நெடுநாளைய ஆசைகளில் ஒன்று, இன்று நிறைவேறியது.
பனி பார்த்தது, பனி மலையை பார்த்தது என்ற வரிசையில் இன்று பனி சறுக்கு பார்த்ததும், சறுக்கியதும் சேர்ந்தது.
டென்வரை சுற்றியிருக்கும் மலை தொடர்களில், ’ஸ்கீயிங்’ எனப்படும் பனி சறுக்கு விளையாடுவதற்கு ஏதுவாக, மலைகளை நிறுவனங்கள் ’ரெடி’ செய்து வைத்திருக்கிறார்கள். ரொம்ப நாட்களாக செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தது, பனி மற்றும் பணியால் தள்ளிப்போய் கொண்டே இருந்தது. நேற்று ரிசர்வ் செய்து, இன்று சென்று வந்து விட்டோம்.
---
முன்பு, என் மனைவியுடன், வெளியே ஊரை சுற்றிப் பார்க்க செல்லும் போது, அங்கு கடைகளில் கிடைக்கும் உணவு, அவளுக்கு ஒத்து வராததால், நாங்களே புளியோதரை, தயிர் சாதம் என்று எடுத்து செல்வோம். இந்த வழக்கத்தை விட்டொழுக்க மாட்டோமா? என்று நினைத்தாலும், அந்தந்த இடங்களில் உட்கார்ந்து நம்மூர் ஐட்டங்களை ஒரு கட்டு கட்டுவது, புது அனுபவம் தான்.
இன்று நண்பருடன் சென்றதால், அப்படி எல்லாம் நடக்காது என்று நினைத்திருந்தேன்.
நான் விழிப்பதற்கு முன்பே, நண்பர் எழுந்து தக்காளி சாதமும், சிலபல முட்டைகளை வேக வைத்து ரெடியாக இருந்தார்.
தக்காளி சாதமும், முட்டையும் எடுத்துக்கொண்டு ஸ்கீயிங் சென்றவர்கள் நாங்களாக தான் இருக்கும்.
---
நாங்கள் சென்ற இடத்திற்கு பெயர் - லவ்லேண்ட் ஸ்கீ ஏரியா. மலையை வாங்கிவிட்டார்களா? அல்லது கவர்மெண்ட்டிடம் லீஸுக்கு எடுத்திருக்கிறார்களா? தெரியவில்லை. மலையில் இருக்கும் மரங்களை மொட்டையடித்து, சறுக்குவதற்கு ஏதுவாக மாற்றியிருக்கிறார்கள். சுள்ளென்று வெயில் அடித்தாலும், பனி கரையாமல் இருக்க ஏதேனும் செய்திருக்கிறார்களா? என்றும் தெரியவில்லை. ஆனால், பொதுவாக ஊருக்குள்ளேயே ஒருநாள் பனி பெய்தால், அடுத்து ஒரு வாரத்திற்கு அப்படி தான் இருக்கும்.
பனி சறுக்குவது அவ்வளவு சாதாரணம் இல்லை என்பதால், க்ளாஸ் நடத்துகிறார்கள். காலையில் பத்து மணியில் இருந்து, மாலை மூன்று மணி வரை. க்ளாஸுக்கு சென்றால், அணிய வேண்டிய உபகரணங்கள் அனைத்தையும் அவர்களே தருகிறார்கள். அங்கு சென்று, கைக்கு மாட்டுவது, காலுக்கு மாட்டுவது, தலைக்கு மாட்டுவது என்று அனைத்தையும் மாட்டிக்கொண்டு, ஒரு வாத்தியாரை தேடினோம். ஒருவர் சிக்கினார். அவர் எங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, இன்னொருவர் வந்து எங்களை ‘நான் இவர்களுக்கு பாடம் எடுக்கிறேன்’ என்று பேசிக்கூட்டி சென்றார். அவர் இப்போது, ‘வம்பா போய் இவனுங்கக்கிட்ட மாட்டிக்கிட்டோமே!’ என்று நினைத்துக்கொண்டு இருக்கலாம்!
---
முட்டுக்கு கொஞ்சம் கீழே வரை இருக்கும் அந்த பூட்டை காலில் மாட்டுவதே, பெரும்பாடாக இருக்கிறது. அதை காலில் மாட்டிக்கொண்டு நடப்பது என்பது, அந்த காலத்தில் பழைய படங்களில் காட்டுவார்களே, கைதிகளின் கால்களில் ஒரு இரும்பு உருண்டையை மாட்டிவிடுவது போல், அப்படி இருந்தது. காலையில் மாட்டும் போது, ஒன்றும் தெரியவில்லை. பிறகு, க்ளாஸின் போதும் ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. மதியம் சாப்பிடும் போதும், கடைசியில் முடிக்கும்போது தான், அந்த தண்டனையின் வீரியம் தெரிந்தது.
அந்த பூட்டை காலில் மாட்டி, பிறகு சறுக்க உதவும் ஸ்கீ எனப்படும் நீளமான குறுகலான பலகையில், பூட்டை மாட்ட வேண்டும். கையில் இரண்டு குச்சிகள். அது ‘போல்’ எனப்படுவது. அதை பனியில் குத்தி குத்தி ஒரு பாலன்ஸ்க்கு வைத்துக்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் பேலன்ஸ். போக, போக வேகமாக செல்ல அது தான் உதவும்.
ஆரம்பம் நன்றாக தான் சென்றது. அதன்பிறகு, ஒரு லெவலுக்கு மேல் எங்களால் எந்த முன்னேற்றத்தையும் காட்ட முடியவில்லை. கொஞ்சம் தூரம் வழுக்கிக்கொண்டு, பிறகு கீழே பொத்தென்று விழத்தான் தெரிந்தது. ஸ்பீடை குறைக்க, திசையை மாற்ற, நிறுத்த என்று எங்களுக்கு டிரிக்குகளை அவர் சொல்லி தந்தார். சொல்லி தரும் போது, மண்டை மண்டையை ஆட்டிவிட்டு, வழுக்க ஆரம்பித்தவுடன், நிறுத்த தெரியாமல், திசையை மாற்ற தெரியாமல், கீழே விழுந்து விழுந்து எழுந்தேன்.
இப்பொழுது தான் நடக்க ஆரம்பித்த குழந்தை எல்லாம், எங்கள் முன்னால் சாகசம் காட்டிக்கொண்டிருக்க, நாங்களோ கைப்புள்ளயாய் அடி மேல் அடி வாங்கிக்கொண்டிருந்தோம்.
உச்சக்கட்டமாய், தடுப்புக்கு வைத்திருந்த பிளாஸ்டிக் குச்சிகளை சிதறடித்துக்கொண்டு விழ, சாகசத்தை மூன்று மணிவாக்கில் நிறுத்திக்கொண்டோம்.
---
முதல் நாளிலேயே முழுக்க சறுக்க தெரிந்துக்கொள்ள முடியாதென்றாலும், ஏன் எங்களால் ஒரளவுக்கு கற்றுக்கொள்ள முடியவில்லை என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
முதலாவது, எந்த விளையாட்டும், உடற்பயிற்சியும் செய்வதில்லை. அதனால், அவ்வளவு வெயிட்டுடன் காலை தூக்கிவைத்து நடப்பதே பெரும்பாடாக இருக்கிறது. இதில், சறுக்கிக்கொண்டு இருக்கும் போது, காலை தூக்கி திசையை மாற்றுவது என்பது கைக்கூட இல்லை, கால்கூடவில்லை.
கிட்டத்தட்ட முட்டி வரை இருக்கும் அந்த பூட்டினால், நாம் கீழே விழுவதற்கு சாத்தியம் மிகவும் குறைவு. எந்த பக்கம் சாய்ந்தாலும், நமக்கு சப்போர்ட் கொடுக்கும். நாங்கள் விழுந்தது, எங்களால். குழந்தைகள் பிராக்டிஸ் பண்ணுவது, நாங்கள் பிராக்டிஸ் செய்ததற்கு பக்கத்தில் இருந்தது. அவர்கள் ஏரியாவில் நுழையக்கூடாது என்று எங்கள் வாத்தியார் சொல்லியிருந்தார். ஆனால், நான் அந்த திசையிலேயே சென்றுக்கொண்டிருந்தேன். திரும்ப முயற்சி செய்து, முடியாதபட்சத்தில் சாய்ந்து, விழுந்து, என்னை நானே நிறுத்திக்கொள்வேன். ஒன்றிரண்டு முறை மட்டுமே, நின்றவாறே நிறுத்திக்கொண்டேன்.
கொஞ்சம் மேலே ஏற்றி செல்ல, ஒரு லிப்ட் இருக்கிறது. அதை மேஜிக் கார்பட் என்றார். அது கொஞ்சம் மேலே கொண்டு செல்லும். பிறகு, கீழே நாம் சறுக்கி வரவேண்டும். இவ்வளவு வசதி இருந்தாலும், சிறிது நேரத்திலேயே டயர்டாகி விடுவேன். மேலே சென்றவுடன், காலை ’ஒரு சைடாக’ வைத்துக்கொண்டு, இன்னொரு ஓரத்திற்கு சைடாக நடந்து சென்று, அங்கிருந்து சறுக்க சொன்னார். அந்த ’ஒரு சைடு’ கொஞ்சம் வேறு மாதிரி வைத்தாலும், வழுக்கி விழுந்துவிடுவோமோ என்று பயந்துக்கொண்டு, நடப்பதிலேயே களைப்பு வந்துவிடுகிறது. நமக்கு பின்னால் ஆரம்பித்து, சாவகாசமாக வந்து, நமக்கு முன்னால் வந்து, இன்னொரு ஓரத்தில் வாத்தியார் நிற்பார். ‘காமன் காமன்’ என்று சொல்லிக்கொண்டு. அவர் அருகே சென்ற உடன், எப்படி சறுக்க வேண்டும், என்று சொல்லிக்கொண்டு, சறுக்கி சென்று விடுவார். பிறகு, கொஞ்சம் கீழே இருந்து ‘காமன் காமன்’ என்பார்.
எனக்கு அவர் அருகே செல்வதற்குள்ளாகவே, கால் வலித்துக்கொண்டு இருக்கும். உடனே, கீழே வர சொன்னால்? எதையும் யோசிக்காமல், ஒரு பக்கமாக வழுக்கிக்கொண்டு, பிறகு, நானாக கீழே விழுந்து, சிறிது ரெஸ்ட் எடுப்பேன். நான் கீழே விழுவதில், இப்படி ஒரு காரணமும் இருந்தது!
நண்பர், ’இவருக்கு சொல்லி தர தெரியவில்லை’ என்றார். நானும் பிறகு அப்படிதான் நினைத்தேன். சறுக்க ஆர்வம், அதை கற்றுக்கொள்ளவும் ஆர்வம் இருந்து, பிறகு விழுந்து, விழுந்து, களைத்து, சலித்து, அங்கிருந்த பெரிய கடிகாரத்தில் ‘எப்படா மூணு மணியாகும்?’ என்ற பார்க்க வைத்ததில், அவருக்கும் பங்கிருக்கிறது. நமக்கு கற்றுக்கொள்ள முடியாவிட்டால், வாத்தியாரை குறை சொல்வது தான் இப்ப ட்ரெண்டாச்சே?
உருப்படியாக, கற்றுக்கொண்டது - விழுந்துவிட்டால், எப்படி காலில் இருப்பதை கழட்டிவிட்டு, பிறகு எழுந்து, காலில் திரும்பவும் மாட்டிக்கொள்வது என்பதுதான். இது அவ்வளவு சுலபமில்லை. கொஞ்ச கஷ்டம் தான்.
ரொம்ப குளிருமோ? என்று பெரிய ஜெர்கின், குல்லா மாட்டிக்கொண்டு செல்ல, அங்கோ உடலுக்கு கொடுத்த கடும் பயிற்சியில், உள்ளே ஊற்றிக்கொண்டு இருந்தது. பிறகு, மதியத்திற்கு மேல் சில ஐட்டங்களை கழட்டிவிட்டு செய்தோம்.
---
வீட்டிற்கு வரும் போது, கார் பனியில் வழுக்கிக்கொண்டு செல்வது போலவே இருந்தது. வீட்டிற்கு வந்த பிறகு, சிறிது நேரம் இருவரும் தூங்கினோம். பிறகு, சாப்பிட உட்காரும் போது, நான் அவரிடம் ஆரம்பித்தேன்.
“கண்ணை மூடினா, ...” முடிப்பதற்குள்,
“பனியில வழுக்கி, விழுற மாதிரியே வருதுங்க” என்றார் அவர்.
.
1 comment:
என்ன சரவணா, இதுக்கு போயி அலுத்துக்கிரிங்க..
உங்க தலைவர் "வா வா வாகண்ணா வா" (வேலைக்காரன்)
பாட்டுல கஷ்டபட்ட மாதிரியேதெரியலியே..
இங்க சென்னையில வெய்யில்லவெந்துகிட்டு இதை படிக்கும்போதுசுகம்ம்ம்மா இருக்கு சரவணா..
Post a Comment