Monday, September 10, 2012

ஹாலிவுட் ஷூட்டிங் ஸ்பாட்

யுனிவர்சல் ஸ்டுடியோஸில் முக்கியமாக பார்க்கவேண்டியது, ஸ்டுடியோ டூர். ஒரு வண்டியில் கூட்டி சென்று, ஸ்டுடியோவை சுற்றி காட்டுவார்கள். சில சர்ப்ரைஸ் விஷயங்களுடன்.
 
இங்கிருக்கும் ரைடுகள், ஷோக்களை விட, நான் எதிர்ப்பார்த்து சென்றது இதற்கு தான். ஆங்கில படங்களைத் தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள் அனைத்தும் ஹாலிவுட்டில் இருக்க, அந்நிறுவனங்கள் அனைத்தும் பொதுஜனத்திற்கு ஸ்டுடியோவை சுற்றி காட்டும் டூர் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.
 
ஆனால், வார்னர் ப்ரதர்ஸ், பாரமவுண்ட், சோனி போன்றவற்றில் என்ன பிரச்சினை என்றால் குழந்தைகளை அழைத்து செல்ல முடியாது. இது ஏமாற்றமாக இருந்தது. ஆனால், காரணத்தை கொஞ்சம் புரிந்துக்கொள்ள முடிந்தது. டால்பி தியேட்டரிலேயே, பேட்ரிக் ஒவ்வொன்றாக விளக்கும் போது, எங்க பாப்பா கூடவே சேர்ந்து பேச ஆரம்பித்துவிட்டாள். என்ன செய்ய? மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்க கூடாது என்று நாங்கள் தள்ளி இருந்து கேட்டோம். இது தவிர, குழந்தைகள் ஓடுகிறார்கள் என்றால் இன்னும் பிரச்சினை தான்.
 
நல்லவேளையாக, யுனிவர்சல் ஸ்டுடியோஸில் அந்த பிரச்சினை இல்லை. குழந்தைகளை அனுமதிக்கிறார்கள். திறந்தவெளி வேன் போன்ற மூன்று வண்டிகளை இணைத்து அழைத்து செல்கிறார்கள். ஒரு பெண் முன்னால் அமர்ந்து ஸ்டுடியோஸைப் பற்றி விளக்கி சொல்லிக்கொண்டு வந்தார்.
 
 
ஹாலிவுட் இருப்பது மலை சார்ந்த பிரதேசத்தில். அதில் யுனிவர்சல் இருப்பது ஒரு மலையில். மேல் தளம், கீழ் தளம் என இரு தளங்கள் இருக்கின்றன. இவர்கள் சுற்றி காட்ட, அழைத்து செல்லும் வழியும், ஒரு மலை பாதைதான்.
 
இங்கிருந்து பார்த்தால், வார்னர் பிரதர்ஸ் தெரிகிறது.
 
 
 
இந்த மலை தளங்களில் சில செட்களை நிரந்தரமாக போட்டுவைத்திருக்கிறார்கள். படமெடுப்பதற்காகவும், இப்படி வருபவர்களை சுற்றிக்காட்டுவதற்காகவும்.

இதோ இது ஒரு செட் தான்.



இந்த செட் எந்த படத்தில் வருகிறது என்பதையும் வண்டியில் இருக்கும் டிவியில் காட்டுகிறார்கள்.



 



அமெரிக்காவின் முக்கிய இடங்களின் செட்கள் இங்கே இருக்கின்றன. தத்ரூபமாக. நியூயார்க்கில் கதை நடக்கிறது என்றால், நியூயார்க் செல்ல வேண்டியது இல்லை. ஹாலிவுட் வந்தால் போதும்.

இந்த புகைப்படத்தில் பின்னால் இருப்பது அட்டை கட்-அவுட். எங்களை பின்புறமும் அழைத்து சென்று காட்டினார்கள்.


பல்வேறு படங்களில் நடித்த கார்கள், இங்கே பார்க் செய்யப்பட்டிருந்தன. எனக்கு தெரிந்தது ஜூராசிக் பார்க் ஜீப்பும், பாஸ்ட் அண்ட் ப்யுரியஸ் காரும் தான்.


ஆக்‌ஷன் காட்சிகளில் கார்கள் எப்படி  வெடித்து சிதறுகின்றன என்பதை செயல்முறை விளக்கத்துடன் செய்து காட்டினார்கள்.  காரை டான்ஸ் ஆட கூட வைக்கிறார்கள்.



பிறகு, ஒரு கிராமத்திற்குள் அழைத்து சென்றார்கள். ஊரில் திடீரென்று மழை பொழிய வைத்தார்கள். ஆறு ஓட வைத்தார்கள். வெள்ளத்தையும் கொண்டு வந்து, வந்தவர்களை நனையவிட்டார்கள்.



 
ஏவிஎம்மிற்கு எஸ்.பி.முத்துராமன் போல, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், யுனிவர்சல் ஸ்டுடியோஸின் டைரக்டர் போலும். அவர் பெயரில் ஒரு தெரு இருந்தது. சும்மா செட்டுக்காகவா அல்லது நிஜமாகவேவா என்று தெரியவில்லை.




வண்டியை ஒரு கட்டிட செட்டிற்கு உள்ளே கொண்டு போனார்கள். அங்கே ஒரு பாதாள ரயில் நிலைய செட் இருந்தது. இங்கே நிலநடுக்கம் வந்தால் எப்படி இருக்கும்,  வெள்ளம் வந்தால் எப்படி இருக்கும், ட்ரெயின் ஆக்ஸிடெண்ட் ஆனால் எப்படி இருக்கும், தீப்பிடித்தால் எப்படி இருக்கும் என்று எல்லாவற்றையும் கண்முன்னால் செய்து காட்டினார்கள்.



