Sunday, July 29, 2012

அமெரிக்க விவசாயி வியாபாரியும் கூட...

அமெரிக்காவில் எங்காவது ஒரு விவசாய நிலத்தை பார்த்துவிட முடியுமா? என்று ஒரு ஆசை இருந்தது. எங்காவது ஊரை விட்டு, தொலைவுக்கு சென்று கொண்டு இருக்கும் போது, விவசாய நிலங்களை பார்ப்பதுண்டு. இறங்கி பார்ப்பதற்கு தான் வாய்ப்பு கிடைத்ததில்லை.

இங்கு இருக்கும் தோட்டங்களில், ஒரு நடைமுறை இருக்கிறது!!! அதாவது நமக்கு அவர்களது தோட்டத்தை திறந்து விட்டுவிடுவார்கள். நாம் உள்ளே சென்று தோட்டத்தில் இருக்கும் பூக்கள், காய்கனிகள் போன்றவற்றை பறித்து கொண்டு திரும்பலாம்.

நல்லா இருக்கிறதே! இதனால் அவர்களுக்கு என்ன லாபம் என்று கேட்கிறீர்களா? நாம் அங்கிருந்து பறித்துவருபவைகளுக்கு எடை பார்த்து ஒரு ரேட் போடுவார்கள். அந்த ரேட், நாம் வெளிசந்தையில் வாங்கும் விலையைவிட அதிகமாக தான் இருக்கும். ரொம்ப அதிகம் என்று சொல்லமுடியாது.

நமக்கு அதுவொரு அனுபவம் என்பதால் ஓகே. இங்கிருக்கும் பெற்றோர்கள், அவர்களது குழந்தைகளுக்கு பூப்பறிப்பது, காய் பறிப்பது போன்றவற்றை இதுபோல ஒரு அனுபவமாக சொல்லிக்கொடுக்கிறார்கள்.

---

இப்பொழுதெல்லாம் இங்கு வெயில் பட்டையை கிளப்புவதால், இது போன்ற திறந்தவெளி தோட்டத்திற்கு குழந்தையுடன் செல்வது கேள்விக்குறியாக இருந்தது. காலை எட்டு மணிக்கு திறப்பதால், அதற்கு முன்பே கிளம்பி சென்றால், வெயில் உச்சத்தை அடைவதற்குள் சென்று வந்துவிடலாம் என்று திட்டமிட்டோம். இருந்தாலும், திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. சிறிது நேரமாகிவிட்டது.



முழு தோட்டத்தையும் பொதுஜனத்திற்கு திறந்துவிட்டால் அதகளமாகிவிடும் என்பதால், ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் இம்மாதிரி விசிட்டர்களுக்கு ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.



அந்த பகுதிக்கு அழைத்து செல்வதற்கு, ஒரு ட்ரக் வைத்திருக்கிறார்கள். நடக்கும் தூரம் தான். நடக்க விட்டால், தோட்டத்தின் கதி அதோ கதியாகிவிடும் என்பதால், வண்டியில் அழைத்து சென்று, எங்கெங்கே என்னென்ன பறிக்கலாம் என்று சொல்லி அனுப்புகிறார்கள்.



எப்படி பறிக்க வேண்டும் என்பதையும் சொல்லிக்கொடுக்கிறார்கள். எழுதியும் வைத்திருக்கிறார்கள். பழம் என்பதை எப்படி தெரிந்துக்கொள்ளலாம். எப்படி தொட வேண்டும், எப்படி பறிக்க வேண்டும், ஒவ்வொன்றும் ரேட் என்ன? என்பதையெல்லாம் முதலிலேயே சொல்லிவிடுகிறார்கள். பறிப்பதற்கு சின்ன சின்ன அட்டை டப்பாவும் தருகிறார்கள்.








நாங்கள் சென்றிருந்த சமயம் ஸ்ட்ராபெர்ரி, ரஸ்பெர்ரி, ரெட் கரண்ட்ஸ் போன்ற பழங்கள் தோட்டத்தில் இருந்தது. இதில் ஸ்ட்ராபெர்ரி தான் எனக்கு தெரிந்த பழம். மற்றவைகளை இங்குள்ள கடைகளில் பார்த்திருக்கிறேன். தமிழ் பெயர் தெரியவில்லை.

மனைவி தான் ஆர்வமாக பறித்துக்கொண்டிருந்தார். நான் சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். பக்கத்திலேயே ஒரு ரயில் பாதை இருந்தது. ஒரு ரயிலும் இடையில் சென்றது. ரயில், பழம், தோட்டம், வந்தவர்கள், புட்டான் என்று வேடிக்கை பார்த்தபடி போட்டோ எடுத்துக்கொண்டிருந்தேன்.








ஸ்ட்ராபெர்ரி அவ்வளவாக இல்லை. நாங்கள் ஸ்ட்ராபெர்ரி இருக்கும் பகுதிக்கு சென்ற நேரத்திற்கு, சூரியன் உச்சத்திற்கு வந்துவிட்டது.








நமக்கு ஸ்ட்ராபெர்ரியை பார்த்தால் என்ன தோன்றும்? ஒரு உற்சாகம், புத்துணர்ச்சி, குளிர்ச்சி இப்படிப்பட்ட உணர்வுகளுடன் தானே, நாம் ஸ்ட்ராபெர்ரியை இணைத்துவைத்திருந்தோம்? ஆனால், இங்கோ மொட்டை வெயில். எனக்கு வேர்த்து ஒழுகுகிறது. எப்படா எங்காவது ஒதுங்குவோம் என்றிருந்தது. ஸ்ட்ராபெர்ரி செடி எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொண்ட வரை மகிழ்ச்சியே.






முடித்துவிட்டு வந்து எடை போட்டோம். இங்கு விற்பனைக்கு மற்ற காய்கறிகளும் இருந்தது. விலை, நாங்கள் தினசரி வாங்கும் கடைகளுடன் ஒப்பிடும் போது தாறுமாறாக இருந்ததால், பார்த்ததுடன் நிறுத்திக்கொண்டோம்.








நடந்து களைத்திருந்ததால், பசி எடுக்க, சில திண்பண்டங்கள் வாங்கிக்கொண்டு, வெளியில் போட்டிருந்த பெஞ்சில் அமர்ந்து சாப்பிட்டோம். காற்று சிலுசிலுவென்று அடிக்க, எங்கள் கிராமத்திற்கு சென்ற உணர்வு கிடைத்தது. பக்கத்திலேயே ஒரு பண்ணையும் இருந்தது. கோழி, வாத்து போன்றவை மேய்ந்துக்கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்திற்கு, வேறு உலகம் சென்று வந்து அனுபவம்.




 



 இருந்தாலும், என்னுடைய அமெரிக்க விவசாய பூமி அனுபவம் முழுமையடைந்தா என்றால் இல்லையென்று தான் சொல்லுவேன். ஒரு விவசாயியின் வாழ்க்கையை பக்கமிருந்து பார்த்தால் தான் திருப்தியடைவேன்.



நான் சென்று பார்த்த அனுபவம், அவர்களுக்கு ஒருவகை வணிகம் தான். நம்மூரில் இம்மாதிரி திட்டங்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை. நம்மூர் விவசாயிகளும், இது போன்று திட்டமிடலாம். பள்ளி குழந்தைகள், கார்பரேட் நிறுவன ஊழியர்கள் போன்றவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, விவசாயம் குறித்த நேரடி அனுபவத்தையும், புரிதலையும் ஏற்படுத்தலாம். கார்பரேட்களிடம் இருந்து கொஞ்சம் பணம் பறிக்க ஒரு வழியாகவும் இருக்கும்.

.

Monday, July 23, 2012

ஷங்கர் vs ராஜமௌலி

தமிழ் தெலுங்கு படங்களை தொடரும் ரசிகர்களுக்குள் தற்போது எழுந்திருக்கும் கேள்வி. ஷங்கர் - ராஜமௌலி, இவர்களில் யார் பெஸ்ட்?

ஷங்கரை நமக்கு நன்றாக தெரியும். ராஜமௌலியை இப்போது தெரிந்திருக்கும். இருந்தாலும், கொஞ்சம் பேக்ரவுண்டுடன் ஆரம்பிப்போம்.




இருவரும் கிட்டத்தட்ட ஒரே வயதுக்கட்டத்தில் தான் இருக்கிறார்கள். ராஜமௌலி சினிமாவுடன் சம்பந்தமுள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர். ஷங்கருக்கோ, அப்படி எந்த பின்புலமும் இல்லை. இருந்தாலும், ஷங்கரின் முதல் படம், ராஜமௌலியின் முதல் படம் வருவதற்கு எட்டு வருடங்களுக்கு முன்பே வெளிவந்துவிட்டது.

இருந்தாலும், அதன் பிறகு வேகமாக ஷங்கரின் பட எண்ணிக்கையை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டார் ராஜமௌலி. ஷங்கர், இதுவரை பதினொரு படங்களை இயக்கி இருக்கிறார்.  ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்திருப்பவை, ஒன்பது படங்கள். ஷங்கர் அளவுக்கு படமெடுக்க நேரமெடுக்காதது, இதற்கொரு காரணம்.

சக்சஸ் ரேட் என்று பார்த்தால், ராஜமௌலி தான் முன்னணி என்று சொல்ல வேண்டும். இவர் இயக்கிய அனைத்து படங்களும் வெற்றி படங்களே. ஷங்கர் கணக்கில் இரண்டு தோல்வி படங்கள் இருக்கின்றன. ஷங்கர் ஹிந்தியில் இயக்கிய தமிழ் முதல்வனின் ரீமேக்கான ‘நாயக்’கும், அதன் பிறகு தமிழில் இயக்கிய ‘பாய்ஸு’ம் ஷங்கருக்கு தோல்வியை காட்டிய படங்கள். இதில் பாய்ஸ் தெலுங்கில் வெற்றியே.

வெற்றி முதலில் இருந்தே இருவருக்கும் கிடைத்தாலும், வெற்றியின் பலனை முதலில் இருந்தே அனுபவித்தது ஷங்கர் தான். மூன்று படங்களுக்குள் இந்தியா முழுக்க அறிந்த இயக்குனராகியவர், ஷங்கர்.  ஆனால், மூன்று படங்களுக்கு பிறகு தான், ராஜமௌலி நல்ல இயக்குனராக அறியப்பட்டார்.

திறமைக்கான அங்கீகாரம், படத்தின் வெற்றியில் கிடைத்தாலும், இயக்குனரின் பங்காக ராஜமௌலி பெற்றது குறைவே. தனக்கான அங்கீகாரத்தை பெறவே, சில படங்களை அவர் எடுக்க வேண்டி இருக்கிறது. காமெடியனை ஹீரோவாக, ஈயை ஹீரோவாக என அவரது சில முயற்சிகள், இதற்கே போய்விடுகிறது.

ஷங்கர் அப்படியில்லாமல், ஆரம்பத்தில் இருந்தே சிறந்த இயக்குனராக மக்களிடமும், மற்ற மொழி திரைத்துறையினரிடமும் அறியப்படுகிறார். இதற்கு சில காரணங்களை கூறலாம். ரசிக கூட்டம் இல்லாத அர்ஜூன், பிரபுதேவா, பிரசாந்த் போன்றவர்களை வைத்து ஆரம்ப ஹிட் கொடுத்து, பிறகு ரஜினி, கமல், விக்ரம் போன்றவர்களை இயக்கிய படங்களிலும் ஷங்கருக்கான எதிர்பார்ப்பு இருந்தது. அவரும் அதை பெருமளவு பூர்த்தி செய்தார். ராஜமௌலிக்கோ, ஏழு படங்களுக்கு பிறகு இதை நிருபிக்க வேண்டி வந்தது. அழுத்தமாக நிருபித்தும் விட்டார்.

ஷங்கரின் புகழுக்கு என்னென்ன காரணங்கள் என்று பார்க்கலாம். சமூக பிரச்சினை சார்ந்த கதைகள், பேண்டஸி கலந்த சுவாரஸ்யமான திரைக்கதை, கதைக்கேற்ற நடிகர்கள், நடிகர்களுக்கேற்ற காட்சியமைப்புகள், காமெடி, செண்டிமெண்ட், ஆக்‌ஷன் என சரிவிகிதத்தில் கமர்ஷியல் மசாலா, இவையனைத்திற்கும் மேல் புதிய தொழில்நுட்பங்களை சரியாக கையாள தெரிந்த முதல் இந்திய இயக்குனர் என்று ஷங்கரை கூறலாம். புது புது தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் என தமிழர்கள் பெருமைபட்டுக் கொள்ளலாம்.

இதில் ராஜமௌலி எவ்வாறு வேறுபடுகிறார்? இவர் படங்களின் கதையும், அதற்கு இவர் அமைக்கும் திரைக்கதைகளும் சுவாரஸ்யமானவையே. அனைத்துமே சரிவிகித மசாலா கொண்டவையே. ஆக்‌ஷன் காட்சிகள், இவருடைய கைவண்ணத்தில் இன்னும் ஸ்பெஷலானவை. ஹைப்பை கொஞ்ச கொஞ்சமாக கூட்டி, சம்பந்தப்பட்ட நடிகர்கள் மட்டுமில்லாமல், சுற்றியிருக்கும் அனைவரின் உணர்ச்சிகளையும் காட்சியில் கொண்டு வந்து, பார்க்கும் ரசிகனை சீட்டின் நுனிக்கு கொண்டு வருவதில் ராஜமௌலி வித்தகர். இவருடைய சமீபகால திரைப்படங்களில், தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தி வருகிறார்.

சரி, இனி யார் எதில் முந்துகிறார்கள், சரிகிறார்கள் என்று பார்ப்போம். ஷங்கரின் ப்ளஸ் என்று சமூக பிரச்சினை சார்ந்த கதை & திரைக்கதையம்சத்தை தேர்ந்தெடுக்கும் திறனை சொல்லலாம். ஆனால், இதுவே இவருடைய மைனஸ் என்றும் கூறப்படுகிறது. அதாவது, ஒரே விதமான கதை/திரைக்கதை என்பது இவர் மீதான குற்றச்சாட்டு. அதற்கு அவரை மட்டும் குறைச்சொல்ல முடியாது. அவர் எடுக்கும் வேறுவிதமான கதையம்சம் கொண்ட கதைகள், சமூக நீதி போதனை கதைகள் கொண்ட படங்கள் அளவு வெற்றி பெறுவதில்லை. நிச்சய வெற்றி வேண்டி அவரும் வெற்றி பாதையையே தேர்ந்தெடுக்கிறார் என்று நினைக்கிறேன்.

ராஜமௌலி படங்கள் சுவாரஸ்யமான பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட கமர்ஷியல் மசாலா திரைப்படங்களே. சினிமாவில் நீதி சொல்ல வேண்டுமா? என்றால் அவசியமில்லை எனலாம். ஆனால், என்னை பொறுத்தவரை ஷங்கர் படங்கள் நாட்டில் உள்ள சில பிரச்சினைகள் குறித்து அட்லீஸ்ட் படம் பார்த்த ஒரிரண்டு நாட்களோ,  குறைந்தது படம் பார்க்கும் 3 மணி நேரத்திலோ சிந்திக்க தூண்டுபவை. இதனாலேயே, ரெகுலர் சினிமா ரசிகர்கள் தவிர மற்றவர்களின் கவனத்தை கவருபவை ஷங்கரின் படங்கள்.

ராஜமௌலி ப்ளஸ் என்ன? ஷங்கர் போல அல்லாமல், வேறு வேறு விதமான கதைகள். அனைத்தும் கமர்ஷியல் கதைகள் தான் என்றாலும், ரசிகனை கட்டிப்போடும் திரைக்கதை சூட்சமத்தை கொண்டவை. தொழில்நுட்பத்தை கதையின் தேவைக்கேற்ப பயன்படுத்துவதில் ராஜமௌலி முன்னிலை பெறுகிறார். பிரமாண்ட செட், கலக்கல் கிராபிக்ஸ் எல்லாம் ஷங்கர் பெரும்பாலும் பாடலுக்கு மட்டுமே பயன்படுத்துவார். (எந்திரன் விதிவிலக்கு) ராஜமௌலியோ, தொழில்நுட்பம் தேவைப்படும் கதைகளிலேயே, தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்தியிருக்கிறார்.

ஷங்கரின் தொழில்நுட்ப கூட்டணியும் பிரமாண்டமானவை. அன்றைய தேதியின் டாப் தொழில்நுட்ப கலைஞர்களை கூட்டணிக்கு அமைத்துக்கொண்டு, அவர்களின் பெஸ்ட்டை திரைக்கு கொண்டு வருவார். ராஜமௌலியோ, எப்போதும் ஒரே கூட்டணி. இதில் எது சரி, எது சிறப்பு என்று கூற முடியாது. ரசிகனுக்கு கிடைக்கும் ட்ரீட்டை கொண்டு மதிப்பிட்டால், நான் ஷங்கர் பக்கம்.

