Thursday, December 29, 2011

கேமரா ஜூம்

ஒருமுறை இங்கிருக்கும் ராக்கி மலைத்தொடருக்கு சென்றிருந்த போது, டிரைவர் போகும்வழியில் பஸ்ஸை நிறுத்தி எல்லோரையும் கீழே இறக்கிறார். அங்கு தூரத்தில் தெரிந்த காட்டு மான்களை காட்டினார்.

உடன் வந்த பயணிகள் அனைவரும், அந்த மான்களுக்கு ஏதோ டைனோசர் லெவலுக்கு பில்டப் கொடுத்து பார்த்தார்கள். தூரத்தில் தெரிந்த அந்த மான்களை, போட்டோ வேறு எடுத்துக்கொண்டார்கள்.

நானும் முயற்சி செய்தேன். முடியவில்லை. நம்ம கேமராவுக்கு அந்தளவுக்கு திறமையில்லை. அப்போது முடிவு செய்துக்கொண்டேன். அடுத்தது, சூப்பர் ஜூம் கேமரா தான் வாங்க வேண்டும் என்று.

இந்த கேமரா நன்றாக இருக்க, அடுத்த கேமரா எப்போது வாங்குவோமோ? என்று நினைத்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்தேன். நாம எப்போதும் தேய தேய ஒரு பொருளை தேய்ஞ்ச பிறகுதான் அடுத்தத வாங்குற ஆளு!!!

அந்த பயணத்தின் போதே, மனைவி பனியை கண்ட ஆர்வக்கோளாறில், ஒரு உருண்டைப்பிடித்து, ஆசையாக என் மீது எறிய, அது கேமராவில் பட்டு, கேமரா உயிரைவிட, என் ஆசை நிறைவேறியது. உயிர் விட்டது என்றால், ஒரேடியாக விடவில்லை. எடுக்கும் படங்களில் எல்லாம் குறுக்கே கோடுகள்.

அது தான் என்னுடைய முதல் கேமரா. ஆயிரக்கணக்கில் புகைப்படங்கள் எடுத்து தள்ளிய கேமரா. கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், இன்னொரு கேமரா வாங்கும் வாய்ப்பு கிடைத்ததால், சமாதானம் ஆனேன்.

இதுதான் புது கேமரா வாங்குவதற்கான காரண காரியம் நிகழ்ந்த சம்பவம்.

இதையடுத்து, சமீபத்தில் Canon SX 40 வாங்கினேன். எதிர்பார்த்த விஷயம், பிடித்த விஷயம், இதிலுள்ள ஜூம் தான்.

சமீபத்தில் எடுத்த இந்த வீடியோ, இதை விளக்கும்.



யூ-ட்யூபில் இது போல் பல வீடியோக்கள் காணக்கிடைக்கிறது. நிலாவைக்கூட ஜூம் செய்து போட்டிருக்கிறார்கள். வடை சுட்ட பாட்டியைத்தான் தெரியவில்லை!

.

2 comments:

ராமலக்ஷ்மி said...

புதிய கேமராவுக்கு வாழ்த்துகள். நிறைய படங்கள் எடுக்கவும்:)!

வடை சுடும் பாட்டி இங்கே தெரிகிறாரா பாருங்க:http://www.flickr.com/photos/ramalakshmi_rajan/5540110895/in/set-72157607054520624

தொடர்ந்து முயன்றிடுங்கள். கண்டிப்பாகப் பாட்டி காட்சி தருவார்:)!

சரவணகுமரன் said...

ராமலக்ஷ்மி, படம் செமையா இருக்குங்க...