---
இந்த படம் வந்த போது, நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். படம் பார்த்தது, தூத்துக்குடி பாலகிருஷ்ணாவில். திரையரங்கிலேயே, இரண்டு, மூன்று முறை பார்த்ததாக நினைவு. அந்த காலக்கட்டத்தில் பலரும் திரையரங்கில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பார்த்து, அதனால் படம் நூறு, நூற்றைம்பது நாட்கள் ஓடி, வெற்றி படமாகும். இப்பொழுது, மூன்றாவது நாளில் படத்தின் வெற்றியை தயாரிப்பாளரும், நடிகரும் தீர்மானித்து அறிவிக்கிறார்கள்.
எங்கள் தெருவில் இருக்கும் எனது நண்பனது வீட்டிற்கு, நாங்கள் நான்கைந்து பேர் சென்று விளையாடுவோம். அப்போது அவர்கள் வீட்டில் இந்த படத்தின் முழுமையான வசனங்கள் உடைய கேசட், டேப் ரிக்கார்டரில் ஓடிக்கொண்டிருக்கும். பல முறை கேட்டு, கேட்டு வசனங்கள் மனப்பாடமாக தெரியும் அப்போது. (என்னை பொறுத்தவரை உலகத்திலே ரெண்டே ரெண்டு ஜாதிதான். ஒண்ணு ஆண் ஜாதி, இன்னொண்ணு பெண் ஜாதி... நீ என் பொஞ்சாதி பொஞ்சாதி!!!)
சிம்பிளான கதை, போராடிக்காத திரைக்கதை, பிரபு - குஷ்பு வேதியியல்(!), கவுண்டமணி பேமஸ் மாலைகண் காமெடி, எல்லாவற்றுக்கும் மேலாக, படத்தை தூக்கி நிறுத்திய இளையராஜாவின் பாடல்கள், படத்தை தமிழின் கமர்ஷியல் க்ளாஸிக் வரிசையில் கொண்டு சேர்த்தது.
மூன்று அண்ணன்கள், அவர்களுக்கு ஒரு பாச தங்கை. தங்கையின் திருமணம், அண்ணன்களை மீறிதான் நடக்கும் என்று ஒரு ஜோசியக்காரர் சொல்ல, அதிலிருந்து தங்கையை ஆண்களின் பார்வையில் இருந்து பொத்தி பொத்தி வளர்க்க, ஊரில் இருக்கும் ஒரு அப்பாவி பாடகன், தாலி என்றால் என்னவென்றே தெரியாத ஒருவன், அவளை தெரியாமல் திருமணம் செய்ய, அவர்களது நிலை என்னவானது என்பது தான் கதை. காதில் இரண்டு முழம் பூவை சுற்றிய கதை தான் என்றாலும், அப்பொழுது யாரும் கேள்வி கேட்காமல் படத்தை வெற்றியடைய செய்தார்கள்.
இப்படத்திற்கு முன்பே, பிரபுவும், குஷ்புவும் இணைந்து நடித்திருந்தாலும், இப்படத்திற்கு பிறகு அவர்களது ஜோடி பொருத்தம் பரபரப்பாக பேசப்பட்டது. ஒருமுறை, குமுதம் அரசு பதில்களில் இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டது. பிரபுக்கு ஏற்ற ஜோடி யார் என்று குஷ்புவுடன் இன்னும் இரண்டு நடிகைகளின் பெயர்களைக் கொடுத்து கேட்கப்பட்டது. அதற்கான பதில் - குண்டுக்கு குண்டு. இருவரும் நடிப்பிலும் வெயிட்டை காட்டிய படம் இது.
கவுண்டமணியின் காமெடி தனி ட்ராக் போல இருந்தாலும், கதையுடன் ஆங்காங்கே சரியாக இணைக்கப்பட்டிருக்கும். பிரபுவுக்கு, கதையின் முக்கிய அம்சமான தாலியை பற்றிய அறிமுகம் கொடுப்பதே, கவுண்டமணி தான்.
