Friday, January 27, 2012

ஆந்திராவில் விஜய்

தெலுங்கு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, அவ்வப்போது தமிழக-ஆந்திர சினிமா விவகாரங்களை பகிர்ந்துக்கொள்வோம்.

தமிழில் வருவதில் பெரும்பாலான படங்கள் தெலுங்கில் சுட சுட டப் செய்யப்பட்டு விடுவதால், அவர்களுக்கு தமிழ்ப்படங்களைப் பற்றி தெரிந்திருக்கும். ஹீரோக்களை பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும்.

ரஜினிக்கும், கமலுக்கும் எப்போதும் அங்கு மார்க்கெட் இருக்கும். தற்போதுள்ள ஹீரோக்களில் சூர்யா, கார்த்தி, ஜீவா ஆகியோருக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது. கஜினிக்கு பிறகு சூர்யாவின் அனைத்துப்படங்களும் தெலுங்கில் டப் செய்யப்படுகிறது. கார்த்திக்கும் அப்படியே. ‘எனக்கு தெலுங்கு ஆடியன்ஸ் தான் பிடிக்கும்’ என்று சொல்லும் அளவுக்கு, இவருக்கு ஆந்திர மார்க்கெட் மீது கண். ’கோ’ தான் சென்ற வருடத்தின் உண்மையான ஹிட் என்றார் ஆந்திர நண்பர். அதற்கு பிறகு, ஜீவா நடித்த எல்லா படங்களையும் டப் செய்து வெளியிட்டுயிருக்கிறார்கள். ஒன்றும் தேறவில்லை. நண்பன் வரை தமிழிலும் அவர் படம் எதுவும் தேறவில்லையே?

விஜய் படங்களோ, அஜித் படங்களோ அங்கு எடுபடுவதில்லை. அஜித்தின் கடைசி சூப்பர் ஹிட்டான ‘மங்காத்தா’, தமிழ் மீடியாக்களில் ஆந்திராவிலும் சூப்பர் ஹிட், சூப்பர் ஹிட் என்று சொல்லிக்கொண்டிருந்த போது, விசாரித்து பார்த்தேன். ப்ளாப் என்றார்கள்.

விஜய் படங்களை நியாயப்படி பார்த்தால் டப்பே செய்யக்கூடாது. முடியாது. எப்படியும் அங்கிருந்து தான், ரீமேக் செய்திருப்பார்கள். இருந்தாலும், சில படங்கள் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுமாம். பார்த்துவிட்டு வந்து காமெடி செய்வார்கள்! (இந்த விஷயத்தில் தற்சமயம் இருக்கும் ஹீரோக்களில், கேரளத்தில் விஜய் தான் முன்னணி)

கீழிருக்கும் இந்த படத்தை கூர்ந்து கவனித்தாலே, விஜய்யின் தற்போதைய தெலுங்கு மாஸ் பற்றி தெரிந்துவிடும்!



அலுவலகத்தில் எங்கள் அணியில் பேசிக்கொண்டிருக்கும் போது, விஜய் பற்றியோ, அவருடைய படங்கள் பற்றியோ பேச்சு வந்தால், ஒருவர் விடாமல் அனைவரும் கிண்டல், நக்கல் என்று இறங்கிவிடுவார்கள். என்னை தவிர. ஆனால், யாருக்கும் நான் விஜய்க்கு ஆதரவாக பேசுகிறேனா, அல்லது, நானும் வேறு மாதிரி நக்கல் செய்கிறேனா என்று தெரியாது. எனக்கும் கூட!

அன்று தெலுங்கு நண்பன் (ஸ்நேகிதுடு) ஆடியோ வெளியீடு பார்த்துவிட்டு, ‘இனி ஆந்திராவில் விஜய்க்கும் ரசிகர் மன்றங்கள் ஆரம்பித்துவிடுவார்கள்’ என்று சொல்லி அவர்களை கடுப்பேற்றிக்கொண்டிருந்தேன். உள்ளுக்குள், “அய்யய்யோ! இதுவும் நடக்குமா?” என்று அவர்கள் நினைத்துக்கொண்டாலும், “ஷங்கருக்காக ஓடினாலும் ஓடலாம்” என்று சொல்லிக்கொண்டார்கள்.

ஜென்டில்மேனுக்கு பிறகு வந்த எல்லா ஷங்கர் படங்களுக்கும், அங்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இதுவரை வந்த எல்லா ஷங்கர் படங்களும், அங்கு சூப்பர் ஹிட். தமிழில் ப்ளாப்பாகிய ‘பாய்ஸ்’ கூட தெலுங்கில் ஹிட். ‘அந்நியன்’ - தமிழை விட தெலுங்கில் பெரிய ஹிட். “முதல் முறையாக ஷங்கர் படம், தெலுங்கில் ப்ளாப்பாக போகிறது. அதுவும் விஜய்யினால்” என்று சொல்லிக்கொண்டார் தெலுங்கு நண்பர். நான் விடுவதாயில்லை. “உங்களுக்கு இன்னொரு மாஸ் ஸ்டார் தமிழ் நாட்டில் இருந்து கிடைத்துவிட்டார். என்ஜாய்” என்று வாழ்த்து தெரிவித்தேன்.

இந்த இடத்தில், இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். தெலுங்கு ஆடியன்ஸின் ரசனை, முழுக்க மாஸ் சம்பந்தப்பட்டது. கார்த்தியின் ‘தெலுங்கு ஆடியன்ஸ் பிடிக்கும்’ பேச்சில் கூட சொல்லியிருந்தார். தெலுங்கு ரசிகர்கள், எல்லா காட்சிகளிலும் கைதட்டி, விசிலடித்து ரசிப்பார்கள் என்று. (நல்லவேளை, கார்த்திக்கு ’பிடிக்குமளவுக்கு’ தமிழ் ரசிகர்கள் நடந்துக்கொள்ளாதது, நல்ல விஷயம் தான்!). நானும் இதுபற்றி, தெலுங்கு நண்பரிடம் ’அப்படியா?’ என்று விசாரித்தப்போது, ‘ஆமாய்யா!’ என்று சலித்துக்கொண்டார். விஜய்காந்த் டாப்பில் இருக்கும் போது, ‘நான் தமிழ் படங்களில் மட்டும் தான் நடிப்பேன்’ என்று சொன்னாலும், அவர் படங்களுக்கு தெலுங்கில் நல்ல மவுஸ் இருந்ததாம். குறிப்பாக, சிறு நகரங்களிலும், கிராமங்களிலும்.

அதனால், விஜய்க்கான ஆந்திரா கதவு எந்நேரமும் திறந்துக்கொள்ள தயாராக இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. தளபதிக்கு தான் அதை தட்டி திறப்பதில் ஆர்வம் இல்லை போலும்! தமிழ்நாட்டு முதல்வரானாலே போதும் என்று நினைக்கிறாரோ என்னமோ! ஆந்திர முதல்வர், இந்திய பிரதமர் போன்ற பதவிகளைப் பற்றியெல்லாம் அவருடைய ரசிகர்கள், எஸ்.ஏ.சந்திரசேகரின் காதில் போட வேண்டும். (அப்படியாவது நாமெல்லாம் தப்பிப்போமா என்று பார்ப்போம்!)

நேற்று காரில் வந்துக்கொண்டிருந்த போது, தெலுங்கு நண்பர் சிரித்துக்கொண்டே சொன்னார். “இன்று ஸ்நேகிதுடு ரிலீஸ் ஆகிறது. ஷங்கர் படங்களிலேயே இதற்கு தான், ஆந்திராவில் எதிர்பார்ப்பு கம்மி. எல்லாம் விஜய்யால்”.

நானும் சிரித்துக்கொண்டே சொன்னேன். “பாருங்க. இன்றையில் இருந்து விஜய்க்கு ஆந்திராவில் எப்படி மாஸ் கூடுதுன்னு பாருங்க”.

பார்க்கலாம். விஜய்யின் ஆந்திர மாஸ் என்னவாகிறது என்று.

.

Tuesday, January 24, 2012

புத்தகங்கள் - ஜனவரி 2012



என் வாழ்க்கையில் புத்தகங்களுக்கு ஒரு முக்கிய இடத்தை கொடுத்திருந்தேன். அலுவலக வேலை, உணவு, உறக்கம் - இவற்றுக்கு பிறகு, புத்தகங்களே முக்கிய இடத்தை ஆக்ரமித்து இருந்தன. இப்போது, நிலைமை மாறிவிட்டது. அலுவலக வேலை, சமையல், உணவு, உறக்கம், இணையம், தொலைபேசி போன்றவற்றுக்கு பிறகு, ஏதோ ஊறுகாய் போல் வாசித்து வருகிறேன்.

இந்தியாவில் இருந்து வரும்போது, மூன்று-நான்கு புத்தகங்கள் எடுத்து வந்திருந்தேன். சென்ற வருட ஆரம்பத்தில் சென்றிருந்த புத்தக கண்காட்சிகளிலும், அவ்வப்போது சென்னை சென்றிருந்த போதும், எக்கச்சக்க புத்தகங்கள் வாங்கியிருந்தேன். எல்லாம் ஊரில் பரணில் தூங்கிக்கொண்டிருக்கிறது.

லக்கேஜ் எடைக்கு இருக்கும் 23 கிலோ என்னும் லிமிட்டால், ஆசையிருந்தும் ஒவ்வொரு முறையும் புத்தகங்களை எடுத்து வரமுடியாமல் போகிறது. கடைசியாக வந்த பொழுது, ஒரு வருடத்திற்கு முன்பு வாங்கிய ‘வெட்டு புலி’யை, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் வீடு வந்து சேரும் வரை வாசித்து வந்தேன்.

புத்தக வாசிப்பு தான் குறைவே தவிர உருப்படாத பல விஷயங்களை இணையத்தில் வாசித்து தான் வருகிறேன். இருந்தாலும், புத்தக வாசிப்பு போல் வருமா? இணையத்தில் குமுதம், ஆனந்த விகடன் என பல புத்தகங்கள் கிடைத்தாலும், ஒன்றிரண்டு நிமிடத்திற்கு மேல் வாசிக்க முடிவதில்லை. ஒருவேளை, கிண்டில், ஐபேட் போன்றவை மூலம் வாசித்தால் நன்றாக இருக்குமோ என்னவோ? அனுபவசாலிகள் சொல்லலாம்.

இங்கு தென்றல் என்றொரு தமிழிதழ் வருகிறது. இந்திய மளிகை கடைகளில் வைத்திருப்பார்கள். இலவசம் தான். இதழ் முழுக்க இந்திய உணவகங்கள், டாக்டர்கள், அர்ச்சகர்கள், வித்வான்கள் விளம்பரங்கள் இருக்கும். நடுவே, கதை, பேட்டி, போட்டி, துணுக்குகள் என ஒரு மாதிரி ஜனரஞ்சகமான புத்தகம். பாராட்டுக்குரிய முயற்சி எனலாம். அதை வாசிப்பதுண்டு.

எங்காவது தமிழ் புத்தகங்கள் வாசிக்கும் ஆர்வமுள்ளவர்களை சந்திக்கும் போது, மிக மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாக இருக்கும். வீட்டிற்கு கூப்பிட்டு, புத்தகங்களை பரிமாறிக்கொள்வோம்.

சமீபத்தில், அப்படி ஒருவர் வீட்டிற்கு சென்று, நான் கொண்டு வந்த புத்தகங்கள் சிலவற்றை கொடுத்து வந்தேன். அவர் பதிலுக்கு ரமணிசந்திரன் நாவல்களை காட்டினார். டெம்ப்ளேட் தெரியும் என்பதாலும், பெரிதாக ஆர்வம் இல்லை என்பதாலும், எப்படியும் கொண்டுவந்தால் சும்மா தான் இருக்கும் என்பதால் எடுத்து வரவில்லை. ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் எழுதிய ‘அந்த பறவைகளிடம் சொல்லுங்கள்’ என்ற ’கதை பொஸ்தக’த்தை மட்டும் எடுத்து வந்தேன்.

வந்த புதிதில், ஆர்வத்தில், ஆங்கில புத்தகங்களை மலிவான விலையில் பார்க்கும் போது வாங்கிவிடுவேன். அது என்னமோ, தெரியவில்லை. ஆங்கிலத்தில் வாசிக்க வேண்டும் என்றாலே கசக்கிறது. முயற்சிக்க வேண்டும்.

நல்ல, எனக்கு பிடித்தமான புத்தகங்களுடனான தொடர்பு கிட்டும்வரை, இதே கதிதான். என்னுடைய இந்த தளத்தில் நான் முன்பு எழுதியதை அவ்வப்போது வாசிப்பேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்? நான் எவ்வளவு காய்ந்து கிடைக்கிறேன் என்று!

.

Monday, January 23, 2012

தலைவரின் மகிமையோ மகிமை!!!

இணைய தொடர்பு இல்லாமல் (மட்டுமே) இயங்கும் தளம்.

இணையத்துடன் இணைத்தால் இயங்க மாட்டேன் என்று அடம் பிடிப்பது, ரவுசோ ரவுசு! :-)

.

Sunday, January 15, 2012

நண்பன்

சென்ற வாரம், ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது, “அடுத்த வாரம் லாங் வீக்-எண்ட்டுக்கு என்ன ப்ளான்?” என்று கேட்டார். வரும் திங்கள்கிழமை விடுமுறை என்பதால், நீளமான வாரயிறுதி. மார்ட்டின் லூதர் கிங் தினமாம். நாம பொங்கலுக்கு என்று நினைத்துக்கொள்ள வேண்டியது தான்.

”ஒன்றும் இல்லை. பொங்கலுக்கு புது படம் பார்க்க வேண்டியது தான்” என்றேன்.

என்ன படம் வருகிறது என்று கேட்டதற்கு, வியாழக்கிழமை “நண்பன்” வருகிறது என்று நான் சொல்ல, அவர் சொன்னார். “அப்ப வெள்ளிக்கிழமை வந்துரும்”.

எனக்கு முதலில் புரியவில்லை. பிறகு, அவர் வெள்ளிக்கிழமை இணையத்தில் வந்துவிடும் என்று கூறியிருக்கிறார் என்று பிடிபட்டது.

சிரித்துக்கொண்டு வந்துவிட்டேன். பிறகு, வியாழக்கிழமை வழக்கம்போல், சில நிகழ்ச்சிகளைப் பார்க்க இணையத்தில் மேய்ந்துக்கொண்டு இருந்தபோது, பெரும்பாலான தளங்கள் அனைத்திலும், முதல் பக்கம் “நண்பன்” இருந்தது.

”அடப்பாவமே! அவராவது வெள்ளிக்கிழமை என்று சொன்னார். இவனுங்க, இவ்ளோ பாஸ்ட்டா இருக்கானுங்களே!” என்று நினைத்துக்கொண்டேன். வார நாட்களில், வேலை இருந்ததால், சனிக்கிழமை செல்லலாம் என்று முடிவு செய்து கொண்டேன். நண்பரிடமும் ‘நெட்ல பாத்து தொலைச்சீராதீங்க!” என்று சொல்லிவிட்டேன்.

ஒரு ஆந்திர நண்பர் சொன்னார். தூக்குடு ரிலீஸான போது, மூன்று வாரங்களுக்கு இணையத்தில் வராமல் பார்த்துக்கொண்டார்களாம். எப்படி என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும், தியேட்டர் செல்லும் ஆர்வம் இருந்தால் தான் செல்வார்கள்.

அது என்னமோ தெரியவில்லை. சிலருக்கு விஜய் என்றால் ரொம்பவும் இளக்காரமாக ஆகிவிட்டது. “நண்பன்” பார்க்க போகலையா? என்றால் விஜய் படத்தை எல்லாம் தியேட்டரில் பார்க்க முடியாது என்கிறார்கள். ஜீவா மட்டும் இருந்தாலாவது பரவாயில்லை என்று அவர் சொன்னதற்கு, இன்னொருவர் வழி சொல்கிறார். ஒரு துண்டு கொண்டு போங்க, விஜய் ஸ்கிரினில் வரும்போது, முகத்தில போட்டுக்கோங்க!!! என்று.



இவர்கள் தான் இப்படி என்றால், இன்னொன்றையும் கண்டேன். நான் பெங்களூரில் இருக்கும் போது, ஒரு லோக்கல் தியேட்டருக்கு தமிழ்ப்படங்கள் காண செல்வேன். அது மல்டிப்பிளக்ஸ் இல்லை என்பதால் லோக்கல் என்றேன். ரொம்பவும் லோக்கல் இல்லை. சென்ற வருடம், அவர்கள் இணையத்தில் டிக்கெட் ரிசர்வ் செய்யும் வசதியை கொடுக்கும் ஒரு தளத்துடன் இணைந்துக்கொண்டார்கள். அத்தியேட்டரில் படம் பார்க்க அத்தளத்தில் டிக்கெட் ரிசர்வ் செய்துக்கொள்ளலாம். நானும் டிக்கெட் எடுத்துவிட்டு எந்நேரமும் செல்லலாம் என்ற வசதியிருப்பதால், அதன் மூலம் டிக்கெட் ரிசர்வ் செய்துவிட்டு செல்வேன். அவர்கள் என்ன செய்வார்கள் என்றால், ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை ஒரு மெயில் அனுப்புவார்கள். இந்த வாரம் என்ன படம் வெளியிடப்போகிறார்கள் என்று. இன்னமும் வந்துக்கொண்டு இருக்கிறது.



இந்த வாரம், நண்பன் படத்தை குறிப்பிட்டு அனுப்பியிருந்தார்கள். ரொம்ப கவனமாக சப்ஜெக்டில், “ஷங்கர் பிலிம் - நண்பன்” என்று குறிப்பிட்டிருந்தார்கள். விவரம் தான் என்று நினைத்துக்கொண்டேன்.

---

இன்று தியேட்டர் சென்ற பிறகு தான் தெரிந்துக்கொண்டேன். வேட்டையும் இங்கு ரிலீஸாகி இருக்கிறது என்று. ஆனாலும், நண்பன் தான் பார்த்தோம். நன்றாக இருந்தது. என்ன தான் ரீமேக் என்றாலும், ஷங்கர் டச் இல்லாமல் இல்லை.



வழக்கம் போல், இங்கு சப்-டைட்டிலுடன் திரையிட்டார்கள். சப்-டைட்டிலை கொஞ்சம் கூட கவனிக்காமல் படம் பார்ப்பது தான் நல்லது. ஏனெனில், சில காட்சிகளில் கதாபாத்திரம் கொஞ்சம் ப்பாஸ் விட்டு சொல்லும் டயலாக்குகள், அவர்களை முந்திக்கொண்டு சப்-டைட்டிலில் வந்துவிடுவதால், புஸ்ஸாகிவிடும் வாய்ப்புகள் இருக்கிறது. கதையே தெரிந்தது தானே என்று நினைத்தாலும், படம் பார்ப்பதில் எந்த சலிப்பும் இல்லை.



இந்த படம், விஜய்க்கு நல்ல பெயரையும், ஹிட்டையும் கொடுக்கும். ஜீவா கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறார் என்றாலும், நல்ல பெயர் கிடைத்துவிடும். (ஆந்திர நண்பர் ஆச்சரியப்பட்டார். எப்படி இந்த கேரக்டரில் நடிக்க ஜீவா ஒத்துக்கொண்டார் என்று. ஏனெனில், சென்ற வருடம் வந்ததில், ஆந்திராவில் பல தெலுங்கு படங்களை விட ‘கோ’, பெரிய வெற்றியாம்). ஸ்ரீகாந்திற்கு பெரிய கேரக்டர். பாராட்டு கிடைக்கும். சத்யனுக்கு வாழ்வு. (சத்யன், இனி கொஞ்சம் கவனமாக பேட்டிக்கொடுக்க வேண்டும். ஒரு இணையத்தள பேட்டியில் ‘துப்பாக்கி’ படத்தின் கதையையும், தான் கிட்டதட்ட செகண்ட் ஹீரோ என்றும் சொல்லியிருக்கிறார்.)



சத்யராஜ், முந்திய ஷங்கர் படங்களில் நடிக்காமல், இதில் நடிக்க ஒத்துக்கொண்டு என்ன சாதித்தார் என்று தெரியவில்லை. ரஜினியிடம் அடி வாங்கணுமா? என்று யோசித்திருப்பார். இதில் ’சிவாஜி ரஜினி போல’ என்று கிண்டல் செய்யப்பட்டிருக்கிறார். இலியானாவை முதலில் பார்த்த போது, சப்பென்று இருந்தது. ஸ்ரீகாந்த், ஜீவா சகோதரியை பார்த்து ஒரு எக்ஸ்ப்ரெஷன் கொடுப்பாரே? அப்படி இருந்தது.



இந்த படத்துடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இது பெரிய படம் என்றால், ஷங்கருக்கு இதுதான் அவருடைய படங்களில் சின்ன படம். ரெஸ்ட் என்று கூட சொல்லிவிடலாம். அதுதான், ஷங்கர்.

மற்றபடி, படத்தை பற்றி நிறைய பேர் நிறைய சொல்லிவிட்டதால், இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். படம் பாத்தாச்சு! அவ்ளோத்தான்.

.

Sunday, January 8, 2012

வழிகாட்டி

நான் எந்த ஊருக்கு சென்றாலும், முதலில் அந்த ஊர் மைய பேருந்து நிலையம் இருக்கும் பகுதியை தெரிந்துக்கொள்வேன். அப்பகுதிக்கு செல்லும் பேருந்துகள் எவை என்பதையும், அங்கிருந்து நான் தங்கியிருக்கும் இடத்திற்கு செல்லும் வழித்தடத்தையும் அறிந்துக்கொள்வேன். பிறகு, நாம் எங்கு வெளியே சுற்றினாலும், எப்படியோ வீடு வந்து சேர்ந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் ஊர் சுற்ற கிளம்பிவிடுவேன்.

அமெரிக்காவில் அந்தளவு பேருந்து போக்குவரத்து இருப்பது இல்லை. டென்வர் பரவாயில்லை, பஸ், ரயில் இரண்டும் இருக்கிறது, கார் இல்லாமல் சமாளிக்க முடிகிறது என்று மற்ற ஊர்களிலிருந்து இங்கு வரும் நண்பர்கள் கூறுவார்கள். இருந்தாலும், எல்லா இடங்களுக்கும் சென்று விட முடியாது. கார் இருந்தால் தான் சுலபம்.

வந்த புதிதில் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். எப்படி நம்மூரில் இருந்து, இங்கு வந்து கார் வாங்கி வைத்திருப்பவர்களால், தெரியாத இடங்களுக்கு செல்ல முடிகிறது என்று. நம்மூர் என்றால் அதற்கு முன்பு பஸ்ஸில், ஆட்டோவில் பல இடங்களுக்கு சென்று பழகி இருப்போம். அல்லது, எங்கு வேண்டுமானாலும் வண்டியை நிறுத்தி வழி கேட்டு செல்லலாம்.

ஆனால், இங்கு அது சாத்தியமில்லை. சாலையில் சும்மா வண்டியை நிறுத்த முடியாது. அதற்கான பார்க்கிங் இடத்தில் நிறுத்த வேண்டும். ஆட்டோக்காரரோ, கடைக்காரரோ யாரும் ரோட்டில் நிற்பதில்லை. அதனால், ஒவ்வொரு இடமாக நிறுத்தி, யாரிடமோ கேட்டு போவது என்பது சாத்தியமில்லாதது. இப்படிப்பட்ட நிலையில், வழி தேடும் வழியை சுலபமாக்குகிறது, ஜிபிஎஸ் நேவிகேட்டர்.



எனக்கு முதலில் இதை பார்த்தப்போது, ரொம்பவும் ஆச்சரியமாக இருந்தது. அமெரிக்கா போன்ற நாடுகள், இந்தியா போன்ற நாடுகளுக்கு சில விஷயங்களில் சில பல ஆண்டுகள் முன்னிலையில் இருக்கிறது என்று கேள்விப்படுவது இதுதான் என்று புரிந்தது.

இந்த வழிகாட்டி கருவியில் நாம் செல்ல வேண்டிய இடத்தின் முகவரியை உள்ளீடு செய்துவிட்டு, ஓட்டுனருக்கு முன்னால் வசதியான இடத்தில் மாற்றிவிட்டு கிளம்பினால், அது பாட்டுக்கு வழி சொல்லிக்கொண்டு வரும். இங்க லெப்ட் திரும்பு, அங்க ரைட்டு திரும்பு என்று.

திரும்புவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பே, அந்த லேனுக்கு மாறுங்க, இந்த லேனுக்கு மாறுங்க என்றும் சொல்லிவிடும். இது தவிர, ஒரு இடத்தில் நின்றுக்கொண்டு, அந்த இடத்திற்கு பக்கத்தில் இருக்கும் டூரிஸ்ட் ஸ்பாட்கள் என்ன, உணவகங்கள் என்ன, பெட்ரோல் பங்க்குகள் என்ன என்று அனைத்தையும் தெரிந்துக்கொள்ளலாம்.

எப்படி கால்குலேட்டர் உபயோகிப்பவர்கள், மனக்கணக்கு போட கஷ்டப்படுவார்களோ, அது போல, இதை பயன்படுத்தி பழக்கப்பட்டவர்கள், வழிகளை நினைவில் வைத்துக்கொள்ள சிரமப்படுவார்கள்.

இது எப்படி வேலை செய்கிறது என்பதை விருப்பமிருந்தால், இணையத்தில் தேடி தெரிந்துக்கொள்ளுங்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இது இதற்கென வானத்தில் வட்டமடித்து கொண்டிருக்கும் சில சாட்டிலைட்டிகளை தொடர்பு கொண்டு, நாம் இருக்கும் இடத்தை தெரிந்து வைத்துக்கொண்டு, கருவியில் இருக்கும் மேப்பில் படமாக காட்டும். இத்தகவல்களைக் கொண்டு நாம் எங்கிருக்கிறோம், நாம் செல்ல வேண்டிய இடம் எங்கிருக்கிறது, எவ்வளவு தொலைவில் இருக்கிறது, சென்று சேர எவ்வளவு நேரமாகும் என்று அனைத்து தகவல்களையும் கணித்து போக போக சொல்லிக்கொண்டே வரும்.

இது போன்ற அம்சங்கள், இப்பொழுது நம் செல்போன்களிலேயே இருந்தாலும், இதனுடனான முக்கிய வேறுபாடு. செல்போன் வழிகாட்டிகள், நமது போனுக்கான டேடா ப்ளானின் உதவியால் செயல்படுவது. செல்போன் சிக்னல் இல்லையென்றால், அதோ கதிதான். ஆனால், ஜிபிஎஸ் வழிகாட்டிகள் சாட்டிலைட்டின் உதவியால் செயல்படுவதால், வானம் தெரிந்தால் போதும். வழிகாட்டும். (ஆமாம். வீட்டிற்குள் வேலை செய்யாது. வீட்டிற்குள் வழி தேட, நாமென்ன அம்பானி போலா வீடு கட்டியிருக்கிறோம்?)

இக்கருவியின் விலையும் அதிகமில்லை. நூறு டாலர்களுக்குள் நல்ல கருவிகள் கிடைக்கின்றன. முதல் முறை, ஒருமுறை செலவு தான். பிறகு, ஏதும் செலவழிக்க தேவையில்லை. அவ்வப்போது, நமது கணினியுடன் இணைத்து, இணையத்தில் இருந்து புதிய மேம்படுத்தப்பட்ட மேப்களை தரவிறக்கிக்கொள்ளலாம்.

நமது நாட்டிலும் இவை கிடைக்கிறது என்றாலும், இங்கிருக்கும் அளவுக்கு துல்லியமாக காட்டாது என்று நினைக்கிறேன். ஏனெனில், இங்கு ஒரு வீடோ, அலுவலகமோ, அந்த இடத்தின் முகவரியை குறிக்க, ஒரு எண், ஒரு தெரு பெயர், ஊர் பெயர், சிப் கோட் என்றழைக்கப்படும் பின் கோட் என நான்கு விவரங்கள் தெரிந்தால் போதும். இவை அமெரிக்கா முழுமைக்கும் நிலையானது. நமது ஊர் போல, பழைய எண், புதிய எண், அதில் பார் போன்ற ஸ்பெஷல் கேரக்டர்கள், நம்பர் எழுத்து கலவைகள், இத்தனையாவது மெயின் ரோடு, இத்தனையாவது தெரு, இத்தனையாவது குறுக்கு சந்து என்று கிடையாது. அனைத்து முகவரிகளும் நிலையாக நான்கு வரிகள் தான் இருக்கும்.

இதனால் முகவரிகளையும், அதிருக்கும் இடத்தையும் மென்பொருள் மூலம் வசப்படுத்துவது சுலபம். கூகிள் மேப்பில் எந்த அட்ரஸை அடித்தாலும், சரியாக அந்த இடத்தை காட்டும். இணைய மேப்கள் மூலம் அமெரிக்காவில் இருக்கும் எந்த நண்பரது வீட்டின் வாஸ்துவையும் தெரிந்துக்கொள்ளலாம்.

இந்தியாவில் இது சாத்தியமில்லை என்று சொல்ல முடியாது. இவ்வளவு துல்லியம் வர, கொஞ்சம் நாளாகும். நிறைய தகவல்கள் சேகரித்து, முறைப்படுத்தப்பட வேண்டும். மென்பொருட்களுக்கு இன்னும் புத்திக்கூர்மையை செலுத்த வேண்டும்.

இந்தியாவில் வழிக்காட்டிகளுக்கு வழி பிறக்காமலா போகும்?

.

நாட்டு சரக்கு - உலக சரக்கு

முன்பு ’நாட்டு சரக்கு’ என்றொரு வகையில் பதிவு எழுதிகள் வந்தேன். கிட்டத்தட்ட வாரமலர் ‘பாகேப’ டைப் பதிவுகள். பெரும்பாலும் நான் வாசித்த சுவாரஸ்யமான விஷயங்களாக இருக்கும். பதிவை வாசிக்கும் நண்பர்கள் நன்றாக இருப்பதாக சொன்னாலும், ‘எல்லோரும் பேப்பரில், இணையத்தில் வாசிக்கும் விஷயங்கள் தானே? இதில் என்ன இருக்கிறது’ என தோன்றி அதை எழுதுவதை நிறுத்திவிட்டேன்.

இப்போது பழைய பதிவுகளை வாசிக்கும் போது, குறிப்பாக நாட்டு சரக்கு பதிவுகள் மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதாக தோன்றுகிறது. அதனால், அவ்வகை பதிவுகளை திரும்பவும் எழுதலாம் என்று இருக்கிறேன். ஒன்றரை வருடங்களுக்கு பிறகு, மீண்டும் நாட்டு சரக்கு.

இப்ப உள்ளூர் சரக்கும், உலக சரக்கும் மிக்சிங்கில். கிக்காக இருக்கும் என்ற நம்பிக்கையில்.

----

எனக்கு சீனர்களையும், ஜப்பானியர்களையும் பார்க்கும் போது, பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியாது. அப்படித்தான் பலருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், சீனர்களிடம் போய் நீங்க ஜப்பானா? என்றோ, நீங்க ஜப்பானியர் மாதிரி இருக்கீங்க! என்றோ சொன்னால், அவர்களுக்கு பிடிக்காதாம்.

இப்படி இருக்கையில், எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர், ஒரு சீனரிடம் கேட்டாராம்.

“உங்களுக்கெல்லாம் கண் சின்னதாக இருக்கிறதே? எங்களைப் போல முழுவதும் தெரியுமா? இல்ல, பாதி தான் தெரியுமா?”

எப்படி இருந்திருக்கும்? டோங்க்லீ மாதிரி முறைத்ததில் ஓடி வந்துவிட்டாராம்.

---

’கொலவெறி’ இளையத்தலைமுறைக்கு பிடித்திருந்தாலும், போன தலைமுறை கலைஞர்களுக்கு பிடிப்பதில்லை என்று தெரிகிறது. இந்தி பாடலாசிரியர் ஜாவத் அக்தர் பாடலை முன்பு விமர்சித்திருந்தார். (அனிருத், அவர் கேட்டதே எங்களுக்கு கௌரவம் என்றார்.) இப்போது, பாடகர் ஜெயசந்திரன் ஒரு பாட்டு போட்டி நிகழ்ச்சியின் போது, போட்டியாளர் ஒருவர் அப்பாடலை பாட, எழுந்து வெளியே சென்று விட்டார்.

ரொம்ப பீல் பண்ணி எழுதுறவுங்களுக்கு, பாடுபவர்களுக்கு, இப்படி ’ஜஸ்ட் லைட் தட்’ எழுதி, பாடி, பிறகு அதற்காக பிரதமர் கூட போய் டின்னர் சாப்பிட்டுட்டு வந்தா, கஷ்டமாக தான் இருக்கும்.

---

ஆனால், அதற்கான பிராயசித்தம், 3 படத்தின் மற்ற பாடல்களில் இருக்கிறது. இந்த படத்தில் இருக்கும் மற்ற பாடல்களின் வரிகளில், இசையில் ஏன் ‘கண்ணழகா’ பாடலில் இருக்கும் தனுஷின் குரலில் கூட எந்த குறையையும் காண முடியாது.

So, they deserve it என்றே எனக்கு தோன்றுகிறது.

---

இதை இங்குள்ள ஒரு காரில் பார்த்தேன். என்ன தான், இது பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், இந்த ஸ்டிக்கரையும், அந்த காரில் இருந்த பெண்ணையும் பார்த்த போது, உணர்வு ரீதியாக புரிந்துக்கொள்ள முடிந்தது.



---

என்ன தான் அமெரிக்கர்கள் ராக்கெட் விட்டாலும், பாதாள சாக்கடை மூடிகளை நம்மூரில் இருந்து தான் வாங்குகிறார்கள். இதை பல இடங்களில் பார்த்தேன்.



நம்ம ஊர் தான் சீப்பாக இருக்கும் போல. இருக்காதா பின்ன? நம் நாட்டு வளங்கள் முறையில்லாத வழிகளில் தானே, வெட்டியெடுக்கப்படுகிறது? சீப்பாக தான் இருக்கும்.

---

இன்னொன்று கேள்விப்பட்டேன். அமெரிக்காவில் வளங்கள் இல்லாமல் இல்லை. ஆனால், காசு கொஞ்சம் அதிகம் செலவானாலும், அவர்கள் இறக்குமதியே செய்வார்களாம்.

இங்கிருக்கும் அனைத்து வீடுகளும் மரத்தினாலேயே கட்டப்பட்டிருக்கும். அந்த மரங்கள், இங்கு நிறைய காடுகள் இருந்தாலும், வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுமாம். உள்ளூர் சுற்றுசூழலை பாதுகாக்க, இந்த ஏற்பாடாம். கேள்விப்பட்ட செய்தி. எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.

---

போன பதிவில் இருக்கும் வீடியோவை யூ-ட்யூபில் அப்லோட் செய்த பிறகு, யூ-ட்யூபில் இருந்து ஒரு மெயில் வந்தது. 'உங்கள் வீடியோவில் சோனி நிறுவனத்திற்கு சொந்தமான படைப்பு இருப்பதாக தெரிகிறது’ என்று. என்னங்கடா, நான் ஊரு சுத்துன வீடியோவில் சோனிக்கு என்ன சம்பந்தம்?

அப்புறம் தான் தோன்றியது. அந்த வீடியோ பின்னணியில் காரில் இசைக்கப்படும் ‘வேலாயுதம் - மாயம் செய்தாயோ’ பாடல் இருக்கிறது. வேலாயுதம் பட பாடல்கள், சோனியால் வெளியிடப்பட்டது.

இது யூ-ட்யூபின் மென்பொருளால் கவனிக்கப்பட்டு, எனக்கு மெயில் அனுப்பப்பட்டு இருக்கிறது. இதுதான் விஷயம் என்றால், ரொம்ப ஆச்சரியப்படுத்தும் தொழில்நுட்பம் எனலாம்.

.

Saturday, January 7, 2012

புத்தாண்டின் முதல் பயணம் - ஐஸ் ஏரி

புத்தாண்டுக்கு ஒன்றும் ஸ்பெஷலாக செய்யவில்லை (அட, கேசரிக்கூட செய்யவில்லையா? என்று கேட்காதீர்கள்). இங்கு புத்தாண்டுக்கு ஊருக்குள் விசேஷமாக வாண வேடிக்கை காட்டுவார்கள் என்று சொன்னார்கள். ஆனால், ரொம்ப எதிர்பார்த்து செல்லாதே என்றும் சொன்னார்கள். அங்கு சென்று, அந்த சமயத்தில் ஷூ லேஸ் அவிழ்ந்து அதை மாட்ட குனிந்தால், அந்த சமயத்திற்குள் வாண வேடிக்கை முடிந்து விடும் அளவிற்கு சுருக்கமானது அது என்று காமெடியாக சொல்லியிருந்தார்கள். அதனால், அங்கு செல்லும் ஆர்வமும் இல்லை.

ஒரு மாலுக்கு இரவு ஏழு மணிவாக்கில் சென்றோம். கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன. எங்களைப்போல் வெகு சிலரே வந்திருந்தார்கள். சாலைகளிலும் அதிக போக்குவரத்து இல்லை. நம்மை போல் இல்லாமல், இங்கு ரொம்ப அமைதியாக யாருக்கும் தெரியாமல், புது வருஷத்தை கொண்டாடுகிறார்கள்.

---

அடுத்த நாள், இரண்டாம் தேதி எனக்கு விடுமுறை. மெதுவாக எழுந்து, வீட்டிற்கு போன் செய்து, தோசை சுட்டு சாப்பிட்டு கொண்டிருந்தேன். அலுவலகம் சென்ற நண்பர் போன் செய்தார். “ரொம்ப கடமையுணர்ச்சியோடு ஆபிஸ் வந்து பார்த்தா, யாரும் இல்லை. விசாரிச்சா, எங்களுக்கும் இன்னைக்கு லீவாம். முத நாளே, இப்படி பல்ப். வாங்க, எங்காச்சும் வெளியே போகலாம்” என்றார்.

---

எங்கு செல்லலாம் என்று தெரியாமலே, வெளியே கிளம்பினோம். பனி சறுக்கு செல்ல (அதாவது வேடிக்கை பார்க்க!!!) ஆர்வம் மற்றும் திட்டம் இருந்தாலும், பாதி நாள் ஆகிவிட்டதால், இம்முறை வேறு எங்காவது செல்லலாம் என்று கிளம்பினோம்.

ஊரை கடந்து வெளியே வந்தவுடன், சுற்றி தெரியும் மலைத்தொடர்களைப் பார்க்க அழகாக இருக்கும். இந்த வீடியோவைப் பாருங்கள். புரியும்.



’இதாஹோ ஸ்பிரிங்க்ஸ்’ என்ற இடத்திற்கு எதற்கு சென்றோம் என்றே தெரியவில்லை. இது மலையின் இடையில் இருக்கும் ஒரு பழைய ஊர்.



சின்ன ஊர்தான். ஒரு கடை தெரு இருந்தது. கார் நிறுத்த இடம் கிடைக்காமல், சுற்றி சுற்றி வந்து, ஒரு வழியாக எங்கோ நிறுத்தி, அங்கு இருந்த ஒரே ஒரு தெருவான கடைத்தெருவில் இங்கிட்டும் அங்கிட்டும் ஒரு நடை நடந்தோம்.



இங்கிருந்த ஒரு ஓடையில் நீர் ஐஸ்கட்டியாகி, நடுவில் மட்டும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது.



ஒரு சிறு நீர்வீழ்ச்சி, உறைந்துப்போய் நின்றிருந்தது.



அதற்கு மேல் அங்கு பார்க்க ஒன்றும் இல்லாததால், அங்கிருந்து அரை மணி தூரத்தில் இருக்கும் ஒரு ஏரி பூங்காவிற்கு சென்றோம்.

ஏரியும், ஏரிக்கு செல்லும் வழியும் பனியாக இருந்தது. கடைசியாக பனி பெய்து, இரு வாரங்கள் ஆனாலும், தினம் சூரியன் வந்து சென்றாலும், பனி அப்படியே தான் இருக்கிறது.





ஏரி முழுக்க ஐஸ் கட்டியாக இருந்தது பார்க்க அழகாக, ஆச்சரியமாக இருந்தது. அதன் மேல், ஏறி நடக்க பயமாகவும் இருந்தது (எத்தனை இங்கிலிஷ் படம் பார்த்திருக்கோம்?!).



இதிலும் ஒருவர் வந்து மீன் பிடித்துக்கொண்டிருந்தார்.



இங்கு மீன் பிடிப்பது வெறும் பொழுதுபோக்கு. பல உபகரணங்கள் கொண்டு வந்து, ரொம்ப பொறுமையாக பல மணி நேரம் மீன் சிக்கும் வரை இருந்து, பின் மீன் சிக்கிய பிறகு, அதை பார்த்துவிட்டு, மீண்டும் தண்ணீரிலேயே எறிந்துவிட்டு சென்றுவிடுவார்கள்!



சூரியன் இருக்கும் வரை தான் இருக்க முடிந்தது. சூரியன் மறைந்தவுடன் குளிர் ஆட்ட தொடங்கியதால், கிளம்பி வீடு வந்து சேர்ந்தோம்.

பின்குறிப்பு - வீடியோக்களின் பின்னணியில் விஜய் பாடல்கள் கேட்பது தற்செயலான நிகழ்வே. அனைத்து வித யூகங்களையும் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

.