Saturday, September 15, 2012
இளையராஜா - வெறுப்பும் ரசிப்பும்
நான் எல்லா இசையமைப்பாளர்கள் பாடலையும் கேட்பேன். எண்பதுகளில் இருந்து தற்போதைய காலக்கட்ட பாடல்கள் வரை எந்த குறையும் சொல்லாமல், எல்லா பாடல்களையும் கலந்து கேட்பேன்.
இதில் பெருவாரியாக இருப்பது, இளையராஜாவின் பாடல்கள் தான். சில பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. சில சமயங்களில், சில பாடல்கள் ரொம்ப பிடித்து போய், அதே பாடலை திரும்ப திரும்ப கேட்டிருக்கிறேன். அவை இளையராஜா பாடலாகத்தான் இருக்கும். எனக்கு மட்டுமல்ல, தமிழ் மொழி தெரியாதவர்களையும் இப்படி கவர்பவை, இளையராஜாவின் பாடல்கள். அந்த வகையில் தமிழர்களின் பெருமை, இளையராஜா.
ஆனால், அதே சமயம், இளையராஜா தலைகனம் பிடித்தவர், கர்வம் கொண்டவர் என்ற பேச்சும் உண்டு. ஒருவர் உண்மையிலேயே மிக சிறந்த பங்களிப்பை அளிக்கும்போது, அதன் மீது கர்வம் பிறப்பது வாடிக்கை. அதை உள்ளுக்குள் அடக்கும் போது, அல்லது அதை கண்டுக்கொள்ளாமல் இருக்கும் போது, அவருடைய தன்னடக்கம் மீதான மரியாதை பிறக்கிறது. இல்லாவிட்டால், கர்வம் கொண்டவர் என்று ஏச்சு-பேச்சுகள் கிளம்புகிறது.
இளையராஜாவுக்கு தலைகனமா, கர்வமா என்றெல்லாம் ஆராய்ச்சி வேண்டாம். அவர் ஜீனியஸ் என்பதில் யாராலும் சந்தேகம் கிளப்ப முடியாது. ஆனால், அவர் பேச ஆரம்பிக்கும் போது தான், அவர் மீதான மரியாதை குலைகிறது.
சமீபத்தில், கவுதம் வாசுதேவ மேனனுடன் சேர்ந்து இளையராஜா அளித்த ஜெயா டிவி பேட்டியில் இளையராஜாவை ரசிக்க நிறைய விஷயங்கள் இருந்தது. இருந்தாலும், பொதுவாகவே இளையராஜாவுக்கு எதிரில் இருப்பவரை பம்ம வைப்பதில் ஒரு ஆர்வம் இருக்கும். அது இந்த பேட்டியிலும் பளிச்சென்று தெரிந்தது.
சென்ற வார குமுதத்தில் வந்த அவருடைய கேள்வி-பதில் பகுதியான ‘இளையராஜாவைக் கேளுங்கள்’ பக்கங்களை வாசித்த போது, எழுந்த எண்ணமும் இதுவாகத்தான் இருந்தது. பொதுஜனத்தை நெருங்கவிடாமல், அடித்து விரட்டும் வெறுப்பே பல பதில்களில் தெரிந்தது. டி.எம்.எஸ்., ரஜினி பற்றிய பிரபலங்கள் குறித்த கேள்விகள் தவிர்த்து, மற்ற அனைத்து கேள்விகளுக்கும் ஏதோ கடுப்பில் பதில் சொன்னது போலவே இருந்தது.
உதாரணத்திற்கு சில,
தனக்குரிய பாதை எது என்பதை எப்படித் தேர்ந்தெடுப்பது? அதை விட்டு விலகாமல் செல்வது எப்படி?
ஆர்.சிவக்குமார், கோவை
இந்தக் கேள்வியை வந்து என்கிட்டேயா கேட்கறது நீங்க? எனக்குரிய பாதையை நான் தேர்ந்தெடுத்தேன். அதேபோல் உங்களுக்குரிய பாதையை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இதில் நானா உங்களுக்கு யோசனை சொல்ல முடியும்?
இந்த படத்திற்கு நாம் இசையமைக்காமலே இருந்திருக்கலாம் என்று எப்போதாவது தோன்றியது உண்டா?
எஸ். விவேகானந்தன், உசிலம்பட்டி
எப்போதாவது என்ன! ஒன்றா இரண்டா எத்தனை படங்களை நான் சொல்வது? நீங்கள் ஒருமுறை பார்த்துவிட்டு ச்சீ... என்ன படமெடுத்திருக்கிறான் என்று சொல்லுகின்ற படத்தை நான் நான்கு ஐந்து முறை பார்த்தாக வேண்டும்.
தேனொழுகும் பாடல்கள் தித்திக்கத் தந்துபுகழ் வானுயரம் கொண்ட இசைஞானி - ஆன்மிகந்தான் தங்களின் வாழ்வில் தங்கிய நிகழ்வெதுவோ? தங்கமே பதிலெமக்குத் தா.
பாரதி மணி, மதுரை
வெண்பா வடிவில் கேள்வி கேட்டிருக்கிறார். இதிலேயே இலக்கணப் பிழை இருக்கு. தங்களின் ‘வாழ்வில்’னு வர்றதால அடுத்து ‘தங்கிய’னு வராது. அது தேமானு முடிந்திருக்கறதால ‘புளிமாங்காய்’ என்று முடிந்திருக்கணும். ‘தங்கிய நிகழ்வெதுவோ’ங்கிறதிலும் தப்பு இருக்கு. தங்கியனு வந்தால் கூவிளம். விளம் முன் நேர் வரணும். இந்த தப்பான வெண்பாவிற்கு, நான் பதில் சொல்ல விரும்பவில்லை.
(இந்த கேள்வியை கேட்கும் போது, மதுரை பாரதி மணி சரக்கடித்திருந்தாரா என்று தெரியவில்லை. பதிலை படித்துவிட்டு, உடனே டாஸ்மாக் சென்று ஒரு கல்ப் அடித்திருப்பார் என்று அனுமானிக்கிறேன்.)
இளையராஜாவை முழுமையாக ரசிக்க வேண்டுமென்றால், அவர் இசையமைத்த பாடல்களை தவிர்த்து, அவரை பத்திரிக்கை, பேட்டி என்று வேறெதிலும் தொடர கூடாது போலும்.
----
‘நீதானே என் பொன் வசந்தம்’த்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. எனக்குள்ளேயேயும். காரணம் - இளையராஜா, இன்றைய இளம் இயக்குனர்களுடன் இணைந்து இசையமைப்பது குறைவு. அப்படியே இசையமைக்கிறார் என்றால் அது யாரோ பெயர் தெரியாத இயக்குனர், தன் பெயர் வெளியே தெரிய, இளையராஜாவை நாடியிருக்கிறார் என்றே இருக்கும். பிரபல இயக்குனர்கள் என்றால் பாலா, சுசிந்தீரன், மிஷ்கின், பிரகாஷ்ராஜ் ஆகியோரைச் சொல்லலாம். இதில் இளைஞர்களுக்கான இளமை துள்ளும் கதையுடன் யாரும் இளையராஜாவைத் தேடி செல்லவில்லை. எனக்கு திரும்பவும் ‘அக்னி நட்சத்திர’ இளையராஜாவை கேட்க ஆசை. கவுதம் மேனன், இளையராஜாவுடன் இணைகிறார் என்றவுடன், எனக்கு என் ஆசை நிறைவேறிவிடுமோ என்று தோன்றியது. அதனாலேயே இந்த எதிர்பார்ப்பு.
எதிர்பார்ப்பு நிறைவேறியதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தவிர, இனி எதிர்பார்க்கவும் கூடாது என்பதை உணர்த்தியது.
(என் நண்பன் இந்த பில்-டப்புடன் பாடல்களைக் கேட்டுவிட்டு கூறிய ஒரு வரி விமர்சனம் - தங்க திருவோடு் பழமொழியை தான்)
அதற்காக, நான் பாடல்கள் மோசம் என்று சொல்ல மாட்டேன். ‘சாய்ந்து சாய்ந்து’, ‘என்னோடு வா வா’, ’காற்றைக் கொஞ்சம்’ பாடல்களை தினமும் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறேன். இருந்தாலும், நான் எதிர்பார்த்த இளையராஜாவை கேட்க முடியவில்லை.
அவருடைய சாயலை, இனி இளம் இசையமைப்பாளர்களிடம் கேட்டு ரசிக்க வேண்டியதுதான். உதாரணத்திற்கு, கும்கி படத்தில் உள்ள ‘அய்யய்யோ ஆனந்தமே’ பாடலை சொல்லலாம். இந்த இமான் பாடலில் இளையராஜா இருக்கிறார். நீதானே என் பொன் வசந்தம் ஆல்பத்தில் இருக்கும் எந்த பாடலை விடவும், கும்கியின் இந்த பாடல் எனக்கு பிடித்திருக்கிறது. இதற்கு காரணமும், இளையராஜா தான். இளையராஜாவின் பிண்ணனி இசையை கேட்கும் போது அடையும் உணர்ச்சியை, இந்த பாடலின் இசை அளிக்கிறது. அதனால், இனி, நான் எதிர்பார்த்த இளையராஜாவை இளம் இசையமைப்பாளர்களிடம் தான் தேட போகிறேன்.
.
Monday, September 10, 2012
ஹாலிவுட் ஷூட்டிங் ஸ்பாட்
யுனிவர்சல் ஸ்டுடியோஸில் முக்கியமாக பார்க்கவேண்டியது, ஸ்டுடியோ டூர். ஒரு வண்டியில் கூட்டி சென்று, ஸ்டுடியோவை சுற்றி காட்டுவார்கள். சில சர்ப்ரைஸ் விஷயங்களுடன்.
இங்கிருக்கும் ரைடுகள், ஷோக்களை விட, நான் எதிர்ப்பார்த்து சென்றது இதற்கு தான். ஆங்கில படங்களைத் தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள் அனைத்தும் ஹாலிவுட்டில் இருக்க, அந்நிறுவனங்கள் அனைத்தும் பொதுஜனத்திற்கு ஸ்டுடியோவை சுற்றி காட்டும் டூர் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.
ஆனால், வார்னர் ப்ரதர்ஸ், பாரமவுண்ட், சோனி போன்றவற்றில் என்ன பிரச்சினை என்றால் குழந்தைகளை அழைத்து செல்ல முடியாது. இது ஏமாற்றமாக இருந்தது. ஆனால், காரணத்தை கொஞ்சம் புரிந்துக்கொள்ள முடிந்தது. டால்பி தியேட்டரிலேயே, பேட்ரிக் ஒவ்வொன்றாக விளக்கும் போது, எங்க பாப்பா கூடவே சேர்ந்து பேச ஆரம்பித்துவிட்டாள். என்ன செய்ய? மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்க கூடாது என்று நாங்கள் தள்ளி இருந்து கேட்டோம். இது தவிர, குழந்தைகள் ஓடுகிறார்கள் என்றால் இன்னும் பிரச்சினை தான்.
நல்லவேளையாக, யுனிவர்சல் ஸ்டுடியோஸில் அந்த பிரச்சினை இல்லை. குழந்தைகளை அனுமதிக்கிறார்கள். திறந்தவெளி வேன் போன்ற மூன்று வண்டிகளை இணைத்து அழைத்து செல்கிறார்கள். ஒரு பெண் முன்னால் அமர்ந்து ஸ்டுடியோஸைப் பற்றி விளக்கி சொல்லிக்கொண்டு வந்தார்.
ஹாலிவுட் இருப்பது மலை சார்ந்த பிரதேசத்தில். அதில் யுனிவர்சல் இருப்பது ஒரு மலையில். மேல் தளம், கீழ் தளம் என இரு தளங்கள் இருக்கின்றன. இவர்கள் சுற்றி காட்ட, அழைத்து செல்லும் வழியும், ஒரு மலை பாதைதான்.
