டால்பி தியேட்டர், சைனீஸ் தியேட்டர் மற்றும் மேடம் துசாட்ஸ் மியூசியம் அகியவை அனைத்தும் ஒரே சாலையில் பக்கம் பக்கம் தான் இருக்கிறது. நாங்கள் மேடம் துசாட்ஸ் மியூசியம் இருக்கும் கட்டிடத்தில் தான் காரை பார்க்கிங் செய்து விட்டு, டால்பி தியேட்டருக்கு சென்றிருந்தோம். ஞாயிறு காலை சிறிது நேரமே, டால்பி தியேட்டருக்குள் அனுமதிப்பார்கள் என்பதால், அதற்கு முதலில் சென்றோம்.
அதை பார்த்துவிட்டு பிறகு, மேடம் துசாட்ஸ் மியூசியத்திற்கு வந்தோம். அந்த சாலையின் பெயர் - ஹாலிவுட் பொல்வார்ட் (Hollywood Boulevard). பொல்வார்ட் என்று பல சாலைகளை அமெரிக்காவில் காணலாம். பொல்வார்ட் என்பது ஒரு வகை சாலை.
இந்த சாலை முழுக்க பிரபலங்கள் போல் உடையணிந்து கொண்டு சிலர் சுற்றுகிறார்கள். மைக்கேல் ஜாக்சன், பைரேட்ஸ், பேட்மேன் ஜோக்கர் என்று பலரை காண முடிந்தது. நம்மிடம் பணம் பெற்றுக்கொண்டு, போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்கள்.
சிலரை பார்த்த போது, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டிணம் கோவில் நினைவுக்கு வந்தது.
இந்த சாலையில் தான் ஹாலிவுட் வாக் ஆப் ஃபேம் (Hollywood Walk of Fame) என்னும் ஹாலிவுட் நட்சத்திரங்களை அங்கீகரிக்கும் நட்சத்திர தடங்களைப் பதித்து வைத்திருக்கிறார்கள்.
நம்மூர் என்றால், தலைவனை மிதிக்க விட மாட்டோம் என்று இதற்கெல்லாம் அனுமதித்திருக்க மாட்டார்கள்.
இதையெல்லாம் பார்த்துவிட்டு, மேடம் துசாட்ஸ் மியூசியத்திற்குள் நுழைந்தோம்.
மேடம் துசாட்ஸ் அவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டு வாழ்ந்த பெண்மணி. மெழுகு சிலைகளை வடிவமைப்பதில் ’அம்மா டக்கர்’. லண்டனில் இருக்கும் இவருடைய மியூசியம் மிகவும் புகழ் பெற, உலகம் முழுக்க பிரபலங்களின் மெழுகு சிலைகள் கொண்ட இவருடைய மியூசியங்கள் திறக்கப்பட்டன. இவருடைய குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்ட இந்த மியூசியங்கள், தற்சமயம் வேறொரு பொழுதுபோக்கு நிறுவனத்தால் (மெர்லின் எண்டர்டெயின்மெண்ட்) வாங்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன.
சும்மா சொல்லக்கூடாது. நிஜமாகவே சிலைகளை தத்ரூபமாக அமைத்துள்ளார்கள். சுரண்டி பார்த்தேன். மெழுகுதான்!
விரல், மேலே இருக்கும் கோடுகள், அதில் இருக்கும் சிறு முடிகள் என்று அத்தனையும் நிஜத்திற்கு அருகாமையில்.
சில இடங்களில், மெழுகு சிலைகளைப் பார்த்து நிஜமாகவே யாரோ நிற்கிறார்கள் என்று நினைத்தேன். சில இடங்களில், நிஜ மனிதர்களை மெழுகு சிலை என்று நினைத்து பிறகு சுதாரிக்க வேண்டி இருந்தது.
ஒரு இடத்தில், ஒரு சைனீஸ் பெண் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து போஸ் கொடுத்து கொண்டிருந்தார். அந்த பெண்ணுடன் வந்திருந்த ஆண் தள்ளியிருந்து போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார். நான் முதலில் அந்த ஆணை கவனிக்கவில்லை. இந்த பெண்ணை மட்டும் பார்க்க, அந்த பெண்ணின் வெள்ளை கலருக்கு பொம்மை போலவே இருக்க, பக்கத்தில் போய் உக்கார்ந்துவிடலாமா என்று நினைத்துவிட்டேன். நல்லவேளை, அந்த பெண் சிறு அசைவை காட்ட, அவள் நிஜம் என்று உணரமுடிந்தது. இல்லாவிட்டால், ரசாபாசம் ஆகியிருக்கும்!!! அதன்பிறகு, கொஞ்சம் ஜாக்கிரதையாகவே சிலைகளை அணுக வேண்டியிருந்தது. :-)
இங்கிருக்கும் மியூசியத்தில் இந்திய நடிகர்கள் யாரும் இல்லை. ஆசிய அளவில் ஜாக்கிசான் இருந்தார். லண்டன், நியூயார்க்கில் இருக்கும் மியூசியங்களில் இந்திய கலைஞர்களின் சிலை இருக்கிறதாம்.
மனிதர்களை, அவர்களின் உண்மையான அளவில் அளவெடுத்து மெழுகு சிலை வடிப்பதால், சில ரகசிய உண்மைகளை தெரிந்துக்கொள்ள முடிந்தது. உதாரணத்திற்கு, ஒன்று சொல்கிறேன். நான் ஜாக்கிசானை விட உயரம். இதுபோல், மற்றவற்றை நீங்களே ஒரு அனுமானமாக யூகியுங்கள்.
சிலைகளுடன் போஸ் கொடுக்க என்று, அந்த மனிதர்களுடன் சம்பந்தப்பட்ட பொருட்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, சார்லி சாப்ளினுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க, அவரிடம் இருப்பது போன்ற தொப்பி, கைத்தடி போன்றவை இருக்கின்றன. சில பிரபலங்களுடன் உட்கார்ந்து காபி குடிப்பது போன்று பில்-டப் கொடுக்க, அதற்கேற்ப சேர், காபி கோப்பை போன்றவற்றை பக்கத்திலேயே வைத்திருக்கிறார்கள்.
ஓபாமாவையும் அவருடைய அலுவலகத்தையும் அப்படியே காப்பி எடுத்து வைத்திருந்தது சிலருக்கு குஷியாகிவிட்டது. அவரை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ, அப்படியெல்லாம் போட்டோ எடுத்துக்கொண்டார்கள். இதுவல்லவோ ஜனநாயகம்?
நம்மூர் பிரதமர் போன்ற பிரபலங்களை இதுபோல் சிலை செய்ய அனுமதிப்பார்களா? இதற்கும் அவர் நிஜமாகவே சிலை போலத்தான் இருப்பார்!!!
இன்னும் கொஞ்சம் மெழுகு சிலைகளும், மெழுகு சிலை பற்றிய சில தகவல்களும், அடுத்த பதிவில் பார்க்கலாம்.
.
8 comments:
சிலரை பார்த்த போது, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டிணம் கோவில் நினைவுக்கு வந்தது.
பயணப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
, இங்கு சென்றுள்ளேன். Madame Tussauds என்பதை
மேடம் ருஸ்சோ எனவே உச்சரிக்க வேண்டும். இவர் ஒரு பிரஞ்சுப் பெண். பிரன்சில் பல சொற்களுக்கு கடைசி எழுத்துக்கள் ஒலிப்பதில்லை, Paris ஐ பிரன்சில் 'பரி' எனவே உச்சரிக்க வேண்டும்.
பரிசிலும் இப்படி பிரஞ்சுப் பிரபலங்களின் மெழுகுச் சிலையுடனான காட்சியகம் உண்டு. அங்கு இந்தி நடிகர் சாருக் கானுக்குச் சிலையுண்டு. அது பற்றி நான் 30/04/2008 ல் இட்ட பதிவு- http://paris-johan.blogspot.fr/2008/04/blog-post.html
Grevin Wax Museum- பாரிசில் உள்ள மெழுகுச் சிலை காட்சியகத்தின் பெயர்.
//சும்மா சொல்லக்கூடாது. நிஜமாகவே சிலைகளை தத்ரூபமாக அமைத்துள்ளார்கள். சுரண்டி பார்த்தேன். மெழுகுதான்! //
சுரண்டி வேற பார்த்தீங்களா! தமிழன்டா :-)) நல்ல வேலை தீப்பெட்டி எடுத்து கொஞ்சம் உருக்கி பார்க்காம இருந்தீங்களே! ;-)
//அந்த பெண்ணுடன் வந்திருந்த ஆண் தள்ளியிருந்து போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார். நான் முதலில் அந்த ஆணை கவனிக்கவில்லை. இந்த பெண்ணை மட்டும் பார்க்க//
அதானே! என்னைப்போல் ஒருவன் :-)
//சில ரகசிய உண்மைகளை தெரிந்துக்கொள்ள முடிந்தது. உதாரணத்திற்கு, ஒன்று சொல்கிறேன். நான் ஜாக்கிசானை விட உயரம். இதுபோல், மற்றவற்றை நீங்களே ஒரு அனுமானமாக யூகியுங்கள்.//
யூகித்து விட்டேன் ;-)
சரி இதை சொல்லிட்டு எதுக்கு அடுத்தது ஏஞ்சலீனா ஜோலி படம் போட்டு இருக்கீங்க ஹா ஹா
//அவரை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ, அப்படியெல்லாம் போட்டோ எடுத்துக்கொண்டார்கள். இதுவல்லவோ ஜனநாயகம்?//
அதுவும் அந்த ஊர் காரங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம்.. டோட்டல் டேமேஜ் பண்ணிடுவாங்க.
அனைத்து படங்களும் அருமை.நேரில் பார்த்த மாதிரி இருக்கு.
தொடர்ந்து வாசித்துவருவதற்கும் பின்னூட்டங்களும் நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே.
நன்றி யோகன். அடுத்த பதிவில் திருத்திவிட்டேன்.
தகவலுக்கு நன்றி. :-)
வாங்க கிரி...
//சுரண்டி வேற பார்த்தீங்களா! தமிழன்டா :-)) நல்ல வேலை தீப்பெட்டி எடுத்து கொஞ்சம் உருக்கி பார்க்காம இருந்தீங்களே! ;-)//
அஸ் எ டமிலன், இன்னும் என்னென்னலாமோ செய்ய தோன்றியது. கட்டுப்படுத்திகொண்டேன். :-)
//அதானே! என்னைப்போல் ஒருவன் :-)//
ஹி ஹி... பயபுள்ள சுவர் மறைவில் இருந்தாங்க...
//சரி இதை சொல்லிட்டு எதுக்கு அடுத்தது ஏஞ்சலீனா ஜோலி படம் போட்டு இருக்கீங்க ஹா ஹா//
அவுங்க கைல பச்சை குத்தி இருக்குறத பார்த்தீங்களா?
Post a Comment