Tuesday, January 24, 2012
புத்தகங்கள் - ஜனவரி 2012
என் வாழ்க்கையில் புத்தகங்களுக்கு ஒரு முக்கிய இடத்தை கொடுத்திருந்தேன். அலுவலக வேலை, உணவு, உறக்கம் - இவற்றுக்கு பிறகு, புத்தகங்களே முக்கிய இடத்தை ஆக்ரமித்து இருந்தன. இப்போது, நிலைமை மாறிவிட்டது. அலுவலக வேலை, சமையல், உணவு, உறக்கம், இணையம், தொலைபேசி போன்றவற்றுக்கு பிறகு, ஏதோ ஊறுகாய் போல் வாசித்து வருகிறேன்.
இந்தியாவில் இருந்து வரும்போது, மூன்று-நான்கு புத்தகங்கள் எடுத்து வந்திருந்தேன். சென்ற வருட ஆரம்பத்தில் சென்றிருந்த புத்தக கண்காட்சிகளிலும், அவ்வப்போது சென்னை சென்றிருந்த போதும், எக்கச்சக்க புத்தகங்கள் வாங்கியிருந்தேன். எல்லாம் ஊரில் பரணில் தூங்கிக்கொண்டிருக்கிறது.
லக்கேஜ் எடைக்கு இருக்கும் 23 கிலோ என்னும் லிமிட்டால், ஆசையிருந்தும் ஒவ்வொரு முறையும் புத்தகங்களை எடுத்து வரமுடியாமல் போகிறது. கடைசியாக வந்த பொழுது, ஒரு வருடத்திற்கு முன்பு வாங்கிய ‘வெட்டு புலி’யை, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் வீடு வந்து சேரும் வரை வாசித்து வந்தேன்.
புத்தக வாசிப்பு தான் குறைவே தவிர உருப்படாத பல விஷயங்களை இணையத்தில் வாசித்து தான் வருகிறேன். இருந்தாலும், புத்தக வாசிப்பு போல் வருமா? இணையத்தில் குமுதம், ஆனந்த விகடன் என பல புத்தகங்கள் கிடைத்தாலும், ஒன்றிரண்டு நிமிடத்திற்கு மேல் வாசிக்க முடிவதில்லை. ஒருவேளை, கிண்டில், ஐபேட் போன்றவை மூலம் வாசித்தால் நன்றாக இருக்குமோ என்னவோ? அனுபவசாலிகள் சொல்லலாம்.
இங்கு தென்றல் என்றொரு தமிழிதழ் வருகிறது. இந்திய மளிகை கடைகளில் வைத்திருப்பார்கள். இலவசம் தான். இதழ் முழுக்க இந்திய உணவகங்கள், டாக்டர்கள், அர்ச்சகர்கள், வித்வான்கள் விளம்பரங்கள் இருக்கும். நடுவே, கதை, பேட்டி, போட்டி, துணுக்குகள் என ஒரு மாதிரி ஜனரஞ்சகமான புத்தகம். பாராட்டுக்குரிய முயற்சி எனலாம். அதை வாசிப்பதுண்டு.
எங்காவது தமிழ் புத்தகங்கள் வாசிக்கும் ஆர்வமுள்ளவர்களை சந்திக்கும் போது, மிக மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாக இருக்கும். வீட்டிற்கு கூப்பிட்டு, புத்தகங்களை பரிமாறிக்கொள்வோம்.
சமீபத்தில், அப்படி ஒருவர் வீட்டிற்கு சென்று, நான் கொண்டு வந்த புத்தகங்கள் சிலவற்றை கொடுத்து வந்தேன். அவர் பதிலுக்கு ரமணிசந்திரன் நாவல்களை காட்டினார். டெம்ப்ளேட் தெரியும் என்பதாலும், பெரிதாக ஆர்வம் இல்லை என்பதாலும், எப்படியும் கொண்டுவந்தால் சும்மா தான் இருக்கும் என்பதால் எடுத்து வரவில்லை. ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் எழுதிய ‘அந்த பறவைகளிடம் சொல்லுங்கள்’ என்ற ’கதை பொஸ்தக’த்தை மட்டும் எடுத்து வந்தேன்.
வந்த புதிதில், ஆர்வத்தில், ஆங்கில புத்தகங்களை மலிவான விலையில் பார்க்கும் போது வாங்கிவிடுவேன். அது என்னமோ, தெரியவில்லை. ஆங்கிலத்தில் வாசிக்க வேண்டும் என்றாலே கசக்கிறது. முயற்சிக்க வேண்டும்.
நல்ல, எனக்கு பிடித்தமான புத்தகங்களுடனான தொடர்பு கிட்டும்வரை, இதே கதிதான். என்னுடைய இந்த தளத்தில் நான் முன்பு எழுதியதை அவ்வப்போது வாசிப்பேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்? நான் எவ்வளவு காய்ந்து கிடைக்கிறேன் என்று!
.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அன்புள்ள சரவணகுமரன்,
புத்தகங்கள் கிடைக்காமல் மிகவும் காய்ந்து போயிருக்கிறீர்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது.
உங்களுக்குத் தேவையான புத்தகங்களை கலிஃபோர்னியாவிலிருந்து பகிர்ந்து கொள்ளத் தயார்.
on-line மூலம் வாங்கிய (உடுமலை.காம், உயிர்மை.காம், கிழக்குப் பதிப்பகம்) நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன...
வாவ்! நீங்க இப்படி சொன்னதே, மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது.
இதற்காகவே கலிஃபோர்னியாவிற்கு ஒரு ட்ரிப்பை போட தோன்றுகிறது.
இங்கிருந்தே ஆன்லைனில் வாங்குனீர்களா?
அன்புள்ள சரவணகுமரன்,
You are most welcome!!
ஆம். இங்கிருந்து ஆன்லைனில் தான் வாங்கினேன். ஒவ்வொருமுறை இந்தியாவிலிருந்து வரும்போதும் hand baggage முழுக்க books தான்.
தமிழில் கிண்டில். விகடனை கிண்டிலில் வாசிக்க...
http://kindlevikatan.wordpress.com/
Post a Comment