இங்கிருந்து பார்த்தால், வார்னர் பிரதர்ஸ் தெரிகிறது.
இந்த மலை தளங்களில் சில செட்களை நிரந்தரமாக போட்டுவைத்திருக்கிறார்கள். படமெடுப்பதற்காகவும், இப்படி வருபவர்களை சுற்றிக்காட்டுவதற்காகவும்.
இதோ இது ஒரு செட் தான்.
இந்த செட் எந்த படத்தில் வருகிறது என்பதையும் வண்டியில் இருக்கும் டிவியில் காட்டுகிறார்கள்.
அமெரிக்காவின் முக்கிய இடங்களின் செட்கள் இங்கே இருக்கின்றன. தத்ரூபமாக. நியூயார்க்கில் கதை நடக்கிறது என்றால், நியூயார்க் செல்ல வேண்டியது இல்லை. ஹாலிவுட் வந்தால் போதும்.
இந்த புகைப்படத்தில் பின்னால் இருப்பது அட்டை கட்-அவுட். எங்களை பின்புறமும் அழைத்து சென்று காட்டினார்கள்.
பல்வேறு படங்களில் நடித்த கார்கள், இங்கே பார்க் செய்யப்பட்டிருந்தன. எனக்கு தெரிந்தது ஜூராசிக் பார்க் ஜீப்பும், பாஸ்ட் அண்ட் ப்யுரியஸ் காரும் தான்.
ஆக்ஷன் காட்சிகளில் கார்கள் எப்படி வெடித்து சிதறுகின்றன என்பதை செயல்முறை விளக்கத்துடன் செய்து காட்டினார்கள். காரை டான்ஸ் ஆட கூட வைக்கிறார்கள்.
பிறகு, ஒரு கிராமத்திற்குள் அழைத்து சென்றார்கள். ஊரில் திடீரென்று மழை பொழிய வைத்தார்கள். ஆறு ஓட வைத்தார்கள். வெள்ளத்தையும் கொண்டு வந்து, வந்தவர்களை நனையவிட்டார்கள்.
ஏவிஎம்மிற்கு எஸ்.பி.முத்துராமன் போல, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், யுனிவர்சல் ஸ்டுடியோஸின் டைரக்டர் போலும். அவர் பெயரில் ஒரு தெரு இருந்தது. சும்மா செட்டுக்காகவா அல்லது நிஜமாகவேவா என்று தெரியவில்லை.
வண்டியை ஒரு கட்டிட செட்டிற்கு உள்ளே கொண்டு போனார்கள். அங்கே ஒரு பாதாள ரயில் நிலைய செட் இருந்தது. இங்கே நிலநடுக்கம் வந்தால் எப்படி இருக்கும், வெள்ளம் வந்தால் எப்படி இருக்கும், ட்ரெயின் ஆக்ஸிடெண்ட் ஆனால் எப்படி இருக்கும், தீப்பிடித்தால் எப்படி இருக்கும் என்று எல்லாவற்றையும் கண்முன்னால் செய்து காட்டினார்கள்.
அந்த மலை பிரதேசம் முழுக்க பல்வேறு படங்களுக்கு போடப்பட்ட செட் கட்டிடங்கள், நகரங்கள், காலனிகள் என்று அது ஒரு கற்பனை உலகம். வண்டியில் இருக்கும் டிவியில் அந்த செட் ப்ராப்பர்டிகள் நடித்த காட்சிகளைப் போட்டு காட்ட, எல்லாம் தெளிவாக புரிந்தது.
ஒரு உலகம் இடத்தில் ஒரு பெரிய சைஸ் விமானம் ஆக்ஸிடண்டாகி கிடந்தது. ’வார் ஆப் த வோர்ட்ஸ்’ படத்திற்காக போடப்பட்ட செட்.
இதற்கு நடுவே, ஒண்ணும் சொல்லாமல் கொள்ளாமல் ஒரு இண்டோர் செட்டிற்கு கூட்டி சென்றார்கள். முதலிலேயே 3டி கண்ணாடி கொடுத்திருந்தார்கள். அதை இங்கு அணிய சொன்னார்கள். முழுவதும் இருட்டு. கண்ணை மூடி திறப்பதற்குள், நாம் பழைய காலத்திற்கு சென்று விட்டோம். நம் முன்னால் டைனோசர்கள் சண்டை போடுகிறது. நமக்கு முன்னால் வந்து கத்துகிறது. கத்துவதில் நமது முகம் ஈரமாகிறது. இந்த பக்கம் திரும்பி பார்த்தால், கிங்-காங் டைனோசர்களை போட்டு துவம்சம் பண்ணுகிறது. முன்னால் சென்றுக்கொண்டிருந்த வண்டியை டைனோசர் இழுந்துக்கொண்டு மேலேயிருந்து கீழே விழ, நாமும் விழ போக, கிங்-காங் நம்மை காப்பாற்றுகிறது. எனக்கு பயம் - சத்தத்தை கேட்டு என் மடியில் இருந்த பாப்பா அழுதது தான். ரொம்ப புது அனுபவம். அருமையாக இருந்தது.
யாரோ ஒரு நல்லவர் இதை வீடியோ எடுத்து போட்டுயிருக்கிறார்.
இது முடிந்த பிறகு, ஜூராசிக் பார்க், மம்மி, ட்ரான்ஸ்பார்மர் போன்ற விளையாட்டுகளுக்காக கீழ் தளம் செல்ல வேண்டி இருந்தது. கீழ் தளம் என்றால் நான் ஏதோ கொஞ்சம் கீழே இருக்கும் என்று நினைத்தேன். அதுவோ மலையில் இருந்து கீழே இறங்கும் தூரம். அவ்வளவு பெரிய லிப்ட்டை பார்த்ததில்லை. குழந்தையை கையில் வைத்துக்கொண்டு, ஸ்ட்ரால்லரை பிடித்துக்கொண்டு போனது, முதலில் திகிலாக தான் இருந்தது. லிப்டின் ஒரு பகுதி இங்கே.
இங்கு இருக்கும் விளையாட்டுகளுக்கு செல்ல, குழந்தையுடன் வந்திருக்கும் பெற்றோர்களுக்காக ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள். என்னவென்றால், இந்த விளையாட்டுக்களுக்கு குழந்தைகளை எடுத்து செல்ல முடியாது. போட்டு குலுக்கு குலுக்கு என்று குலுக்குவார்கள். சத்தம் காதை கிழிக்கும். 3டி 4டி என்று அவர்கள் விடும் கரடி கொஞ்சம் நஞ்சமல்ல. இந்த விளையாட்டுகளுக்கு செல்ல காத்திருக்கும் கூட்டமும் கொஞ்சம் நஞ்சமல்ல. இந்த மாதிரி இருக்கும் போது, ஒவ்வொரு பெற்றோரும் தனிதனியே செல்ல வேண்டி இருக்கும். அப்பா தனியாக, பிறகு அம்மா தனியாக. இப்படி ஒவ்வொருவரும் தனித்தனியாக வெயிட் செய்தால் ரொம்ப நேரமாகுமல்லவா? அதனால் ‘சைல்ட் ஸ்விட்ச்’ எனப்படும் காத்திருத்தல் மூலம், முதலில் ஒரு பெற்றோர் செல்ல மற்றொரு பெற்றோர் குழந்தையுடன் ஒரு அறையில் காத்திருக்கலாம். அந்த அறையில் குழந்தைகள் விளையாட, நிறைய விளையாட்டு பொருட்கள் இருக்கும். உதாரணத்திற்கு, அப்பா சென்று வந்தபிறகு, அம்மா எந்தவொரு காத்திருத்தலும் இல்லாமல் உடனே சென்று வந்துவிடலாம். இப்படி ஜூராசிக் பார்க், மம்மி போன்றவற்றுக்கு சென்று வந்தோம்.