இவர்களுக்கு இருக்கும் மொழி தாண்டிய வரவேற்ப்பை பார்க்கலாம். ஷங்கருக்கு  முதல் படத்தில் இருந்தே தெலுங்கில் நல்ல வரவேற்பு இருக்கிறது. முதல் படமே, ஹிந்தியில் ரீ-மேக் செய்யப்பட்டது.  அனைத்து படங்களுமே இந்திய அளவில் கவன ஈர்ப்பு பெற்றவை. ராஜமௌலியின் பெரும்பாலான படங்கள், மற்ற மொழிகளில் ரீ-மேக் செய்யப்பட்டாலும், இயக்குனராக அவர் அறியப்படுவது தற்சமயமே. ஷங்கர் படங்கள், அதிகமாக டப் செய்யப்படுகின்றன. ராஜமௌலி படங்கள், அதிகமாக ரீ-மேக் செய்யப்படுகிறது. இதை எப்படி கூறலாம் என்றால், மொழி தாண்டிய ரசனைக்குரிய அம்சங்கள் ஷங்கர் படங்களில் அதிகமாக இருக்கிறது எனலாம். அல்லது, ஷங்கர் படங்களை ரீ-மேக் செய்வது சிரமம் என்றோ, ஷங்கர் படங்கள் மற்ற மொழிகளுக்கு பொறுத்தமில்லாதது என்றோ கூறலாம். பொறுத்தமில்லாதது என்று என்னால் சொல்ல முடியாது.

ஒரு முடிவுக்கு வரலாம். யார் பெஸ்ட்? இந்த கேள்வி அவசியமில்லாதது என்றாலும், இப்படி ஒரு கேள்வி வந்தால்,  அதற்கு பதிலளிக்கும் முயற்சியே இப்பதிவு. இதுநாள் வரை, இருவரும் வெவ்வேறு களங்களில் இருந்ததால், இப்படி ஒரு கேள்வியை எழவில்லை. தற்போது, ராஜமௌலியும் ஷங்கரின் ஏரியாவான கிராபிக்ஸ் கலந்த பேண்டஸி கதைகளை எடுத்து தள்ளுவதால், இக்கேள்வி எழும்பியுள்ளது. கேள்விக்கான காரணமே, ஒரு வகையில் பதிலை சொல்லுகிறது. ஷங்கர், இந்த ஏரியாவில் முன்னோடி. ராஜமௌலி தற்போது ரேஸிற்கு வந்திருக்கிறார்.

இந்த களத்திலோ, அல்லது பொதுவான இயக்கத்திலோ, யார் சிறந்தவர் என்றால் அதற்கு இன்னும் சிறிது காலம் நாம் பொறுக்க வேண்டும்.

அதே சமயம், நாம் அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன.  உழைப்பில் கொஞ்சம் கூட சமரசம் செய்து கொள்ளதவர்கள் இருவரும். அவரவர் மொழி கமர்ஷியல் திரையுலகில், நம்பர் ஒன் இவர்கள் இருவரும். உடன் பணியாற்றியவர்கள் அனைவரும் மறுக்காமல் கூறுவது, இவர்கள் இருவரும் எந்நிலையிலும் தரையில் கால் பதித்தபடி இருக்கும் நல்ல மனிதர்கள்.

நீங்க என்ன சொல்றீங்க?

.

Saturday, July 21, 2012

திரையரங்கு பயங்கரம்

இன்று காலையில் ஒரு அதிர்ச்சியான செய்தி கேட்க வேண்டியதாகிவிட்டது. அதிர்ச்சியான செய்தி, நமக்கு ஏதோ ஒரு விதத்தில் நெருங்கியதாக இருந்தால், அது பேரதிர்ச்சியையும் ஒருவித பய நடுக்கத்தையும் உள்ளூர ஏற்படுத்தும். இன்று ஏற்படுத்தியது.

---

இன்று உலகமெங்கும் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவான பேட்மேன் 3 பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ளது.

இங்கு அமெரிக்காவில் காட்சிகள் அதிகாலையில் இருந்தே தொடங்கிவிட்டது. படத்தின் முக்கிய காட்சிகள் அடங்கிய தொகுப்பையும் இது போல் நேற்றும் அதிகாலையில் வெளியிட்டார்கள்.

அதுபோல், இங்கு நாங்கள் வசிக்கும் இடத்தில் இருக்கும் திரையரங்கிலும் வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் தான், இங்கு பயங்கரம் நிகழ்ந்திருக்கிறது.



பேட்மேன் திரைபடம் திரையிடப்பட்டிருந்த அரங்கில் நுழைந்து, ஜேம்ஸ் ஹோம்ஸ் என்பவன், படம் பார்ப்பவர்களை சுட தொடங்கியிருக்கிறான். இந்த சம்பவத்தில் இதுவரை 12 பேர் இறந்திருக்கிறார்கள்.

சம்பவத்தை பற்றிய செய்திகள், இணையத்தில் காணக்கிடக்கிறது. ஒபாமா தனது தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்தியிருக்கிறார். வார்னர் பிரதர்ஸும் தனது லண்டன் ப்ரிமியர் காட்சியை நிறுத்தியுள்ளது.

---

இந்த திரையரங்கில் தான், நான் சென்ற வாரம் இதே சமயம், ‘பில்லா 2’ வை குடும்பத்துடன் சென்று பார்த்தேன். போன வாரம், திரை முழுக்க துப்பாக்கி சூடு. இந்த வாரம், திரையரங்கில்.

மங்காத்தா, ஏழாம் அறிவு, நண்பன் என இங்கு வரும் தமிழ் படங்களை எல்லாம் இங்கு சென்று தான் பார்த்திருக்கிறேன். (மங்காத்தா பதிவில் திரையரங்கின் புகைப்படங்கள் இருக்கிறது)

இந்த வாரம் தொடக்கத்தில் இருந்தே, உடன் பணிபுரியும் நண்பர் அழைத்துக்கொண்டு இருந்தார். பேட்மேன் போகலாம், பேட்மேன் போகலாம் என்று. எனக்கு ஆங்கில படங்களை, குறிப்பாக, இந்த் படத்தை பார்க்க விருப்பமில்லாமல் வரவில்லை என்று சொல்லிவிட்டேன். பிறகு, அவர் வேறொரு கேங் சேர்த்துக்கொண்டார்.

நேற்று காலையில் அவர் அந்த முக்கிய காட்சிகள் கொண்ட தொகுப்பை தியேட்டர் சென்று பார்த்துவிட்டு வந்தார். நான் அவரிடம் சொன்னது, “இந்தியாவில் தான் இப்படி அதிகாலையில் சென்று படம் பார்க்கும் பைத்தியங்கள் இருக்கும் என்று நினைத்திருந்தேன். இங்கேயுமா?”

அப்போது இன்றும் போவதாக கூறினார். முதலில் சம்பவம் நடைபெற்ற திரையரங்கில் டிக்கெட்டிற்கு முயற்சி செய்து, அது கிடைக்காமல், பிறகு வேறொரு திரையரங்கு சென்று பார்த்துவிட்டு வந்திருக்கிறார்.

செய்தி கேட்டு, நடுங்கி போய் கிடக்கிறார்.

நமக்கும் இச்செய்தி அமெரிக்காவின் துப்பாக்கி கலாச்சாரத்தை நெருக்கமாக உணர செய்து, ஜாக்கிரதை உணர்வை அதிகரித்துள்ளது.

.

Friday, July 13, 2012

பில்லா 2

நீண்ட நாட்களுக்கு பிறகு, மீண்டும் திரையரங்கு சென்று படம் பார்க்க ஒரு வாய்ப்பு. பில்லா 2.



பலத்த எதிர்பார்ப்புடன் வந்த திரைப்படம், அதை பூர்த்தி செய்ததா என்றால் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். (ம்ஹும்!!!)

நான் அஜித்தை நம்பியதை விட, ஆஸ்கார் ரவிசந்திரனை தான் ரொம்பவும் நம்பினேன். அவரே தயாரித்தாலும், படம் நன்றாக இல்லையென்றால் அவருடைய பேனரில் வெளியிட மாட்டார். அவர் பில்லாவை வாங்கி வெளியிடுகிறார் என்றால்... என்று நம்பி சென்றேன்.

படத்தில் உள்ள நல்ல விஷயங்களை முதலில் சொல்லிவிடலாம். மேக்கிங், உலகத்தரம் எனலாம். இரா. முருகனின் வசனங்கள் செம ஷார்ப். வெயிட்டான பஞ்ச் டயலாக்ஸ். ”தன்னை தானே செதுக்கிய” பாடல் மேக்கிங், நான் இதுவரை எங்கும் பார்த்திராதது.


கதை, திரைக்கதை, ஆக்‌ஷன் என அனைத்திலும் ஆங்கில பெயர்கள்.

பில்லா எப்படி உருவானான்? என்ற தெரிந்த கதைதான். இலங்கை தமிழராக தமிழகம் வரும் பில்லா, ஒவ்வொரு காட்சியிலும் ஒருபடி முன்னேறி செல்கிறார். ரொம்ப வேகம் தான். இந்த வேகத்தில் சென்றால் தான், இந்த படத்திலேயே பில்லாவாக முடியும் என்பதால் வேறு வழியில்லை.

காமெடி இல்லாத குறையை தீர்ப்பது, படத்தின் ஹீரோயின் தான். மாமா, மாமா என்றைழைக்க, திரையரங்கம் சிரித்து மகிழ்கிறது.

வழக்கம் போல், இங்கு ஆங்கில சப்-டைட்டிலுடன் திரையிட்டார்கள். சுப்ரபாதத்திற்கு விளக்கம் ஆங்கிலத்தில் போட்டார்கள். அதுவும் நல்ல காமெடி தான்.

அகதிகளாக வரும் தொடக்க காட்சி, நிமிர்ந்து உட்கார வைக்க, பின்னால் தொடரும் காட்சிகள், நம்மை சீட்டினுள் மடக்கி போடுகிறது. அது போலவே, இடைவேளைக்கு பிறகு வரும் அரசியல் காட்சிகளும் நிமிர வைக்க, தொடருபவை மடங்க வைக்கிறது.

ஆக்‌ஷன் காட்சிகளில், குறிப்பாக, ஹெலிகாப்டர் காட்சியில் டூப் போடாமல் அஜித்தே நடித்தார் என்றார்கள். பாராட்ட வேண்டிய முயற்சி தான். இருந்தாலும், இம்மாதிரி காட்சிகளுக்கு, இந்த காலத்தில் செட்டில் நடித்தே, (ஏன் நடிக்காமலேயே!!!) இதே எபக்ட் காட்ட முடியும் என்பதால், இம்மாதிரி முயற்சிகளை அஜித் தவிர்க்கலாம்.

”என் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு நொடியும், நானே செதுக்கினது” என்று படத்தில் அடிக்கடி அஜித் சொல்கிறார். அவ்வப்போது, இப்படி படம் பார்க்க வருகிறவர்களையும் சேர்த்து செதில் செதிலா செதுக்கி விடுகிறார்!!!

---

சொந்த கதை - பயந்து பயந்து பாப்பாவை படத்திற்கு கூட்டி சென்றோம். ஆரம்ப அதிரடி காட்சி ஒலிக்கு சிறிது பயந்தாள். பிறகு, தூங்கி விட்டாள் (பாப்பா மட்டும் தான்). அதன் பிறகு, விழித்தவள், அசராமல் படம் பார்த்து ஆச்சர்யத்தை கொடுத்தாள். ஒலி அதிகமாக வரும் சமயத்தில், பாப்பாவின் காதுகளை, ஆளுக்கொன்று என்று பொத்திக்கொண்டோம்.

.

Wednesday, July 4, 2012

அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டம் - ஒரு அனுபவம்

இன்று அமெரிக்க சுதந்திர தினம். அமெரிக்காவுக்கே சுதந்திரமா? என்று எண்ண தோன்றும். என்ன செய்ய? அவர்களும் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் வாங்கி தான் தனி கடை போட்டிருக்கிறார்கள். பாவம், இந்த பிரிட்டன் மக்கள்!!! அவர்களுக்கு தான் சுதந்திர தினமே கிடையாது. லீவும் கிடையாது. ஒரு வேளை, தாங்கள் சுதந்திரம் கொடுத்த நாடுக்களுக்காக சுதந்திர தினம் கொண்டாட ஆரம்பித்தால், பிரிட்டனில் தினமும் கொண்டாட்டம் தான்.

ஓகே. அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வருவோம். இங்கு, டென்வர் நகரின் மையப்பகுதியில் நேற்று மாலை ஒரு இசை கச்சேரியும், வாண வேடிக்கையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

போவதற்கு ரொம்பவும் யோசனையாக இருந்தது. பார்க்கிங் இடம் கிடைக்காது, ரொம்ப கூட்டமாக இருக்கும், மழை பெய்வது போல் இருக்கிறது என்று பல தயக்கங்கள் நண்பர்களால் கிளப்பி விடப்பட்டது. பாப்பாவுடன் செல்ல வேண்டி இருந்ததால், நானும் யோசிக்க வேண்டியதாக இருந்தது. பிறகு, போவோம், சிரமமாக இருந்தால் அப்படியே திரும்பி விடலாம் என்று முடிவெடுத்தப்படி கிளம்பினோம்.

---

நகரின் மையப்பகுதியில் ஒரு பார்க் இருக்கிறது. அதை பற்றி இங்கே எழுதியிருக்கிறேன்.

அங்கு தான் இசைக்கச்சேரியும், வண்ண வாண வேடிக்கையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ’கொலரடோ சிம்பொனி’ என்று குழு, அருமையான இசை தொகுப்பை வழங்கினார்கள். மக்கள் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன், நண்பர்களுடன் அமர்ந்து இசையை கைத்தட்டி ரசித்து கொண்டிருந்தார்கள்.




டென்வர் சிட்டி அண்ட் கவுண்டி பில்டிங் எனப்படும் (நம்மூர் ரிப்பன் கார்ப்பரேஷன் பில்டிங் போன்றது) கட்டிடத்தை அலங்கரித்து அதன் முன்பு மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அதை சுற்றிலும் மக்கள் வெள்ளம்.



தூங்கிக்கொண்டிருந்த எங்க பாப்பா எந்திரிக்க, அவளுக்கு முன்பு அவ்வளவு கூட்டம், சத்தம். என்னவென்றே புரியாமல் அழ தொடங்கிவிட்டாள். பிறகு, ஓரமாக, கூட்டம் இல்லாத, சத்தம் குறைவாக இருந்த இடத்திற்கு கூட்டி சென்று சமாதானம் செய்ய வேண்டியதாகிவிட்டது. பிறகு, ஒரு மிரட்சியுடனே இருந்தாள். முதல் முறை அல்லவா?



இசை நிகழ்ச்சி ஆரம்பித்தது, இரவு எட்டு மணிக்கு. இங்கு இப்போதெல்லாம், எட்டரைக்கு தான் சூரியன் மறைகிறது. ஒன்பதரை மணி வாக்கில், வாண வேடிக்கை தொடங்கியது. கட்டிடத்தை அலங்கரித்திருந்த வண்ண விளக்குகள், வானத்தில் வெடித்த பட்டாசுகள், சிம்பொனி இசை - இவை மூன்றுக்கு இடையே ஒரு ஒருங்கிணைப்பு இருந்தது, ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்தது.



தொடர்ந்து பத்து-பதினைந்து நிமிடங்களுக்கு வாண வேடிக்கை தொடர்ந்தது. நான் இவ்வளவு நேரம் இருக்கும் என்று நினைக்கவில்லை. இங்கு நடக்கும் வாணவேடிக்கைகளைப் பற்றி கூறிய அனைவரும் இதுவரை வேறு மாதிரி கூறியிருந்தார்கள். இந்த முதல் பத்தியை பாருங்கள்.





பாப்பாவுக்கு ரொம்ப புதிதாக இருந்திருக்கும். என்ன மாதிரி ரியாக்ட் செய்வது என்றே புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். எல்லாம் முடிந்த பிறகு, கொஞ்ச அழுது வைப்போம் என்று அவள் அழ, எங்களுடைய லைட்டான சமாதானத்தில் இயல்பு நிலைக்கு திரும்பி, பிறகு ஜாலியாகி விட்டாள்.




சுற்றி வந்ததில், சில சுவாரஸ்ய மனிதர்களைக் காண முடிந்தது. கூட்டம் நடுவே ஆட்டம் போட்ட ஜோடிகள், டிக்கிலோனா வகை விளையாட்டுக்கள் விளையாடிய யுவ-யுவதிகள், முழுக்க கண்ணாடிகளாலான உடையணிந்த ஒரு மனிதர், அவருடன் புகைப்படம் எடுக்க ஆர்வமுடன் நின்ற குழந்தை முதல் பெரியோர்கள் என கச்சேரி-வாண வேடிக்கை தவிர வேறு சில விஷயங்களும் பொழுதை போக்க உதவின.

