Friday, February 3, 2012

ஜெயலலிதாவுக்கு விஷம் வைத்த சசிகலா

இந்த வார தெஹல்காவில் வந்திருந்த கட்டுரையைப் படித்த போது பகீரென்று இருந்தது.



ஜெயலலிதா சசிகலாவை விரட்டியது தெரிந்த விஷயம். அதற்கான காரணங்கள், உள்விவகாரங்கள் பற்றிய விஷயங்கள், தெரிந்திருக்கவில்லை.

தெஹல்காவில் வந்திருந்த விஷயங்கள் உண்மையா என்று தெரியவில்லை. ஆனால், எவ்வளவு அதிகாரங்கள் இருந்தாலும், பக்கத்திலேயே நம்பிக்கைக்குரியவர்கள் இல்லாவிடில், நாம் ஒன்றுமில்லை என்பது நிச்சயம் என்று ஞாபகப்படுத்தியது.

ஜெயலலிதாவுக்கு பதில் சசிகலாவை முதலமைச்சராக்குவது என்பது மன்னார்குடி கும்பலின் திட்டம். ஏதாவது சந்தர்ப்பம் அமையுமா என்று இருந்தவர்களுக்கு, ஜெயலலிதாவின் பெங்களூர் நீதிமன்ற வழக்கு, யோசிக்க வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த வழக்கில் ஏதேனும் தீர்ப்பு, ஜெயலலிதாவுக்கு பாதகமாக வந்தால், அதை தங்களுக்கு சாதகமாக ஆக்கிக்கொள்ள திட்டம் தீட்டப்பட்டது.

ஜெயலலிதாவின் வீட்டில் இருக்கும் வேலையாட்கள், சசிகலாவின் ஆட்கள். ஜெயலலிதாவின் காவலாளிகள், சசிகலாவின் ஆட்கள். கட்சி எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், சசிகலாவின் ஆட்கள். இப்படி எல்லாமே சசிகலாவின் ஏற்பாட்டில் நிறுவப்பட்டவை. சசிகலாவிற்கு தெரியாமல், ஜெயலலிதாவிற்கு ஏதும் தெரிய வாய்ப்பில்லை.

இந்நிலையில் இந்த சதி திட்டம், ஜெயலலிதாவிற்கு தெரியவந்தது, குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியின் மூலம். தமிழகத்திற்கு வந்த தொழிலதிபர்களை எக்கச்சக்க கமிஷன் கேட்டு, மன்னார்குடி மாஃபியா குஜராத்திற்கு விரட்டியடிக்க, அத்தொழிலதிபர்கள் மோடியிடம் நடந்த பேச்சுவார்த்தையின் போது, இது குறித்து தகவல் சொல்ல, எச்சரிக்கை மணி அங்கிருந்து அடித்திருக்கிறது.

அம்மாவிற்கு அதன்பிறகே, தன்னைச் சுற்றி நடக்கும் பேரங்கள் தெரியவந்திருக்கிறது. மோனோ ரயில் காண்ட்ராக்ட் விஷயத்தில், தன்னுடைய கையெழுத்து தன்னையறியாமல் போடப்பட்டிருப்பது தெரியவந்தது.

தனக்கு கொடுக்கப்படும் உணவை, பழங்களை, மருந்துகளை பரிசோதிக்க சொல்லி அனுப்ப, அதில் சிறிய அளவில் விஷம் கலக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதன் பிறகு, ஜெயலலிதா சுதாரித்துக்கொண்டு, மன்னார்குடி கும்பலின் நடவடிக்கைகளை, தொலைபேசி பேச்சுகளை, துப்பறியும் நிறுவனம் கொண்டு கவனிக்க, தன்னை சுற்றி, கட்சி முழுக்க, ஆட்சி முழுக்க, இந்த கும்பலின் சிலந்தி வலை பின்னப்பட்டிருப்பது தெரிந்து, கவனமாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க தொடங்கினார்.

அதன் பிறகு நடந்ததில் கொஞ்சம் நமக்கு தெரிந்தது.

இதை வாசித்தப்போது, ஜெயலலிதாவின் நிலை பரிதாபத்தை கொடுத்தது. குடும்பம்தான் பலவீனம் என்றாலும், கருணாநிதியின் நிலை பரவாயில்லை. யோசித்து பார்த்தால், இப்படிப்பட்டவர்களின் கைகளில் ஆட்சியை கொடுக்கும், தமிழக மக்களாகிய நமது நிலை தான் உண்மையில் பரிதாபத்திற்குரியது.

எப்படிபட்டவர்களாக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், ஆப்பில்லாத வாழ்க்கை எங்கும் இல்லை என்பது தான் இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆறுதலான பாடம்.

.

No comments: