இயக்குனர் பாண்டிராஜ், சிவகார்த்திக்கேயனை ‘மெரினா’ படத்திற்கு ஒப்பந்தம் செய்த போது நினைத்திருக்க மாட்டார். அவருடைய இந்த படத்திற்கு (ப்ரீயாக?!!) இவ்வளவு ப்ரமோஷன், விஜய் டிவியிடம் இருந்து கிடைக்கும் என்று.
என்றைக்கு தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும், தங்களுடைய கண்டுபிடிப்பான, சிவகார்த்திக்கேயன், இந்த படத்தில் நடிக்கிறார் என்று தெரிந்ததோ, அன்றிலிருந்து ‘மெரினா’ விஜய் டிவியின் படமாக ஆகிவிட்டது. வம்சத்திற்கு கலைஞர் டிவி போல், மெரினாவிற்கு விஜய் டிவியாகி விட்டது.
இதை பற்றியே ப்ரோகிராம் மேல் ப்ரோகிராமாக போட்டு தள்ளுகிறார்கள். சிவாவும் நல்லபடியாக பிரபலமாக ஆகிவிட்டால், அதை வைத்தே இவர்கள் பெருமையை கூட்டிக்கொள்ளலாம். இப்போதே, சந்தானம் பற்றி ஏதாவது சொல்லவேண்டுமானால், இவர்கள் பெருமையை சொல்லிவிட்டு தான் சொல்வார்கள். (த்ரிஷா, ஜெகன் என்று இவர்கள் லிஸ்ட் நீண்டுக்கொண்டே போகிறது) நல்ல விஷயம் தான். ஆனால், அதனால் மற்றவர்களுக்கு தர்ம சங்கடம் ஏற்படக்கூடாது, பாருங்கள்?
இப்படி தான், மெரினா படத்தின் ஹீரோ ஹீரோ என்று அனைத்து நிகழ்ச்சிகளிலும், சிவகார்த்திக்கேயனை கூட்டி வந்து, இயக்குனருடன் அமர வைத்து பேசவிடுகிறார்கள். (ஒரு சூறாவளி கிளம்பியதே... சிவா... சிவா... என்று பில்டப் சாங் வேறு!) ஆனால், படத்தை பொறுத்தவரை கதை - ஒரு சிறுவனை பற்றியது, அவன் பார்வையில் அவன் சந்திக்கும் மனிதர்களைப் பற்றியது. உண்மையில், ஹீரோ அவன் தான். இது சிவாவுக்கும் தெரியும். படத்தின் டைட்டிலில் சிவாவின் பெயர் பக்கோடாவுக்கு அடுத்தப்படியாக மூன்றாவதாக தான் வருகிறது. இருந்தாலும், நிகழ்ச்சிகளில் பக்கோடாவை சேர்த்துக்கொள்ளாமல், அல்லது, தூரத்தில் கூட்டத்தோடு கூட்டமாக உட்கார வைத்து நடத்துகிறார்கள்.
இயக்குனருக்கு இது புரிந்தும், வேறு வழியில்லாமல், கலந்துக்கொண்டு வருகிறார். எப்படியோ, படத்திற்கு பப்ளிசிட்டி கிடைத்து, படம் ஓடி, இயக்குனருக்கு நல்ல பெயருடன் லாபத்தையும் கொடுத்தால் நல்லது தான். நல்ல விஷயம் (ஊரைவிட்டு ஓடி வந்து பீச்சில் சுண்டல் விற்பது அல்ல. கல்வி முக்கியம் என்பது) நாலு பேரை சென்றடைந்தால் நல்லது தான்.
அதே சமயம், விஜய் டிவி பப்ளிசிட்டி கொடுத்திருக்காவிட்டாலும், படத்தின் ஓப்பனிங்கிற்கு சிவகார்த்திக்கேயன் தனிப்பட்ட அளவில் கொஞ்சமாவது காரணமாக இருந்திருந்திருப்பார். அவருடைய டிவி வீச்சு அப்படி. எத்தனை பேர் பார்க்கிறார்களே, நான் ரெகுலராக ‘அது இது எது’ பார்த்து வருகிறேன். யாராவது சிக்கினால் போதும், ஓட்டியே நிகழ்ச்சி முழுக்க ஓட்டிவிடுவார். ஆனாலும், ஆள் தராதரம் பார்த்து தான் ஓட்டுவார். சேரன் போன்ற கோபக்காரர்களிடம் கொஞ்சம் பம்மியே பேசுவார். ’3’ பட ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் தனுஷிடம் அடக்கமாக பேசியவர், இசையமைப்பாளர் அனிருத்தை விட்டுவைக்கவில்லை. அவர் வேஷ்டி சட்டையில் வந்ததை பார்த்து, ”சட்டையைக் காய போட்டுருக்காங்களோன்னு நினைத்தேன்” என்று நக்கல் விட்டார். ‘வாகை சூட வா’ நிகழ்ச்சியில் இயக்குனர் பாண்டிராஜை ஓட்டாமல் விட்டததால் தான், இந்த வாய்ப்பே அவருக்கு என்று இயக்குனர் நகைச்சுவையாக கூறினார்.
அது என்னமோ தெரியவில்லை. பொண்ணுகளை எவ்வளவு நக்கல் விட்டாலும், பெண்களுக்கு இவரை ரொம்பவும் பிடித்துவிடுகிறது. திறமைமிக்கவர். நன்றாக நடனமாடக்கூடியவர். விஜய் டிவி டான்ஸ் ப்ரோகிராமில், காம்பியராக இவர் விட்ட லந்துகளை தொகுத்து போட்ட நிகழ்ச்சி, மெயின் நிகழ்ச்சியை விட பெரிய ஹிட். இவர் வராத நிகழ்ச்சிகளே இல்லை என்பது போல் விஜய் டிவியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இவரை இறக்கிவிட்டார்கள். ’காபி வித் சிவா’ என்று கூட இடையில் ஆரம்பித்தார்கள். திறமையும், வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் திறனும் இருந்தால், வேகமாக உச்சத்தை தொடலாம் என்பதற்கு உதாரணமாகி வருகிறார் சிவகார்த்திக்கேயன்.
சிவகார்த்திக்கேயனை ஹீரோவாக வைத்து இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக பணியாற்றும் அட்லீ எடுத்த ’முகப்புத்தகம்’ என்னும் குறும்படம், ஏற்கனவே யூ-ட்யூபில் ஹிட்.
தனுஷ் படம், செல்வராகவன் படம் என்று தொடர்ச்சியாக வெள்ளித்திரையில் பிரகாசிக்கப்போகும் சிவகார்த்திக்கேயனுக்கு வாழ்த்துக்கள்.
.
5 comments:
ரசித்தேன்
ஹலோ சரவணகுமரன்
நான் இப்பத்தான் முதன்முறையா உங்க பதிவுகளை படிச்சேன். சும்மா சொல்லக்கூடாது. கலக்குறீங்க. குறிப்பா உங்க எழுத்து நடை down to earth. நண்பர்கள் கூடி அரட்டை கச்சேரி நடத்துன பழைய நாட்களை நெனச்சு பெருமூச்சு விட வெச்சுட்டீங்க.
அன்புடன்
Shanz
ஹலோ சரவணகுமரன்
வணக்கம். நான் இப்பத்தான் முதன்முறையா உங்க பதிவுகளை படிச்சேன். சும்மா சொல்லக்கூடாது. கலக்குறீங்க. குறிப்பா உங்க எழுத்து நடை down to earth. நண்பர்களோட கூடி அரட்டை கச்சேரி நடத்துன அந்த பழைய நாட்களை நெனச்சு பெருமூச்சு உட்டுக்குறேன். வேற என்ன செய்ய.
அப்பப்ப வரேன்.
அன்புடன்
சன்Z.
நன்றி fasnimohamad
நன்றி Shanz
Post a Comment