Sunday, January 15, 2012

நண்பன்

சென்ற வாரம், ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது, “அடுத்த வாரம் லாங் வீக்-எண்ட்டுக்கு என்ன ப்ளான்?” என்று கேட்டார். வரும் திங்கள்கிழமை விடுமுறை என்பதால், நீளமான வாரயிறுதி. மார்ட்டின் லூதர் கிங் தினமாம். நாம பொங்கலுக்கு என்று நினைத்துக்கொள்ள வேண்டியது தான்.

”ஒன்றும் இல்லை. பொங்கலுக்கு புது படம் பார்க்க வேண்டியது தான்” என்றேன்.

என்ன படம் வருகிறது என்று கேட்டதற்கு, வியாழக்கிழமை “நண்பன்” வருகிறது என்று நான் சொல்ல, அவர் சொன்னார். “அப்ப வெள்ளிக்கிழமை வந்துரும்”.

எனக்கு முதலில் புரியவில்லை. பிறகு, அவர் வெள்ளிக்கிழமை இணையத்தில் வந்துவிடும் என்று கூறியிருக்கிறார் என்று பிடிபட்டது.

சிரித்துக்கொண்டு வந்துவிட்டேன். பிறகு, வியாழக்கிழமை வழக்கம்போல், சில நிகழ்ச்சிகளைப் பார்க்க இணையத்தில் மேய்ந்துக்கொண்டு இருந்தபோது, பெரும்பாலான தளங்கள் அனைத்திலும், முதல் பக்கம் “நண்பன்” இருந்தது.

”அடப்பாவமே! அவராவது வெள்ளிக்கிழமை என்று சொன்னார். இவனுங்க, இவ்ளோ பாஸ்ட்டா இருக்கானுங்களே!” என்று நினைத்துக்கொண்டேன். வார நாட்களில், வேலை இருந்ததால், சனிக்கிழமை செல்லலாம் என்று முடிவு செய்து கொண்டேன். நண்பரிடமும் ‘நெட்ல பாத்து தொலைச்சீராதீங்க!” என்று சொல்லிவிட்டேன்.

ஒரு ஆந்திர நண்பர் சொன்னார். தூக்குடு ரிலீஸான போது, மூன்று வாரங்களுக்கு இணையத்தில் வராமல் பார்த்துக்கொண்டார்களாம். எப்படி என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும், தியேட்டர் செல்லும் ஆர்வம் இருந்தால் தான் செல்வார்கள்.

அது என்னமோ தெரியவில்லை. சிலருக்கு விஜய் என்றால் ரொம்பவும் இளக்காரமாக ஆகிவிட்டது. “நண்பன்” பார்க்க போகலையா? என்றால் விஜய் படத்தை எல்லாம் தியேட்டரில் பார்க்க முடியாது என்கிறார்கள். ஜீவா மட்டும் இருந்தாலாவது பரவாயில்லை என்று அவர் சொன்னதற்கு, இன்னொருவர் வழி சொல்கிறார். ஒரு துண்டு கொண்டு போங்க, விஜய் ஸ்கிரினில் வரும்போது, முகத்தில போட்டுக்கோங்க!!! என்று.



இவர்கள் தான் இப்படி என்றால், இன்னொன்றையும் கண்டேன். நான் பெங்களூரில் இருக்கும் போது, ஒரு லோக்கல் தியேட்டருக்கு தமிழ்ப்படங்கள் காண செல்வேன். அது மல்டிப்பிளக்ஸ் இல்லை என்பதால் லோக்கல் என்றேன். ரொம்பவும் லோக்கல் இல்லை. சென்ற வருடம், அவர்கள் இணையத்தில் டிக்கெட் ரிசர்வ் செய்யும் வசதியை கொடுக்கும் ஒரு தளத்துடன் இணைந்துக்கொண்டார்கள். அத்தியேட்டரில் படம் பார்க்க அத்தளத்தில் டிக்கெட் ரிசர்வ் செய்துக்கொள்ளலாம். நானும் டிக்கெட் எடுத்துவிட்டு எந்நேரமும் செல்லலாம் என்ற வசதியிருப்பதால், அதன் மூலம் டிக்கெட் ரிசர்வ் செய்துவிட்டு செல்வேன். அவர்கள் என்ன செய்வார்கள் என்றால், ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை ஒரு மெயில் அனுப்புவார்கள். இந்த வாரம் என்ன படம் வெளியிடப்போகிறார்கள் என்று. இன்னமும் வந்துக்கொண்டு இருக்கிறது.



இந்த வாரம், நண்பன் படத்தை குறிப்பிட்டு அனுப்பியிருந்தார்கள். ரொம்ப கவனமாக சப்ஜெக்டில், “ஷங்கர் பிலிம் - நண்பன்” என்று குறிப்பிட்டிருந்தார்கள். விவரம் தான் என்று நினைத்துக்கொண்டேன்.

---

இன்று தியேட்டர் சென்ற பிறகு தான் தெரிந்துக்கொண்டேன். வேட்டையும் இங்கு ரிலீஸாகி இருக்கிறது என்று. ஆனாலும், நண்பன் தான் பார்த்தோம். நன்றாக இருந்தது. என்ன தான் ரீமேக் என்றாலும், ஷங்கர் டச் இல்லாமல் இல்லை.



வழக்கம் போல், இங்கு சப்-டைட்டிலுடன் திரையிட்டார்கள். சப்-டைட்டிலை கொஞ்சம் கூட கவனிக்காமல் படம் பார்ப்பது தான் நல்லது. ஏனெனில், சில காட்சிகளில் கதாபாத்திரம் கொஞ்சம் ப்பாஸ் விட்டு சொல்லும் டயலாக்குகள், அவர்களை முந்திக்கொண்டு சப்-டைட்டிலில் வந்துவிடுவதால், புஸ்ஸாகிவிடும் வாய்ப்புகள் இருக்கிறது. கதையே தெரிந்தது தானே என்று நினைத்தாலும், படம் பார்ப்பதில் எந்த சலிப்பும் இல்லை.



இந்த படம், விஜய்க்கு நல்ல பெயரையும், ஹிட்டையும் கொடுக்கும். ஜீவா கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறார் என்றாலும், நல்ல பெயர் கிடைத்துவிடும். (ஆந்திர நண்பர் ஆச்சரியப்பட்டார். எப்படி இந்த கேரக்டரில் நடிக்க ஜீவா ஒத்துக்கொண்டார் என்று. ஏனெனில், சென்ற வருடம் வந்ததில், ஆந்திராவில் பல தெலுங்கு படங்களை விட ‘கோ’, பெரிய வெற்றியாம்). ஸ்ரீகாந்திற்கு பெரிய கேரக்டர். பாராட்டு கிடைக்கும். சத்யனுக்கு வாழ்வு. (சத்யன், இனி கொஞ்சம் கவனமாக பேட்டிக்கொடுக்க வேண்டும். ஒரு இணையத்தள பேட்டியில் ‘துப்பாக்கி’ படத்தின் கதையையும், தான் கிட்டதட்ட செகண்ட் ஹீரோ என்றும் சொல்லியிருக்கிறார்.)



சத்யராஜ், முந்திய ஷங்கர் படங்களில் நடிக்காமல், இதில் நடிக்க ஒத்துக்கொண்டு என்ன சாதித்தார் என்று தெரியவில்லை. ரஜினியிடம் அடி வாங்கணுமா? என்று யோசித்திருப்பார். இதில் ’சிவாஜி ரஜினி போல’ என்று கிண்டல் செய்யப்பட்டிருக்கிறார். இலியானாவை முதலில் பார்த்த போது, சப்பென்று இருந்தது. ஸ்ரீகாந்த், ஜீவா சகோதரியை பார்த்து ஒரு எக்ஸ்ப்ரெஷன் கொடுப்பாரே? அப்படி இருந்தது.



இந்த படத்துடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இது பெரிய படம் என்றால், ஷங்கருக்கு இதுதான் அவருடைய படங்களில் சின்ன படம். ரெஸ்ட் என்று கூட சொல்லிவிடலாம். அதுதான், ஷங்கர்.

மற்றபடி, படத்தை பற்றி நிறைய பேர் நிறைய சொல்லிவிட்டதால், இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். படம் பாத்தாச்சு! அவ்ளோத்தான்.

.

No comments: