முன்பே சொன்னது போல், நான் பார்க்கும்/பார்க்க விரும்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று, புதிய தலைமுறையின் ‘கொஞ்சம் சோறு... கொஞ்சம் வரலாறு...”.
---
நம்மை சுற்றியிருக்கும், அனைத்து விஷயங்களை பற்றிய வரலாறும் முக்கியமானது தான். நம்மை பற்றி, நம் குடும்பத்தை பற்றி, நம் கோவில்களை பற்றி, நம் ஊரைப் பற்றி, நம்மை ஆள்பவர்களை, அவர்களின் அரசியல் பற்றி என அனைத்து வகை வரலாறும் முக்கியம் தான்.
அந்த வகையில், நாம் உண்ணும் உணவைப் பற்றிய வரலாறும் முக்கியம் தான்.
இன்றைய நிகழ்ச்சி - திருநெல்வேலி அல்வாவின் வரலாற்றைப் பற்றியது.
---
அல்வா என்பது ஒரு முகலாய உணவு பண்டம். அது ஒரு அரேபிய பெயர். அரேபியில் அல்வா என்றால் இனிப்பு என்று அர்த்தம். நான் இங்கிருக்கும் அரபிய கடைகளில் அல்வா என்ற பெயரில் இனிப்பு வகைகளைப் பார்த்து, ஆசைப்பட்டு, வாங்கி, சாப்பிட்டு பார்த்து ஏமாந்திருக்கிறேன். அவுங்க ஐட்டம் என்றாலும், நம்மாளூங்க கை பக்குவமே தனி தான்.
முகலாயர்கள் ஆண்ட வடக்கில் இருந்து, அல்வா எப்படி தெற்கே திருநெல்வேலிக்கு வந்தது? அதற்கு சொக்கம்பட்டி ஜமீன் தான் காரணம். சொக்கம்பட்டி என்பது தற்சமயம் நெல்லைக்கு பக்கமிருக்கும் ஒரு கிராமம். இந்த ஊரை சேர்ந்த ஜமீன், ஒருமுறை வட இந்தியாவிற்கு சென்ற போது, அங்கு அல்வாவை சாப்பிட்டு, அதன் சுவைக்கு அடிமையாகி, அந்த ஊர் சமையல்காரரை குடும்பத்தோடு அழைத்துக்கொண்டு சொக்கம்பட்டிக்கு வந்துவிட்டார்.
அந்த குடும்பம் தான், லாலா குடும்பம். நிஜமோ, பொய்யோ அவர்களின் பெயரில் தான், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இனிப்புக்கடைகளை பலர் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அல்வா செய்வதை காட்டினார்கள். கோதுமையை ஊறவைத்து, அரைத்து, அதில் பாலெடுத்து, அதைக்கொண்டு சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், நெய் சேர்ந்து அல்வா செய்யும் பக்குவம் இருக்கிறதே! அப்பப்பா... இப்படி கஷ்டப்பட்டு செய்யும் உணவு வகைகள் அனைத்தும் டக்கராக தான் இருக்கும்.
பிறகு, பேமஸ் இருட்டுகடையை காட்டினார்கள். நிகழ்ச்சி தொகுப்பாளர், கூட்டத்தில் முண்டியடித்து சென்று அல்வா வாங்கி வந்து, சாப்பிட்டு காட்டினார்.
ம்ம்ம்ம்... ஆசையாகத்தான் இருக்கிறது!!! எங்கிட்டு போய் சாப்பிடுவது? செய்ற மாதிரி ஐட்டமாக இருந்தா கூட, செஞ்சு சாப்பிடலாம். இது மெகா மகா வேலை.
---
திருநெல்வேலிக்கு பக்கத்தில் இருப்பதாலோ, என்னவோ தூத்துக்குடியிலும் அல்வா நன்றாக தான் இருக்கும். சிறுவயதில் கடைதெருவுக்கு செல்லும் போது, எங்க ஊரு லாலா கடையில், ஐம்பது கிராம் அல்வா கேட்டால், சிறிதாக வெட்டிய ஒரு வாழையிலையில் வைத்து தருவார்கள். மக்கள், கையில் வாழையிலையுடன் கடை முன்பு நின்று சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள். வாழையிலையுடன் சேர்ந்து அதில் ஒரு சுவை இருக்கும்.
சமீபகாலங்களில் அப்படி யாரையும் பார்க்க முடிவதில்லை.
நான் காலேஜ் படித்துக்கொண்டிருக்கும் போது, ஒவ்வொரு முறை ஊருக்கு வந்து திரும்பும் போது, அல்வா வாங்கி வருவேன். அது தொடர் பழக்கமாகி, நான் ஊர் திரும்பும் போது, எனது பையிற்காக பசங்க காத்திருப்பார்கள்.
வேலைக்கு சேர்ந்த பிறகு, அலுவலக நண்பர்களுக்காக, வாங்கி வருவேன். கூடவே, எங்கூர் மக்ரோனும்.
இங்கே வந்தபோதும் வாங்கி வந்தேன். பக்கத்து அப்பார்ட்மெண்ட் நண்பர், வேறு ஊர் சென்ற பிறகும், நான் ஊருக்கு செல்வது தெரிந்து, அல்வா வாங்கி Fedexஇல் அனுப்பிவிட சொன்னார்.
இப்படி பலருக்கும் அல்வா கொடுத்திருக்கிறேன். (தப்பா நினைச்சிக்காதீங்க!!!)
6 comments:
ஐயா அல்வா பற்றிய பதிவை மட்டும் போட்டு இருக்கலாம் ஆனா நீங்க அல்வா படத்தை போட்டு ஏன் ஐயா எங்க வயித்து எரிச்சலை மூட்டுறீங்க ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
திருநெல்வேலியில் பார்சல் வாங்கி வரும் அல்வாவை வீட்டில் தோசைக்கல்லில் சூடாக்கி அல்லது ஒரு கிண்ணத்தில் போட்டு அந்த கிண்ணத்தை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்து இருந்து அப்புறமா சாப்பிடணும்..
ama bos enaku nellai than...alwa va mixer la potu eduthu sapta innum sema taste ah irukum.....
நன்று, இந்த நிகழ்ச்சிக்கான வீடியோ வைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.
அல்வா ஜூப்பரு.
//அல்வா என்றால் இனிப்பு என்று அர்த்தம்//
வடக்கேயும் இனிப்பகங்களில் '*** ஹல்வாயி' என்ற பெயர்ப்பலகைகளைப் பார்க்கலாம்.
மாயவரம் காளியாகுடி அல்வா — எல்லே ராம்
http://balhanuman.wordpress.com/2011/09/03/
Post a Comment