Sunday, January 8, 2012

வழிகாட்டி

நான் எந்த ஊருக்கு சென்றாலும், முதலில் அந்த ஊர் மைய பேருந்து நிலையம் இருக்கும் பகுதியை தெரிந்துக்கொள்வேன். அப்பகுதிக்கு செல்லும் பேருந்துகள் எவை என்பதையும், அங்கிருந்து நான் தங்கியிருக்கும் இடத்திற்கு செல்லும் வழித்தடத்தையும் அறிந்துக்கொள்வேன். பிறகு, நாம் எங்கு வெளியே சுற்றினாலும், எப்படியோ வீடு வந்து சேர்ந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் ஊர் சுற்ற கிளம்பிவிடுவேன்.

அமெரிக்காவில் அந்தளவு பேருந்து போக்குவரத்து இருப்பது இல்லை. டென்வர் பரவாயில்லை, பஸ், ரயில் இரண்டும் இருக்கிறது, கார் இல்லாமல் சமாளிக்க முடிகிறது என்று மற்ற ஊர்களிலிருந்து இங்கு வரும் நண்பர்கள் கூறுவார்கள். இருந்தாலும், எல்லா இடங்களுக்கும் சென்று விட முடியாது. கார் இருந்தால் தான் சுலபம்.

வந்த புதிதில் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். எப்படி நம்மூரில் இருந்து, இங்கு வந்து கார் வாங்கி வைத்திருப்பவர்களால், தெரியாத இடங்களுக்கு செல்ல முடிகிறது என்று. நம்மூர் என்றால் அதற்கு முன்பு பஸ்ஸில், ஆட்டோவில் பல இடங்களுக்கு சென்று பழகி இருப்போம். அல்லது, எங்கு வேண்டுமானாலும் வண்டியை நிறுத்தி வழி கேட்டு செல்லலாம்.

ஆனால், இங்கு அது சாத்தியமில்லை. சாலையில் சும்மா வண்டியை நிறுத்த முடியாது. அதற்கான பார்க்கிங் இடத்தில் நிறுத்த வேண்டும். ஆட்டோக்காரரோ, கடைக்காரரோ யாரும் ரோட்டில் நிற்பதில்லை. அதனால், ஒவ்வொரு இடமாக நிறுத்தி, யாரிடமோ கேட்டு போவது என்பது சாத்தியமில்லாதது. இப்படிப்பட்ட நிலையில், வழி தேடும் வழியை சுலபமாக்குகிறது, ஜிபிஎஸ் நேவிகேட்டர்.



எனக்கு முதலில் இதை பார்த்தப்போது, ரொம்பவும் ஆச்சரியமாக இருந்தது. அமெரிக்கா போன்ற நாடுகள், இந்தியா போன்ற நாடுகளுக்கு சில விஷயங்களில் சில பல ஆண்டுகள் முன்னிலையில் இருக்கிறது என்று கேள்விப்படுவது இதுதான் என்று புரிந்தது.

இந்த வழிகாட்டி கருவியில் நாம் செல்ல வேண்டிய இடத்தின் முகவரியை உள்ளீடு செய்துவிட்டு, ஓட்டுனருக்கு முன்னால் வசதியான இடத்தில் மாற்றிவிட்டு கிளம்பினால், அது பாட்டுக்கு வழி சொல்லிக்கொண்டு வரும். இங்க லெப்ட் திரும்பு, அங்க ரைட்டு திரும்பு என்று.

திரும்புவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பே, அந்த லேனுக்கு மாறுங்க, இந்த லேனுக்கு மாறுங்க என்றும் சொல்லிவிடும். இது தவிர, ஒரு இடத்தில் நின்றுக்கொண்டு, அந்த இடத்திற்கு பக்கத்தில் இருக்கும் டூரிஸ்ட் ஸ்பாட்கள் என்ன, உணவகங்கள் என்ன, பெட்ரோல் பங்க்குகள் என்ன என்று அனைத்தையும் தெரிந்துக்கொள்ளலாம்.

எப்படி கால்குலேட்டர் உபயோகிப்பவர்கள், மனக்கணக்கு போட கஷ்டப்படுவார்களோ, அது போல, இதை பயன்படுத்தி பழக்கப்பட்டவர்கள், வழிகளை நினைவில் வைத்துக்கொள்ள சிரமப்படுவார்கள்.

இது எப்படி வேலை செய்கிறது என்பதை விருப்பமிருந்தால், இணையத்தில் தேடி தெரிந்துக்கொள்ளுங்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இது இதற்கென வானத்தில் வட்டமடித்து கொண்டிருக்கும் சில சாட்டிலைட்டிகளை தொடர்பு கொண்டு, நாம் இருக்கும் இடத்தை தெரிந்து வைத்துக்கொண்டு, கருவியில் இருக்கும் மேப்பில் படமாக காட்டும். இத்தகவல்களைக் கொண்டு நாம் எங்கிருக்கிறோம், நாம் செல்ல வேண்டிய இடம் எங்கிருக்கிறது, எவ்வளவு தொலைவில் இருக்கிறது, சென்று சேர எவ்வளவு நேரமாகும் என்று அனைத்து தகவல்களையும் கணித்து போக போக சொல்லிக்கொண்டே வரும்.

