நம்மூரில் இருக்கும் போது, வெவ்வேறு மாவட்ட ஸ்பெஷல் உணவுகளை சாப்பிடும் ஆர்வத்தோடு சுற்றியிருக்கிறேன். இதுவே, மாநிலங்கள் என்று சொல்ல முடிவதில்லை. ஏனெனில், நம்மூர் அளவுக்கு காரசாரம், மற்ற மாநில உணவில் இருப்பதில்லை. ஆந்திரா விதிவிலக்கு.
அமெரிக்கா வந்த பிறகு, பல நாட்டு உணவு வகைகள் சாப்பிட வாய்ப்புகள் ஏராளம். ஆனால், அதே பிரச்சினை தான். காரசாரம்.
இந்நிலையில் நண்பர் ஒருவர் கூறினார். எத்தியோப்பியன் உணவு வகைகள், கொஞ்சம் நம்மூர் போல இருக்கிறது என்று.
சரி, எப்படி இருக்கிறது என்று பார்த்துவிடலாம் என்று கிளம்பினோம்.
ஹோட்டல் சுமாராக தான் இருந்தது. எத்தியோப்பியர்கள் மட்டும் தான் வருவார்கள் என்று நினைக்கிறேன். நாங்கள் உள்ளே நுழைந்ததும், ஹோட்டலே எங்களை திரும்பி பார்த்தது. எங்கோ தப்பாக வந்துவிட்டமோ என்றெண்ணி திரும்பி செல்ல நினைத்து, பிறகு அப்படியே வாசல் பக்கம் இருக்கும் டேபிளில் உட்கார்ந்தோம்.
முதலில் ’சம்பூசா’ என்றொரு ஸ்டார்டரை ஆர்டர் செய்தோம். அது வேறொன்றுமில்லை. நம்மூர் சம்சா தான். மைதா மாவை உருட்டி, உள்ளே ஏதோ பருப்பை வைத்து மடித்து, எண்ணெய்யில் பொறித்து கொடுத்தார்கள்.
பொதுவாக, அமெரிக்க, சைன ரெஸ்டரெண்ட்களில் மட்டன் கிடைக்காது. பீப், பொர்க், சிக்கன் - இவையே கிடைக்கும். எத்தியோப்பியர்கள் மட்டனுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறார்கள், மெனுவில்.
குறிப்பிட்டு சொல்லவேண்டிய முக்கியமான விஷயம் - எத்தியோப்பியர்கள் சாப்பிடும் முறை. எத்தனை பேர் வந்தாலும், ஒரே தட்டு தான். ஒரே தட்டில் ஒன்றாக உணவருந்துவது, தங்களுக்குள்ளான நட்பை அதிகரித்து, இடைவெளியை குறைக்கிறது என்று கருதுகிறார்கள். ஒரு தட்டில் சாப்பிடுபவர்கள், துரோகம் இழைக்க மாட்டார்கள் என்பது அவர்கள் ஊர் நம்பிக்கை. அமெரிக்கர்கள் இங்கு வராததிற்கு, இது ஒரு காரணமாக இருக்கலாம்.
அனைத்து டேபிளிலும், இப்படி ஒரே தட்டில் சாப்பிட்டு கொண்டு இருந்ததை பார்த்தவுடன், எனக்கு என் கல்லூரி ஹாஸ்டல் மெஸ் தான் நினைவுக்கு வந்தது!!!
ஒரே தட்டு என்பதால், வருபவர்கள் அனைவரும் சைவக்காரர்களாகவோ அல்லது அசைவக்காரர்களாகவோ இருந்தால் உசிதம். இல்லாவிட்டால், இன்னொரு தட்டை அங்கிருக்கும் டேபிளில் வைக்க மாளாது.
எது எது எவ்வளவெவ்வளவு வரும் என்று தெரியாததால், ஒரு சிக்கன் டிஷும், ஒரு மட்டன் டிஷும் ஆர்டர் செய்தோம். நம்மூர் போல், இட்லி தோசைக்கு சாம்பார் சட்னியும், பூரி, சப்பாத்திக்கு குருமா வகையறாக்களும் என ஜோடி போட்டு ஆர்டர் செய்யும் வகையில் மெனு இல்லை. ஒரு ஐட்டம் சொன்னால், கறி வகையுடன் சாப்பிட ’இஞ்செரா’ என்றொரு எத்தியோப்பிய தோசையை கொடுக்கிறார்கள். எங்கள் முகத்தை பார்த்துவிட்டு, கண்டிப்பாக இங்கு அரிசி சாதம் கிடைக்காது என்று நாங்கள் கேட்காமலேயே கூறினார்கள்!!!
இன்செரா, தொடுவதற்கு ரொம்ப மிருதுவாக இருக்கிறது. நம்மூர் தோசையுடன் ஒப்பிடும் போது, புளிப்பு கொஞ்சம் அதிகம் தான். மெரூன் கலர் துணியின் மீது, டல்லான கலரில் இன்னொரு துணி போல் இருந்தது.
ஒரு பெரிய தட்டு, அதை நிறைத்துக்கொண்டு ஒரு இஞ்செரா. வேறு தட்டுகளில் கொண்டு வந்திருந்த மட்டன் கறியையும், லெட்யுஸ் இலை, தக்காளி சாலட்டையும் அதன் மேலேயே தட்டிவிட்டு சென்றார்கள். பிறகு, சிறிது நேரம் கழித்து, சிக்கன் குழம்பு கொண்டு வந்தவர், அதையும் இதே தட்டில் கொட்டி விட்டு சென்றார். எனக்கு இப்படி சாப்பிட்டு தான் பழக்கம். ஆனால், எல்லோருக்கும் இப்படி பிடிக்காதே! என் நண்பர்கள் பலர், தோசையை பிய்த்து, சாம்பார் கிண்ணத்தில் முக்கி சாப்பிடுவது தான் நாகரீகம் என்பார்கள். அப்படிப்பட்டவர்கள் வந்தால் சிரமம் தான்.
கறி வகைகள், நம்மூர் போல தான் இருந்தது. வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு எல்லாம் கலந்திருப்பார்கள் போல என என் குறுகிய சமையல் ஞானம் கண்டுகொண்டது.
ஒரு ஆளுக்கு அந்த ஒரு இஞ்செராவே போதும். எங்களுக்கு இன்னும் இரண்டு வைக்க, மீதி பேக் செய்துக்கொண்டு கிளம்பினோம். ஒரு ஹோட்டலுக்கு வந்ததற்கே, ஒரு நாட்டை பற்றி எவ்வளவு தெரிந்துக்கொள்ள முடிகிறது என்று நினைத்துக்கொண்டு, இப்படியே வெவ்வேறு நாட்டு ஹோட்டல்களுக்கு தொடர்ந்து செல்ல, முடிவெடித்து திரும்பினோம்.
வீட்டிற்கு வந்து எத்தியோப்பியா பற்றி வாசிக்க, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்திய-எத்தியோப்பிய உறவு இருந்து வந்தது தெரிந்தது. தோசைக்கும் இஞ்செராவுக்கும் இடையேயான உறவும் அப்படிபட்டது தானோ?
.
19 comments:
ஒரு நல்ல அனுபவ பகிர்வு ! மேலும் தொடர வாழ்த்துக்கள்
எத்யோப்பியா உணவுகள் பற்றி அறிய தந்தமைக்கு நன்றி. புதிய தகவல்.
ஓ அங்கேயும் தோசை இருக்கா??
ஒரு வேளை, தமிழர்-எதியோப்பியர் கனெக்ஷன் உணவு முறையிலும் உண்டோ?
"எதியோபிய நாகரிக மன்னர் பெயர்களைக் காணும் போது இவர்களுடைய முன்னோர் தமிழராய் இருத்தல் வேண்டும் என்ற கருத்தை தோற்றுவிக்கிறது. இந்நாகரிக மன்னர் பெயர்களில் சேரர் பெயர்கள் இடம்பெறுவது சேரம் ஆட்சி ஒர் காலத்தே இங்கு வழங்கி இருக்க வேண்டும் எனபதை உணர்த்துகிறது."
பார்க்க: http://www.nilapennukku.com/2012/05/blog-post_20.html
ஒரு வேளை, தமிழர்-எதியோப்பியர் கனெக்ஷன் உணவு முறையிலும் உண்டோ?
"எதியோபிய நாகரிக மன்னர் பெயர்களைக் காணும் போது இவர்களுடைய முன்னோர் தமிழராய் இருத்தல் வேண்டும் என்ற கருத்தை தோற்றுவிக்கிறது. இந்நாகரிக மன்னர் பெயர்களில் சேரர் பெயர்கள் இடம்பெறுவது சேரம் ஆட்சி ஒர் காலத்தே இங்கு வழங்கி இருக்க வேண்டும் எனபதை உணர்த்துகிறது."
பார்க்க: http://www.nilapennukku.com/2012/05/blog-post_20.html
ஒரு வேளை, தமிழர்-எதியோப்பியர் கனெக்ஷன் உணவு முறையிலும் உண்டோ?
"எதியோபிய நாகரிக மன்னர் பெயர்களைக் காணும் போது இவர்களுடைய முன்னோர் தமிழராய் இருத்தல் வேண்டும் என்ற கருத்தை தோற்றுவிக்கிறது. இந்நாகரிக மன்னர் பெயர்களில் சேரர் பெயர்கள் இடம்பெறுவது சேரம் ஆட்சி ஒர் காலத்தே இங்கு வழங்கி இருக்க வேண்டும் எனபதை உணர்த்துகிறது."
பார்க்க: http://www.nilapennukku.com/2012/05/blog-post_20.html
addis ababa னு ஒரு எத்தியோப்பியன் உணவகத்திற்கு சிகாகோவில் இருக்கும்போது செல்வதுண்டு, கிட்டத்தட்ட தமிழக சுவைதான்:)
Same Pinch ! :)
நானும் எதியோப்பிய தோசை சாப்பிட்டு விட்டு இதே போலவே யோசித்து கொண்டிருந்தேன் :)
அறியான் எழுதிய இன்டிகாவில் கூட தென் இந்தியர்கள் எதியோபியர்கள் போல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
http://en.wikipedia.org/wiki/Indica_(Arrian)
"the southern Indians resemble the Ethiopians a good deal, and, are black of countenance, and their hair black also, only they are not as snub-nosed or so woolly-haired as the Ethiopians; but the northern Indians are most like the Egyptians in appearance."
பொதுவாக அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் அலுவலக லஞ்ச் சாப்பிட வேண்டி வந்தால் மட்டுமே வித்தியாசமான உணவகங்களுக்கு செல்வர்கள். பர்கர், பிட்சா, சைனீஸ் தவிர்த்து பல நாட்டு உணவுகளைத் தேடி டிரை செய்பவர்கள் மிகவும் குறைவு என்றே நினைக்கிறேன்.
ஆனால் உங்களையும் பின்னூட்டம் இட்டவ்ர்களையும் சேர்த்து மூன்று பேர் எத்தியோப்பிய தோசை சாப்பிட்டது சற்றே வியப்பாகத்தான் இருக்கிறது.
நானும் கூடிய விரைவில் டிரை செய்கிறேன்.
அட! இங்கே நியூஸியில் இருக்கான்னு தேடப் போறேன்.
நன்றி முரசொலி மாறன்
நன்றி radhu
ஆமாங்க அமுதா கிருஷ்ணா... தோசை மாதிரி’ன்னு சொல்லலாம். இன்னும் சரியா சொல்லணும்’ன்னா, புளிச்ச பெரிய ஆப்பம்’ன்னு சொல்லலாம்.
தகவலுக்கு நன்றி பெங்களூர் இரவிச்சந்திரன்
நன்றி குடுகுடுப்பை
தகவலுக்கு நன்றி சதீஷ்
ம்ம்ம்... பாருங்க, துளசி கோபால்
சமீபத்தில் என் நண்பர்(SFO) இஞ்சேரா பற்றி கூறியதிலிருந்து பெங்களூரில் கிடைக்குமான்னு தேடுறேன்.
அப்படியே மங்கோலியன் பார்பக்யூ முயற்சித்துப் பாருங்கள். நண்பர் சிலாகுத்துக் கூறுவார்.
என் ஆல்டைம் விருப்பம் மெக்சிகோவும், தாய் உணவுகள்.
சமீபத்தில் எத்தியோப்பிய தோழி ஒருவரை சந்தித்தேன்! முகம் சாயல் எல்லாமே தமிழர்கள் போல்!
மொழி தெரியாவிட்டாலும் அவர் தன் மொபைலில் கேட்டுக்கொண்டிருந்த பாட்டு - "என்னமோ ஏதோ!"
Post a Comment