Sunday, July 29, 2012

அமெரிக்க விவசாயி வியாபாரியும் கூட...

அமெரிக்காவில் எங்காவது ஒரு விவசாய நிலத்தை பார்த்துவிட முடியுமா? என்று ஒரு ஆசை இருந்தது. எங்காவது ஊரை விட்டு, தொலைவுக்கு சென்று கொண்டு இருக்கும் போது, விவசாய நிலங்களை பார்ப்பதுண்டு. இறங்கி பார்ப்பதற்கு தான் வாய்ப்பு கிடைத்ததில்லை.

இங்கு இருக்கும் தோட்டங்களில், ஒரு நடைமுறை இருக்கிறது!!! அதாவது நமக்கு அவர்களது தோட்டத்தை திறந்து விட்டுவிடுவார்கள். நாம் உள்ளே சென்று தோட்டத்தில் இருக்கும் பூக்கள், காய்கனிகள் போன்றவற்றை பறித்து கொண்டு திரும்பலாம்.

நல்லா இருக்கிறதே! இதனால் அவர்களுக்கு என்ன லாபம் என்று கேட்கிறீர்களா? நாம் அங்கிருந்து பறித்துவருபவைகளுக்கு எடை பார்த்து ஒரு ரேட் போடுவார்கள். அந்த ரேட், நாம் வெளிசந்தையில் வாங்கும் விலையைவிட அதிகமாக தான் இருக்கும். ரொம்ப அதிகம் என்று சொல்லமுடியாது.

நமக்கு அதுவொரு அனுபவம் என்பதால் ஓகே. இங்கிருக்கும் பெற்றோர்கள், அவர்களது குழந்தைகளுக்கு பூப்பறிப்பது, காய் பறிப்பது போன்றவற்றை இதுபோல ஒரு அனுபவமாக சொல்லிக்கொடுக்கிறார்கள்.

---

இப்பொழுதெல்லாம் இங்கு வெயில் பட்டையை கிளப்புவதால், இது போன்ற திறந்தவெளி தோட்டத்திற்கு குழந்தையுடன் செல்வது கேள்விக்குறியாக இருந்தது. காலை எட்டு மணிக்கு திறப்பதால், அதற்கு முன்பே கிளம்பி சென்றால், வெயில் உச்சத்தை அடைவதற்குள் சென்று வந்துவிடலாம் என்று திட்டமிட்டோம். இருந்தாலும், திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. சிறிது நேரமாகிவிட்டது.



முழு தோட்டத்தையும் பொதுஜனத்திற்கு திறந்துவிட்டால் அதகளமாகிவிடும் என்பதால், ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் இம்மாதிரி விசிட்டர்களுக்கு ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.



அந்த பகுதிக்கு அழைத்து செல்வதற்கு, ஒரு ட்ரக் வைத்திருக்கிறார்கள். நடக்கும் தூரம் தான். நடக்க விட்டால், தோட்டத்தின் கதி அதோ கதியாகிவிடும் என்பதால், வண்டியில் அழைத்து சென்று, எங்கெங்கே என்னென்ன பறிக்கலாம் என்று சொல்லி அனுப்புகிறார்கள்.



எப்படி பறிக்க வேண்டும் என்பதையும் சொல்லிக்கொடுக்கிறார்கள். எழுதியும் வைத்திருக்கிறார்கள். பழம் என்பதை எப்படி தெரிந்துக்கொள்ளலாம். எப்படி தொட வேண்டும், எப்படி பறிக்க வேண்டும், ஒவ்வொன்றும் ரேட் என்ன? என்பதையெல்லாம் முதலிலேயே சொல்லிவிடுகிறார்கள். பறிப்பதற்கு சின்ன சின்ன அட்டை டப்பாவும் தருகிறார்கள்.








நாங்கள் சென்றிருந்த சமயம் ஸ்ட்ராபெர்ரி, ரஸ்பெர்ரி, ரெட் கரண்ட்ஸ் போன்ற பழங்கள் தோட்டத்தில் இருந்தது. இதில் ஸ்ட்ராபெர்ரி தான் எனக்கு தெரிந்த பழம். மற்றவைகளை இங்குள்ள கடைகளில் பார்த்திருக்கிறேன். தமிழ் பெயர் தெரியவில்லை.

மனைவி தான் ஆர்வமாக பறித்துக்கொண்டிருந்தார். நான் சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். பக்கத்திலேயே ஒரு ரயில் பாதை இருந்தது. ஒரு ரயிலும் இடையில் சென்றது. ரயில், பழம், தோட்டம், வந்தவர்கள், புட்டான் என்று வேடிக்கை பார்த்தபடி போட்டோ எடுத்துக்கொண்டிருந்தேன்.








ஸ்ட்ராபெர்ரி அவ்வளவாக இல்லை. நாங்கள் ஸ்ட்ராபெர்ரி இருக்கும் பகுதிக்கு சென்ற நேரத்திற்கு, சூரியன் உச்சத்திற்கு வந்துவிட்டது.








நமக்கு ஸ்ட்ராபெர்ரியை பார்த்தால் என்ன தோன்றும்? ஒரு உற்சாகம், புத்துணர்ச்சி, குளிர்ச்சி இப்படிப்பட்ட உணர்வுகளுடன் தானே, நாம் ஸ்ட்ராபெர்ரியை இணைத்துவைத்திருந்தோம்? ஆனால், இங்கோ மொட்டை வெயில். எனக்கு வேர்த்து ஒழுகுகிறது. எப்படா எங்காவது ஒதுங்குவோம் என்றிருந்தது. ஸ்ட்ராபெர்ரி செடி எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொண்ட வரை மகிழ்ச்சியே.






முடித்துவிட்டு வந்து எடை போட்டோம். இங்கு விற்பனைக்கு மற்ற காய்கறிகளும் இருந்தது. விலை, நாங்கள் தினசரி வாங்கும் கடைகளுடன் ஒப்பிடும் போது தாறுமாறாக இருந்ததால், பார்த்ததுடன் நிறுத்திக்கொண்டோம்.








நடந்து களைத்திருந்ததால், பசி எடுக்க, சில திண்பண்டங்கள் வாங்கிக்கொண்டு, வெளியில் போட்டிருந்த பெஞ்சில் அமர்ந்து சாப்பிட்டோம். காற்று சிலுசிலுவென்று அடிக்க, எங்கள் கிராமத்திற்கு சென்ற உணர்வு கிடைத்தது. பக்கத்திலேயே ஒரு பண்ணையும் இருந்தது. கோழி, வாத்து போன்றவை மேய்ந்துக்கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்திற்கு, வேறு உலகம் சென்று வந்து அனுபவம்.




 



 இருந்தாலும், என்னுடைய அமெரிக்க விவசாய பூமி அனுபவம் முழுமையடைந்தா என்றால் இல்லையென்று தான் சொல்லுவேன். ஒரு விவசாயியின் வாழ்க்கையை பக்கமிருந்து பார்த்தால் தான் திருப்தியடைவேன்.



நான் சென்று பார்த்த அனுபவம், அவர்களுக்கு ஒருவகை வணிகம் தான். நம்மூரில் இம்மாதிரி திட்டங்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை. நம்மூர் விவசாயிகளும், இது போன்று திட்டமிடலாம். பள்ளி குழந்தைகள், கார்பரேட் நிறுவன ஊழியர்கள் போன்றவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, விவசாயம் குறித்த நேரடி அனுபவத்தையும், புரிதலையும் ஏற்படுத்தலாம். கார்பரேட்களிடம் இருந்து கொஞ்சம் பணம் பறிக்க ஒரு வழியாகவும் இருக்கும்.

.

17 comments:

Easy (EZ) Editorial Calendar said...

அடுத்த மாசம் நாங்கள் ஆப்பிள் பறிக்க போறோம் :)



நன்றி,
http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Yaathoramani.blogspot.com said...

படங்களுடன் விளக்கமான பதிவு
நாங்களும் உங்களுடன் தோட்டம் பார்க்கவந்த
உணர்வை ஏற்படுத்தியது
கொஞ்சம் அமெரிக்க விவசாயம் குறித்தும்
புரிந்து கொள்ள முடிந்தது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

படத்துடன் விளக்கியது சிறப்பு...

வேறு உலகம் சென்று வந்து அனுபவம் எங்களுக்கும் கிடைத்தது...

பகிர்வுக்கு நன்றி...

வவ்வால் said...

ஒரு நல்ல அனுபவ பகிர்வு, அயல்நாட்டுப்பதிவர்களிடம் இருந்து இத்தகைய அனுபவ ஒப்பீடல் பதிவுகளையே நான் அதிகம் விரும்புவேன்.

நம்ம நாட்டிலே நிலத்திலே அனுமதியே இல்லாம மக்கள் புகுந்து பறித்து விடுவதையே வழக்கமா வச்சு இருக்காங்க,காசு கேட்டால் கொடுப்பாங்களா?

தென்னம் தோப்புல காவலுக்கு ஆள் வைத்து இருக்கும் போதே காய் எல்லாம் திருடு போகுது.

நீங்க சொன்னது போல செய்யலாம் ,மக்கள் அதற்கு தயாராக நாள் ஆகும்.

பண்ருட்டிப்பகுதியில் முந்திரி,பலா எல்லாம் தோப்பிலே வாங்கலாம்,சாலை ஓரமாக இருப்பவர்கள் இப்படி வியாபாரமும் செய்கிறார்கள். உள் கிராமத்தில் வாய்ப்பில்லை.நம்ம ஊரில் எல்லாரிடமும் கார் இருப்பதில்லை என்பதும் ஒரு காரணம்.

வவ்வால் said...

ஒரு நல்ல அனுபவ பகிர்வு, அயல்நாட்டுப்பதிவர்களிடம் இருந்து இத்தகைய அனுபவ ஒப்பீடல் பதிவுகளையே நான் அதிகம் விரும்புவேன்.

நம்ம நாட்டிலே நிலத்திலே அனுமதியே இல்லாம மக்கள் புகுந்து பறித்து விடுவதையே வழக்கமா வச்சு இருக்காங்க,காசு கேட்டால் கொடுப்பாங்களா?

தென்னம் தோப்புல காவலுக்கு ஆள் வைத்து இருக்கும் போதே காய் எல்லாம் திருடு போகுது.

நீங்க சொன்னது போல செய்யலாம் ,மக்கள் அதற்கு தயாராக நாள் ஆகும்.

பண்ருட்டிப்பகுதியில் முந்திரி,பலா எல்லாம் தோப்பிலே வாங்கலாம்,சாலை ஓரமாக இருப்பவர்கள் இப்படி வியாபாரமும் செய்கிறார்கள். உள் கிராமத்தில் வாய்ப்பில்லை.நம்ம ஊரில் எல்லாரிடமும் கார் இருப்பதில்லை என்பதும் ஒரு காரணம்.

மாதேவி said...

நாங்களும் பறித்துக்கொண்டோம்.:))
புதிய அனுபவம்தான் மகிழ்ச்சியும் கூட.

நம்நாட்டில் இம்முறைகள் இல்லை.

தி.தமிழ் இளங்கோ said...

உங்களோடு நானும் அந்த பண்ணை வீட்டிற்கு வந்தது போன்ற உணர்வு. அந்த வண்ணப் படங்கள் திரும்பத் திரும்ப பார்க்க வைத்தன. நீங்கள் எடுத்த படங்களில் உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். இது மாதிரியான உங்கள் அனுபவங்களை தொடர்ந்து எழுதுங்கள்.

krish said...

தங்கள் அனுபவம் நன்றாக இருந்தது.

அமுதா கிருஷ்ணா said...

ஆந்திராவில் ஒரு முறை திராட்சை தோட்டத்திற்கு சென்று சுற்றி பார்த்து அவர்களிடம் காசு கொடுக்க அவர்களே பறித்து கொடுத்தார்கள்.

சரவணகுமரன் said...

எங்க போயி ஆப்பிள் பறிக்க போறீங்க?

சரவணகுமரன் said...

நன்றி ரமணி

சரவணகுமரன் said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்

சரவணகுமரன் said...

நன்றி வவ்வால்.

தொடர்ந்து இவ்வகை பதிவுகள் எழுத முயற்சிக்கிறேன்.

சரவணகுமரன் said...

நன்றி மாதேவி

சரவணகுமரன் said...

நன்றி தமிழ் இளங்கோ

சரவணகுமரன் said...

நன்றி கிரிஷ்

சரவணகுமரன் said...

உங்கள் அனுபவ பகிர்வுக்கு நன்றி, அமுதா கிருஷ்ணா