தாலி செண்டிமெண்ட்டை தமிழ் சினிமாவின் உச்சத்திற்கு கொண்டு சென்று நிறுத்தியது, இப்படம் தான். இப்படத்தை தொடர்ந்து, தாலியை சுற்றி சுற்றி கதையமைத்துக்கொண்டு, கோடம்பாக்கத்தில் படங்கள் குவிந்தது.
---
இளையராஜா. இவரை விட, வேறு யாருக்கு இப்படத்தின் வெற்றியில் முக்கிய பங்கை கொடுக்க முடியும்? அவருடைய வழக்கமான, ஐந்து நிமிடத்தில் ஒரு பாடல் என்ற கணக்கில் அரை மணி நேரத்தில் மொத்த பாடல்களும் ராஜா போட்டுக்கொடுக்க, எத்தனை வருடங்களாலும் சலிக்காத பாடல்களாகியது அவை.
என் மகள் கூட தூக்கக்கலக்கத்தில் இருக்கும் போது, ’தூளியிலே’ பாடலைப் போட்டால் தூங்கிவிடுவாள். ராஜாவின் மேஜிக்கை நான் உணரும் தருணங்கள் அவை.
---
பி.வாசுவின் பெரும்பாலான படங்கள், வேறு மொழிகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவே இருக்கும். இந்த படம் தான், தமிழில் இருந்து கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என்று மற்ற மொழிகளுக்கு சென்று, அங்கும் ஹிட்டடித்ததது.
பி.வாசுவை உச்சத்திற்கு கொண்டு சென்ற படம். தற்சமயம் கூட, நான் எந்த இயக்குனருக்கும் ரசிகர் மன்றம் என்று திரையரங்குகளில் பார்த்தது கிடையாது. பேஸ்புக் ஃபேன் கிளப்பை விட்டு தள்ளுங்கள். தூத்துக்குடி சார்லஸ் தியேட்டரில் ‘வால்டர் வெற்றிவேல்’ வந்தபோது, பி.வாசுவிற்கு ‘நட்சத்திர இயக்குனர்’ என்ற அடைமொழியுடன் கூடிய ரசிகர் மன்றத்தின் வரவேற்பு பலகை தியேட்டர் முன்பு கட்டப்பட்டிருந்தது.
இந்த படத்தில் பிரபுவுடைய வீடாக, குஷ்புவின் வீடாக காட்டப்பட்ட இடங்கள், ஆற்றோரம், அணையோரம் என்று அழகாக காட்டப்பட்டிருக்கும்.
---
பிரபு, குஷ்பு, பி.வாசு, ஸ்வர்ணலதா என்று இப்படத்தில் சம்பந்தபட்ட பலருக்கும் இப்படம் ஒரு மைல்கல்லாக அமைந்தது. என் நினைவிலும் அழியாத ஒரு படமாக நிலைத்திருக்கிறது.
---
சின்ன தம்பி - யூட்யூப் லிங்க்.
.
10 comments:
நல்ல படம்:)
நல்ல அலசல்...
பழைய ஞாபகம் வந்தது.... நன்றி...
(த.ம. 1)
நல்ல கௌண்டமணி காமெடி படம்
நன்றி,
ஜோசப்
http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)
நன்றி மழை
நன்றி திண்டுக்கல் தனபாலன்
நன்றி ஜோசப்
வணக்கம் சரவண குமரன்
நானும் தூத்துக்குடியில் தான் குமரன் தியேட்டரில் பார்த்த நினைவு
--- விஜயகுமார் - கிருஷ்ணராஜ புரம்
வணக்கம் சரவண குமரன்
நானும் தூத்துக்குடியில் தான் குமரன் தியேட்டரில் பார்த்த நினைவு
--- விஜயகுமார் - கிருஷ்ணராஜ புரம்
மிகச் சிறந்த திரைப்படம்.... உங்கள் பதிவும் அதுபோல் அருமை....
மிகச் சிறந்த திரைப்படம்.... உங்கள் பதிவும் அதுபோல் அருமை....
Post a Comment