அந்த மலை பிரதேசம் முழுக்க பல்வேறு படங்களுக்கு போடப்பட்ட செட் கட்டிடங்கள், நகரங்கள், காலனிகள் என்று அது ஒரு கற்பனை உலகம். வண்டியில் இருக்கும் டிவியில் அந்த செட் ப்ராப்பர்டிகள் நடித்த காட்சிகளைப் போட்டு காட்ட, எல்லாம் தெளிவாக புரிந்தது.

ஒரு உலகம் இடத்தில் ஒரு பெரிய சைஸ் விமானம் ஆக்ஸிடண்டாகி கிடந்தது. ’வார் ஆப் த வோர்ட்ஸ்’ படத்திற்காக போடப்பட்ட செட்.


இதற்கு நடுவே, ஒண்ணும் சொல்லாமல் கொள்ளாமல் ஒரு இண்டோர் செட்டிற்கு கூட்டி சென்றார்கள். முதலிலேயே 3டி கண்ணாடி கொடுத்திருந்தார்கள். அதை இங்கு அணிய சொன்னார்கள். முழுவதும் இருட்டு. கண்ணை மூடி திறப்பதற்குள், நாம் பழைய காலத்திற்கு சென்று விட்டோம். நம் முன்னால் டைனோசர்கள் சண்டை போடுகிறது. நமக்கு முன்னால் வந்து கத்துகிறது. கத்துவதில் நமது முகம் ஈரமாகிறது. இந்த பக்கம் திரும்பி பார்த்தால், கிங்-காங் டைனோசர்களை போட்டு துவம்சம் பண்ணுகிறது. முன்னால் சென்றுக்கொண்டிருந்த வண்டியை டைனோசர் இழுந்துக்கொண்டு மேலேயிருந்து கீழே விழ, நாமும் விழ போக, கிங்-காங் நம்மை காப்பாற்றுகிறது. எனக்கு பயம் - சத்தத்தை கேட்டு என் மடியில் இருந்த பாப்பா அழுதது தான். ரொம்ப புது அனுபவம். அருமையாக இருந்தது.

யாரோ ஒரு நல்லவர் இதை வீடியோ எடுத்து போட்டுயிருக்கிறார்.



இது முடிந்த பிறகு, ஜூராசிக் பார்க், மம்மி, ட்ரான்ஸ்பார்மர் போன்ற விளையாட்டுகளுக்காக கீழ் தளம் செல்ல வேண்டி இருந்தது. கீழ் தளம் என்றால் நான் ஏதோ கொஞ்சம் கீழே இருக்கும் என்று நினைத்தேன். அதுவோ மலையில் இருந்து கீழே இறங்கும் தூரம். அவ்வளவு பெரிய லிப்ட்டை பார்த்ததில்லை. குழந்தையை கையில் வைத்துக்கொண்டு, ஸ்ட்ரால்லரை பிடித்துக்கொண்டு போனது, முதலில் திகிலாக தான் இருந்தது. லிப்டின் ஒரு பகுதி இங்கே.


இங்கு இருக்கும் விளையாட்டுகளுக்கு செல்ல, குழந்தையுடன் வந்திருக்கும் பெற்றோர்களுக்காக ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள். என்னவென்றால், இந்த விளையாட்டுக்களுக்கு குழந்தைகளை எடுத்து செல்ல முடியாது. போட்டு குலுக்கு குலுக்கு என்று குலுக்குவார்கள். சத்தம் காதை கிழிக்கும். 3டி 4டி என்று அவர்கள் விடும் கரடி கொஞ்சம் நஞ்சமல்ல. இந்த விளையாட்டுகளுக்கு செல்ல காத்திருக்கும் கூட்டமும் கொஞ்சம் நஞ்சமல்ல. இந்த மாதிரி இருக்கும் போது, ஒவ்வொரு பெற்றோரும் தனிதனியே செல்ல வேண்டி இருக்கும். அப்பா தனியாக, பிறகு அம்மா தனியாக. இப்படி ஒவ்வொருவரும் தனித்தனியாக வெயிட் செய்தால் ரொம்ப நேரமாகுமல்லவா? அதனால் ‘சைல்ட் ஸ்விட்ச்’ எனப்படும் காத்திருத்தல் மூலம், முதலில் ஒரு பெற்றோர் செல்ல மற்றொரு பெற்றோர் குழந்தையுடன் ஒரு அறையில் காத்திருக்கலாம். அந்த அறையில் குழந்தைகள் விளையாட, நிறைய விளையாட்டு பொருட்கள் இருக்கும். உதாரணத்திற்கு, அப்பா சென்று வந்தபிறகு, அம்மா எந்தவொரு காத்திருத்தலும் இல்லாமல் உடனே சென்று வந்துவிடலாம். இப்படி ஜூராசிக் பார்க், மம்மி போன்றவற்றுக்கு சென்று வந்தோம்.

யூ-ட்யூபில் இதன் வீடியோக்கள் காணக்கிடைக்கின்றது.



 
எட்டு மணிக்கு கடையை சாத்துகிறார்கள். முடித்துவிட்டு மெதுவாக வெளியே வந்தோம். சிட்டி வாக் ஜொலித்தது. எங்களிடமும் சார்ஜ் இல்லை, கேமராவிலும் இல்லை. மொபைலில் சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.

ஜூராசிக் பார்க் பேக்ரவுண்ட் இசை காதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது.




லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் சைனா டவுணில் சாப்பிடலாம் என்று முடிவு செய்துக்கொண்டு கிளம்ப, பாதி தூரம் வரை ஜிபிஎஸ் சரியாக வழிக்காட்டி கொண்டு வர, திடீரென்று நடுரோட்டில் தனது செயல்பாட்டை நிறுத்தியது.

.