யூ-ட்யூபில் இதன் வீடியோக்கள் காணக்கிடைக்கின்றது.
எட்டு மணிக்கு கடையை சாத்துகிறார்கள். முடித்துவிட்டு மெதுவாக வெளியே வந்தோம். சிட்டி வாக் ஜொலித்தது. எங்களிடமும் சார்ஜ் இல்லை, கேமராவிலும் இல்லை. மொபைலில் சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.
ஜூராசிக் பார்க் பேக்ரவுண்ட் இசை காதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது.
லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் சைனா டவுணில் சாப்பிடலாம் என்று முடிவு செய்துக்கொண்டு கிளம்ப, பாதி தூரம் வரை ஜிபிஎஸ் சரியாக வழிக்காட்டி கொண்டு வர, திடீரென்று நடுரோட்டில் தனது செயல்பாட்டை நிறுத்தியது.
.
Sunday, September 9, 2012
யுனிவர்சல் ஸ்டுடியோஸின் வாயில்லா ஜீவன்கள்
ஒரு ஃப்ளோவில் பயணப்பதிவு தொடரை எழுதிக் கொண்டிருந்தேன். திடீரென்று எதிர்பாராமல் இன்னொரு பயணத்திற்கு தயாராகி செல்ல நேரிட, இந்த தொடருக்கு சின்ன தடங்கல். இப்ப, திரும்ப தொடரலாம்.
யுனிவர்சல் ஸ்டுடியோஸிலும் தேவர் ஃபிலிம்ஸ், தேனாண்டாள் மூவிஸ் போல மிருகங்களுக்கு என தனியே ஒரு இலாகா இருக்கிறது. நன்றாக பயிற்றுவிக்கப்பட்ட மிருகங்களும், அவற்றிற்கு பயிற்சியளித்த பயிற்சியாளர் குழுவும்.
இந்த அணி, இங்கு யுனிவர்சல் ஸ்டுடியோஸில் ஒரு நிகழ்ச்சியை நடத்துக்கிறார்கள். எப்படி தங்களுக்கு மிருகங்கள் கிடைக்கின்றது, எப்படி பயிற்சியளிக்கிறோம், எப்படி இந்த மிருகங்கள் படங்களில் நடிக்கின்றன போன்ற சுவையான தகவல்களை பகிர்ந்துக்கொண்டார்கள்.
பார்வையாளர்கள் பங்குக்கொள்ளும்வாறு நிகழ்ச்சியை அமைத்திருந்தார்கள்.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு, எங்க பாப்பா தூங்கிக்கொண்டிருந்தாள். நிகழ்ச்சியின் போது விழித்தவள், பின்பு தூங்காமல் மிகவும் ஆர்வத்துடன் பார்த்தாள்.
இந்த நிகழ்ச்சியின் போது எடுத்த வீடியோக்கள் இவை.
பறவை பறப்பதை எப்படி படம் பிடிக்கிறார்கள் என்பதை விளக்கும் வீடியோ.
ஒரு பறவை எப்படி சொன்ன இடத்திற்கு சரியாக பறந்து செல்கிறது என்பதை விளக்கியது, இந்த வீடியோவில் இருக்கிறது.
அதே பயிற்சியாளர், அந்த நாயை வைத்து நடத்திய நிகழ்ச்சி, பாதியில் இருந்து, இந்த வீடியோவில்.
பின்குறிப்பு - கொஞ்சம் தூரத்தில் இருந்து எடுத்ததால், ஜூம் செய்ய வேண்டி இருந்தது. அதே சமயம், காட்சிப்படுத்த வேண்டியவைகள் அங்குமிங்கும் இருந்ததால், லாங் ஷாட் வித் ட்ராக்கிங் போன்றவற்றில் பெரிய முன்னனுபவம் இல்லாததால், கேமராவை அங்குமிங்கும் நகர்த்த, பார்த்த உங்களுக்கு தலைவலி வரலாம். மன்னிக்கவும். :-)
.
Subscribe to:
Posts (Atom)