’நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றியிருக்கிறதா? ஏறியிருக்கும் என்று தான் நினைக்கிறேன். ஆரம்ப கேள்விகளை சுலபம் என்றில்லை, காமெடி என்று சொல்லலாம். என்னை இந்த நிகழ்ச்சியில் கவரும் விஷயங்கள் என்னவென்றால் கேள்விகளும், நிகழ்ச்சிக்கு வரும் விதவிதமான மனிதர்களும்.
கேள்விகளில் எந்த அளவுக்கு காமெடியாக கேள்வி கேட்கிறார்கள் என்றும், பிறகு வரும் கேள்விகளில், நமக்கு எந்தளவுக்கு தெரிந்திருக்கிறது என்றும் கவனித்து வருகிறேன். எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்? என்று ஒரு படத்தில் விவேக் கேள்விக்கேட்டு காமெடி செய்வார். கிட்டத்தட்ட அதைப்போல் ஒரு கேள்வியை கூட, இந்த நிகழ்ச்சியில் சூர்யா கேட்டார்.
----
படத்தில் நடிப்பது மட்டுமல்ல, இம்மாதிரி நிகழ்ச்சியில் ’நடிப்பதும்’ பெரிய விஷயம் தான். அதற்கும் ஒரு திறமை தேவை தான்!
நடிகர்கள் பொதுவாக படத்தில் பேசும் போது ஒரு மாதிரியும், நிஜத்தில் வேறு மாதிரியும் பேசுவார்கள். எனக்கென்னமோ, சூர்யா எங்கும் ஒரே மாதிரி பேசுவது போல் இருக்கிறது. நடிப்பு, ரத்தத்தில் கலந்த விஷயம் என்பார்களே! இதுதானா அது?
---
விஜய் டிவியில் இருந்து சிலர் ஜெயா டிவிக்கு ஓடி வந்துவிட்டார்கள் போலும்.
புதிதாக ஜெயா டிவியில் ‘ஆட்டோகிராப்’ என்றொரு நிகழ்ச்சி போடுகிறார்கள். ஒரு பிரபலத்தை வரவழைத்து, அவருடைய வாழ்க்கை பயணத்தைப் பற்றி சொல்ல வைத்து, இடை இடையே அவர் குறிப்பிடும் சில மனிதர்களை சர்ப்ரைஸாக வரவழைத்து பிரபலத்துடன் பேசவிடுகிறார்கள்.
இந்த வாரம், கே.எஸ்.ரவிக்குமார் வந்தார். அவருக்கு பழக்கமான நிறைய பேர் வந்தார்கள். ஒன்றிரண்டு நிமிடங்கள் இருந்து பேசிவிட்டு சென்றார்கள். கே.எஸ்.ரவிக்குமாருக்கு ரொம்பவே ஆச்சர்யம். நிறைய சுவையான தகவல்களை பகிர்ந்துக்கொண்டார். கடைசியில் அவருடைய தாயார் வர, இயக்குனர் கண்கலங்கிவிட்டார். விஜய் டிவி டச்!
ஆரம்ப வாரங்கள் ஒகே. அனைவருக்கும் சர்ப்ரைஸ் எலிமெண்ட் இருக்கும். வரும் வாரங்களில், இவ்வாறான சுவாரஸ்யம் இருக்குமா என்பது சந்தேகம் தான்.
முக்கியமான விஷயம், நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர், சுஹாசினி. இனி நீங்க பார்ப்பீங்களோ, என்னமோ?
----
விஜய் டிவியில் பாக்யராஜும், ஜெயா டிவியில் மதனும், ராஜ் டிவியில் ரோகிணியும் திரை விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆரம்பத்தில் பாக்யராஜ் நிகழ்ச்சியின் மேல் எதிர்பார்ப்பு இருந்தது. திரைக்கதை மன்னனான அவர், நல்லவிதமாக விமர்சனம் செய்வார் என்று நினைத்திருந்தேன். ஆனால், அவர் எதற்கெடுத்தாலும் படத்தில் காமெடி இல்லை, இப்படி செய்திருக்கலாம், அப்படி செய்திருக்கலாம் என்றே சொல்லி வருகிறார். சும்மா டிவியில் பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கே எரிச்சல் வருகிறது என்றால், படத்தை எடுத்த இயக்குனருக்கு எப்படி இருக்கும்? பெரிய மனுசஷனாச்சே! என்று தலையையாட்டி விட்டு வருகிறார்கள். (சமீபகாலமாக நிகழ்ச்சியை பார்க்கவில்லை. வருகிறதா?)
ரோகிணி விமர்சனத்தில் எந்த குறையும் நான் காணவில்லை. படத்தை நுணுக்கமாகத்தான் கவனித்து விமர்சனம் செய்கிறார். சொல்லும் விஷயங்களும், நியாயமாகத்தான் இருக்கிறது என்றாலும், அவர் சொல்லும் தொனி, தொகுத்து வழங்கும் விதம் என்னமோ போல் இருக்கிறது. ஆனால், அது என்னவென்று சொல்ல தெரியவில்லை.
இவ்வகை விமர்சன நிகழ்ச்சிகளிலேயே என்னை கவர்ந்தது, மதனின் நிகழ்ச்சி தான். எவ்வளவு பெரிய இயக்குனராக இருந்தாலும், பாராட்ட வேண்டிய விஷயங்களை பாராட்டிவிட்டு, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் குறைகளையும் சொல்லிவிடுகிறார். ஒரு நல்ல ரப்போர்ட்டுடன் வருபவர்களிடம் பேசுகிறார்.
இந்த வாரம், ‘உடும்பன்’ பட இயக்குனர் இவரிடம் மாட்டிக்கொண்டு பட்ட பாடு இருக்கிறதே! பாவமாகவும் இருந்தது. சிரிப்பாகவும் இருந்தது.
2 comments:
Paatu pathivu potuvinka Nalla irukum, eppo yan eluthamatikirinka....
அது என் நண்பர் மகேந்திரன் எழுதுவது. அவரை திரும்பவும் எழுத சொல்கிறேன்.
Post a Comment