சிறு வயதில், எனது அண்ணனின் தயவால் நிறைய படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். முக்கியமாக, அனைத்து ரஜினி படங்களுக்கும் முதல் நாளிலேயே அழைத்து சென்று விடுவார். அதன் பிறகு, வேறு படங்களுக்கும் கூட்டி சென்று விடுவார். ‘கேப்டன் பிரபாகரன்’ வந்திருந்த சமயம், என்னை அந்த படத்திற்கு கூட்டி செல்லவே இல்லை. படத்தைப் பற்றி பள்ளியில் பேசப்பட்டோ, எப்படியே எனக்கு தெரிந்து, அண்ணனிடம் அழைத்து செல்லுமாறு கூற, அவர் அந்த படத்திற்கு அழைத்து செல்லவே இல்லை. ஏனென்று இப்பொழுது வரைக்கும் தெரியவில்லை.
அச்சமயம், ரெகுலர் டிக்கெட் விலை ஐந்து ரூபாய் அளவில் இருந்ததென நினைக்கிறேன். தூத்துக்குடி சினிராஜில் ஓடிக்கொண்டிருந்தது. இந்த படத்திற்கு பதினைந்து ரூபாய் டிக்கெட் ரேட் என்று கேள்விப்பட்டு, பதினைந்து ரூபாய் சேர்த்து, அண்ணனிடம் கொடுத்து கூட்டி செல்ல சொன்னேன். என்ன நினைத்திருப்பாரோ, வாங்கினாரோ, வாங்கவில்லையோ, எதுவும் இப்போது நினைவில்லை. அழைத்து சென்றார். வாயை பிளந்து பார்த்தது மட்டும் நினைவிருக்கிறது.
---
விஜயகாந்தின் நூறாவது படம். நூறாவது படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது, விஜயகாந்திற்குதான்.
---
சந்தனகடத்தல் வீரப்பனை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை. அதிகாரவர்க்கத்தின் தயவுடன் கடத்தல் செய்துவரும் வீரபத்ரனை, எப்படி ஐஎப்எஸ் அதிகாரியான பிரபாகரன் பிடித்து, அவனுக்கு உதவி செய்தவர்களையும் போட்டு தள்ளுகிறார் என்பதே இப்படத்தின் கதை.
---
இந்த படத்தின் தயாரிப்பாளர், விஜயகாந்தின் முன்னாள் நண்பர் - இப்ராகிம் ராவுத்தர். இவர் தற்போது விஜயகாந்தின் எதிரணியான அதிமுகவில் தஞ்சமடைந்திருக்கிறார். விஜயகாந்திற்கு எதிராக இவரை வைத்து எப்படி காய் நகர்த்த போகிறார்களோ? காலத்தின் கோலம்.
இயக்குனர் செல்வமணியின் இரண்டாம் படம். அந்நேரத்தில் ஷங்கரைப் போன்ற ஹாட்டஸ்ட் இயக்குனர். ஆட்டோ சங்கர், வீரப்பன், ராஜீவ் கொலை என்று பல முக்கிய சம்பவங்களை வைத்து ஒருபக்கமும் காதல் படங்களை மற்றொரு பக்கமும் எடுத்துவந்தவர். இந்த படம் தான், இவருடைய மாஸ்டர் பீஸ் எனலாம்.
வெறுமனே போலிஸ் ஹீரோ, கடத்தல் வில்லன் என்று கதை பண்ணாமல், கடத்தலுக்கு உதவி செய்து ஆதாயம் பெறும் அரசியல்வாதி, போலிஸ், கலெக்டர், மோசமான நிலையில் வேலை பார்க்க வைக்கப்படும் கடைநிலை காவல்துறையினர், வேறுவழியில்லாமல் கடத்தல்காரனுக்கு உதவும் பக்கத்து கிராம மக்கள் என்று கதையை பின்னி உண்மைக்கு பக்கத்தில் கொண்டு வந்திருப்பார்.
