பார்க்கும் முன்பே தெரியவந்துவிட்டது. அதனால் பெரிய எதிர்பார்ப்பு இல்லை.

டிக்கெட்டை காட்டிவிட்டு, திரையரங்கை நோக்கி செல்லும் போது, ஒரு பெண் குரல். ”லாஸ்ட் ஷோ இன்னும் முடியலை.”

திரும்பி பார்த்தால், ஒல்லியாக, வளத்தியாக, சுருள் முடியை விரித்துவிட்டவாறு, குளிர்காலத்திற்குரிய மாடர்ன் ட்ரெஸ் அணிந்துக்கொண்டு ஒரு பெண். அட, தமிழ் பெண்.

பார்த்தால், இந்திய பெண் என்று சொல்வதே கடினம். தமிழ் என்று யூகிக்கவே முடியாது. ஆச்சரியத்தோடு, புன்னகையுடன் நன்றி சொல்லிவிட்டு, அங்கேயே நின்றுக்கொண்டோம்.

சிறிது நேரத்தில், எனக்கு பொறுமையில்லாமல், மனைவியை குழந்தையுடன் அங்கேயே இருக்க சொல்லிவிட்டு, நான் மட்டும் அந்த அரங்கை பார்க்க சென்றேன். 12 அரங்குகள் பக்கம் பக்கம் இருந்தாலும், ஒரு சத்தமும் வெளியில் கேட்கவில்லை. அரங்குகளின் ஒலியமைப்புகள் ஒரு காரணமென்றாலும், இங்கு சத்தம் அதிகம் வைப்பதில்லை என்பது இன்னொரு காரணம். இது எனக்கு முன்பு பெரும் குறையாக இருந்தது. இப்போது, நிம்மதியாக இருக்கிறது. பாப்பா, டிவி பார்ப்பது போல் அசராமல் படம் பார்க்கிறாள். தூக்கம் வந்தால், அழாமல் அவளது ஸ்ட்ராலரில் தூங்கிவிடுகிறாள். இடைவேளையின் போது தான், சத்தம் இல்லாமல், என்னவோ குறைகிறதே என்பது போல் எழுந்துவிடுகிறாள்!!!

அரங்குகளின் வாசலில் யாரும் இருந்து காவல் காப்பதில்லை. உள்ளே சென்று பார்த்தால், சூர்யா சோகமாக யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். கிளைமாக்ஸாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். அரங்கில் மொத்தமே, 8 வரிசைதான். நாலு பேர் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். ஐயோ, பாவம் என்று வெளியே வந்துவிட்டேன்.

அப்புறம், அந்த நாலு பேரும் படம் முடிந்து வெளியே வரும்போது, எங்களை ஐயோ, பாவம் என்பதுபோல் பார்த்துவிட்டு சென்றார்கள்!!!

விளம்பரங்கள் மற்றும் கரண் ஜோகர் படம், ராம் கோபால் வர்மா படம் என்று யூரோஸ் வெளியிடும் படங்களின் ட்ரெய்லர்களை 20 நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக போட்டுவிட்டு, பின்பு படத்தை போட்டார்கள்.

...

படத்தை பற்றி சுருக்கமாக.



கே.வி.ஆனந்தின் படங்களை பார்க்கும் போது, ஒரு நாவல் படிக்கும்போது வரும் உணர்வு வரும். சுபாவின் பங்களிப்பினால் இருக்கும். இதிலும் இருக்கிறது.

முதல் பாதி நன்றாக செல்கிறது. காமெடி நடிகர்கள் இல்லையென்றாலும், அவ்வப்போது அகிலன் கதாபாத்திரம் பேசும் வசனங்கள் சிரிக்க வைக்கிறது. ”குண்டு குண்டா புக்க படிச்சிட்டு, அவ மேல ஏண்டா வாந்தி பண்றே?”

