சென்ற வெள்ளிக்கிழமை, சாயங்காலம் 6 மணிக்கு ப்ளைட். எப்படியும் ஆபிஸில் இருந்து 3-4 மணிக்கு கிளம்பி விடலாம் என்றாலும், எதற்கும் இருக்கட்டும் என்று வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என்று முடிவெடுத்துக்கொண்டேன். (WFH - Working From Home என்ற முறையில் எங்கள் அலுவலகத்தில் வீட்டில் இருந்து வேலை செய்வதற்கு அனுமதிப்பார்கள்)
மூன்று மணியளவில் எல்லாம் பேக் செய்தாகிவிட்டது. டாக்ஸியில் ஏர்போர்ட் செல்லலாம் என்றிருந்தேன். அலுவலக நண்பரொருவர் ‘நான் வந்து விடுவேன்’ என்று பிடிவாதமாக இருந்தார். நானும் சரி என்று சொல்ல, நாலு மணிவாக்கில் வீட்டில் இருந்து கிளம்பினோம்.
நாலே முக்காலுக்கு ஏர்போர்ட் செல்ல, அங்கே செக்கின் செய்து, செக்யூரிட்டி செக் முடித்து, எங்கள் கேட்டிற்கு வர ஐந்தரை ஆனது. இதற்கிடையே ப்ளைட் ஒரு மணி நேரம் லேட்.
நாங்கள் புக் செய்திருந்தது - Frontier ஏர்லைன்ஸில். அதை பற்றி சொல்வதற்கு முன், செக்யூரிட்டி செக்கில் என்ன நடந்தது என்று பார்த்துவிடலாம்.
பாப்பாவுக்காக நாங்கள் வைத்திருக்கும் ப்ளாஸ்க் ஒரு மாதிரி சில்வர் கலரில் நீளமாக ஒரு தினுசாக இருக்கும். அதில் தண்ணீர் இருந்ததென்பதால் அதையும், பாப்பாவுக்கு வாங்கி வைத்திருந்த ஜூஸ் போன்ற சில உணவு வகைகளையும் எடுத்து வைத்து, ஒரு சிறு விசாரணைக்கு அழைத்தார்கள்.
அந்த ப்ளாஸ்க் மூடியை திறக்க சொன்னார்கள். அதை மேலே ஒரு சிறு காகிதத்தை நீட்டினார்கள். பிறகு, அந்த காகிதத்தின் மேல் ஏதோ வேதியல் சமாச்சாரத்தை சிறிது விட்டார்கள். பரிசோதனை முடிவு எங்களுக்கு சாதகமாக வந்தது. பிறகு, குழந்தைக்கான ரெடிமேட் ஜூஸ் சிறு பாட்டில்களில் இருக்க, அதனை ஒரு இயந்திரந்தின் உள் ஒன்றன் பின் ஒன்றனாக போட்டார்கள். அங்கு எங்களுக்கு வெற்றி. பை பை சொல்லி வழியனுப்பி வைத்தார்கள்.
ஓகே. Frontier பற்றி பார்க்கலாம்.
எனக்கு இவர்களது ப்ளைட்டின் டிசைன் பிடிக்கும். ஒவ்வொரு ப்ளைட்டின் வாலிலும் ஒரு மிருகத்தின் படம் ஒட்டி இருக்கும். மற்ற நிறுவன ப்ளைட்டுகள், ரொம்ப ப்ரோஃபஷனலாக ஒரே விதமான கலரில் இருக்க, இதில் மட்டும் விதவிதமான மிருகங்கள் படம் இருக்க, பார்க்க வித்தியாசமாக இருக்கும். அவர்களின் டேக்லைன் - A Whole Different Animal. படங்களுக்கு நெட்டில் தேடி பாருங்கள்.
மலிவு விலையில் டிக்கெட் தேட, இதில் தான் டிக்கெட் கிடைத்தது. எங்களுக்கான ப்ளைட்டை பிடிக்க, அவர்கள் சொன்ன கேட்டிற்கு சென்றால், அங்கோ சந்தைக்கடை போல் கூட்டம். லேட் என்பதால், ஒரு மணி நேரத்திற்கு மேல் இருந்ததால், கொஞ்சம் தள்ளி சென்று காபி குடித்துவிட்டு வந்தோம். அப்படி இப்படி என்று பொழுதை போக்கி, ஒரு வழியாக ப்ளைட்டில் ஏறி, அது ஏழு மணிவாக்கில் கிளம்பியது.
இரண்டு மணி நேர விமான பயணம். பாப்பாவுக்கு தூக்கம் வந்தாலும், தூங்காமல் அழ ஆரம்பித்தாள். பக்கத்தில் இருந்த ஒரு அமெரிக்க பாட்டி, பாப்பா தலையில் மசாஜ் செய்து தூங்க உதவினார்கள். அவர் அவரது புதிய பேத்தியை காண லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று கொண்டு இருக்கிறாராம். ஒரு Astrology புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தார்.
ப்ளைட் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றதும், விமான நிலையம் வெளியே வந்து நின்றோம். வாடகை கார் நிறுவனங்கள், விமான நிலையத்தை விட்டு தள்ளி கடை அமைத்திருப்பார்கள். விமான நிலையத்தில் இருந்து அவர்கள் இடத்திற்கு அழைத்து செல்வதற்கு, பஸ், வேன் வந்து தொடர்ந்து இருக்கும். நாங்கள் புக் செய்திருந்தது, எண்டர்பிரைஸ் என்னும் வாடகை கார் நிறுவனத்தில். விமான நிறுவன வாசலில் அவர்களது பஸ்ஸை பிடித்து, அவர்கள் இடத்திற்கு சென்றோம். பக்கம் தான். பத்து நிமிடம் இருக்கும்.
எண்டர்ப்ரைஸில் அவர்கள் கேட்ட தகவலை கொடுத்து, நாங்கள் கேட்ட காரை எடுத்துக்கொண்டு, அடுத்து நாங்கள் புக் செய்திருந்த ஹோட்டலை நோக்கி புறப்பட்டோம். ஜிபிஎஸ் என்கிற சமாச்சாரம் மட்டும் இல்லாவிட்டால், ஒன்றும் முடியாது. ஹோட்டலுக்கு அது சொன்ன வழியில், அது சொன்ன வேகத்தில், காரை செலுத்தினோம்.
சில பல ஹைவேகள், சிறு சாலைகளை கடந்து, ஹோட்டலுக்குள் நுழைந்து, செக்-இன் செய்து, ரூமிற்கு வந்து சேர, இரவு பத்தாகிவிட்டது. இரவு உணவிற்கு, வீட்டிலிருந்தே செய்து கொண்டு வந்திருந்த உணவை சாப்பிட்டோம். முதல் நாள், டிஸ்னிலேண்ட் செல்வதாக திட்டம் தீட்டியிருந்தேன். எட்டு மணிக்கு டிஸ்னிலேண்ட் திறக்குமென்பதால், ஏழு- எழரைக்கு கிளம்பினால் சரியாக இருக்குமென்பதால், அதற்கேற்ப எழுந்திருக்க வேண்டுமென்று ஹோம் மினிஸ்டரிடம் சொல்லி விட்டு உறங்கினேன்.
டிஸ்னிலேண்ட் எப்படி இருந்ததென்று, அடுத்த பதிவில் புகைப்படங்களுடன் பார்க்கலாம். இனி கொஞ்சம் வேகமாகவே பார்க்கலாம்.
.
9 comments:
ரொம்ப நல்லா இருக்கு உங்கள் பயணக்கட்டுரை. டிஸ்னி, யுனிவர்சல் போனீங்களா? சான்டியாகோ? வீக்கெண்ட் ட்ரிப் என்பதால் போயிருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
பேர் நல்லா இருக்கே? பே ஏரியா பகோடா!!!
டிஸ்னி, யுனிவர்சல் சென்றோம். சாண்டியாகோ செல்லவில்லை. 3 நாள் பயணம் தான்.
முடியும்போது சான்பிரான்சிச்கோ விற்கு ஒரு ட்ரிப் அடிங்க
nice.
சரவணகுமரன் US ல ஸ்டீரியங் இடது புறம் இருக்குமே! ஓட்ட சிரமமாக இல்லையா? பழக்க தோசத்துல ஏடாகூடமா எங்கேயும் திருப்பாம இருந்தீங்களா.. :-)
அங்கேயும் வரணும், பகோடா...
நன்றி கிருஷ்
கிரி, அந்த காமெடியை எல்லாம் நான் வந்த புதுசுலேயே பண்ணிட்டேன்!!! :-)
Post a Comment