வாண வேடிக்கை முடிந்தவுடன், ஒரு ஆரவார சத்தத்தை எழுப்பிவிட்டு, மொத்த கூட்டமும் கலைந்தது. நாங்களும் வீடு திரும்பினோம்.


 .

Monday, July 2, 2012

எத்தியோப்பிய தோசை

நம்மூரில் இருக்கும் போது, வெவ்வேறு மாவட்ட ஸ்பெஷல் உணவுகளை சாப்பிடும் ஆர்வத்தோடு சுற்றியிருக்கிறேன். இதுவே, மாநிலங்கள் என்று சொல்ல முடிவதில்லை. ஏனெனில், நம்மூர் அளவுக்கு காரசாரம், மற்ற மாநில உணவில் இருப்பதில்லை. ஆந்திரா விதிவிலக்கு.

அமெரிக்கா வந்த பிறகு, பல நாட்டு உணவு வகைகள் சாப்பிட வாய்ப்புகள் ஏராளம். ஆனால், அதே பிரச்சினை தான். காரசாரம்.

இந்நிலையில் நண்பர் ஒருவர் கூறினார். எத்தியோப்பியன் உணவு வகைகள், கொஞ்சம் நம்மூர் போல இருக்கிறது என்று.

சரி, எப்படி இருக்கிறது என்று பார்த்துவிடலாம் என்று கிளம்பினோம்.



ஹோட்டல் சுமாராக தான் இருந்தது. எத்தியோப்பியர்கள் மட்டும் தான் வருவார்கள் என்று நினைக்கிறேன். நாங்கள் உள்ளே நுழைந்ததும், ஹோட்டலே எங்களை திரும்பி பார்த்தது. எங்கோ தப்பாக வந்துவிட்டமோ என்றெண்ணி திரும்பி செல்ல நினைத்து, பிறகு அப்படியே வாசல் பக்கம் இருக்கும் டேபிளில் உட்கார்ந்தோம்.

முதலில் ’சம்பூசா’ என்றொரு ஸ்டார்டரை ஆர்டர் செய்தோம். அது வேறொன்றுமில்லை. நம்மூர் சம்சா தான். மைதா மாவை உருட்டி, உள்ளே ஏதோ பருப்பை வைத்து மடித்து, எண்ணெய்யில் பொறித்து கொடுத்தார்கள்.

பொதுவாக, அமெரிக்க, சைன ரெஸ்டரெண்ட்களில் மட்டன் கிடைக்காது. பீப், பொர்க், சிக்கன் - இவையே கிடைக்கும். எத்தியோப்பியர்கள் மட்டனுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறார்கள், மெனுவில்.

குறிப்பிட்டு சொல்லவேண்டிய முக்கியமான விஷயம் -  எத்தியோப்பியர்கள் சாப்பிடும் முறை. எத்தனை பேர் வந்தாலும், ஒரே தட்டு தான். ஒரே தட்டில் ஒன்றாக உணவருந்துவது, தங்களுக்குள்ளான நட்பை அதிகரித்து, இடைவெளியை குறைக்கிறது என்று கருதுகிறார்கள். ஒரு தட்டில் சாப்பிடுபவர்கள், துரோகம் இழைக்க மாட்டார்கள் என்பது அவர்கள் ஊர் நம்பிக்கை. அமெரிக்கர்கள் இங்கு வராததிற்கு, இது ஒரு காரணமாக இருக்கலாம்.



அனைத்து டேபிளிலும், இப்படி ஒரே தட்டில் சாப்பிட்டு கொண்டு இருந்ததை பார்த்தவுடன், எனக்கு என் கல்லூரி ஹாஸ்டல் மெஸ் தான் நினைவுக்கு வந்தது!!!

ஒரே தட்டு என்பதால், வருபவர்கள் அனைவரும் சைவக்காரர்களாகவோ அல்லது அசைவக்காரர்களாகவோ இருந்தால் உசிதம். இல்லாவிட்டால், இன்னொரு தட்டை அங்கிருக்கும் டேபிளில் வைக்க மாளாது.

 எது எது எவ்வளவெவ்வளவு வரும் என்று தெரியாததால், ஒரு சிக்கன் டிஷும், ஒரு மட்டன் டிஷும் ஆர்டர் செய்தோம். நம்மூர் போல், இட்லி தோசைக்கு சாம்பார் சட்னியும், பூரி, சப்பாத்திக்கு குருமா வகையறாக்களும் என ஜோடி போட்டு ஆர்டர் செய்யும் வகையில் மெனு இல்லை. ஒரு ஐட்டம் சொன்னால், கறி வகையுடன் சாப்பிட ’இஞ்செரா’ என்றொரு எத்தியோப்பிய தோசையை கொடுக்கிறார்கள். எங்கள் முகத்தை பார்த்துவிட்டு, கண்டிப்பாக இங்கு அரிசி சாதம் கிடைக்காது என்று நாங்கள் கேட்காமலேயே கூறினார்கள்!!!



இன்செரா, தொடுவதற்கு ரொம்ப மிருதுவாக இருக்கிறது. நம்மூர் தோசையுடன் ஒப்பிடும் போது, புளிப்பு கொஞ்சம் அதிகம் தான். மெரூன் கலர் துணியின் மீது, டல்லான கலரில் இன்னொரு துணி போல் இருந்தது.




ஒரு பெரிய தட்டு, அதை நிறைத்துக்கொண்டு ஒரு இஞ்செரா. வேறு தட்டுகளில் கொண்டு வந்திருந்த மட்டன் கறியையும், லெட்யுஸ் இலை, தக்காளி சாலட்டையும் அதன் மேலேயே தட்டிவிட்டு சென்றார்கள். பிறகு, சிறிது நேரம் கழித்து, சிக்கன் குழம்பு கொண்டு வந்தவர், அதையும் இதே தட்டில் கொட்டி விட்டு சென்றார். எனக்கு இப்படி சாப்பிட்டு தான் பழக்கம். ஆனால், எல்லோருக்கும் இப்படி பிடிக்காதே! என் நண்பர்கள் பலர், தோசையை பிய்த்து, சாம்பார் கிண்ணத்தில் முக்கி சாப்பிடுவது தான் நாகரீகம் என்பார்கள். அப்படிப்பட்டவர்கள் வந்தால் சிரமம் தான்.

கறி வகைகள், நம்மூர் போல தான் இருந்தது. வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு எல்லாம் கலந்திருப்பார்கள் போல என என் குறுகிய சமையல் ஞானம் கண்டுகொண்டது.

ஒரு ஆளுக்கு அந்த ஒரு இஞ்செராவே போதும். எங்களுக்கு இன்னும் இரண்டு வைக்க, மீதி பேக் செய்துக்கொண்டு கிளம்பினோம். ஒரு ஹோட்டலுக்கு வந்ததற்கே, ஒரு நாட்டை பற்றி எவ்வளவு தெரிந்துக்கொள்ள முடிகிறது என்று நினைத்துக்கொண்டு, இப்படியே வெவ்வேறு நாட்டு ஹோட்டல்களுக்கு தொடர்ந்து செல்ல, முடிவெடித்து திரும்பினோம்.

வீட்டிற்கு வந்து எத்தியோப்பியா பற்றி வாசிக்க, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்திய-எத்தியோப்பிய உறவு இருந்து வந்தது தெரிந்தது. தோசைக்கும் இஞ்செராவுக்கும் இடையேயான உறவும் அப்படிபட்டது தானோ?

.

லேட்டாய் ஏறிய ராட்டினம்

பொதுவாக இணையத்தில் பார்க்கும் படங்களைப் பற்றி எதுவும் எழுதுவதில்லை. நல்லதாக எழுதுவதாக இருந்தால், இனி எழுதலாம் என்று பாலிஸியை தளர்த்திக்கொள்ள போகிறேன்.

ஏன் இணையத்தில் படம் பார்க்க வேண்டி இருக்கிறது என்பதற்கு ஒரு தன்னிலை விளக்கம். ரொம்ப சிம்பிளான விளக்கம். இங்கு திரையரங்கில் பார்க்க முடிவதில்லை என்பது தான். ஆயிரத்திற்கு மேற்பட்ட திரையரங்குகள் என்று விளம்பரப்படுத்தபட்டு, போன வாரம் வெளியான சகுனியே இங்கு வெளியாகாதபோது, ராட்டினம் போன்ற படங்களை திரையரங்குகளில் எதிர்ப்பார்க்க முடியாது.

---

படம் வெளியாகி ரொம்ப நாள் ஆனாலும், இப்போது தான் இணையத்தில் டிவிடி தரத்தில் காணக்கிடைத்தது. தூத்துக்குடியில் எடுத்த படம் என்ற சொந்த ஊர் பாசம் இருந்தாலும், பெரிதாக பார்க்க ஆர்வம் இல்லாமல் தான் இருந்தது.



படத்தின் ஆரம்பகட்ட காட்சிகளும், படத்தின் மேல் ஈடுபாட்டை ஏற்படுத்தவில்லை. அதேசமயம், திரையை அணைக்கவும் விடவில்லை.

இயல்பான காட்சியமைப்புகள். நிஜமான மனிதர்களின் யதார்த்தமான உணர்வு சார்ந்த செயல்பாடுகள் படத்தை தொடர்ந்து பார்க்க வைத்தது. பாடல்கள் தான் கொஞ்சம் தடையாக இருந்தது. காதல் காட்சிகள் அழுத்தமாக இல்லாதது, படம் முடிந்தபிறகு, இயக்குனரின் சாமர்த்தியம் என்று புரிந்தது. படம் முழுவதும், பேசாமல் வரும் அந்த பெரியவர், இறுதியில் மனதை கனக்க செய்கிறார்.

காதலை தூக்கிபிடிக்காதது, படத்தை வித்தியாசமான கதையம்சமுள்ள படங்களின் வரிசையில் சேர்க்கிறது.

இது உண்மை கதையா என்று தெரியவில்லை. அப்படி இருக்கும் வாய்ப்புகள் அதிகம். உண்மை சம்பவங்கள் பாதிப்பு இல்லாமல், இப்படி ஒரு கதையை யோசிப்பது சிரமம் என்று நினைக்கிறேன்.

படம் பார்த்தபிறகு, படம் சம்பந்தப்பட்ட சீரியஸான சிந்தனைகளை உள்ளூக்குள் கிளப்பிவிட்டால், அது நல்ல படம் என்றால், இதுவும் நல்ல படம்.

எப்படி ’வழக்கு எண்’ இளம் தலைமுறையினர் பார்க்க வேண்டிய திரைப்படம் என்று பரிந்துரைக்கப்பட்டதோ, இதுவும் அப்படிப்பட்ட படம் தான். சிறப்பான மேக்கிங் என்று சொல்லமுடியாவிட்டாலும், நேரடியாக கருத்து சொல்லாமல், இறுதியில் சில நிமிடங்கள் அனைவரையும் யோசிக்க வைக்கும் என நம்புகிறேன்.

.