ஆனால், கடைசி ஒரு மணி நேரம், ஒரு சுவாரஸ்யமும் இல்லாமல், குழப்பமாக செல்கிறது. சின்ன சின்ன விஷயங்களில் லாஜிக் பார்த்தவர்கள், பெரிய பெரிய விஷயங்களை கற்பனை செய்து, அது நமக்கு ஒட்டாமல் போய்விடுகிறது.

பாரதி ஓவியம், அந்த ரஷ்ய நாடு, அந்த நாட்டு அணி ஒலிம்பிக்ஸில் கலந்துக்கொண்டு வெற்றி பெறுவது போன்ற விஷயங்களை தைரியமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

சூர்யாக்களின் அப்பாவாக வரும் வட இந்திய நடிகருக்கு நல்ல வாய்ப்பு.

டபுள் ஆக்டிங் படங்களைப் பார்க்கும் போது, இது எப்படி எடுத்திருப்பார்கள் என்று யோசித்தவாறே சிறுவயதில் இருந்தே படம் பார்ப்பது வழக்கம். இதில் அடுத்தக்கட்டம் சென்றிருக்கிறார்கள் என்று சொல்லலாம். இதில் விமலனின் தலை மட்டும் சூர்யாவுடையது என்பது என் யூகம். சில காட்சிகளில், அந்த தலை மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக தெரிகிறது. இருந்தாலும், பல்லிளிக்கிறது என்று இந்த முயற்சியை சொல்ல முடியாது.

சூர்யாவின் அப்பா, ஒரு காட்சியில் அம்பு, அதை விட்டவன், அது இது என்று ஒரு டயலாக் விடுவார். அது வரை, படம் நல்லா போகிறது. அதற்கு பிறகு வரும் காட்சிகளால், மொத்தப்படமும் பாதிக்கப்படுகிறது.

எந்தவொரு படத்திற்கும் கிளைமாக்ஸ் ரொம்ப முக்கியம். கிளைமாக்ஸ் வரை ரசிகனை ஆர்வத்துடன் உட்கார வைப்பதே, படத்தை ரசிக்க செய்யும். இல்லாவிட்டால், அதுவே மொத்தப்படத்தையும்  சுமார், மொக்கை, கொடுமை என்று சொல்லவைத்துவிடும்.

மாற்றானுக்கு அதுதான் நேர்ந்திருக்கிறது.

.

Sunday, October 7, 2012

வால்ட் டிஸ்னி இசையரங்கம்

பாதியில் நிற்கும் இந்த பதிவின் தொடர்ச்சி.

லாஸ் ஏஞ்சல்ஸ் பயணப்பதிவு தொடரை தொடர்ந்து வாசித்து வந்தவர்கள் மன்னிக்கவும்.

தொடர்ச்சியாக வேறு சில பயணங்கள் இருந்ததால், ஒரு பெரிய இடைவெளி.

டென்வரில் பனிக்காலம் தொடங்கிவிட்டது. இனி வெளியே செல்வது, மிகவும் சொற்பமாக தான் இருக்கும். அதனாலேயே, அனைத்து பயணங்களையும் எல்லோரும் பனிக்காலம் வருவதற்கு முன்பே முடித்துவிடுவார்கள். நாங்களும் அப்படியே.

சரி. லாஸ் ஏஞ்சல்ஸ் பயணத்தை தொடரலாம்.

---

மெஷின்கள், கணினிகள் மனிதனை எப்படி சோம்பேறியாக்குகிறது, முட்டாளாக்குகிறது என்பது அவை இல்லாவிட்டால் நமக்கு தெரிகிறது. கால்குலேட்டர் பக்கம் இல்லாவிட்டால், சின்ன கணக்கு போடக்கூட எப்படி சிரமப்படுகிறோம்?

அமெரிக்க வணிக கடைகளில் ஒரு விஷயத்தை நான் அடிக்கடி கவனிப்பேன். உதாரணத்திற்கு, ஒரு கடையில் 9 டாலர் 12 செண்ட்களுக்கு ஏதேனும் வாங்குகிறேன் என்றால், நான் பத்து டாலர் கொடுப்பேன். உடனே, கல்லாவில் இருப்பவர், கணினியில் வரவு பத்து என்று அடிக்க, அது மிச்சம் 88 செண்ட்கள் என்று காட்டும். நான் நம்மூரில் கொடுப்பது போல, சில சமயங்களில் பத்து டாலரும், 12 செண்ட்களும் கொடுப்பேன். ரவுண்டாக மீதி 1 டாலரை எதிர்பார்த்து. இப்படி நான் கொடுத்தால், அவ்வளவுதான். கடைக்காரரின் ரியாக்‌ஷனை பார்க்க வேண்டுமே? ஏன், இவன் இப்படி கொடுத்தான்? எதற்கு? என்று புரியாமல், அதை கணினியில் உள்ளீட்டு, பிறகே மீதி 1 டாலர் கொடுக்க வேண்டும் என்ற கணக்கு புரிந்து தருவார்கள். அந்தளவு கணினியை சார்ந்து இருக்கிறார்கள்.

எதற்கு இதை சொல்கிறேன் என்றால், நானும் ஜிபிஎஸ்ஸை எந்தளவு சார்ந்து இருக்கிறேன் என்பதை யுனிவர்சல் ஸ்டூடியோஸில் இருந்து திரும்பும் போது புரிந்துக்கொண்டேன்.

திடீரென்று ஜிபிஎஸ் செயலிழக்க, என்னால் கொஞ்சம் தூரம் கூட காரை செலுத்த முடியவில்லை. உடனே, வண்டியை ஓரங்கட்ட... எமர்ஜென்சி சமயம் மட்டுமே ரோட்டின் ஓரம் இங்கே வண்டியை நிறுத்தலாம்... என்பதால், அதற்கு அடுத்து வந்து எக்ஸிட் எடுத்து, ஒரு கடையோரம் நிறுத்தி, ஜிபிஎஸ்ஸை சரி செய்தேன். ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. எதற்கோ ஹேங்காகிவிட்டது. ஜஸ்ட், ரீ-ஸ்டார்ட் பிரச்சினை.

சைனா டவுண் செல்ல நேரமாகிவிட்டது. அங்கு தெருவே வெறிச்சோடி இருக்க, அங்கிருந்து நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பினோம். இரவு உணவுக்கு, பிஸ்ஸா ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு உறங்கினோம்.

---

மறுநாள் காலை, நாங்கள் சென்ற இடம் - லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மையப்பகுதிக்கு. அங்கு இருக்கும் டிஸ்னி கன்சர்ட் ஹாலை, புகைப்படங்களில் பார்த்து அசந்துபோயிருக்கிறேன். அதனால், அதை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அங்கு சென்றேன்.

நகரின் மையப்பகுதியில் எது சாலை, எது கட்டிடம் என்றே தெரியாத வகையில் எல்லாம் மாறி மாறி வந்தது. பாதாளத்தில் இருக்கும் பார்க்கிங் தளங்கள் மட்டும் ஏழு.



இசைக்கச்சேரிகள் நடத்தப்படும் இந்த ஹால், வால்ட் டிஸ்னியின் மனைவி கொடுத்த நன்கொடையால் கட்ட தொடங்கப்பட்டது. ஸ்டீல் கொண்டு அமைத்தது போல் ஒரு ஸ்டைல். நாங்கள் சென்ற அன்று, உள்ளே அழைத்து சென்று காட்டப்படும் டூர் இல்லையென்பதால், உள்ளே சென்று பார்க்க முடியவில்லை.



வெளிப்புற அழகே, நிறைந்த திருப்தியை கொடுக்க, அப்படியே சாலையில் ஒரு வாக் சென்றோம். நகரின் மையப்பகுதி என்பதால், பெரிய பெரிய வானுயர்ந்த கட்டிடங்கள் நிறைந்து இருக்க, சாலையோ பெரியளவில் ட்ராபிக் நெரிசல் இல்லாமல் அமைதியாக இருந்தது.



பக்கத்தில் இருந்த பூங்காவில், ஒரு பெரிய நீரூற்று இருந்தது. பக்கத்திலேயே ஒரு காபி ஷாப். அருகே இருந்த கட்டிடங்களில் வேலைப்பார்க்கும் பணியாளர்கள், இங்கே வந்து இளைப்பாறிக்கொண்டு இருந்தார்கள்.




பள்ளிக்கூடம் இருக்கும் தினத்தில், நாம் லீவ் போட்டு விட்டு, யாராவது ஸ்கூலுக்கு போவதை பார்க்கும்போது, ஒரு உணர்வு வருமே? அதேப்போன்ற ஒரு உணர்வு, அங்கிருந்தவர்களைப் பார்க்கும்போது எனக்கு தோன்றியது.







அந்த சாலையில் இருந்த ஒரு ஆபிரகாம் லிங்கன் சிலைக்கு பக்கத்தில் ஒருவர் அமர்ந்திருந்து ஏதோ எழுதிக்கொண்டு இருந்தார். அந்த சிலையை படமெடுக்க நான் செல்ல, என்னை கண்ட அவர் அந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டார். பிறகு, நான் அங்கிருந்து நகர, அந்த சிலையை சில நிமிடங்கள் கூர்ந்து பார்த்து விட்டு, மீண்டும் ஏதோ எழுத தொடங்கினார். லிங்கனுடன் ஏதோ தொடர்புக்கொண்டது போல் இருந்தார்.



சிறிது நேரம், அங்கிருந்துவிட்டு, பிறகு சண்டா மோனிகா கடற்கரைக்கு கிளம்பினோம்.

.

Friday, October 5, 2012

இதய கோவில்

மணிரத்னத்தின் படங்களை பட்டியலிட்டால், பலரால் விடுபடும் படம் இதய கோவிலாகத்தான் இருக்கும்.


1985இல் ஒரு சாதாரண இயக்குனராக மணிரத்னத்தின் இயக்கத்தில் கோவைத்தம்பியின் தயாரிப்பில் வெளிவந்த படம் - இதய கோவில். இதயம் ஒரு கோவில் என்ற டைட்டில் போடுவது - எம்ஜியாருக்கு.

இப்ப மாதிரி யாரை கூப்பிட்டாலும் வந்துவிடும் மவுசு, அன்று இல்லாததால், எண்பதுகளின் ரெகுலர் நடிகர்களை மணிரத்னம் வைத்து எடுத்த படம். ஆக்சுவல்லி, மணிரத்னத்தை வைத்து கோவைத்தம்பி எடுத்த படம் என்று சொல்ல வேண்டும்.

கதை ரொம்ப சாதாரணக்கதை. சுமாரான மேக்கிங். பாடல்கள் மட்டும் தாறுமாறு.

கல்லூரியில் படிக்கும் ராதா, ஒரு தேர்தல் போட்டிக்காக பாட்டு நிகழ்ச்சி நடத்த, பாடகரான மோகனை அழைக்க, அவர் வீட்டிற்கு செல்கிறார். மோகனோ, ஒரு மொடாக்குடிக்காரர். மோகனுடன் சண்டையில் ஆரம்பிக்கும் பழக்கம், அவருடைய ப்ளாஷ்பேக் பற்றி தெரிந்துக்கொள்ள உதவுகிறது. ப்ளாஷ்பேக்கில் கிராமத்து பாடகரான மோகனும், அம்பிகாவும் காதலிக்கிறார்கள். சென்னைக்கு சினிமா சான்ஸ் தேடி மோகன் வர, வீட்டில் ஏற்பாடு செய்யும் திருமணத்தை மறுத்து அம்பிகா மோகனைத் தேடி வர, வரும் இடத்தில் ரவுடிகள் விரட்ட, அவர்களிடம் இருந்து கற்பைக் காப்பாற்ற, தூக்கில் தொங்குகிறார் அம்பிகா. இது மோகன் குடிக்காரரான சரித்திரம்.

ப்ளாஷ்பேக் கேட்டு ராதாவுக்கு மோகன் மேல் லவ் வர, ஏற்கனவே கல்லூரியில் கபில்தேவ் ராதாவை, ஒரு தலையாக காதலிக்க, யார் யாரை கைப்பிடிக்கிறார் என்பதை வெள்ளித்திரையில் காண்க என்று சொல்ல ஆசை தான். ஆனால், இனி நீங்கள் எங்கே வெள்ளித்திரையில் காண? நானே சொல்கிறேன்.

மோகன் ராதாவிடன் ஒரு சமரசம் பேசுகிறார். நீ கபில்தேவை கட்டிக்கோ. நான் சரக்கடிப்பதை விட்டுவிடுகிறேன் என்று. டீல் பெரிதாக பிடிக்காவிட்டாலும், ராதா சம்மதித்து, தாலி கட்டும் சமயம், விஷம் குடித்து, மோகனும் பல்ப் கொடுக்கிறார். கபில்தேவுக்கு பெரிய பல்ப். பிறகென்ன? அம்பிகா சமாதிக்கு பக்கத்தில் மோகன் தனக்கென்று வாங்கிப்போட்டிருந்த இடத்தில், ராதாவுக்கு சமாதி எழுப்பி் இளையராஜாவின் ஹிட் சாங்கை பாட, வணக்கம் போடுகிறார்கள். ஏ பிலிம் பை மணிரத்னம் என்பதெல்லாம் இல்லை.

மோகன், மைக் மோகன் என்றைழைக்கப்பட, இப்படம் ஒரு முக்கிய காரணம். பாடகர் என்பதால், மைக்கும் பிறகு பாட்டிலும் கையுமாக அலைகிறார்.

மணிரத்னத்திற்கு ‘சூர்யா’ என்ற பெயரில் என்ன ஈர்ப்போ? தளபதியில் ரஜினியின் பெயர், சூர்யா. சரவணன் என்ற சிவகுமாரின் புதல்வருக்கு, மணிரத்னம் வைத்த பெயர், சூர்யா. இந்த படத்தில் ராதாவின் பெயரும் சூர்யா.

இந்த கபில்தேவ் என்ற பெயரை டைட்டிலில் பார்த்ததும், இவர் அபிலாஷாவுடன் இணைந்து ஒரு மேட்டர் படத்தில் நடித்திருக்கிறார் என்று எந்த காலத்திலோ படித்த பத்திரிக்கை துணுக்கு, ஞாபக அடுக்கில் இருந்து விழுந்தது. என் வீணா போன ஞாபக சக்தியை மெச்சுவதா, மனித மூளைக்கு இருக்கும் ஆற்றலை எண்ணி வியப்பதா என்று தெரியாமல் படத்தை குழப்பத்துடனேயே பார்த்தேன். கபில்தேவ், தற்போதைய அஜ்மல் போலவே இருக்கிறார்.

விக்ரமன் - எஸ்.ஏ.ராஜ்குமார் காம்பினேஷன் படங்களில் ஒரு பாடல், படம் முழுக்க பல இடங்களில் வருமே? அந்த படங்களுக்கு இது இன்ஸ்பிரேஷனாக இருக்கலாம்.

எத்தனை முறை வந்தாலும், பாடல்கள் சலிக்கவில்லை. இதயம் ஒரு கோவில், கூட்டத்திலே கோவில் புறா, யார் வீட்டில் ரோஜா, வானுயர்ந்த சோலையிலே, நான் பாடும் மௌன ராகம், பாட்டு தலைவன் பாடினால்... என்று இந்த படப்பாடல்கள் மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை. என் மனதிற்கு நெருக்கமான பாடல்கள். ஏனென்று தெரியவில்லை. பால்யத்தில், பலமுறை கேட்டதால் இருக்கலாம். போலவே, உதயகீதமும்.

பாடல்கள், இசை பற்றி நிறைய சொல்லலாம். அது மகேந்திரன் ஏரியா என்பதால், அதை விடுகிறேன்.