அதே போல், வெறும் ஆக்ஷன் படமாக இல்லாமல், சூடு பறக்கும் வசனங்களால் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். சண்டைக்காட்சிகளில் விஜயகாந்தின் கால்களும், மற்ற காட்சிகளில் விஜயகாந்தின் வாயும் ரெஸ்டே இல்லாமல் விளையாடி இருக்கும். பேக் ஷாட், சுவற்றில் ஜம்ப் செய்து உதைப்பது என்று சண்டைக்காட்சிகளில் விஜயகாந்த் தனது ட்ரெட்மார்க்கை பதித்திருப்பார். வசனங்களுக்கு லியாகத் அலிகான் இருக்க, வேறென்ன வேண்டும்? அரசியல் காரத்திற்கு பஞ்சமில்லை. ஒரளவுக்கு இந்த விஷயத்தில் விழிப்புணர்வு கொடுத்தது என்றும் சொல்லலாம். ஆங்காங்கே வரும் முக்கியமான வசனங்களுக்கு, தியேட்டர் ஆபரேட்டர் சவுண்ட் கூட்டியது, இன்னமும் நினைவிருக்கிறது. அவர் சவுண்ட் கூட்டியதாலேயே அவ்வசனங்கள் முக்கியத்துவம் பெற்று, தியேட்டரில் கைத்தட்டல் பெற்றன. அந்த ஆபரேட்டர் ஒவ்வொரு காட்சிகளுக்கும் இது போன்று கூட்டி வைத்திருப்பார் அல்லவா? தற்போது யாருக்கு வரும் இது போன்ற இன்வால்வ்மெண்ட்?
படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. வீரபத்ரனின் ஆட்கள், யூனிபார்முடன் தோட்டாக்களை பூணூல் போல் போட்டுக்கொண்டு, துப்பாக்கி சகிதம், குதிரையில் வருவது படு சினிமாத்தனம். படத்தின் ஆரம்பத்திலேயே ரம்யா கிருஷ்ணன் கர்ப்பமாகிவிடுவார். இறுதியில் குழந்தை பெற்றுவிடுவார். ஆனால், இறுதிக்கு முந்திய காட்சியில் தான், வாயும் வயிறுமாக காட்டுவார்கள். அதற்கு முன்பு வரை ‘ஆட்டமா தேரோட்டமா’ என்று கெட்ட ஆட்டம் போடுவார். (ம்ம்ம்... இதையெல்லாம் இப்போது தான் கவனிக்க தோன்றுகிறது...)
அக்காலத்தில் இது படு பிரமாண்டமான படைப்பாக இருந்திருக்கும். முழுக்க முழுக்க உண்மையான காட்டில், ஆங்காங்கே நன்றாக செட் போட்டு, மன்சூரலிகான் வரும் காட்சிகள், நம்பகத்தன்மையுடன் அமைக்கப்பட்டிருக்கும். மன்சூரலிகான் காமெடி கலந்து டெரர் வில்லத்தனம் காட்டியிருப்பார். அப்போது படு பிட்டாக இருந்திருக்கிறார். சரத்குமார், விஜயகாந்தின் நண்பராக சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
பெரும் ஜனப் பட்டாளத்துடன் அமைக்கப்பட்டிருக்கும் இறுதிகாட்சி, படு பிரமாண்டம் எனலாம். இப்போது ஷங்கர் படங்களில் ஜனத்திரளுடன் வரும் காட்சிகளுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாதது. இப்போது, இந்த படத்தை பார்க்கும்போது, ‘ஜென்டில்மேனில்’ இப்படத்தின் பாதிப்பு இருப்பதாக தெரிகிறது. தைரியமாக அரசியல் படங்களை, காரமான வசனங்களுடன் எடுப்பவர் என்று பெயர் பெற்ற ஆர்.கே.செல்வமணி தற்போது தயாரிப்பாளர்கள் சங்க அரசியலில் மும்முரமாக இருக்கிறார். இறுதியாக எடுத்த படங்கள், காணமுடியாதவைகளாக இருந்தன. சூடான அரசியல் படங்களை எடுக்க, ஒரு இயக்குனர் சீட் காலியாக இருக்கிறது.
"எதிர்கட்சியாக இருக்கும்போது ஆளும்கட்சியை குற்றம் சாட்டுவதும், பிறகு அவர்களே ஆட்சியைப் பிடித்தவுடன் திருட ஆரம்பிப்பதும் வழக்கம் தான்” என்று கேப்டன் இப்படத்தில் வசனம் பேசுகிறார். நோட் திஸ் பாயிண்ட்.
---
சேனல்களில் இந்த படத்தை பார்த்ததாக ஞாபகம் இல்லை. சமீபத்தில் இணையத்தில் காண நேர்ந்ததால் இப்பதிவு.
.
2 comments:
இது செம படம் :-) இயக்கம் இந்தப்படத்தில் அருமை. முதல் படத்திலேயே மன்சூர் கலக்கி இருப்பார்.. பொருத்தமான கதாப்பாத்திரம் கூட.
கேப்டன் சொல்லவே தேவையில்லை.. பின்னி இருப்பார் :-)
நன்றி கிரி
Post a Comment