
நீண்ட நாட்களுக்கு பிறகு, நான் வந்த பிறகு முதல்முறையாக, இங்கே டென்வரில் ஒரு தமிழ்ப்படம் ரீலிஸ் ஆகியது. அமெரிக்க திரையரங்கில், தமிழ்ப்படத்தை பார்க்கும் அனுபவத்தைப் பார்க்கவே முக்கியமாக சென்றேன்.
இங்கு மொத்தமே ரெண்டு காட்சிகள் தான். இன்று வியாழன் இரவுக்காட்சியும், ஞாயிறு இரவுக்காட்சியும்.
நான் இந்தியாவில் பத்து படங்கள் பார்க்கும் காசைக் கொடுத்து, இந்த ஒரு படத்தைப் பார்த்தேன். இனி ரொம்ப கண்டிப்பாக படம் வேண்டும் என்று நினைக்கும் படத்தை மட்டும் தான் தியேட்டர் சென்று பார்க்க வேண்டும்.
திரையரங்கு சிறியது தான். முப்பது நாற்பது பேர் இருந்திருப்போம். ஏதோ ஒரு இந்திய குரூப், இரு காட்சிகளுக்கு ஒரு திரையரங்கை வாடகைக்கு எடுத்து, படத்தை வெளியிடுகிறார்கள்.
இந்தியாவில் இண்டர்வெல் இல்லாத ஆங்கிலப்படத்திற்கு இண்டர்வெல் கொடுப்பார்கள். இங்கே இண்டர்வெல் இருக்கும் தமிழ்ப்படத்திற்கு இண்டர்வெல் கொடுக்க மாட்டேங்கிறார்கள்.
இரண்டே கால் மணி நேரம் எந்திரிக்காமல், ஒரு படத்தை பார்ப்பது கொஞ்சம் கஷ்டம் தான்.
இனி படத்தை பார்ப்போம்.
---

பாலாவிற்கு ஜாலியாக ஒரு படம் எடுக்க ஆசை. ஆனால், அந்த ஆசை படத்தை முடிக்கும் வரை இல்லை போலும். இல்லை, அவருக்கு தெரிந்த ஒரே முடிவு இதுவாகத்தான் இருக்கும் போல. டெம்ளேட் கிளைமாக்ஸ்.
முதல் பாதி நன்றாக இருந்தது. காட்சிகள் பல, செயற்கையாக இருந்தாலும், ரசித்து சிரிக்க முடிந்தது. சிரிக்க வைத்த பல வசனங்கள் நாற்றமடித்தது.
விஷாலுக்கு ஒரு நேஷனல் அவார்ட் வாங்கி கொடுத்துவிட வேண்டும் என்ற வெறி, பாலாவிடம் தெரிகிறது. ரொம்பவும் போராடியிருக்கிறார். இதற்காகவே பல காட்சிகளை அமைத்து விஷாலையும், நம்மையும் கொடுமைப்படுத்தியிருக்கிறார். நவரசம் காட்சி, எனக்கு ஓவராக தெரிந்தது. விஷால் நடிப்பு நன்றாக தெரிய வேண்டும் என்பதற்காக, சூர்யா, ஆர்யா, துணை நடிகர்கள், யுவன் என்று அனைவரும் பாடுபட்டுயிருக்கிறார்கள்.
விஷாலும் அதற்காக தன்னை ஒப்படைத்து, முயற்சி செய்திருப்பதற்கு பாராட்டுக்கள்.
இரண்டாவது ஹீரோவாக ஆர்யா. இரண்டு நாயகர்களுக்கு ஏற்ற கதை என்று சொல்லமுடியாவிட்டாலும், இரு ஹீரோக்கள் ஸ்கீரினைப் பங்கு போடுவதை பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. விஷாலுக்காக ஆர்யா நிறைய விட்டு கொடுத்திருக்கிறார்.
சூர்யா ஒரு காட்சியில் வருகிறார். சூர்யாவை வைத்து பாலா படத்திற்கு வெயிட் கொடுக்க நினைக்க, பாலா படத்தில் அகரத்திற்கு விளம்பரம் செய்துவிட்டு சென்றுவிட்டார் சூர்யா.
பொதுவாக, பாலா தனது படத்தின் ஹீரோக்களை போல ஹீரோயின்களையும் அழுக்காக்கி காட்டுவார். இதில் வரும் இரு ஹீரோயின்களும் தப்பித்துவிட்டார்கள். படத்தின் கதை நடக்கும் இடத்திற்கு பொருத்தம் இல்லாமல் இருக்கிறார்கள்.
ஜாலியாக செல்லும் கதை, இறுதியில் வழக்கம் போல் ட்ராஜெடியாக முடிகிறது. ஒரு பெரியவரை போட்டு கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள். இந்த படத்திற்காக அவரை இப்படி கஷ்டப்படுத்தியிருக்க வேண்டுமா? அந்த பெரியவர் ஏன் அவ்வப்போது சோகமாக இருக்கிறார் என்ற கதையும் தெரியவில்லை.
என்னுடன் வந்த அனைவருக்கும் படம் பிடித்திருந்தது. எனக்கு முடிவு பிடிக்கவில்லை. பாலாவின் வழக்கமான முடிவு.
.