 
இயக்கம் - மணிரத்னம் என்று போடாவிட்டால், இது மணிரத்னம் படம் என்று சொல்ல முடியாது. தெரிந்து பார்த்தால், ஆங்காங்கே சொற்பமாக தெரியும். உதாரணத்திற்கு, காலேஜ் பாடலுடன் படம் ஆரம்பிப்பதை சொல்லலாம்.

கதை - செல்வராஜ். வசனமும் திரைக்கதையும் - வல்லபன். அதனால், மணிரத்னத்தின் ட்ரெட்மார்க்கான சுருக்-நறுக் வசனங்கள், இதில் இல்லை. விக்ரமன் டைப் ’லாலா லாலா’ காதல் தத்துபித்து வசனங்கள் தான். ஒளிப்பதிவிலும் ஸ்பெஷலாக சொல்ல எதுவும் இல்லை. லொக்கேஷன்களில் சின்னதாக இயக்குனர் தெரிகிறார். படத்திற்கு சம்பந்தமில்லாத, கவுண்டமணியின் 80களின் ரெகுலர் காமெடி ட்ராக்கிற்கு, வழக்கம்போல் வீரப்பன் வசனமெழுதியிருக்கிறார்.

டைட்டில் காட்டாமல், இந்த படத்தின் இயக்குனர் யார் என்று என்னிடம் யாராவது கேட்டிருந்தால், ஆர். சுந்தரராஜன் என்று சொல்லியிருப்பேன்.

.

Thursday, October 4, 2012

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலும் நானும்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல், என்னை ஏதேனும் விதத்தில் பாதிக்கும் என்று தோன்றியதே இல்லை. இன்று என்னை பாதித்தது. பெரிதாக ஒன்றும் இல்லை. என் தினசரி அலுவலக வேலையில் ஒரு சின்ன பாதிப்பு.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் ஒரு அங்கமாக, இரு வேட்பாளர்களும் ஒரே மேடையில் விவாதம் நடத்துவார்கள் என்று நம்மூர் செய்தித்தாளில் படித்து கேள்விப்பட்டிருக்கேன். அவ்வித முதல் விவாதம் இன்று டென்வரில் நடந்தது. நடந்த இடம், நான் அலுவலகம் செல்லும் சாலையில் இருக்கும் ஒரு யூனிவர்சிட்டியில்.

ஒருவாரம் முன்பே இந்த சாலை இன்றைய தினத்தில் மாலை நேரத்தில் அடைக்கப்படும் என்று தகவல் வந்து சேர்ந்தது. அந்த சாலையை கடந்து தான் செல்ல வேண்டும் என்றில்லை. ஆனால், போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் என்பதால் சீக்கிரமே சாயங்காலம் அலுவலத்தில் இருந்து கிளம்ப சொல்லிவிட்டார்கள்.

அப்புறம் என்ன, வீட்டிற்கு வந்து மீதி வேலையை பார்த்தேன். அவ்வளவுதான்!!!

----

யூ-ட்யூபில் நேரடி ஒளிப்பரப்பில் இந்த விவாதத்தைப் பார்க்க நேர்ந்தது.





அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர், சும்மா பேச்சாளராக இருந்தால் மட்டும் போதாது. விவரம் தெரிந்த பேச்சாளராக இருக்க வேண்டும் என்று புரிந்தது. என்னதான், இவர்களுக்கு பின்னால் இருக்கும் தேர்ந்த அணிகள் பிரச்சார யுக்தி அமைக்கும் என்றாலும், இம்மாதிரி விவாதத்தில் மேடையில் இருக்கும் வேட்பாளர்களுக்கு பொருளாதாரம், வணிகம், மருத்துவ காப்பீட்டு, வெளியுறவு கொள்கை போன்ற மக்களைப் பாதிக்கும் விஷயங்கள் பற்றி நன்றாக தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், கிழித்து எறிந்துவிடுவார்கள்.

எனக்கு ரொம்ப புரியவில்லை என்றாலும், விவாதம் ஆர்வம் ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது.

