
டென்வர் ஒரு குறிஞ்சி பிரதேசம். அதாங்க, மலையும் மலை சார்ந்த பகுதியும்...
தூரத்தில் மலை தெரியுது, பாருங்க! இன்னும் கிட்ட போயி பார்க்கலை.

குளிரும், வெப்பமும் மாறி மாறி வருமாம். இரண்டும் இரு ஓரத்தை தொடுமாம்.
நான் சென்ற ஆரம்ப நாட்களில் குளிரடித்தது. சில நாட்கள் பனியும் பெய்தது.

இப்போது வெயில் பட்டையை கிளப்புகிறது. ஆனாலும், நம்மூர் மாதிரி வராது.

மக்கள் வெளியே சுற்றுவது இந்த காலத்தில் தான். அரசாங்கமும் பராமரிப்பு பணிகளை, இச்சமயத்தில் தான் செய்கிறது.

நான் வேலை செய்யும் இடம், பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி, ஐடிபில் போன்றது. அதாவது ஊரின் எல்லையில் இருக்கிறது. தங்கியிருக்கும் இடம் - மடிவாளா, மாரத்தஹள்ளி போன்றது. அதாவது, பழைய எல்லையில் இருக்கிறது.

ஆரம்ப நாட்களில், அலுவலகத்திற்கு ரயிலில் சென்று வந்து கொண்டிருந்தேன். இப்போது ஒரு தெலுங்கு நண்பருடன் காரில் சென்று வருகிறேன். இவர் காரில் தெலுங்கு பாடல்களைக் கேட்டு கேட்டு, இவருடன் தெலுங்கு சினிமா, அரசியல் பற்றி பேசி பேசி, சுந்தர தெலுங்கனாக மாறி விடுவேனோ என்று பயமாக இருக்கிறது. அதைப் பற்றி இன்னொரு பதிவில்.
ஊருக்குள் சென்று வர ரயில், பஸ் இரண்டுமே இருக்கிறது. ஆரம்பத்தில் நிறைய பயணங்கள், ரயிலில் செய்தேன். தற்போது, பஸ்ஸில். உள்ளூர் கவரேஜ் அதிகம், பஸ்ஸில் தான்.
பஸ், ரயில் - இரண்டிலும் கட்டணம் ஒன்றே தான். மற்ற விஷயங்களை விட, இது கொஞ்சம் அதிகம் தான். ஒரு டிக்கெட் கட்டணத்தில், இரண்டு ஆப்பிள்கள் வாங்கி சாப்பிட்டு விடலாம். இரண்டு ரூபாய்க்கு டிக்கெட் கொடுக்கும் தமிழக போக்குவரத்து கழகம் வாழ்க! (இன்னமும் கொடுக்கிறார்களா?)
தமிழ் படங்கள் வரும் தியேட்டர்கள் இருக்கின்றன. இருந்தாலும், நான் வந்தப்பிறகு, இதுவரை எந்த தமிழ்ப்படமும் வந்ததில்லை. அதனால், படங்களை இணையத்தில் தான் பார்க்கிறேன். (திருட்டு விசிடி என்றே ஒரு சைட் இருக்கிறது, தெரியுமா?) இவ்வளவு நாட்கள், திரைப்படங்களை ஆதரிக்கும்விதமாக, அனைத்து படங்களையும் தியேட்டரில் பார்த்து வந்த எனக்கு இந்நிலை. அதனால், இப்படி படம் பார்க்கும் நான், அப்படங்களை பற்றி பதிவு எழுத கூடாது என்ற தீர்மானத்திற்கு வந்திருக்கிறேன்.
ஒரே ஒரு ஆங்கிலப்படம், தியேட்டர் சென்று பார்த்தேன். பைரேட்ஸ் ஆப் த கரீபியன். இங்குள்ள தியேட்டரை பார்க்கலாம் என்று சென்றேன். படத்தை பார்த்து பாதியில் தூங்கிவிட்டேன். அப்புறமா எந்திரிச்சி, ஒரு வழியாக பார்த்து முடித்தேன்.
இங்கிலிஷ் படங்களுக்கு இண்டர்வெல் இல்லையே? அப்ப, அங்கு கேண்டீன் இருக்காதா? தம் அடிக்க வெளியே போக மாட்டார்களா? டாய்லெட் போக மாட்டார்களா? என்று பல கேள்விகள் என் மனதில் இந்தியாவில் இருக்கும்போது இருந்தது. சில பதில்கள் கிடைத்தது.
நான் பார்த்த தியேட்டரில், இருக்கைக்கு முன்பு ஒரு சுவிட்ச் இருந்தது. அதை அழுத்தினால், வந்து ஆர்டர் எடுக்கிறார்கள். படம் பார்த்துக்கொண்டே சாப்பிடலாம். இந்த வசதி, நம்மூர் மல்டிப்ளெக்ஸ்களிலும் தற்போது இருக்கிறது. தம், டாய்லெட் - படத்தின் நீளம் காரணமாக அடக்கிக்கொள்கிறார்கள் போலும்!
நான் தற்போது தங்கியிருக்கும் இடத்தில் நிறைய இந்திய மளிகை கடைகள், உணவகங்கள் இருக்கிறது.

இது தவிர, சைனா, கொரியா, அரபு நாட்டு கடைகளும் இருக்கிறது. பல நாட்டு உணவு வகைகளை சுவைத்து பார்க்க பலமான வசதிகள் இருந்தாலும், ’உள்நாட்டு’ சதியால் அதையெல்லாம் இன்னும் செய்யவில்லை. என்னுடைய பிரியமான ‘கொத்து பரோட்டா’வை, இனி கண்ணில் காண முடியாதோ என்று பயந்திருந்தேன். நல்லவேளை, அப்படியெல்லாம் எதுவும் துரதிஷ்டவசமாக நடக்கவில்லை.
அது பற்றி, அடுத்த பதிவில்.
.
5 comments:
டென்வரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆசை...நல்ல பகிர்வு.....
அட ஓசில சுத்தி காட்டீடீங்களே
சூப்பர் பதிவு.இங்கு 2 ரூபாய் டிக்கெட் இன்னும் இருக்கிறது.டென்வர் பற்றி இன்னும் அறிந்து கொள்ள ஆவல்..
boss ungakitta innum neraiya ethirparkkirom... :)
I lived in Aurora(Denver) in axis apartment(photo) for two years.
Thanks
- Shyam
You can also visit my blog to see interesting places info in USA
http://shyamtamil.blogspot.com
Post a Comment