Wednesday, November 9, 2011

கிப்ட் கொடுத்த அந்த வள்ளல் யாரு?

போன பதிவில் ஓசி என்பதால் ஆர்ட் மியூசியம் சென்று வந்தேன் என்று கூறியிருந்தேன் அல்லவா? அதை பற்றி சொல்ல ஒரு விஷயம் இருக்கிறது.



போரடிக்கிறது என்பதாலும், அனுமதி இலவசம் என்பதாலும், ஒரு ஆர்வ கோளாறில் சென்று விட்டோம். ஆனால், அங்கு இருக்கும் ஓவியங்களையோ, சிலைகளையோ முழுவதுமாக பொறுமையாக நின்று பார்க்கும் ஆர்வமில்லை. மொத்தம் ஏழு மாடிகள். ஆறாவது மாடியில் இருந்த போது, ‘ஹைய்யா! இன்னும் ஒரு மாடி தான்’ என்று மகிழ்ச்சியில் கூறிகொண்டோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.



ஒவ்வொரு தளமும் ஒவ்வொரு ரகம். எங்களை கவர்ந்தது ஆசிய கலை பொருட்கள் இருந்த தளம் தான். ஏனெனில் அங்கு தான் இந்திய கலை சிற்பங்கள், ஓவியங்கள் இருந்தன. இந்த பதிவு அதை பற்றி தான்.

நாங்கள் இங்கு வருவதற்கு முன்பே, மற்ற தளங்களில் இருந்த சில சிலைகளைப் பார்த்து, ‘இதில் என்ன இருக்கிறது? நம்ம ஊரில் இருக்கும் ஒரு சாதாரண கோவிலிலேயே எப்படிப்பட்ட சிலைகள் இருக்கிறது?’ என்று சொல்லிக்கொண்டு வந்தோம்.

நம்மூர் ஐட்டங்கள்(!) இருந்த தளத்தில் எல்லாம் சாமி சிலைகள், ஓவியங்கள், கோவில் கதவுகள். எந்த ஊர் கோவிலில் இருந்தோ பெயர்த்துக்கொண்டு வந்தது போல் இருந்தது.

ஒவ்வொரு சிலைக்கும் கீழே, அந்த சிலையைப் பற்றிய குறிப்புகள் இருந்தது. எந்த சாமி, எந்த ஊர் சிலை, யார் கொடுத்தது என்று. இதோ நீங்களே பாருங்கள்,



























சில வள்ளல்கள் அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார்கள். வள்ளல்கள், நம்மூர் சிற்பிகளிடம் ஆர்டர் கொடுத்து செய்திருப்பார்களோ? பார்த்தால், அப்படி தெரியவில்லையே!!!

அதிலும் சிலவற்றை அனானிகள் கொடுத்திருக்கிறார்கள். எப்படி மியூசியம் வாசலில் வைத்துவிட்டு பெயர் சொல்லாமல் போய்விட்டார்களோ? இல்லை, எதற்கு இந்த பெருமை என்று தன்னடக்கத்துடன் பெயர் போட வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களோ?

எனக்கென்னமோ, எதை பார்த்தாலும், எங்கோ ஆட்டையைப் போட்டு வந்தது போல் தோன்றியது. எப்படி இருந்தாலும், நல்லா இருந்தா சரி. எங்கிருந்தாலும் வாழ்க! (அப்படி நாமே வைத்திருந்தாலும் நல்லா பராமரிச்சு இருப்போம் பாருங்க?!!!)


---

அடுத்த அறையில் சீன சிற்பங்களும், ஓவியங்களும் இருந்தது. ஒன்றைத் தேடி அலைந்தேன். ம்ஹூம்.

அங்கு போதிதர்மர் இல்லவே இல்லை. :-(

பாருங்க, சீனர்கள் போதிதர்மரை எப்படி பாதுகாக்கிறார்கள் என்று?

.

Sunday, November 6, 2011

நூலகம் போகத்தான் வேண்டுமா?

நூலகம் செல்வது எனக்கு பிடித்த விஷயம். என்னை பொறுத்தவரை, அது மலரும் நினைவுகளாகிப் போன விஷயம். நூலக அனுபவங்களை ஏற்கனவே இங்கு பதிந்திருக்கிறேன்.

டென்வரில் சந்திந்த சில இந்திய நண்பர்கள், என்னிடம் இங்கிருக்கும் லைப்ரரிக்கு போய் வர சொல்வதுண்டு. நான் ஆர்வம் காட்டாமல் இருந்தேன். சில காரணங்கள் - பஸ் பிடித்து சென்று வர வேண்டும். ஆங்கில புத்தகங்களாவே இருக்கும். அது கொஞ்சம் நமக்கு கசப்பான விஷயம். ஏற்கனவே சீப்பாக கிடைத்ததே என்று வாங்கிய சில ஆங்கில புத்தகங்கள் அலமாரியில் உறங்கிக்கொண்டிருக்கிறது.

ஆனால் எனக்கு தெரிந்த சில இந்திய குடும்பங்களை, குடும்பத்தலைவர்களை பாராட்ட வேண்டும். விடுமுறை தினங்களில் அவர்களது குழந்தைகளை கூட்டிக்கொண்டு, லைப்ரரி சென்றுவிடுவார்கள். கை நிறைய புத்தகங்கள் எடுத்து வந்து, பிறகு சில வாரங்கள் கழித்து திரும்ப கொடுப்பார்கள்.

இங்குள்ள அரசாங்க அமைப்புக்கள் நூலகங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம். நான் பொதுவாக நகரத்தின் மையப்பகுதிகளுக்கும், சில பெரிய கடைகளுக்கும் சென்று வர, அரசு பேருந்துகளில் சென்று வருவேன். ஒன்றிரண்டு வழித்தடங்கள் தான் இருக்கும். அதில் சென்று வரும் போதே, நான் மூன்று நூலகங்களைப் பார்த்திருக்கிறேன்.

ஆனாலும், புத்தகங்களை எடுக்க இருமுறை பேருந்துகளிலும், திரும்ப கொடுக்க இருமுறை பேருந்துகளிலும் செல்ல வேண்டுமே! என்று சோம்பல் பட்டுக்கொண்டு, அங்கு செல்ல முயற்சி எடுத்ததே இல்லை.

---

சில தினங்களுக்கு முன்பு, என்னிடம் ஒரு பேச்சிலர் நண்பர், வாரயிறுதியில் லைப்ரரி சென்று வந்ததாக கூறினார். ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், அவருடைய பற்றி எனக்கு தெரியும்.

“போயி?” ஆச்சரியத்துடனேயே கேட்டேன்.

“நாலைஞ்சு டிவிடி எடுத்துட்டு வந்தேன்.”

“டிவிடியா? என்ன டிவிடி?”

“படம் தான். சில இங்கிலீஷ் படங்கள்.”

அதானே பார்த்தேன்?!!!

இருந்தாலும், ‘அதான், எல்லாம் இண்டர்நெட்டில் கிடைக்கிறதே?’ என்று கூறிவிட்டு வந்தேன்.

---

நேற்று டென்வர் ஆர்ட் மியூசியம் சென்று வந்தேன். கலையில் அவ்வளவு ஆர்வமா? என்று கேட்காதீர்கள். மற்ற நாட்களில் பதிமூன்று டாலர்கள். நேற்று இலவசம். கொஞ்சம் நேரம் சுற்றிவிட்டு வெளியே வந்தப்போது, பக்கத்தில் நகரின் தலைமை நூலகம் இருந்தது.



உடன் வந்த நண்பர், இந்த ஊரில் இருந்த சாட்சிக்காக, லைப்ரரி கார்டு வாங்கி வைத்துக்கொள்ளலாம் என்றார். காசா, பணமா - வாங்கிக்கொள்ளலாம் என்று சென்று வாங்கிக்கொண்டோம்.



பெரிய லைப்ரரி. முழுக்க கணிணிமையமாக்கப்பட்டது. முன்னால் இருந்த கணிணிகளில் எங்கள் தகவல்களைப் பதிந்துக்கொள்ள, அங்கிருந்த அலுவலகர் லைப்ரரி கார்டு கொடுத்தார். கணிசமான மக்கள் கூட்டம் இருந்தது. வகைக்கேற்ப நிறைய ஹால்கள். ஒவ்வொரு ஹாலிலும் வகைக்கேறப நிறைய பிரிவுகள்.

நாம் முதலில் எங்கு செல்வோம்? டிவிடிகள் இருக்கும் ஹாலுக்குள் நுழைந்தோம். நிறைய ஆங்கில படங்கள். வேறு என்ன மொழிகள் இருக்கிறது என்று பார்வையை ஓட்டினேன். ஹிந்தி கண்ணில் பட்டது. சீனி கம், சாந்தினி சவுக்... கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது. பிறகு ஆட்டோமேட்டிக்காக தமிழை தேடி கண்கள் ஓடியது. தெலுங்கு கண்ணில் பட்டது. ஸ்டாலின்... அடுத்தது, தமிழ் இருந்தது! கன்னத்தில் முத்தமிட்டால்...

ஒன்றிரண்டு படங்கள் தான் இருந்தாலும் எனக்கு அது வியப்பு தான். டென்வர் எங்கோ இருக்கிறது. தமிழ்நாடு எங்கோ இருக்கிறது. இது தமிழ் மொழியின், தமிழ் சினிமாவின் வீச்சா? அல்லது, இங்கிருக்கும் நூலக அமைப்பின் ஆர்வ தேடலா? தெரியவில்லை.

பிறகு மற்ற பகுதிகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே வந்தோம். மறக்காமல், எந்த புத்தகத்தையும் எடுக்காமல் வந்தோம்.

சுலபமாக சென்று வர ஒரு வழி செய்துவிட்டு, பிறகு தான் இந்த பழக்கத்தை ஆரம்பிக்க வேண்டும்.

.

விஜய்க்கா இந்த நிலைமை?




இதுல என்ன இருக்கு?’ன்னு நினைச்சிங்கன்னா, போன பதிவ பாருங்க...

---

அப்புறம் படம் எனக்கு பிடிச்சிருந்தது. உடன் பார்த்த தெலுங்கு நண்பர், ‘ஆமாம், டைரக்டர் யோசிச்சிருக்காரு!’ என்றும் படம் முழுக்க ஆசாத்தின் ரீமேக் இல்லை என்றும் ஒத்துக்கொண்டார்.

.