எனக்கு புரிந்த வகையில், ரோம்னியின் கொள்கைகள், ஒபாமாவை விட சிறப்பானதாக இல்லை என்றாலும்,  ஒபாமாவை விட ரோம்னி நன்றாக பேசியது போல் இருந்தது. ஆட்சியில் இல்லாதவர்கள், ஆட்சியில் இருக்கும் குறைகளை சொல்லி அதிபரை தொங்க விடலாம். தாங்கள் ஆட்சிக்கு வந்தால், எதை வேண்டுமென்றாலும் செய்வோம் என்று புருடா வாக்குறுதி கொடுக்கலாம். அதுவே ஆட்சியில் இருப்பவர்களால், தங்கள் கொள்கைகளை பற்றி அதுபோல் கூற முடியாது. லட்சணம் ஏற்கனவே தெரிந்திருக்கும். இது போன்ற காரணங்களால், ரோம்னி பெட்டராக பேசியது போல் தெரிந்திருக்கலாம்.

---

கொஞ்சம் கூட கோபப்படாமல், உணர்ச்சிவசப்படாமல் பேசுகிறார்கள். தாக்கும்போது கூட, முகத்தில் சினேக புன்னகையுடன் தாக்குகிறார்கள். நடுவராக இருப்பவர் கொடுக்கும் நேரத்திற்கு பேசி, நடுவர் பேச்சுக்கு மதிப்பளிக்கிறார்கள். (”President, please tell about this in 2 minutes...”) அடுத்தவர் பேசும்போது, சீரியஸாக பேனாவால் நோட்ஸ் எடுத்து, அதற்கு பதிலளிக்கிறார்கள். அவ்வப்போது அசட்டு ஜோக்கும் அடிக்கிறார்கள். இறுதியில் குடும்பத்துடன் இணைந்து, குசலம் விசாரிக்கிறார்கள்.

இதுவரை கேள்விப்பட்டிருக்கிறேன் என்றாலும், முதன்முதலாக நேரடி ஒளிபரப்பில் கண்டது - நல்ல அனுபவம்.

இருந்தாலும், நான் நம்மவர்களை விட்டுக்கொடுக்க மாட்டேன். அமெரிக்கர்கள் போலியானவர்கள். எதிராளியை தோற்கடிக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாலும், வெளியில் போலியாக நட்பு பாராட்டுகிறார்கள். ஆனால், நம்மாட்கள் அப்படி இல்லை. மனதிற்குள் என்ன நினைக்கிறார்களோ, அதையே வெளியேயும் காட்டுகிறார்கள். பேச்சிலும் காட்டுகிறார்கள்.

---

சென்ற மாதம் விழுப்புரத்தில் ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கொடுத்த ஒரு பதிலடி, சாம்பிளுக்கு....

"தினமும் கோர்ட்டில் வாய்தா வாங்குபவர், தன்மானம் பற்றி பேசுவதா? அரசு பொருளை விலை கொடுத்து வாங்கியது தவறென, கோர்ட் சுட்டிக்காட்டும் அளவிற்கு நடந்துள்ளீர்கள். அட தன்மானமே, உன் நிலைமை இப்படி ஆயிற்றே?

200 முறை வாய்தா வாங்குவது, நீதிபதி மேல் புகார் கூறுவது, 68 கோடி ரூபாய்க்கு மேல் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மானம் போகவில்லையா...????கருணாநிதிக்கா தன்மானம் போயிற்று. தன்மானம் என்றால் என்ன பொருள் என, உனது தமிழாசிரியர் கூறுவார். எல்லாம் எனக்கு தெரியும். அதற்குரியவர் யார் என, ஒரு நாள் விவாதம் நடத்திப் பார்க்கலாமா... சட்டசபையில் தேவையில்லை; பொது மண்டபத்தில் பேசலாமா... பட்டிமன்றத்தில் தகராறு வந்து விடாது. பயம் வேண்டாம். ஆணும், பெண்ணும் வாதிடும்போது கைகலப்பு நேராது. அதனை நான் விரும்பவும் இல்லை. இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள், தம்பிமார்களை தட்டிவிட்டால் பிரச்னை எங்கேயோ போய் விடும்."

 
.