இது போன்ற அம்சங்கள், இப்பொழுது நம் செல்போன்களிலேயே இருந்தாலும், இதனுடனான முக்கிய வேறுபாடு. செல்போன் வழிகாட்டிகள், நமது போனுக்கான டேடா ப்ளானின் உதவியால் செயல்படுவது. செல்போன் சிக்னல் இல்லையென்றால், அதோ கதிதான். ஆனால், ஜிபிஎஸ் வழிகாட்டிகள் சாட்டிலைட்டின் உதவியால் செயல்படுவதால், வானம் தெரிந்தால் போதும். வழிகாட்டும். (ஆமாம். வீட்டிற்குள் வேலை செய்யாது. வீட்டிற்குள் வழி தேட, நாமென்ன அம்பானி போலா வீடு கட்டியிருக்கிறோம்?)

இக்கருவியின் விலையும் அதிகமில்லை. நூறு டாலர்களுக்குள் நல்ல கருவிகள் கிடைக்கின்றன. முதல் முறை, ஒருமுறை செலவு தான். பிறகு, ஏதும் செலவழிக்க தேவையில்லை. அவ்வப்போது, நமது கணினியுடன் இணைத்து, இணையத்தில் இருந்து புதிய மேம்படுத்தப்பட்ட மேப்களை தரவிறக்கிக்கொள்ளலாம்.

நமது நாட்டிலும் இவை கிடைக்கிறது என்றாலும், இங்கிருக்கும் அளவுக்கு துல்லியமாக காட்டாது என்று நினைக்கிறேன். ஏனெனில், இங்கு ஒரு வீடோ, அலுவலகமோ, அந்த இடத்தின் முகவரியை குறிக்க, ஒரு எண், ஒரு தெரு பெயர், ஊர் பெயர், சிப் கோட் என்றழைக்கப்படும் பின் கோட் என நான்கு விவரங்கள் தெரிந்தால் போதும். இவை அமெரிக்கா முழுமைக்கும் நிலையானது. நமது ஊர் போல, பழைய எண், புதிய எண், அதில் பார் போன்ற ஸ்பெஷல் கேரக்டர்கள், நம்பர் எழுத்து கலவைகள், இத்தனையாவது மெயின் ரோடு, இத்தனையாவது தெரு, இத்தனையாவது குறுக்கு சந்து என்று கிடையாது. அனைத்து முகவரிகளும் நிலையாக நான்கு வரிகள் தான் இருக்கும்.

இதனால் முகவரிகளையும், அதிருக்கும் இடத்தையும் மென்பொருள் மூலம் வசப்படுத்துவது சுலபம். கூகிள் மேப்பில் எந்த அட்ரஸை அடித்தாலும், சரியாக அந்த இடத்தை காட்டும். இணைய மேப்கள் மூலம் அமெரிக்காவில் இருக்கும் எந்த நண்பரது வீட்டின் வாஸ்துவையும் தெரிந்துக்கொள்ளலாம்.

இந்தியாவில் இது சாத்தியமில்லை என்று சொல்ல முடியாது. இவ்வளவு துல்லியம் வர, கொஞ்சம் நாளாகும். நிறைய தகவல்கள் சேகரித்து, முறைப்படுத்தப்பட வேண்டும். மென்பொருட்களுக்கு இன்னும் புத்திக்கூர்மையை செலுத்த வேண்டும்.

இந்தியாவில் வழிக்காட்டிகளுக்கு வழி பிறக்காமலா போகும்?

.

8 comments:

Yaathoramani.blogspot.com said...

நிச்சயம் வழிபிறக்கும்
ஆனாலும் வழக்கம்போல
காலதாமதமாகப் பிறக்கும்
பயனுள்ள பதிவு
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

கிரி said...

நாம் அமெரிக்கா போன்ற நாடுகளை விட தொழில்நுட்பத்தில் குறைந்தது 20 ஆண்டுகளாவது பின் தங்கி இருப்போம் :-(

Anonymous said...

life of this device is about 5-6 years..afterwards you need to replace the battery. but it is better to buy a new one than changing the battery!--but for this the device extremely handy while traveling.

Anonymous said...

Just so you know it is available in all metro's in India and in use moderately. Like you said, we won't get the accuracy in India that we see in US but it's better than before. When some of the area maps in US itself is wrong in these devices, no point in blaming our Indian set up.. I know you are not, but just saying!

சரவணகுமரன் said...

நன்றி ரமணி

சரவணகுமரன் said...

கிரி, சிங்கையில் எப்படி?

சரவணகுமரன் said...

நன்றி அனானி

Kartheeswaran said...

திரு கிரி சொல்வது போல் பின் தங்கித்தான் உள்ளோம்.. நமக்குத்தான் அமெரிகனின் தொழில்னுட்பத்தைவிட அவர்களது உணவு, உடை மற்றும் பாவனைகளை காப்பி அடிப்பதில் முன்னேறியுள்ளோம்... மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே...