எங்கள் அலுவலகத்தில் மாதமொரு நடக்கும் ஒரு மீட்டிங்கில், எல்லோரையும் பேச விட, முதலில் ஒரு கேள்வி கேட்பார்கள். அதற்கு அனைவரும் பதில் சொல்ல வேண்டும். ஒருமுறை பிடித்த திரைப்படம் எது என்று கேட்டார்கள். அமெரிக்கர்களும், பெரும்பாலான இந்தியர்களும் பல ஆங்கில படங்களை கூறினார்கள். ஒரு ஆந்திரக்காரர் மட்டும் சக்தே இந்தியா என்றார். என் முறை வருவதற்கு முன்பே யோசித்துக்கொண்டிருந்தேன். நமக்கு பிடித்த படம் எது? நிறைய இருக்கிறது. எதை சொல்ல?
முறை வந்தது. ‘நான் இந்திய படங்களையே அதிகம் பார்க்கிறேன். இந்திய நடிகர் ரஜினிகாந்த் நடித்த பல படங்கள் எனக்கு பிடித்த படங்கள்’. நிறைய பேருக்கு ரஜினி பற்றி தெரிந்திருந்தது. புன்னகைத்தார்கள். இன்னொரு முறை, பிடித்த ஸ்வீட் பற்றி கேட்டார்கள். குலோப் ஜாமூன் என்றேன். அடுத்த முறை, பிடித்த இடம் பற்றி கேட்டார்கள். எனக்கு ஜில்லென்று இருக்கும் எல்லா இடங்களும் பிடிக்கும் என்றேன். உதாரணத்திற்கு இந்தியாவில் ஊட்டி என்றேன்.
இது அனைத்துமே என் மனத்திற்கு முதலில் தோன்றிய பதில்கள். இதுதான் உண்மையானதும் என்பது என் நம்பிக்கை.
தென் தமிழகத்தின் கடலோரப்பகுதியில் பிறந்து வளர்ந்த எனக்கு குளிர்ச்சி என்றாலே மகிழ்ச்சி தான். வெக்கை வாடிக்கையானது. எங்காவது குளிரான இடத்திற்கு போக மாட்டோமா? என்று இருக்கும். அதனாலேயே ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்கள் பிடிக்கும். சிறுவயதில் ஊட்டி, கொடைக்கானலில் ஜஸ் மலை இருக்கும் என்று சொல்வதை கேட்டு நம்பி ஏமாந்திருக்கிறேன். இமயமலை போவதை ஒரு பெரிய லட்சியக்கனவாகக்கூட வைத்திருந்தேன்.
அந்த மீட்டிங்கில் நான் அப்படி சொன்னதை கேட்டதும், ஒருவர் கேட்டார். ‘நீ டென்வரில் குளிர்காலத்தில் இருந்தது இல்லையே?’ என்று. ‘இருக்குடி மவனே உனக்கு’ என்ற டோனில்.

இருந்தாலும் நாம் இதை என்ஜாய் செய்வோம் என்று உறுதியாக நம்பினேன்.
---
டென்வர் வந்த புதிதில், தூரத்தில் தெரியும் ஒரு பனிமலையைப் பார்க்கும்பொழுதெல்லாம் ரொம்ப மகிழ்வாக இருக்கும். அப்போது ஒருமுறை என் மேனேஜருடன் இந்த ஊரில் சுற்றிப்பார்க்கும் இடங்களைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, என்னுடைய கேள்வி - பனிமலையை பற்றியே இருந்தது. அவர் அதற்கு சலிப்புடன், குளிர்காலத்தில் ஊர் முழுக்க பனியாகத்தான் இருக்கும். பாத்துக்க என்றார்.
---
இதோ குளிர்காலம் வந்துவிட்டது. நேற்று மூன்றாவது முறையாக பனி பெய்தது. ஊர் முழுக்க படர்ந்திருக்கும் வெளீர் பனியை பார்க்கும்போது, நான் பார்க்க நினைத்த சொர்க்கபூமியை பார்த்துவிட்ட உணர்வு வருகிறது.

முதல் இருமுறை ’பனி பெய்தால் அலுவலகம் வர வேண்டாம்’ என்று முந்திய நாளே சொல்லிவிட்டார்கள். நம்மூர் போல் இல்லாமல், ஒரளவுக்கு வானிலை அறிக்கையில் சொல்வது போல், வெயில் அடிக்கிறது. மழை பெய்கிறது. பனி பொழிகிறது. (எத்தனை இன்ச் பனி பெய்யும் என்று குறிப்பிடுவார்கள்.) இம்முறை பனி பெய்துக்கொண்டிருந்தபோதே, காரில் அலுவலகம் சென்றோம். நல்ல அனுபவமாக இருந்தது. இம்மாதிரி நேரங்களில் வீட்டிலிருந்தே வேலையை பார்ப்பது உசிதம் என்று புரிந்துக்கொண்டேன்.

இந்த ஊரில் வெயில் கூட கூட மகிழ்ச்சி கூடுகிறது. ஏனென்றால், அப்பொழுது தான் அவர்களால் வெளியே செல்ல முடிகிறது. அரசாங்கத்தால் மரமாத்து வேலைகளை அப்பொழுதுதான் செய்ய முடிகிறது.

குளிர்காலத்தில் இவர்கள் படும் அவஸ்தை இப்பொழுதுதான் புரிகிறது. பனி பொழிந்து, பாதை வழுக்கிறது. நடந்தால் கால் வழுக்கும். ஓட்டினால் கார் வழுக்கும். ஒரு இடம் போய் சேர்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. கார் டயர் தேய்ந்துபோய் இருந்தால், அவ்வளவுதான். அங்கிங்கு என்று நம் பேச்சைக் கேட்காமல், நம்மை இழுத்துக்கொண்டு செல்லும். டேன்ஜர்தான்.
---
இந்த ஊரில் பனிசறுக்கு பிரபலம். அமெரிக்காவின் பல இடங்களில் இருந்து, இங்கு வந்து சறுக்குவார்கள். நாங்களும் செல்லலாம் என்று இருக்கிறோம். அலுவலகத்தில் அவ்வப்போது பேசிக்கொள்வோம்.
இந்த வாரம், அடுத்த வாரம் என்று சென்றுக்கொண்டு இருக்கிறது. நேற்று ஆபிஸ் வந்த நண்பர், ‘நான் சறுக்கினேன்’ என்றார்.
நாங்க என்னடா நம்மிடம் இந்தாளு சொல்லாமல் கொல்லாமல் சென்று விட்டாரே? என்று ‘எப்ப பாஸு?’ என்றோம்.
‘அட போங்க பாஸூ. வீட்டுக்கிட்ட வழுக்கி விழுந்துட்டேன்’ என்றார் பாவமாக.
‘இதுக்குன்னு ஏதோ ஷூ இருக்குன்னு சொன்னாங்களே?’
‘அத போட்டுக்கிட்டு தான் விழுந்தேன்’
‘அப்புறம்?’
‘அப்புறம் என்ன? யாராவது பார்த்தாங்களா’ன்னு சுத்திமுத்தி பார்த்தேன். யாரும் இல்லை. தட்டிவிட்டுக்கிட்டு எந்திரிச்சிட்டேன்.’

அதனால இது ஒரு பிரச்சினை. எங்க சறுக்கும்’ன்னே தெரியாது. பனி அப்படியே உறைந்து, தரையோடு ஜஸ்ஸாகி, சரிவான பகுதியில் நன்றாக வழுக்கும். பிடிக்க ஏதும் இல்லையென்றால், அரோகரா தான்.
---
என்ன இருந்தாலும், ஜஸ் இன்னும் பிடித்தமானதாகவே இருக்கிறது. தேவதைகளுக்கு நம்மூர் இயக்குனர்கள் வெள்ளை உடை அணியவிடுவார்கள். குளிர்காலத்தில் இந்த ஊரும் வெள்ளை உடையணிந்துக்கொண்டு, ஒரு தெய்வீக லுக்குடன் தான் இருக்கிறது. வாகனங்கள் செல்லும் பாதைகளில் தான், ஒருமாதிரி புறக்கணிக்கப்பட்ட நிலையில் கருமையாக சாலைகளில் பனி அலைக்கழிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.

குளிர் 20-25 பாரான்ஹூட் என்று காட்டும். யோசித்து பார்த்தால் தான், நாம் மைனஸ் டிகிரியில் இருக்கிறோம் என்று புரியும்.

எனக்கு தெரிந்து எல்லோருமே, இங்கு பனி என்றால் ஒருவித சலிப்புடன்தான் இருக்கிறார்கள். நான் தான் நடுங்கிக்கொண்டு இருந்தாலும், ஒருவித குதூகலத்துடனேயே சுற்றிக்கொண்டு இருக்கிறேன்.
---
குறிப்பு: புகைப்படங்கள் ஓடும் காரில், மொபைலில் எடுத்தது. சுமாராகத்தான் இருக்கும்.
வந்த புதிதில் இங்கிருக்கும் ராக்கி மவுண்டெயின் சென்றபோது எடுத்த வீடியோ. அது கோடைகாலம். இப்ப குளிர்காலத்தில் அந்த பாதையை மூடிவிடுவார்கள் என்று கேள்விப்பட்டேன். பஸ் ஓட்டுனர் போகும்பாதையை விளக்கிகொண்டு வந்தார். அவர் வாய்ஸ் இருக்கும்.
.
5 comments:
பனி பார்க்க போன ஏப்ரலில் ஜம்மு,ஸ்ரீநகர் போனதை நினைந்துக் கொண்டே படித்தேன்.குளிர் அடிக்கிறது.
enakkum, unkalai pondru, pani prathesathil, irukka vendum endra unarvu athigam undu. unkalukku, vaippu kidaithathu, anubavikeergal, naan antha vaippai thedi kondu irukindren. naanum tamilnandin then kadalodia nagarpurathil vasipavan, thoothukudi. kama, somannu thangal pathivu irunthalum, padika suvarasiyamaga irukirathu. endendrum anbudan, subramanian.
subramaniyan eluthiya karuthu kidaithatha,
வாங்க அமுதா கிருஷ்ணா
பதிவை பற்றிய உங்கள் விமர்சனத்திற்கு நன்றி சுப்ரமணியன்
Post a Comment